சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.180   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்


Add audio link Add Audio
பகர்ந்துலகு சீர்போற்றும்
பழையவளம் பதியாகுந்
திகழ்ந்தபுனல் கொள்ளிடம்பொன்
செழுமணிகள் திரைக்கரத்தால்
முகந்துதர இருமருங்கும்
முளரிமலர்க் கையேற்கும்
அகன்பணைநீர் நன்னாட்டு
மேற்கானாட் டாதனுர்.

1


உலகம் அதன் சிறப்பினை எடுத்துப் போற்றிடும் படியாக உள்ள பழையதாகிய வளம் மிக்கதோர் ஊர், இடம் அகன்ற வயல் வளமுடைய சோழநாட்டில் மேற்கா நாட்டின்கண் உள்ள ஆதனூர் ஆகும். பெருகிவரும் நீரையுடைய கொள்ளிடப் பேராறு, பொன்னையும், சிறந்த மணிகளையும் தன் அலைகளாகிய கைகளால் அள்ளித்தர, அவற்றை இருமருங்கிலும் மலர்ந்து நிற்கும் தாமரை மலர்கள், தமது இதழ்களாகிய கரங்களால் ஏற்றுச் சிறக்கும் வள முடையதாகும். *** மேற்காநாடு - சோழ நாட்டின் உள்நாடுகளுள் ஒன்று. கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள கானாட்டுமுள்ளூர், ஓமாம்புலியூர் ஆகிய சிவப்பதிகளுக்கு அருகில் உள்ளது. இன்று ஆதமங்கலம் என வழங்கப் பெறுகிறது. திருப்புன்கூருக்கு அருகிலுள்ள ஊராகக் கொள்வர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).
நீற்றலர்பே ரொளிநெருங்கும்
அப்பதியில் நிறைகரும்பின்
சாற்றலைவன் குலைவயலிற்
தகட்டுவரால் எழப்பகட்டேர்
ஆற்றலவன் கொழுக்கிழித்த
சால்வழிபோய் அசைந்தேறிச்
சேற்றலவன் கருவுயிர்க்க
முருகுயிர்க்கும் செழுங்கமலம்.

2


திருநீற்றின் ஒளி நெருங்கிப் பரந்து காணப் பெறும் அத்திருவுடைய ஆதனூர் என்னும் பதியில், நிறைந்த கருப்பஞ் சாற்றி னால் அலைக்கப்படும் வன்மையான வரம்புகளை (வரப்பு என்பர்) உடைய வயலில், தகட்டு வரால் மீன்கள் துள்ளி எழும்படி, எருமைகள் பூட்டிய கலப்பை செல்லும் வழியில், அக்கலப்பையின் கொழுவினால் கிழிக்கப்பட்ட சால் வழியாக ஊர்ந்து சென்று, சேற்றில் வாழும் நண்டுகள் தமது கருவினை ஈன, அங்குள்ள தாமரைகள் பூந்தாதுகளைச் சொரிந்து நறுமணத்தை உயிர்க்கும்.
குறிப்புரை: சாற்று அலைவன் குலை - கருப்பஞ் சாற்றினால் அலைக்கப்பட்ட வரம்பு. குலை - வரம்பு: கரை. குலை - நெற்குலைகள் எனக் கொண்டு, நெல்லும் கரும்பும் வயல்களில் அடுத்தடுத்து மிக விளையும் செழித்த மருத நிலமாதலின் நெற்குலைகள் கருப்பங் காற்றில் அலையும் வயல்கள் என்று உரைப்பாரும் உளர்; சிவக்கவி மணியார் (பெரிய. பு. உரை). நண்டுகள் கருவுயிர்த்தலாலாய தீய மணத்தினை, அங்குள்ள தாமரைகள் போக்கி, நறுமணத்தை உண்டாக் கும். புலைச்சேரியில் தோன்றிய திருநாளைப் போவாரால், அச்சேரி நறுமணம் பெற்றமையைக் குறிப்பால் இந்நிகழ்ச்சி உணர்த்துகின்றது.

நனைமருவும் சினைபொதுளி
நறுவிரைசூழ் செறிதளிரில்
தினகரமண் டலம்வருடும்
செழுந்தருவின் குலம்பெருகிக்
கனமருவி அசைந்தலையக்
களிவண்டு புடைசூழப்
புனல்மழையோ மதுமழையோ
பொழிவொழியா பூஞ்சோலை.

3


அரும்புகள் நிறைந்த கொம்புகள் படர்ந்து, நறு மணம் சூழ்ந்து செறியும் தளிர்களினால், கதிரவனின் மண்டலத்தைத் தடவுவன போன்று உயர்ந்த செழுமை மிக்க மரங்களின் கூட்டங்கள் பெருகி, அவைமீது மேகங்களும் தவழ, அம்மரக் கொம்புகள் அசைந்து அலைவதால், தேன் உண்டு களித்திடும் வண்டுகள் புடையில் சூழ்ந்திட, இத்தகுதியினால் அம்மரங்கள் தம்மிடமுள்ள பூவில் தேனைச் சொரிவனவோ அல்லது மேலுள்ள மேகங்கள் நீரான மழையைப் பொழிவனவோ? என்று ஐயுறற்கு இடனாக, அப்பூஞ் சோலைகள் விளங்குகின்றன.
குறிப்புரை: தினம் - நாள்: கரன் - செய்பவன்: நாள்தொறும் ஒளி யைச் செய்பவன்; கனம் - மேகம். மேகம் சூழ நிற்றலின் புனல் மழையும், தேன் நிரம்பியிருத்தலின் மது மழையும் ஒருங்கு பொழிய நிற்றலை, ஐயப் பொருள்பட ஆசிரியர் விளக்கியிருக்கும் திறம் அறிந்து இன்புறுதற்குரியதாம்.

