சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.090   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

புண்டரிகம் பொன்வரைமேல்
ஏற்றிப் புவியளிக்கும்
தண்தரள வெண்கவிகைத்
தார்வளவர் சோணாட்டில்
வண்டறைபூஞ் சோலைவயல்
மருதத் தண்பணைசூழ்ந்
தெண்திசையும் ஏறியசீர்
எயின்மூதூர் எயினனூர்.
1

வேழக் கரும்பினொடு
மென்கரும்பு தண்வயலில்
தாழக் கதிர்ச்சாலி
தானோங்குந் தன்மையவாய்
வாழக் குடிதழைத்து
மன்னியஅப் பொற்பதியில்
ஈழக் குலச்சான்றார்
ஏனாதி நாதனார்.
2

தொன்மைத் திருநீற்றுத்
தொண்டின் வழிபாட்டின்
நன்மைக்கண் நின்ற
நலமென்றும் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி
வடிவாள் படைபயிற்றும்
தன்மைத் தொழில்
விஞ்சையில்தலைமை சார்ந்துள்ளார்.
3

வாளின் படைபயிற்றி
வந்த வளமெல்லாம்
நாளும் பெருவிருப்பால்
நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தடமுடியும்
காணாதார் தம்மையுந்தொண்
டாளும் பெருமான்
அடித்தொண்டர்க் காக்குவார்.
4

நள்ளார் களும்போற்றும்
நன்மைத் துறையின்கண்
எள்ளாத செய்கை
இயல்பின் ஒழுகுநாள்
தள்ளாத தங்கள்
தொழிலுரிமைத் தாயத்தின்
உள்ளான் அதிசூரன்
என்பான் உளனானான்.
5
Go to top

மற்றவனும் கொற்ற
வடிவாட் படைத்தொழில்கள்
கற்றவர்கள் தன்னில்
கடந்துள்ளார் இல்லையெனும்
பெற்றிமையால் மாநிலத்து
மிக்க பெருமிதம்வந்
துற்றுலகில் தன்னையே
சால மதித்துள்ளான்.
6

தானாள் விருத்திகெடத்
தங்கள்குலத் தாயத்தின்
ஆனாத செய்தொழிலாம்
ஆசிரியத் தன்மைவளம்
மேனாளுந் தான்குறைந்து
மற்றவர்க்கே மேம்படலால்
ஏனாதி நாதர்திறத்
தேலா இகல்புரிந்தான்.
7

கதிரோன் எழமழுங்கிக்
கால்சாயுங் காலை
மதிபோல் அழிந்துபொறா
மற்றவனும் சுற்றப்
பதியோ ருடன்கூடப்
பண்ணியமர் மேற்சென்
றெதிர்போர் விளைப்பதற்கே
எண்ணித் துணிந்தெழுந்தான்.
8

தோள்கொண்ட வல்லாண்மைச்
சுற்றத் தொடுந்துணையாம்
கோள்கொண்ட போர்மள்ளர்
கூட்டத் தொடும்சென்று
வாள்கொண்ட தாயம்
வலியாரே கொள்வதென
மூள்கின்ற செற்றத்தால்
முன்கடையில் நின்றழைத்தான்.
9

வெங்கட் புலிகிடந்த
வெம்முழையிற் சென்றழைக்கும்
பைங்கட் குறுநரியே
போல்வான் படைகொண்டு
பொங்கிப் புறஞ்சூழ்ந்து
போர்குறித்து நேர்நின்றே
அங்கட் கடைநின்
றழைத்தா னொலிகேளா.
10
Go to top

ஆர்கொல் பொரவழைத்தார்
என்றரியேற் றிற்கிளர்ந்து
சேர்வு பெறக்கச்சில்
செறிந்தவுடை மேல்வீக்கி
வார்கழலுங் கட்டி
வடிவாள் பலகைகொடு
போர்முனையில் ஏனாதி
நாதர் புறப்பட்டார்.
11

