வையம்நிகழ் பல்லவர்தம்
குலமரபின் வழித்தோன்றி
வெய்யகலி யும்பகையும்
மிகையொழியும் வகையடக்கிச்
செய்யசடை யார்சைவத்
திருநெறியால் அரசளிப்பார்
ஐயடிகள் நீதியால்
அடிப்படுத்துஞ் செங்கோலார்.
|
1
|
திருமலியும் புகழ்விளங்கச்
சேணிலத்தில் எவ்வுயிரும்
பெருமையுடன் இனிதுஅமரப்
பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத்
தாரணிமேற் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க
அரசளிக்கும் அந்நாளில்.
|
2
|
மன்னவரும் பணிசெய்ய
வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப்
பார்அளிப்பார் அரசாட்சி
இன்னல்என இகழ்ந்ததனை
எழிற்குமரன் மேல்இழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு
நயந்தளிப்பார் ஆயினார்.
|
3
|
தொண்டுரிமை புரக்கின்றார்
சூழ்வேலை யுலகின்கண்
அண்டர்பிரான் அமர்ந்தருளும்
ஆலயங்க ளானவெலாம்
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின்
கடனேற்ற பணிசெய்தே
வண்தமிழின் மொழிவெண்பா
ஓர்ஒன்றா வழுத்துவார்.
|
4
|
பெருத்தெழுகா தலில்வணங்கிப்
பெரும்பற்றத் தண்புலியூர்த்
திருச்சிற்றம் பலத்தாடல்
புரிந்தருளுஞ் செய்யசடை
நிருத்தனார் திருக்கூத்து
நேர்ந்திறைஞ்சி நெடுந்தகையார்
விருப்பினுடன் செந்தமிழின்
வெண்பாமென் மலர்புனைந்தார்.
|
5
|
| Go to top |
அவ்வகையால் அருள்பெற்றங்கு
அமர்ந்துசில நாள்வைகி
இவ்வுலகில் தம்பெருமான்
கோயில்களெல் லாம்எய்திச்
செவ்வியஅன் பொடுபணிந்து
திருப்பணிஏற் றனசெய்தே
எவ்வுலகும் புகழ்ந்தேத்தும்
இன்தமிழ்வெண் பாமொழிந்தார்.
|
6
|
இந்நெறியால் அரனடியார்
இன்பமுற இசைந்தபணி
பன்னெடுநாள் ஆற்றியபின்
பரமர்திரு வடிநிழற்கீழ்
மன்னுசிவ லோகத்து
வழியன்பர் மருங்கணைந்தார்
கன்னிமதில் சூழ்காஞ்சிக்
காடவர் ஐடிகளார்.
|
7
|
பையரவ மணியாரம்
அணிந்தார்க்குப் பாவணிந்த
ஐயடிகள் காடவனார்
அடியிணைத்தா மரைவணங்கிக்
கையணிமான் மழுவுடையார்
கழல்பணிசிந் தனையுடைய
செய்தவத்துக் கணம்புல்லர்
திருத்தொண்டு விரித்துரைப்பாம்.
|
8
|
உளத்திலொரு துளக்கம் இலோம்
உலகுய்ய இருண்ட திருக்
களத்து முது குன்றர்தரு
கனகம் ஆற்றினிலிட்டு
வளத்தின் மலிந்தேழ் உலகும்
வணங்குபெருந் திருவாரூர்க்
குளத்தில்எடுத் தார்வினையின்
குழிவாய்நின்று எனையெடுத்தார்.
|
9
|