பாளைவிரி மணங்கமழும்
பைங்காய்வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசைமுட்டித்
தடங்கிடங்கின் எழப்பாய்ந்த
வாளைபுதை யச்சொரிந்த
பழம்மிதப்ப வண்பலவின்
நீளமுதிர் கனிகிழிதேன்
நீத்தத்தில் எழுந்துகளும்.

4


பாளைகள் விரிந்து கமழ்கின்ற பசிய இளநீர் களையுடைய குலைகள் கொண்ட தென்னை மரங்களின் அடிப் பாகத்தில், அம்மரம் அசையத், தாக்கிய வாளை மீன்கள், தாம் கீழே புதையுமாறு சொரிந்த அத்தென்னை மரத்தில் பழுத்த காய்கள், வளமை நிறைந்த இனிய கனிதரும் பலாமரங்களின் நீண்ட பெரிய பழங்கள் பழுத்து ஒழுகிய சுவையான சாறுகள் நிரம்பிய வெள்ளத்தில் மிதந்திட, அந்த வாளை மீன்கள், மீள அவ்வெள்ளத்தில் குதித்துப் புரளும்.
குறிப்புரை: வாளை மீன் தன்வலியொன்றுமே கருதித் தன்னினும் உயர்ந்த தென்னை மீது தாக்க, அத்தென்னை தன் முற்றிய காய்களால் அதனை அங்குள்ள சேற்றில் புதையுமாறு செய்தது. அதுகண்ட பலா, தன் கருணை மீதூர்வால் தன் இனிய வளம்மிக்க சாற்றைப் பெருக்கி, அத்தென்னையின் நெற்றை மிதக்கச் செய்து, வாளைமீனைக் காப்பாற் றியது. தப்பிய வாளை, மகிழ்வால், மீண்டும் அச்சாற்று வெள்ளத்தில் குதித்து விளையாடுவதாயிற்று. வலிமையற்றவர்கள் வலிமையுள்ள வர்களிடத்துப் போர் தொடங்கின், அவர் அழிவர் என்பதை, வாளை மீனின் செயல் விளக்கி நிற்கின்றது. 'கூற்றத்தைக் கையால் விளித் தற்றால் ஆற்றுவார்க் காற்றாதார் இன்னா செயல்' (குறள், 894) எனவரும் திருக்குறட் கருத்தும் காண்க. வாளை, இவ்வாற்றான் துன்புறுதலைக்கண்ட பலா, தன் வளம்மிக்க சாற்றால் பெருக்கெடுத்துத் தேங்காயை மிதக்கச் செய்து அம்மீனைக் காப்பாற்றியது,காலத்தினால் செய்த பேருதவியாகும். அது சிறிது எனினும், ஞாலத்தின் மாணப் பெரிது என்பர் திருவள்ளுவர் (குறள் 102). ஆனால் வாளைக்குப் பலா செய்திருப்பது கைம்மாறு வேண்டாத மிகப்பெரிய உதவியாகும். 'என்ஆற்றுங் கொல்லோ உலகு' (குறள் 211) என்ற அளவில் நினைக் கத் தகுந்ததாகும். இயற்கை வருணனையினூடே, இத்தகைய அற வுணர்களை அறிவுறுத்தியிருக்கும் திறம் அறிந்து இன்புறத்தக்கதாம்.

வயல்வளமுஞ் செயல்படுபைந்
துடவையிடை வருவளமும்
வியலிடம்எங் கணும்நிறைய
மிக்கபெருந் திருவினவாம்
புயலடையும் மாடங்கள்
பொலிவெய்த மலிவுடைத்தாய்
அயலிடைவே றடிநெருங்கக்
குடிநெருங்கி யுளதவ்வூர்.

5


வயலில் வரும் வளங்களும், கைத்தொழில் முயற்சி யினாலாய தோட்டங்களில் வருகின்ற வளங்களும், அகன்ற இடம் எங்கணும் நிறைய, அவற்றால் பெருந் திருவுடையதாகி, மேகங்கள் தங்கும் பெரிய மாடங்கள் பொலிவெய்திட, அவற்றின் அயல் இடங்களில், ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் காணப்படும் மனைகளுடன் கூடிய குடிகள் நெருங்கிட உள்ளது, அவ் ஆதனூர் என்னும் நகராகும்.
குறிப்புரை:

Go to top
மற்றவ்வூர்ப் புறம்பணையின்
வயல்மருங்கு பெருங்குலையில்
சுற்றம்விரும் பியகிழமைத்
தொழிலுழவர் கிளைதுவன்றிப்
பற்றியபைங் கொடிச்சுரைமேற்
படர்ந்தபழங் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில்பல
நிறைந்துளதோர் புலைப்பாடி.

6


அவ் ஆதனூரின் வெளிப்புறத்தில் உள்ள வயல் களின் அருகில், சுற்றமுடன் வாழ்வதை விரும்பிய உழவர்களின் கிளைகள் பெருகி, அவ்விடத்துப் பற்றிப் படர்ந்திடும் பசிய கொடி யான சுரை மேலாகக் கூரையில் படர்ந்திட்ட பழங்கூரைகளையுடைய புல்லினால் வேயப்பட்ட சிறிய வீடுகள் பல நிறைந்துள்ளது ஒரு பறையருடைய சேரியாகும்.
குறிப்புரை:

கூருகிர்மெல் லடியளகின்
குறும்பார்ப்புக் குழுச்சுழலும்
வார்பயில்முன் றிலில்நின்ற
வள்ளுகிர்நாய்த் துள்ளுபறழ்
காரிரும்பின் சரிசெறிகைக்
கருஞ்சிறார் கவர்ந்தோட
ஆர்சிறுமென் குரைப்படக்கும்
அரைக்கசைத்த இருப்புமணி.