புறப்பட்ட போதின்கண்
போர்த்தொழில்வாள் கற்கும்
விறற்பெருஞ்சீர்க் காளையர்கள்
வேறிடத்தி னின்றார்
மறப்படைவாள் சுற்றத்தார்
கேட்டோடி வந்து
செறற்கரும்போர் வீரர்க்
கிருமருங்குஞ் சேர்ந்தார்கள்.
12

வந்தழைத்த மாற்றான்
வயப்புலிப்போத் தன்னார்முன்
நந்தமது வாட்பயிற்று
நற்றாயங் கொள்ளுங்கால்
இந்தவெளி மேற்கை
வகுத்திருவேம் பொருபடையும்
சந்தித் தமர்விளைத்தால்
சாயாதார் கொள்வதென.

13

என்றுபகைத் தோனுரைப்ப
ஏனாதி நாதரது
நன்றுனக்கு வேண்டுமேல்
நண்ணுவன்என் றுள்மகிழ்ந்து
சென்றவன்முன் சொன்ன
செருக்களத்துப் போர்குறிப்பக்
கன்றி யிருபடையும்
கைவகுத்து நேர்மலைவார்.
14

மேக வொழுங்குகள் முன்கொடு
மின்னிரை தம்மிடை யேகொடு
மாக மருங்கினும் மண்ணினும்
வல்லுரு மேறெதிர் செல்வன
வாக நெடும்பல கைக்குல
மாள்வினை வாளுடை யாடவர்
காக மிடைந்த களத்திரு
கைகளின் வந்து கலந்தனர்.
15
Go to top

கால்கழல் கட்டிய மள்ளர்கள்
கைகளின் மெய்க ளடக்கிய
வாளொளி வட்ட முனைந்திட
வந்திரு கைகளின் முந்தினர்
வேலொடு வேலெதிர் நீள்வன
மேவிய பாதலம் விட்டுயர்
ஞாலமு றும்பணி வீரர்கள்
நாநிமிர் கின்றன வொத்தன.
16

வெங்கண் விறற்சிலை வீரர்கள்
வேறிரு கையிலும் நேர்பவர்
தங்கள் சிலைக்குலம் உந்தின
தாவில் சரங்கள் நெருங்குவ
பொங்கு சினத்தெரி யிற்புகை
போகு கொடிக்கள் வளைத்தெதிர்
செங்கண் விழிக்கனல் சிந்திய
சீறு பொறிச்செல வொத்தன.
17

வாளொடு நீள்கை துடித்தன
மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன
தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார்கழ லிற்றன
தாரொடு சூழ்சிர மற்றன
நாளொடு சீறி மலைப்பவர்
நாடிய போர்செய் களத்தினில்.
18

குருதியின் நதிகள் பரந்தன
குறையுடல் ஓடி யலைந்தன
பொருபடை அறுதுணி சிந்தின
புடைசொரி குடருடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின
விசியறு துடிகள் புரண்டன
இருபடை தனினும் எதிர்ந்தவர்
எதிரெதிர் அமர்செய் பறந்தலை.
19

நீளிடை முடுகி நடந்தெதிர்
நேரிரு வரில்ஒரு வன்றொடர்
தாளிரு தொடையற முன்பெயர்
சாரிகை முறைமை தடிந்தனன்
வாளொடு விழுமுடல் வென்றவன்
மார்பிடை அறமுன் எறிந்திட
ஆளியி னவனு மறிந்தனன்
ஆயினர் பலருள ரெங்கணும்.
20
Go to top

கூர்முனை அயில்கொடு முட்டினர்
கூடிமுன் உருவிய தட்டுடன்
நேருரம் உருவ உரப்புடன்
நேர்பட எதிரெதிர் குத்தினர்
ஆருயிர் கழியவும் நிற்பவர்
ஆண்மையில் இருவரும் ஒத்தமை
போரடு படைகொ டளப்பவர் 
போல்பவர் அளவிலர் பட்டனர்.
21

