சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.018   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவைகல்மாடக்கோயில் - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி ராகத்தில் திருமுறை அருள்தரு வைகலம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வைகனாதேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=uBQNJJFbi4M   Add audio link Add Audio

துள மதி உடை மறி தோன்று கையினர்
இளமதி அணி சடை எந்தையார், இடம்
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய,
வள மதி தடவிய, மாடக்கோயிலே.

1
இறைவன் , துள்ளிக்குதிக்கும் இயல்புடைய மான்கன்றை ஏந்தியுள்ள திருக்கரத்தினன் . இளம்பிறையை அணிந்துள்ள சடையன் . எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது சிவஞானிகள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , அழகிய சந்திரனை வருடுமளவு ஓங்கி உயர்ந்துள்ள திருமாடக்கோயில் ஆகும் .

மெய் அகம் மிளிரும் வெண்நூலர், வேதியர்
மைய கண் மலைமகளோடும் வைகு இடம்
வையகம் மகிழ்தர, வைகல் மேல்-திசை
செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே.

2
இறைவர் ஒளிர்கின்ற முப்புரிநூல் அணிந்துள்ளவர் . வேதத்தை அருளிச்செய்தவர் . அவர் , மை தீட்டிய கரிய கண்ணுடைய மலைமகளான உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும் இடமாவது , இப்பூவுலகத்தார் மகிழும்படி திருவைகல் என்னும் திருத்தலத்தில் மேற்குத் திசையில் , சிவந்த கண்ணுடைய கோச்செங்கட் சோழ மன்னனால் முற்காலத்தில் எழுப்பப்பட்ட மாடக்கோயிலாகும் .

கணி அணி மலர்கொடு, காலை மாலையும்
பணி அணிபவர்க்கு அருள் செய்த பான்மையர்,
தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம்
மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே.

3
வேங்கைமரத்தின் அழகிய மலர்களைக் கொண்டு காலையும் , மாலையும் வழிபாடு செய்பவர்கட்கு அருள்செய்யும் தன்மையுடைவர் இறைவர் . அவர் குளிர்ந்த அருளையே தம் வடிவ மாகக் கொண்டு உமாதேவியோடு தாமும் வீற்றிருந்தருளும் இடமாவது இரத்தினங்களால் அழகுபடுத்தப்பட்ட திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக்கோயிலாகும் .

கொம்பு இயல் கோதை முன் அஞ்ச, குஞ்சரத்-
தும்பி அது உரி செய்த துங்கர் தங்கு இடம்
வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல்-திசை,
செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே.

4
பூங்கொம்பு போன்ற மெல்லியலாளான உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்த மேன்மையுடையவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத்திசையில் கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக்கோயில் ஆகும் .

விடம் அடை மிடற்றினர், வேத நாவினர்
மடமொழி மலைமகளோடும் வைகு இடம்
மட அனம் நடை பயில் வைகல் மா நகர்க்
குட திசை நிலவிய மாடக்கோயிலே.

5
இறைவர் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அடைத்து வைத்துள்ள கண்டத்தினர் . வேதங்களை ஓதும் நாவினர் . அவர் , இனிய மொழிகளை மென்மையாகப் பேசுகின்ற மலைமகளான உமாதேவி யோடு வீற்றிருந்தருளும் இடம் , இள அன்னப்பறவைகள் நடை பயிலும் திருவைகல் என்னும் பெருநகரின் மேற்குத்திசையில் நிலவும் மாடக்கோயில் ஆகும் .
Go to top

நிறை புனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவு இடம் இலங்கு மூஎரி
மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில்,
திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே.

6
புனிதமான கங்கையையும் , பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள நீண்ட சடைமுடியுடைய இறைவர் வீற்றிருந்தருளும் இடமாவது , மூவகை அக்கினிகளை வேதங்களோடு வளர்க்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , சிற்றரசர்கள் கப்பம் கட்ட நிறைந்த செல்வனாக விளங்கும் கோச்செங்கட்சோழன் என்ற மாமன்னன் கட்டிய மாடக்கோயில் ஆகும் .

எரிசரம் வரிசிலை வளைய ஏவி, முன்
திரிபுரம் எரி செய்த செல்வர் சேர்வு இடம்
வரி வளையவர் பயில் வைகல் மேல்-திசை,
வரு முகில் அணவிய மாடக்கோயிலே.

7
அக்கினியாகிய அம்பை , மேருமலையை நீண்ட வில்லாக வளைத்துச் செலுத்தி முற்காலத்தில் திரிபுரங்களை எரி யுண்ணுமாறு செய்த செல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமாவது , வரிவளையல்கள் அணிந்த பெண்கள் பழகுகின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத் திசையில் விரிந்துள்ள மேகத்தைத் தொடும்படி ஓங்கியுள்ள மாடக்கோயில் ஆகும் .

மலை அன இருபது தோளினான் வலி
தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம்
மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள்
வலம் வரு மலை அன மாடக்கோயிலே.

8
மலை போன்ற இருபது தோள்களையுடைய இராவணனது வலிமையை அழித்து , பின்னர் அவன் சாம கானம் பாடிப் போற்ற அவனுக்கு அருள் செய்த சோதியாகிய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது , மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய திருவைகலில் வாழ்கின்றவர்கள் வலம் வந்து வணங்கும் மலை போன்ற மாடக்கோயில் ஆகும் .

மாலவன், மலரவன், நேடி மால் கொள
மால் எரி ஆகிய வரதர் வைகு இடம்
மாலைகொடு அணி மறைவாணர் வைகலில்,
மால் அன மணி அணி மாடக்கோயிலே.

9
திருமாலும் , பிரமனும் இறைவனின் அடிமுடி களைத் தேடியும் காணமுடியாது மயக்கம் கொள்ள , நெருப்பு மலையாய் நின்ற , வழிபடுபவர்கட்கு வேண்டிய வரங்களை அளிக்கவல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பூமாலைகளை இறைவனுக்கு அணிவித்து , வேதங்களை ஓதி வழிபாடு செய்யும் அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , மேகம் போலும் நிறத்தையுடைய நீலமணிகளால் அழகுபடுத்தப்பட்ட மாடக்கோயில் ஆகும் .

கடு உடை வாயினர், கஞ்சி வாயினர்
பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம்
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர்
வடமலை அனைய நல் மாடக்கோயிலே.

10
கடுக்காயைத் தின்னும் வாயுடையவர்களும் , கஞ்சி குடிக்கும் வாயுடையவர்களுமான சமணர்களையும் , புத்தர்களின் பிடகநூலையும் பொருட்படுத்தாத சிவனடியார்கள் போற்றும் கோயிலாவது , மடம் என்னும் பண்புடைய மகளிர் பழகுகின்ற திருவைகல் என்னும் மாநகரில் மேருமலையை ஒத்த சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும் .
Go to top

மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை,
சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்-
பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவை
சிந்தை செய்பவர், சிவலோகம் சேர்வரே.

11
அளவில்லாத ஆற்றலுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாகிய திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக் கோயிலைச் சந்தன மரங்கள் கொண்ட சோலைகளையுடைய அழகிய திருச்சண்பை நகரில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தைச் சிந்தையிலிருத்திப் போற்ற வல்லவர்கள் சிவலோகத்தில் இருப்பர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவைகல்மாடக்கோயில்
3.018   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துள மதி உடை மறி
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவைகல்மாடக்கோயில் வைகனாதேசுவரர் வைகலம்பிகையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000