7


அக்குடிசைகளின் ஊடே, கூரிய நகங்களையும் மென்மையான அடியின் அழகினையும் உடைய சிறு கோழிக் குஞ்சுகள் தாய்க் கோழியுடன் சுழன்று இரையுண்டு திரியும். தோல் வார்கள் நீள விரித்திருத்தற்கிடமாகிய முற்றங்களில் வளைந்த நகமுடைய துள்ளி ஒடும் நாய்க் குட்டிகளைக், காப்புக்கள் அணிந்த கைகளையுடைய கறுத்த மேனியையுடைய சிறுவர்கள் பிறர் காணா மல் பிடித்து ஒட, அதனாலே அந்நாய்க்குட்டிகளின் சிறிய ஒசையான குரைப்பின் ஒசையை அடக்கும்படி குலுங்குவன, அப்பிள்ளைகள் அரையில் கட்டிய இரும்பின் மணிச் சதங்கைகள்.
குறிப்புரை:

வன்சிறுதோல் மிசையுழத்தி
மகவுறக்கும் நிழன்மருதுந்
தன்சினைமென் பெடையொடுங்குந்
தடங்குழிசிப் புதைநீழல்
மென்சினைய வஞ்சிகளும்
விசிப்பறைதூங் கினமாவும்
புன்றலைநாய்ப் புனிற்றுமுழைப்
புடைத்தெங்கும் உடைத்தெங்கும்.

8


வலிய சிறு தோலின் மேலாகக் கிடத்தி, உழத்தியர் தமது குழந்தையை உறங்கும்படி செய்விக்கும் பெரிய நிழல் தரும் மருத மரங்களையும், தனது முட்டைகளை அடைகாக்கும் பெட்டைக் கோழிகள் ஒதுங்குதற்கு இடனாய பானைகள் புதைக்கப்பட்ட நல்ல நிழல் தரும் மென் கொம்பருடைய வஞ்சி மரங்களும், வார் கட்டிய பறைகளைத் தொங்க விடுத்த மாமரங்களும், சிறிய தலையையுடைய நாய்க் குட்டிகள் தரையைப் பறித்து உறங்குதற்கு இடனாய தென்னை மரங்களும் அங்கு எவ்விடத்தும் உளவாம்.
குறிப்புரை: கோழிகள் தம் முட்டைகளைச் சிதைவுறாது காத்தற்கு இடனாக அகன்றவாயினையுடைய பானைகளை மரநிழலிற் புதைத்து வைப்பர். அவ்வாறு வைத்திருக்கும் பானைகளில் முட்டையிட்டுக் கோழிகள் அடை காத்து நிற்கும். தடங் குழிசி - வாயகன்ற பானைகள்.

செறிவலித்திண் கடைஞர்வினைச்
செயல்புரிவை கறையாமக்
குறியளக்க அழைக்குஞ்செங்
குடுமிவா ரணச்சேக்கை
வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி
விரிநீழல் மருங்கெல்லாம்
நெறிகுழற்புன் புலைமகளிர்
நெற்குறுபாட் டொலிபரக்கும்.

9


தத்தமது வயலில் உரிய செயலினைச் செய்தற்கென வலி செறிந்த திண்மையான உழவர்கள், எழுந்துபோதற்கு, விடியற் காலையின் கால அளவை அளந்து கூவி அழைத்திடும் சிவந்த கொண்டையினை உடைய சேவல்கள் இரவில் தங்கி இருக்கும், தேன் பெருக்கும் மலருடைய குளிர்ந்த கொம்பருடைய காஞ்சி மரத்தின் பரந்த நீழலின் எல்லையின் மருங்கெல்லாம், நெறித்த கூந்தலுடன் சிறப்பாகப் பேணப்படாத தலையையுடைய புலை மகளிர் நெற்குற்றும் பாட்டுக்களின் ஓசை பரந்திடும்.
குறிப்புரை: நெற்குறு பாட்டு - நெல்லைக் குற்றும்பொழுது பாடும் பாட்டு.

புள்ளுந்தண் புனற்கலிக்கும்
பொய்கையுடைப் புடையெங்கும்
தள்ளும்தாள் நடையசையத்
தளையவிழ்பூங் குவளைமது
விள்ளும்பைங் குழற்கதிர்நெல்
மிலைச்சியபுன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களிதூங்கக்
கறங்குபறை யுங்கலிக்கும்.

10


பறவைகளும் குளிர்ந்த நீரில் தங்கும் மகிழ்வால் ஒலிக்கும். பெருந் தாமரைக் குளங்களின் பக்க மெங்கும் தள்ளாடு கின்ற தங்கள் காலின் நடை அசைந்திட, முன்பு பறித்துச் செருகிய கருங்குவளை மலர் இதழ் அவிழ்ந்து தேன் சொரியும் கூந்தலில், நெற்கதிர்களைச் சேர அணிந்த புன்மையான பழக்கமுடைய புலையர் பெண்கள்: தாங்கள் இயல்பில் கள்ளுண்டு மகிழ்ந்து ஆடிட, அதற்கிசைய அடித்திடும் பறைகளும் ஓசைமிகுந்து நிற்கும்.
குறிப்புரை:

Go to top
இப்படித்தா கியகடைஞர்
இருப்பின்வரைப் பினின்வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன்கழற்கே
விளைத்தஉணர் வொடும்வந்தார்
அப்பதியில் ஊர்ப்புலைமை
யான்றதொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார்
எனவொருவர் உளரானார்.