பொற்சிலை வளைய வெதிர்ந்தவர்
புற்றர வனைய சரம்பட
விற்படை துணியவும் நின்றிலர்
வெற்றிகொள் சுரிகை வழங்கினர்
முற்றிய பெருவளன் இன்றியும்
முற்படு கொடைநிலை நின்றிட
உற்றன உதவிய பண்பினர்
ஒத்தனர் உளர்சில கண்டர்கள்.
22

அடல்முனை மறவர் மடிந்தவர்
அலர்முகம் உயிருள வென்றுறு
படர்சிறை சுலவு கருங்கொடி
படர்வன சுழல்வன துன்றலில்
விடுசுடர் விழிக ளிரும்புசெய்
வினைஞர்தம் உலையின் முகம்பொதி
புடைமிடை கரியிடை பொங்கிய
புகைவிடு தழலை நிகர்த்தன.
23

திண்படை வயவர் பிணம்படு
செங்கள மதனிடை முன்சிலர்
புண்படு வழிசொரி யுங்குடர்
பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டெழு பொழுதினும் முன்செயல்
குன்றுத லிலர்தலை நின்றனர்
விண்படர் கொடிவிடு பண்பயில்
விஞ்சையர் குமரரை வென்றனர்.
24

இம்முனைய வெம்போரில்
இருபடையின் வாள்வீரர்
வெம்முனையின் வீடியபின்
வீடாது மிக்கொழிந்த
தம்முடைய பல்படைஞர்
பின்னாகத் தாமுன்பு
தெம்முனையில் ஏனாதி
நாதர் செயிர்த்தெழுந்தார்.
25
Go to top

வெஞ்சினவாள் தீயுமிழ
வீரக் கழல்கலிப்ப
நஞ்சணிகண் டர்க்கன்பர்
தாமெதிர்ந்த ஞாட்பின்கண்
எஞ்சியெதிர் நின்ற
இகல்முனையில் வேலுழவர்
தஞ்சிரமும் தோளுரமும்
தாளும் விழத்துணித்தார்.
26

தலைப்பட்டார் எல்லாரும்
தனிவீரர் வாளில்
கொலைப்பட்டார் முட்டாதார்
கொல்களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய்யுணர்வு
நேர்பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதல்
குற்றம்போ லாயினார்.
27

இந்நிலைய வெங்களத்தில்
ஏற்றழிந்த மானத்தால்
தன்னுடைய பல்படைஞர்
மீண்டார் தமைக்கொண்டு
மின்னொளிவாள் வீசி
விறல்வீரர் வெம்புலியே
றன்னவர்தம் முன்சென்
றதிசூரன் நேரடர்ந்தான்.
28

மற்றவர்தஞ் செய்கை
வடிவாள் ஒளிகாணச்
சுற்றிவரும் வட்டணையில்
தோன்றா வகைகலந்து
பற்றிஅடர்க் கும்பொழுதில்
தானும் படைப்பிழைத்துப்
பொற்றடந்தோள் வீரர்க்
குடைந்து புறகிட்டான்.
29

போன அதிசூரன்
போரி லவர்க்கழிந்த
மானம்மிக மீதூர
மண்படுவான் கண்படான்
ஆனசெயல் ஓரிரவும்
சிந்தித் தலமருவான்
ஈனமிகு வஞ்சனையால்
வெல்வனென எண்ணினான்.
30
Go to top

சேட்டாருங் கங்குல்
புலர்காலைத் தீயோனும்
நாட்டாரைக் கொல்லாதே
நாமிருவேம் வேறிடத்து
வாட்டாயங் கொள்போர்
மலைக்க வருகவெனத்
தோட்டார்பூந் தாரார்க்குச்
சொல்லி வரவிட்டான்.
31

