பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு
செஞ்சடையாரும்,
கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும்,
எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும்,
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே.
|
1
|
பாண்டிக்கொடுமுடி இறைவர் மாதொருகூறர். பிறைசூடிய சடையார். கண் பொலிந்த நெற்றியர். காதில் குழை அணிந்தவர். எண்குணத்தவர். இமையவர் போற்ற நிற்பவர். இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவர். | |
தனைக் கன்னி மா மலர் கொண்டு தாள் தொழுவார் அவர்
தங்கள்
வினைப்பகை ஆயின தீர்க்கும் விண்ணவர்; விஞ்சையர்;
நெஞ்சில்
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார்; நிரை வளை மங்கை
நடுங்கப்
பனைக்கைப் பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடு
முடியாரே.
|
2
|
பாண்டிக்கொடுமுடி இறைவர், தம்மைக் கொன்றை மலர் கொண்டு பூசித்து வணங்குபவர்களின் பகையாய்த் துயர் செய்யும் வினைகளைத் தீர்த்தருளும் மேலானவர். ஞானவடிவினர். நெஞ்சில் நினைத்து வணங்க எழும் அன்பர்களின் துயரங்களைத் தீர்ப்பவர். உமையம்மை அஞ்சப் பனை போன்ற கையை உடைய யானையை உரித்துப் போர்த்தவர். | |
சடை அமர் கொன்றையினாரும், சாந்த வெண் நீறு
அணிந்தாரும்,
புடை அமர் பூதத்தினாரும், பொறி கிளர் பாம்பு
அசைத்தாரும்
விடை அமரும் கொடியாரும், வெண்மழு மூ இலைச்சூலப்
படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடு முடியாரே.
|
3
|
பாண்டிக்கொடுமுடி இறைவர், சடையில் கொன்றை தரித்தவர். சந்தனமாக வெண்ணீற்றை அணிந்தவர். பூதப்படைகளை உடையவர். புள்ளிகளைக் கொண்ட பாம்பை இடையில் கட்டியவர். விடைக்கொடி உடையவர். வெண்மழு, மூவிலைச் சூலம் ஆகியவற்றைப் படைக்கலன்களாக உடையவர். | |
நறை வளர் கொன்றையினாரும்; ஞாலம் எல்லாம் தொழுது
ஏத்த,
கறை வளர் மா மிடற்றாரும்; காடு அரங்கா, கனல் ஏந்தி,
மறை வளர் பாடலினோடு, மண்முழவம், குழல், மொந்தை
பறை, வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே.
|
4
|
பாண்டிக்கொடுமுடி இறைவர், தேன் பொருந்திய கொன்றைமலர் மாலையை அணிந்தவர். உலகமெல்லாம் வணங்க நஞ்சுண்டு கறுத்த கண்டத்தை உடையவர். இடுகாட்டை அரங்கமாகக் கொண்டு கையில் கனலேந்தி வேதப்பாடல்களோடு முழவம், குழல், மொந்தை, பறை ஒலிக்கப்பாடி ஆடுபவர். | |
போகமும் இன்பமும் ஆகி, போற்றி! என்பார் அவர்
தங்கள்
ஆகம் உறைவு இடம் ஆக அமர்ந்தவர்
கொன்றையினோடும்
நாகமும் திங்களும் சூடி, நன்நுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக்கொடுமுடியாரே.
|
5
|
பாண்டிக்கொடுமுடி இறைவர், போகமும் அதனால் எய்தும் இன்பமும் ஆனவர். போற்றி என்று கூறுவார் உடலை உறைவிடமாகக்கொண்டு அமர்பவர். கொன்றை, பாம்பு, திங்கள் ஆகியனவற்றை முடியில் சூடி உமைபாகம் உகந்தவர். | |
| Go to top |
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடைமேல் உடையாரும்,
பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும்,
வடிவு உடை மங்கை தன்னோடு மணம் படு
கொள்கையினாரும்,
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடு முடியாரே.