11


இவ்வாறமைந்த புலையர்கள் வாழ்கின்ற அவ்விருப்பிடத்தில் வாழ்பவரும், தம் உண்மையான அன்பைச் சிவ பெருமான் திருவடிக்கே வைத்து வாழும் முன் உணர்வுடையவரும், அப்பதியில் வாழும் ஊரவர்க்கெல்லாம் தம் தொழில் வகையால் உரிமையான நிலமுடைவருமான குற்றமற்ற நந்தனார் என்ற சிறந்த பெயருடைய ஒருவர் வாழ்ந்து வந்தார்.
குறிப்புரை:

பிறந்துணர்வு தொடங்கியபின்
பிறைக்கண்ணிப் பெருத்தகைபால்
சிறந்தபெருங் காதலினால்
செம்மைபுரி சிந்தையராய்
மறந்தும்அயல் நினைவின்றி
வருபிறப்பின் வழிவந்த
அறம்புரிகொள் கையராயே
அடித்தொண்டின் நெறிநின்றார்.

12


அவர், தாம் இவ்வுலகில் பிறந்து தமக்கு உணர்வு தெரியத் தொடங்கிய காலமுதலாக, இளம் பிறையையுடைய பெருந் தகையாராகிய சிவபெருமானிடத்துச் சிறந்த பெருங்காதலினால் செம்மை விளைவிக்கும் சிந்தனை உடையவராய், சிவபெருமானை யுணர்கின்ற நினைவன்றி, மறந்தும் வேறொரு நினைப்பின்றி, தாம் முற்பிறவி தோறும் செய்து வந்த நல்வினைத் தொடர்பால், அதன் வழிவந்த அறமே புரிகின்ற கொள்கையராய்ப் பெருமானாருடைய திருவடித் தொண்டின் உண்மை நெறியில் நின்றார்.
குறிப்புரை: 'பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின்சேவடியே சேர்ந்தேன்'(தி. 11 அற்புதத். 1) எனவரும் திருவாக் கும் காண்க.

ஊரில்விடும் பறைத்துடவை
உணவுரிமை யாக்கொண்டு
சார்பில்வருந் தொழில்செய்வார்
தலைநின்றார் தொண்டினால்
கூரிலைய முக்குடுமிப்
படையண்ணல் கோயில்தொறும்
பேரிகையே முதலாய
முகக்கருவி பிறவினுக்கும்.

13


தமக்கென அவ்வூரார் விட்டிருக்கும் பறைத் தொழிலிற்குரிய நிலத்தின் வருவாயைத் தம் உணவிற்கு உரிமையாகக் கொண்டு, அதன் சார்பில் வரும் தமது கடமையைச் செய்வார். பெருமானுக்குச் செய்திடும் தொண்டில் தலையானவர். கூரிய இலை போலும் முத்தலைச் சூலப்படையை ஏந்திய சிவபெருமானுடைய கோயில் தோறும் அங்குள்ள பேரிகை முதலாய தோல் முகமுடைய கருவிகளுக்கும் (மத்தளம் இன்னும் வேறு) பிறவற்றிற்கும்.
குறிப்புரை:

போர்வைத்தோல் விசிவார்என்
றினையனவும் புகலுமிசை
நேர்வைத்த வீணைக்கும்
யாழுக்கும் நிலைவகையில்
சேர்வுற்ற தந்திரியும்
தேவர்பிரான் அர்ச்சனைகட்
கார்வத்தி னுடன்கோரோ
சனையும்இவை அளித்துள்ளார்.

14


போர்வைத்தோலும், இழுத்துக் கட்டும் வாரும், மற்றும் இவ்வாறான பொருள்களும், இசையை வழங்கும் சிறப்பு அமைந்த வீணைக்கும், யாழுக்கும் அவ்வவற்றிற்கேற்ற வகையில் சேர்வுற்ற நரம்புகளும், தேவர் பெருமானின் வழிபாட்டிற்கு ஆர்வத்தி னுடன் கோரோசனையும் ஆகிய இவற்றைக் கொடுத்து வந்தார்.
குறிப்புரை: தந்திரி - இசைக்கருவிகளுக்குரிய நரம்புகள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இவ்வகையால் தந்தொழிலின்
இயன்றவெலாம் எவ்விடத்தும்
செய்வனவுங் கோயில்களிற்
திருவாயிற் புறநின்று
மெய்விரவு பேரன்பு
மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பிற் பாடுதலு
மாய்நிகழ்வார் அந்நாளில்.

15


இவ்வகையாகத் தம் தொழில் வழிப் பெறத் தக்கவான எல்லாவற்றையும் கோவில்களுக்குச் செய்து, திருக் கோவிலின் திருப்புறவாயிலில் நின்றே பெருமானிடத்துப் பெருகிய பேரன்பின் மிகுதியினால் ஆடுதலும், அவ்வன்பின் மிகுதியால் பாடுதலும் ஆகப் போற்றி வருகின்ற அந்நாள்களில்.
குறிப்புரை:

Go to top
திருப்புன்கூர்ச் சிவலோகன்
சேவடிகள் மிகநினைந்து
விருப்பினொடுந் தம்பணிகள்
வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டங்
காதனூர் தனில்நின்றும்
வருத்தமுறுங் காதலினால்
வந்தவ்வூர் மருங்கணைந்தார்.

16


திருப்புன்கூர் எனும் திருப்பதியின்கண் எழுந் தருளியிருக்கும் சிவலோகநாதப் பெருமானின் திருவடிகளில் மிக அன்பூறி நினைவுற்று அங்குச் சென்று, விருப்பினொடும் தமது பணி களுள் வேண்டுவனவற்றை அங்குச் செய்வதற்கு மனத்தில் கொண்ட காதலினால், சிந்தை ஒருமைப்பட்டு, ஆதனூரினின்றும் புறப்பட்டுச் சென்று, அவ்வூரின் அருகே வந்து சேர்ந்தார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

சீரேறும் இசைபாடித்
திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும் பிடவேண்டும்
எனநினைந்தார்க் கதுநேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க்
கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்கஅருள்
புரிந்தருளிப் புலப்படுத்தார்.

