சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கழிப்பாலை - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=GnIaawrtBF4   Add audio link Add Audio

புனல் ஆடிய புன்சடையாய்! அரணம்
அனல் ஆக விழித்தவனே! அழகு ஆர்
கனல் ஆடலினாய்! கழிப்பாலை உளாய்!
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே.

1
கங்கை நீரில் மூழ்கிய சடையை உடையவனே! முப்புரங்களையும் அழலெழுமாறு விழித்து எரித்தவனே! அழகிய நெருப்பில் நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலையுள் எழுந்தருளியவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம்.

துணைஆக ஒர் தூ வள மாதினையும்
இணைஆக உகந்தவனே! இறைவா!
கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய்!
இணை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.

2
தனக்குத் துணையாகுமாறு தூய அழகிய உமையம்மையையும் உன்திருமேனியின் ஒருபாகமாக இணைத்துக் கொண்டு மகிழ்ந்தவனே! இறைவனே! முப்புரங்களைக் கணையால் எய்து கழிப்பாலையில் மேவி இருப்பவனே! உன் இரண்டு திருவடிகளை ஏத்த இடர் கெடும்.

நெடியாய்! குறியாய்! நிமிர்புன்சடையின்
முடியாய்! சுடுவெண்பொடி முற்று அணிவாய்!
கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்!
அடியார்க்கு அடையா, அவலம் அவையே.

3
மிகவும் பெரியவனே! நுண்ணியனே! நிமிர்த்துக் கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே! திருநீற்றைத் திருமேனி முழுதும் அணிந்தவனே! மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியிருப்பவனே! உன் அடியவர்களை அவலங்கள் அடையமாட்டா.

எளியாய்! அரியாய்! நிலம், நீரொடு, தீ,
வளி, காயம், என வெளி மன்னிய தூ
ஒளியாய்! உனையே தொழுது உன்னுமவர்க்கு
அளியாய்! கழிப்பாலை அமர்ந்தவனே!

4
அன்பர்க்கு எளியவனே! அல்லாதார்க்கு அரியவனே! நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களில் வெளிப்படையாக விளங்கும் தூய ஒளியோனே! உன்னையே வணங்கி நினைப்பவர்பால் அன்பு செய்பவனே! கழிப்பாலையில் விளங்கு பவனே!

நடம் நண்ணி, ஒர் நாகம் அசைத்தவனே!
விடம் நண்ணிய தூ மிடறா! விகிர்தா!
கடல் நண்ணு கழிப்பதி காவலனே!
உடல் நண்ணி வணங்குவன், உன் அடியே.

5
நடனத்தை விரும்பி ஒப்பற்ற பாம்பைக் கச்சாகக் கட்டியவனே! விடம் பொருந்திய தூயமிடற்றினனே! வேறுபட்ட பல வடிவங்களைக் கொண்டவனே! கடலை அடுத்துள்ள கழியில் விளங்கும் தலத்தில் விளங்குபவனே! என்உடல் உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்குவது உன் திருவடிகளையாகும்.
Go to top

பிறை ஆர் சடையாய்! பெரியாய்! பெரிய(ம்)
மறை ஆர்தரு வாய்மையினாய்! உலகில்
கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்!
இறை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.

6
பிறையணிந்த சடையினனே! பெரியோனே! பெருமை பொருந்திய வேதங்கள் கூறும் உண்மைப் பொருளாய் உள்ளவனே! மண்ணுலகில் கருநிறம் பொருந்திய பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியவனே! எங்கும் தங்கும் உன் திருவடிகளை ஏத்த இடர்கெடும்.

முதிரும் சடையின்முடிமேல் விளங்கும்
கதிர் வெண்பிறையாய்! கழிப்பாலை உளாய்!
எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு
அதிரும் வினைஆயின ஆசு அறுமே.

7
முதிர்ந்த சடை முடியின்மேல் விளங்கும் வெண்மையான ஒளிக்கதிர்களை உடைய பிறையைச் சூடியவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முன்னிலைப்பரவல் என்னும் வகையில் எதிர்நின்று பரவி இரங்கி உன்னைத் துதிக்கும் அடியவர்க்கு நடுக்கத் தைத்தரும் வினைகளாகிய குற்றங்கள் அகலும்.

எரி ஆர் கணையால் எயில் எய்தவனே!
விரி ஆர்தரு வீழ்சடையாய்! இரவில்
கரி காடலினாய்! கழிப்பாலை உளாய்!
உரிதுஆகி வணங்குவன், உன் அடியே.

8
தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே! விரிந்து விழும் சடைக்கற்றையை உடையவனே! இரவில் கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே! உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன்.

நல நாரணன், நான்முகன், நண்ணல் உற,
கனல் ஆனவனே! கழிப்பாலை உளாய்!
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு
இலதுஆம், வினைதான்; எயில் எயதவனே!

9
நன்மைகளைப் புரியும் திருமால், நான்முகன் இருவரும் அடிமுடி காண்போம் என்று உன்னை நண்ணியபோது கனல்வடிவோடு ஓங்கி நின்றவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முப்புரங்களை எய்து எரித்தவனே! உன்னுடைய நீண்ட திருவடிகளையே தொழுது நினைவார்க்கு வினைகள் இல்லையாகும்.

தவர் கொண்ட தொழில் சமண்வேடரொடும்,
துவர் கொண்டன நுண்துகில் ஆடையரும்,
அவர் கொண்டன விட்டு, அடிகள் உறையும்
உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே.

10
தவத்தினராகிய வேடங்கொண்டு திரிவதைத் தொழிலாகக் கொண்ட போலியான சமண்துறவி வேடத்தினரும் பழுப்பு நிறம் ஏற்றிய நுண்ணிய ஆடையைப் போர்த்துத்திரியும் புத்தர்களும் ஆகிய அவர்கள் கொண்ட கொள்கைகள் உண்மையானவை அல்ல எனவிடுத்துத் தலைமைக்கடவுளாக விளங்கும் சிவபிரான் உறைவதும், உவர் நீரையுடைய உப்பங்கழிகளை உடையதும் ஆகிய கழிப்பாலையை நாம் நினைத்துப் போற்றுவோம்.
Go to top

கழி ஆர் பதி காவலனைப் புகலிப்
பழியா மறை ஞானசம்பந்தன சொல்
வழிபாடு இவை கொண்டு, அடி வாழ்த்த வல்லார்,
கெழியார், இமையோரொடு; கேடு இலரே.

11
உப்பங்கழிகள் பொருந்திய தலமாகிய கழிப்பாலைத்தலைவனாகிய சிவபிரானை, புகலிப்பதிக்குரியவனாய் மறை நெறிவளரத் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்திருப்பதிகத்தை ஓதுவதையே வழிபாடாகக் கொண்டு போற்றவல்லவர் வானோர்களோடு பொருந்தி விளங்குவர். கேடு முதலியன இல்லாதவர் ஆவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கழிப்பாலை
2.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்
Tune - இந்தளம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
3.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று
Tune - கௌசிகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்
Tune - காந்தாரம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை
Tune - திருநேரிசை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.106   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெய்தல் குருகு தன் பிள்ளை
Tune - திருவிருத்தம்   (திருக்கழிப்பாலை அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
5.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
6.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்
Tune - திருத்தாண்டகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
7.023   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
Tune - நட்டராகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் பொற்பதவேதநாயகியம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group