|
6
|
பாண்டிக்கொடுமுடி இறைவர், மணம் பொருந்திய வில்வம், ஊமத்தை ஆகியவற்றைச் சடையின்மேல் உடையவர். முப்புரங்களைப் பொடிபடுமாறு செய்த வில்லினை உடையவர். அழகிய பார்வதி தேவியாரை மணம் புரிந்தவர். உலக உயிர்கள் வடிவம் கொள்ளுதற்கு முன்படிவமாக விளங்குபவர். | |
ஊன் அமர் வெண்தலை ஏந்தி உண் பலிக்கு என்று
உழல்வாரும்,
தேன் அமரும் மொழிமாது சேர் திருமேனியினாரும்,
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக்
கரைமேல்
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடு முடியாரே.
|
7
|
பாண்டிக்கொடுமுடி இறைவர், ஊன் பொருந்திய வெண்தலையை ஏந்திப்பலியேற்கத் திரிபவர். தேன்மொழி மாதாகிய பார்வதியம்மை சேர்ந்த திருமேனியர். காடுகளில்வாழும் மயில்கள் ஆடும் காவிரியின் அழகிய கரைமேல் பால் போன்ற திருநீறு அணிந்து திகழ்பவர். | |
புரந்தரன் தன்னொடு வானோர், போற்றி! என்று ஏத்த
நின்றாரும்,
பெருந்திறல் வாள் அரக்கன்(ன்)னைப் பேர் இடர் செய்து
உகந்தாரும்,
கருந்திரை மா மிடற்றாரும் கார் அகில் பல்மணி உந்திப்
பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக்கொடு முடியாரே.
|
8
|
பாண்டிக்கொடுமுடி இறைவர், இந்திரனோடு ஏனைய தேவர் பலரும் போற்றி என்று ஏத்த நிற்பவர். மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் அடர்த்துப் பின் அருள் செய்தவர். கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினர். கரிய அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை அடித்துக்கொண்டு பரந்து கிழிந்து வரும் காவிரியின் அருகில் உறைபவர். | |
திருமகள் காதலினானும், திகழ்தரு மா மலர் மேலைப்
பெருமகனும்(ம்), அவர் காணாப் பேர் அழல் ஆகிய
பெம்மான்
மரு மலி மென்மலர்ச் சந்து வந்து இழி காவிரி மாடே
பரு மணி நீர்த்துறை ஆரும் பாண்டிக்கொடு முடியாரே.
|
9
|
திருமகள் கேள்வனும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் காணாதாவாறு பேரழற்பிழம்பாய் எழுந்து நின்ற பெருமானார், மணம் கமழும் மென்மலர்கள், சந்தனம் ஆகியவற்றுடன் வரும் காவிரித்துறையில் விளங்கும் பாண்டிக்கொடுமுடி இறைவராவார். | |
புத்தரும், புந்தி இலாத சமணரும், பொய்ம்மொழி அல்லால்
மெய்த்தவம் பேசிடமாட்டார்; வேடம் பல பலவற்றால்
சித்தரும் தேவரும் கூடி, செழு மலர் நல்லன கொண்டு,
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடு முடியாரே.
|
10
|
புத்தர் சமணர் ஆகியோர் பொய்மொழியல்லால் உண்மைத்தவநெறிகளைப் பேசிடமாட்டார். அவருடைய பலப்பல திருவடிவங்களைச் சித்தர் தேவர் முதலியோருடன் பத்தர்கள் நல்ல செழுமையான மலர் கொண்டு பணிந்தேத்த விளங்குபவர் பாண்டிக்கொடுமுடி இறைவர். | |
| Go to top |
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
பலம் மல்கு வெண்தலை ஏந்தி பாண்டிக்கொடு
முடிதன்னைச்
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார், துயர்
தீர்ந்து,
நலம் மல்கு சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.
|
11
|
மரக்கலங்களைக் கொண்டுள்ள குளிர்ந்த கடல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன், உயிர்கட்குப் பயன் நல்க வெண்தலையைக் கையில் ஏந்தி விளங்கும் இறைவனின் கொடுமுடிநகரைப் பரவிய பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், துயர் தீர்ந்து நன்மை நிரம்பிய சிந்தையராய் நன்னெறி எய்துவர். | |