17


திருப்புன்கூர் மருங்கே அணைந்த நந்தனார், தாம் கோயிலின் திருவாயிலின் முன்பு நின்று சீர்பெருகும் இசைபாடி, கண்ணால் நேர்பெறக் கண்டு கும்பிட வேண்டும் என நினைந்த வருக்கு, வேண்டியவர்க்கு வேண்டியவாறே அருள் கொடுப்பவராய, மேகம் தவழும் பெருமதில் சூழ்ந்த திருப்புன்கூரின்கண் எழுந்தருளி யிருக்கும் கண்ணுதற் கடவுள், தம் திருமுன் மறைத்திருந்த போர் ஏற்றைச் (நந்தியை) சிறிது விலகி இருக்குமாறு அருள் செய்து, அதனால் அவருக்குத் தாம் நேரில் காணுமாறு அருள் புரிந்தார்.
குறிப்புரை:

சிவலோகம் உடையவர்தம்
திருவாயில் முன்னின்று
பவலோகங் கடப்பவர்தம்
பணிவிட்டுப் பணிந்தெழுந்து
சுவலோடு வாரலையப்
போவார்பின் பொருசூழல்
அவலோடும் அடுத்ததுகண்
டாதரித்துக் குளந்தொட்டார்.

18


சிவலோக நாதருடைய திருக்கோவிலின் திருவாயில் முன்னாக நின்று, உலகியற் பிறப்பைக் கடந்திடும் நந்த னார், தாம் இதுகாறும் இறைவனைப் பாடியாடிடும் பணியை நிறைவு செய்து கொண்டு எழுந்து, முதுகில் தூக்கிய வார்களின் பொதி அலையும்படி செல்லும் அவர் அத்திருக்கோயிலின் பின்புறமாக உள்ள ஓர் இடம் பள்ளமாக இருப்பதைக் கண்டு, தம் பெருவிருப்பால் அப்பள்ளத்தினைத் திருக்குளமாக்கினார்.
குறிப்புரை: தம் பணி - பெருமானைக்கண்ட அளவில் மீதூர்ந்த அன்பினால் பாடியும், ஆடியும் செய்து வரும்பணி. சுவல் - முதுகு. அவல் - பள்ளம்.

வடங்கொண்ட பொன்னிதழி
மணிமுடியார் திருவருளால்
தடங்கொண்ட குளத்தளவு
சமைத்ததற்பின் தம்பெருமான்
இடங்கொண்ட கோயில்புறம்
வலங்கொண்டு பணிந்தெழுந்து
நடங்கொண்டு விடைகொண்டு
தம்பதியில் நண்ணினார்.

19


மாலை போன்று பொன்மயமாக மலரும் கொன்றை மலரைச் சூடிய அழகிய முடியுடைய சிவபெருமான் திருவருளால், அகன்ற குளமாக அகழ்ந்து அமைத்த பின், தம் பெருமான் இடம் கொண்ட கோயிலின் புறமாக வலம் கொண்டு பணிந்து எழுந்து கூத் தும் ஆடிப், பெருமானிடம் விடை பெற்றுக்கொண்டு தம் பதியிடத்துச் சேர்ந்தார்.
குறிப்புரை: வடம் - மாலை.

இத்தன்மை ஈசர்மகிழ்
பதிபலவுஞ் சென்றிறைஞ்சி
மெய்த்ததிருத் தொண்டுசெய்து
விரவுவார் மிக்கெழுந்த
சித்தமொடுந் திருத்தில்லைத்
திருமன்று சென்றிறைஞ்ச
உய்த்தபெருங் காதலுணர்
வொழியாது வந்துதிப்ப.

20


இவ்வாறாக நந்தனார், சிவபெருமான் மகிழ்ந்து உறையும் திருப்பதிகள் பலவும் சென்று வணங்கி, உண்மை நிறைந்த திருத்தொண்டினைச் செய்து வருபவர், ஒருநாள், தம் உள்ளத்துத் தம்மையறியாது மிகுந்து எழுகின்ற வேட்கையால், திருவுடைய தில்லையம்பலத்திற்குச் சென்று வணங்குதற்கு எழுகின்ற பெருங்காதல் ஒழியாது தோன்ற,
குறிப்புரை:

Go to top
அன்றிரவு கண்துயிலார்
புலர்ந்ததற்பின் அங்கெய்த
ஒன்றிஅணை தருதன்மை
உறுகுலத்தோ டிசைவில்லை
என்றிதுவும் எம்பெருமான்
ஏவலெனப் போக்கொழிவார்
நன்றுமெழுங் காதல்மிக
நாளைப்போ வேன்என்பார்.

21


அன்று இரவு முழுவதும் கண்துயிலாது இருந்தவர், விடிந்ததும்,தாம் புறப்படலாமென நினைவுற்றபொழுதுபெருமானின் திருமுன்பு சென்று ஒன்றி வழிபடும் பேறு 'இக்குலத்திற்குப்பொருந்து வதாயில்லை' என்னும் இந்நினைவும் அப் பெருமானின் அருள்வழி யதே, என்று எண்ணியவர், தாம் அங்குச் செல்வதை விடுத்தார். ஆயினும், தில்லைப் பெருமன்றில் பெருமானைக்கண்டு வழிபடும் உணர்வு மேல் எழ, 'நாளைப் போவேன்' என்பார்.
குறிப்புரை: 'போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்' (தி. 8 ப. 1 வரி 43) என்பதற்கேற்பத், தாம் வழிபடும் எண்ணத்தை இவ்வகையில் அமைதிப் படுத்திக் கொண்டார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

நாளைப்போ வேன்என்று
நாள்கள்செலத் தரியாது
பூளைப்பூ வாம்பிறவிப்
பிணிப்பொழியப் போவாராய்ப்
பாளைப்பூங் கமுகுடுத்த
பழம்பதியி னின்றும்போய்
வாளைப்போத் தெழும்பழனம்
சூழ்தில்லை மருங்கணைவார்.