இவ்வாறு கேட்டலுமே
ஏனாதி நாதனார்
அவ்வாறு செய்த லழகி
தெனவமைந்து
கைவாள் அமர்விளைக்கத்
தான்கருதும் அக்களத்தே
வெவ்வாள் உரவோன்
வருகவென மேற்கொள்வார்.
32

சுற்றத்தார் யாரும்
அறியா வகைசுடர்வாள்
பொற்பலகை யுந்தாமே
கொண்டு புறம்போந்து
மற்றவன்முன் சொல்லி
வரக்குறித்த அக்களத்தே
பற்றலனை முன்வரவு
பார்த்துத் தனிநின்றார்.
33

தீங்கு குறித்தழைத்த
தீயோன் தீருநீறு
தாங்கிய நெற்றியினார்
தங்களையே எவ்விடத்தும்
ஆங்கவருந் தீங்கிழையார்
என்ப தறிந்தானாய்ப்
பாங்கில் திருநீறு
பண்டு பயிலாதான்.
34

வெண்ணீறு நெற்றி
விரவப் புறம்பூசி
உண்ணெஞ்சில் வஞ்சக்
கறுப்பும் உடன்கொண்டு
வண்ணச் சுடர்வாள்
மணிப்பலகை கைக்கொண்டு
புண்ணியப்போர் வீரர்க்குச்
சொன்னவி டம்புகுந்தான்.
35
Go to top

வென்றி மடங்கல்
விடக்குவர முன்பார்த்து
நின்றாற் போல்நின்றார்
நிலைகண்டு தன்னெற்றி
சென்று கிடைப்பளவும்
திண்பலகை யால்மறைத்தே
முன்தனிவீ ரர்க்கெதிரே 
மூண்டான் மறம்பூண்டான்.
36

அடல்விடையே றென்ன
அடர்த்தவனைக் கொல்லும்
இடைதெரிந்து தாள்பெயர்க்கும்
ஏனாதி நாதர்
புடைபெயர்ந்த மாற்றான்
பலகை புறம்போக்கக்
கடையவன்தன் நெற்றியின்மேல்
வெண்ணீறு தாங்கண்டார்.
37

கண்டபொழு தேகெட்டேன்
முன்பிவர்மேற் காணாத
வெண்திருநீற் றின்பொலிவு
மேற்கண்டேன் வேறினியென்
அண்டர்பிரான் சீரடியார்
ஆயினார் என்றுமனங்
கொண்டிவர்தங் கொள்கைக்
குறிவழிநிற் பேனென்று.
38

கைவா ளுடன்பலகை
நீக்கக் கருதியது
செய்யார் நிராயுதரைக்
கொன்றா ரெனுந்தீமை
எய்தாமை வேண்டும்
இவர்க்கென் றிரும்பலகை
நெய்வா ளுடனடர்த்து
நேர்வார்போல் நேர்நின்றார்.
39

அந்நின்ற தொண்டர்
திருவுள்ளம் ஆரறிவார்
முன்னின்ற பாதகனும்
தன்கருத்தே முற்றுவித்தான்
இந்நின்ற தன்மை
யறிவார் அவர்க்கருள
மின்னின்ற செஞ்சடையார்
தாமே வெளிநின்றார்.
40
Go to top

மற்றினிநாம் போற்றுவதென்
வானோர் பிரானருளைப்
பற்றலர்தங் கைவாளால்
பாசம் அறுத்தருளி
உற்றவரை யென்றும்
உடன்பிரியா அன்பருளிப்
பொற்றொடியாள் பாகனார்
பொன்னம் பலமணைந்தார்.
41

தம்பெருமான் சாத்தும்
திருநீற்றுச் சார்புடைய
எம்பெருமான் ஏனாதி
நாதர் கழலிறைஞ்சி
உம்பர்பிரான் காளத்தி
உத்தமர்க்குக் கண்ணப்பும்
நம்பெருமான் செய்தபணி
நாம்தெரிந்த வாறுரைப்பாம்.
42

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000