22


இவ்வாறு 'நாளைப் போவேன்' என்று நாளும் நந்தனார் சொல்லிவர நாள்களும் கழிதலால், பூளைப் பூப்போன்ற நிலையாத இப்பிறவிச் சூழல் ஒழியப்போதற்கு ஒருப்படுவாராய், பூம் பாளைகள் நிறைந்த கமுக மரங்கள் செறிந்த சோலைகளையுடைய ஆதனூரினின்றும் புறப்பட்டு, வாளைமீன்கள் துள்ளி எழுந்து பாய்வதற்கு ஏற்ற நல்ல நீர்வளமுடைய வயல் சூழ்ந்த தில்லையின் பக்கத்தினை அணைவாராய்.
குறிப்புரை: பூளைப்பூ - இது மிக மென்மையானது; எந்நேரத்திலும் அழிதற்குரியது. அதனால் இதனைப் பிறவிக்கு ஒப்பிட்டார், 'மாருதம் அறைந்த பூளையாயின கண்டனை' (கம்பரா. யுத்த. முதற்போர். பா. 255) எனவரும் கம்பர் திருவாக்கும் காண்க.

செல்கின்ற போழ்தந்தத்
திருவெல்லை பணிந்தெழுந்து
பல்குஞ்செந் தீவளர்த்த
பயில்வேள்வி எழும்புகையும்
மல்குபெருங் கிடையோதும்
மடங்கள்நெருங் கினவுங்கண்
டல்குந்தங் குலம்நினைந்தே
அஞ்சியணைந் திலர்நின்றார்.

23


நந்தனார் தாம் செல்கின்ற போது, அத்திருத் தில்லையின் எல்லையினை வணங்கி எழுந்து நின்று, அங்குப் பெருக எழும் செந்தீயை வளர்த்திடும் வேள்விச் சாலையில் எழுகின்ற ஓமப் புகையையும் பெருகும் ஓசையையுடைய நான்மறைகளும் ஓதப் பெறும் மடங்கள் நெருங்கியிருப்பனவற்றையும் கண்ணுற்று, அத் தகைய புண்ணிய விளைவு மிகும் தூய இடத்திற்குச் செல்வதற்குத் தமது குறைவுடைய குலத்தின் தகைமையை எண்ணிப் பயந்து, அங்கு மேலும் உட்செலாது புற எல்லையில் நின்றார்.
குறிப்புரை: அல்கும் தங்குலம் - குறைவுடைய தமது குலம். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

நின்றவர்அங் கெய்தரிய
பெருமையினை நினைப்பார்முன்
சென்றிவையுங் கடந்தூர்சூழ்
எயில்திருவா யிலைப்புக்கால்
குன்றனைய மாளிகைகள்
தொறுங்குலவும் வேதிகைகள்
ஒன்றியமூ வாயிரம்அங்
குளவென்பார் ஆகுதிகள்.

24


இவ்வாறு அங்கு நின்ற நந்தனார் அங்குத்தாம் சென்று அடைதற்கு அரிய பெருமைகளை நினைப்பாராய், முன்சென்று எல்லையைக் கடந்து, தில்லையைச் சூழ்ந்து இருக்கும் மதிலின் திருவாயிலில் புகுந்தால், அப்பால் அங்கு மலை போன்ற பெரிய மாளிகைகள் தோறும் நிலவி இருக்கும் வேள்விச் சாலைகள் மூவாயிரம் அங்கு இருக்கும் எனச் சொல்வார்கள்.
குறிப்புரை:

இப்பரிசா யிருக்கவெனக்
கெய்தலரி தென்றஞ்சி
அப்பதியின் மதிற்புறத்தின்
ஆராத பெருங்காதல்
ஒப்பரிதாய் வளர்ந்தோங்க
உள்ளுருகிக் கைதொழுதே
செப்பரிய திருவெல்லை
வலங்கொண்டு செல்கின்றார்.

25


இந்நிலையில், 'எனக்கு இவ்வெல்லையினின்றும் உட்போதல் அரிது' என்று மிகவும் அஞ்சி, அம்மதிலின் புறத்தே பெருமானின் திருவடிகளில் ஆராத பெருவிருப்பாய், அன்பு தனக்கு வேறு ஒப்பரிதாய் வளர்ந்து ஓங்கிட உள்ளம் உருகி, அங்கு நின்றவாறே கை தொழுது, சொலற்கரிய பெருமை வாய்ந்த தில்லைப் பதியின் திருஎல்லையைப் பலகாலும் வலங்கொண்டு வந்தார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
இவ்வண்ணம் இரவுபகல்
வலஞ்செய்தங் கெய்தரிய
அவ்வண்ணம் நினைந்தழிந்த
அடித்தொண்ட ரயர்வெய்தி
மைவண்ணத் திருமிடற்றார்
மன்றில்நடங் கும்பிடுவ
தெவ்வண்ணம் எனநினைந்தே
ஏசறவி னொடுந்துயில்வார்.

26


இவ்வண்ணமாக இரவும் பகலும் வலம் செய்து, அங்குத்தாம் தமது குலத்தின் தன்மையால் உட்போதற்கு அரிய தன்மையை நினைந்து மனம் அழிந்த நிலையில், நந்தனார் உள்ளம் அயர்ச்சி கொண்டு, மையின் கருமை நிறமுடைய கண்டத்துச் செல் வனின் திருக்கூத்தை எவ்வாறு கும்பிடுவதென்று நினைந்தவாறே வருந்தித் துயில்வாராக,
குறிப்புரை:

இன்னல்தரும் இழிபிறவி
இதுதடையென் றேதுயில்வார்
அந்நிலைமை அம்பலத்துள்
ஆடுவார் அறிந்தருளி
மன்னுதிருத் தொண்டரவர்
வருத்தமெலாந் தீர்ப்பதற்கு
முன்னணைந்து கனவின்கண்
முறுவலொடும் அருள்செய்வார்.

27


துன்பத்தைத் தருகின்ற இழிந்த இப்பிறவி தடையா யுள்ளதை உட்கொண்டவாறே அன்றிரவு துயில் கொள்ளும் நந்த னாரின் நிலையினை, அம்பலத்துள் நிறைந்து ஆடுகின்ற பெருமானார் அறிந்தருளி, சீர்மை வாய்ந்த அத்திருத்தொண்டரின் வருத்தங்கள் யாவற்றையும் தாம் தீர்த்திடற்கு, அவர் கனவின்கண் சென்று புன் முறுவலுடன் அவருக்கு அருளிச் செய்வாராகி.
குறிப்புரை:

இப்பிறவி போய்நீங்க
எரியினிடை நீமூழ்கி
முப்புரிநூல் மார்பருடன்
முன்னணைவாய் எனமொழிந்
தப்பரிசே தில்லைவாழ்
அந்தணர்க்கும் எரியமைக்க
மெய்ப்பொருளா னார்அருளி
அம்பலத்தே மேவினார்.

28


'இப்பிறவி நீங்கிட நெருப்பிடத்தே நீ முழ்கி எழுந்து, பின்பு முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய தில்லைவாழ் அந்தணருடன் என்முன்பு வந்திடுவாய்' என மொழிந்தருளி, அத் தன்மையாகவே தில்லைவாழ் அந்தணர்க்கும் அன்று இரவின்கண் அவர்கள் கனவில் 'நந்தனார்க்கு நெருப்பு அமைத்துக் கொடுத் திடுக' என மெய்ப்பொருளாகிய சிவபெருமானும் அருள்புரிந்து தில்லையம் பலத்துள் மேவினார்.
குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

தம்பெருமான் பணிகேட்ட
தவமறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயில்
முன்பச்ச முடன்ஈண்டி
எம்பெருமான் அருள்செய்த
பணிசெய்வோம் என்றேத்தித்
தம்பரிவு பெருகவருந்
திருத்தொண்டர் பாற்சார்ந்தார்.

29


கனவின்கண் தம் பெருமான் தமக்கு இட்ட பணி யினைக் கேட்ட தவமறையோர்களான தில்லைவாழ் அந்தணர்கள், பெருமானின் திருவாயில்முன் அச்சத்துடன் அணைந்து, 'எம் பெருமான் நமக்கு அருள் செய்தவாறு நாம் செய்வோம்' என்று பெருமானைப் போற்றித், தம் ஈசன்பால் அன்பு பெருகிட வருகின்ற திருத்தொண்டராய நந்தனாரிடத்து வந்துற்றார்கள்.
குறிப்புரை:

ஐயரே அம்பலவர்
அருளால்இப் பொழுதணைந்தோம்
வெய்யஅழல் அமைத்துமக்குத்
தரவேண்டி எனவிளம்ப
நையுமனத் திருத்தொண்டர்
நானுய்ந்தேன் எனத்தொழுதார்
தெய்வமறை முனிவர்களும்
தீயமைத்த படிமொழிந்தார்.

30


'ஐயரே! நாங்கள் அம்பலவர் அருளால், கொடிய தழலாய நெருப்பினை உமக்கு அமைத்துத் தருதற்காக இங்கு வந்துள்ளோம் என்று கூறுதலும், அதுகேட்டு, நைந்துருகும் மனமுடைய திருத்தொண்டராய நந்தனாரும், 'நான் உய்ந்தேன்' எனத் தொழுதார். அதுபொழுது தெய்வமறையின் நெறிநிற்கும் தில்லைவாழ் அந்தணர் களும் தாங்கள் நெருப்பமைத்த தன்மையைச் சொன்னார்கள்.
குறிப்புரை:

Go to top
மறையவர்கள் மொழிந்ததற்பின்
தென்றிசையின் மதிற்புறத்துப்
பிறையுரிஞ்சும் திருவாயில்
முன்னாகப் பிஞ்ஞகர்தம்
நிறையருளால் மறையவர்கள்
நெருப்பமைத்த குழியெய்தி
இறையவர்தாள் மனங்கொண்டே
எரிசூழ வலங்கொண்டார்.

31


தில்லைவாழ் அந்தணர்கள் நெருப்பமைத் தமையை மொழிந்ததும், தென்திசை மதிலின் புறத்தில் பிறைவந்து உராயுமாறு உயர்ந்த திருவாயில் முன்னாகத், தில்லைப் பெருமான் திருவருளின் நிறைவால், அத்தில்லைவாழ் அந்தணர்கள் நெருப்பு அமைத்த தீக்குழியை நந்தனார் வந்தடைந்து, எம்பெருமான் திருவடிகளை மனத்தில் எண்ணிக்கொண்டு எரியைச் சூழ்ந்து வலமாக வந்தருளி.

குறிப்புரை:

கைதொழுது நடமாடும்
கழலுன்னி அழல்புக்கார்
எய்தியஅப் பொழுதின்கண்
எரியின்கண் இம்மாயப்
பொய்தகையும் உருவொழித்துப்
புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க
வேணிமுடி கொண்டெழுந்தார்.

32


கைகளைக் கூப்பித் தொழுது கூத்தியற்றும் சேவடி களை மனத்தில் நினைந்து, அந்நெருப்பினுள் புகுந்தார். புகுந்த அப்பொழுதின்கண், அந்நெருப்பிடத்து மாயையின் விளைவாய பொய்ம்மை நிரம்பிய ஊன் உடம்பை நீக்கிப் புண்ணியம் நிறைந்த பெருமுனிவரின் வடிவாகி, திருமேனியில் திகழ்கின்ற வெண்ணூல் விளங்கிட, சடைமுடி கொண்ட ஒரு தவமுனிவராக மேலே எழுந்தார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

செந்தீமேல் எழும்பொழுது
செம்மலர்மேல் வந்தெழுந்த
அந்தணன்போல் தோன்றினார்
அந்தரதுந் துபிநாதம்
வந்தெழுந்த துயர்விசும்பில்
வானவர்கள் மகிழ்ந்தார்த்துப்
பைந்துணர்மந் தாரத்தின்
பனிமலர்மா ரிகள்பொழிந்தார்.

33


சிவந்த நிறமுடைய நெருப்பினின்றும் எழும் போது, செந்தாமரை மலர்மேல் இருக்கும் நான்முகனைப் போன்ற அழகிய வனப்புடன் தோன்றினார். அது பொழுது வானினின்றும் துந்துபிகளின் முழக்கம் எழுந்தது. உயர்ந்த வானிடத்தே தேவர்கள் கண்டு மகிழ்ந்து ஆர்த்து, பசிய மகரந்தப் பொடி பரக்கும் இதழுடைய மந்தார மரத்தின் மலர்ந்த பூக்களின் மழையினைச் சொரிந்தனர்.
குறிப்புரை:

திருவுடைய தில்லைவாழ்
அந்தணர்கள் கைதொழுதார்
பரவரிய தொண்டர்களும்
பணிந்துமனங் களிபயின்றார்
அருமறைசூழ் திருமன்றில்
ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப்
போவாராம் மறைமுனிவர்.

34


திருவுடைய தில்லைவாழ் அந்தணர்களும் கண்டு கைகூப்பித் தொழுதார்கள். போற்றற்கரிய சிறப்புடைய அடியார்களும் பணிந்து, தங்கள் மனத்தில் பெருமகிழ்ச்சி கொண்டனர். இப்பால் அரிய மறைகள் சூழ்கின்ற திருவுடைய அம்பலத்தே ஆடுகின்ற சேவடி களை வணங்குதற்குத் திருநாளைப் போவாராம் மறைமுனிவர் வந்து கொண்டிருக்க.
குறிப்புரை:

தில்லைவாழ் அந்தணரும்
உடன்செல்லச் சென்றெய்திக்
கொல்லைமான் மறிக்கரத்தார்
கோபுரத்தைத் தொழுதிறைஞ்சி
ஒல்லைபோய் உள்புகுந்தார்
உலகுய்ய நடமாடும்
எல்லையினைத் தலைப்பட்டார்
யாவர்களுங் கண்டிலரால்.

35


தில்லைவாழ் அந்தணரும் உடன்வர, முல்லை நிலத்தே வாழும் மானைத் திருக்கரத்து ஏந்திய பெருமானாரின் திருக்கோவில் கோபுரத்தைத் தொழுது வணங்கி, விரைந்து உட்புகுந்தார். அங்கு உலகம் உய்ய நடமாடும் அவ்வெல்லையினைச் சென்று அடைந்த அளவில், அவரை யாரும் கண்டிலர்.

குறிப்புரை: ஆல் - அசைநிலை.
இவ்விரண்டு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
அந்தணர்கள் அதிசயித்தார்
அருமுனிவர் துதிசெய்தார்
வந்தணைந்த திருத்தொண்டர்
தம்மைவினை மாசறுத்துச்
சுந்தரத்தா மரைபுரையும்
துணையடிகள் தொழுதிருக்க
அந்தமிலா ஆனந்தப்
பெருங்கூத்தர் அருள்புரிந்தார்.

36


அந்தணர்கள் அதிசயித்தனர். அரிய முனிவர்கள் வழிபட்டனர். தம்மை வந்தடைந்த திருத்தொண்டராய திருநாளைப் போவாரை, வினை மாசு கழிய, அழகிய தாமரை மலர் போன்ற இரு திருவடிகளையும் எஞ்ஞான்றும் தொழுது கொண்டு இருக்குமாறு அழிவில்லாத ஆனந்தப் பெருங்கூத்தர் திருவருள் புரிந்தார்.
*** அருமுனிவர் - புலனடக்கமாகிய அரிய செயற்பாடு உடைய முனிவர்.
மாசறுத்து - குற்றங்களை நீக்கி, மும்மலங்களால் வந்த குற்றங்கள். 'மாசறு பொன்னே' (சிலப்பதிகாரம்) இம்மியளவு குற்றமும் இல்லாத தங்கம்.

மாசுடம்பு விடத்தீயில்
மஞ்சனஞ்செய் தருளிஎழுந்
தாசில்மறை முனியாகி
அம்பலவர் தாளடைந்தார்
தேசுடைய கழல்வாழ்த்தித்
திருக்குறிப்புத் தொண்டர்வினைப்
பாசம்அற முயன்றவர்தம்
திருத்தொண்டின் பரிசுரைப்பாம்.

37


குற்றம் பொருந்திய உடலை விடும் பொருட்டுத் தீயில் குளித்தருளி, மேல் எழுந்து, குற்றமற்ற மறை முனிவர் ஆகி, கூத்தப் பெருமானின் திருவடிகளை அடைந்த திருநாளைப்போவாரின் ஒளி பொருந்திய திருவடிகளை வாழ்த்தி, அவர்தம் துணை கொண்டு, இருவினையாம் கயிற்றை அறுக்க முயன்றவராகிய திருக்குறிப்புத் தொண்டர்தம் திருத்தொண்டின் இயல்பை இனி உரைப்பாம்.
குறிப்புரை:


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song lang tamil pathigam no 12.180