சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருத்தென்குடித்திட்டை - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=wzA10dNdfbk   Add audio link Add Audio

முன்னை நால் மறை அவை முறை முறை, குறையொடும்,
தன்ன தாள் தொழுது எழ நின்றவன் தன் இடம்
மன்னு மா காவிரி வந்து அடி வருட, நல்
செந்நெல் ஆர் வளவயல்-தென்குடித்திட்டையே.

1
நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையில் தொழுது போற்ற , உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன் திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து செந்நெல் விளையும் வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும் .

மகரம் ஆடும் கொடி மன் மத வேள் தனை,
நிகரல் ஆகா நெருப்பு எழ, விழித்தான் இடம்
பகர வாள் நித்திலம், பல்மகரத்தோடும்,
சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே.

2
மீன்கொடியுடைய மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெருப்புப்பொறி பறக்க நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்த ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , வாள் போல் மின்னும் முத்துக்களும் , பல அணிவகைகளும் பதிக்கப்பெற்று உயர்ந்து விளங்கும் மாளிகைகளையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன்,
உருவினால் அன்றியே உருவு செய்தான், இடம்
பருவ நாள், விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினால் மிகு புகழ்த் தென்குடித்திட்டையே.

3
இறைவன் கருவயப்பட்டுப் பிறவாமலே எல்லாப் பொருள்கட்கும் கருப்பொருளாக விளங்குபவன் . தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவமில்லாத இறைவன் பிற பொருள்களெலாம் உருவு கொள்ளும்படி தோற்றுவித்து அருள்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பருவகாலங்களிலும் , திருவிழாக்காலங்களிலும் பாடலும் , ஆடலும் செல்வத்தால் மிகச் சிறப்புற நடக்கும் புகழையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் . கருவினாலன்றி என்றது சிவபெருமான் கருவயப்பட்டுப் பிறவான் என்பதை உணர்த்தும் . ` பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை ` ( தி .6 ப .11 பா .1) என்ற திருநாவுக்கரசர் திருவாக்கை இங்கு நினைவுகூர்க . பிறப்பில்லாத அவனுக்கு இறப்புமில்லை . அவன் அநாதி நித்தப்பொருள் . ( அநாதி - தோற்றமும் , அழிவுமில்லாதது ) உருவினாலன்றி - தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லாதவன் . தன்பொருட்டு உருவு கொள்ளாது அடியார் பொருட்டு உருவம் கொள்பவன் . ` நானாவித உருவால் நமை ஆள்வான் ` ( தி .1 ப .9 பா .5) என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கையும் , ` இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே ` என்ற திருநாவுக்கரசர் திருவாக்கையும் ( தி .6 ப .97 பா .10) இங்கு நினைவுகூர்க .

உள்-நிலாவு ஆவி ஆய் ஓங்கு தன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர்
எண் இல் ஆர் எழில் மணிக் கனக மாளிகை இளந்
தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே.

4
இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர் . அவன் வேத உபநிடத உட்பொருளாக விளங்குபவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல் , தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

வருந்தி வானோர்கள் வந்து அடைய, மா நஞ்சு தான்
அருந்தி, ஆர் அமுது அவர்க்கு அருள் செய்தான் அமரும் ஊர்
செருந்தி, பூமாதவிப் பந்தர், வண் செண்பகம்,
திருந்து நீள் வளர் பொழில்-தென்குடித்திட்டையே.

5
திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சின் வெப்பத்தால் துன்புற்ற தேவர்கள் தன்னைத் தஞ்சமென வந்தடைய அவர்களுக்கு இரங்கி நஞ்சைத் தான் அருந்தி அமுதத்தை அவர்கட்கு அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் , செருந்தி , மாதவி , செண்பகம் இவை மிகுதியாக வளரும் நீண்ட சோலைகளை உடைய தென்குடித்திட்டையாகும் .
Go to top

ஊறினார், ஓசையுள் ஒன்றினார், ஒன்றி மால்
கூறினார், அமர்தரும் குமரவேள்தாதை ஊர்
ஆறினார் பொய் அகத்து, ஐஉணர்வு எய்தி மெய்
தேறினார், வழிபடும் தென்குடித்திட்டையே.

6
இறைவர் எப்பொருள்களிலும் நிறைந்தவர் . எல்லா ஓசைகளிலும் ஒன்றியவர் . திருமாலை ஒரு கூறாகக் கொண்டவர் . குமரக்கடவுளின் தந்தை . அப்பெருமானார் வீற்றிருந்தருளும் நகரானது ஆறு பகைகளாகிய காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாச்சரியம் இவற்றைக் களைந்து , நிலையற்ற பொருள்கள்மேல் செல்லும் அவாவினை அடக்கி , மனத்தைப் பொறி வழிச் செல்ல விடாது ஒருமுகப்படுத்தி , சிவனே மெய்ப்பொருள் எனத் தெளிந்தவர்கள் வழிபடும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

கான் அலைக்கும்(ம்) அவன் கண் இடந்து அப்ப, நீள
வான் அலைக்கும் தவத் தேவு வைத்தான் இடம்
தான் அலைத் தெள் அம் ஊர், தாமரைத் தண்துறை
தேன் அலைக்கும் வயல், தென்குடித்திட்டையே.

7
காட்டிலுள்ள உயிர்களை வருத்தும் வேடர் குலத்தவராகிய கண்ணப்ப நாயனார் கண் இடந்து அப்பியபோது , தேவர்களும் பொறாமையால் வருந்தும்படி , தவத்தையுடைய கண்ணப்பரைத் தெய்வமாகச் செய்தான் சிவபெருமான் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தெளிந்த நீர்நிலைகளில் மலர்ந்துள்ள தாமரைகளில் தண்டிலிருந்து தேன்பெருகிப் பாயும் வயல்வளமுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து
ஓல் இடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம்
காலொடும் கனகமூக்கு உடன்வர, கயல் வரால்
சேலொடும் பாய் வயல்-தென்குடித்திட்டையே.

8
திருமாலின் அவதாரமான இராமனோடும் போர் புரியும் வல்லமைபெற்ற அரக்கனான இராவணன் கயிலைமலையின் கீழ்ச் சிக்குண்டு ஓலமிட்டு அலறும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , கால்வாய் வழியாகச் செல்லும் நீரில் பொன்னிற மூக்குடைய கயல் , வரால் , சேல் போன்ற மீன்கள் வந்து பாயும் வயல்களையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

நாரணன் தன்னொடு நான்முகன்தானும் ஆய்,
காரணன்(ன்) அடி முடி காண ஒண்ணான் இடம்
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ,
சீர் அணங்கும் புகழ்த் தென்குடித்திட்டையே.

9
திருமாலும் , பிரமனும் தேடியும் அடிமுடி காணவொண்ணாதவாறு விளங்கிய , உலகிற்கு நிமித்த காரணமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இப்பூவுலக தேவர்கள் என்று சொல்லப்படும் அந்தணர்கள் வேதம் ஓதித் தன் திருவடிகளை வணங்குமாறு சிறந்த தெய்வத்தன்மையுடைய புகழுடன் சிவ பெருமான் விளங்கும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குண்டிகைக் கை உடைக் குண்டரும், புத்தரும்,
பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர், தொழும்
வண்டு இரைக்கும் பொழில்-தண்டலைக் கொண்டல் ஆர்
தெண்திரைத் தண்புனல்,-தென்குடித்திட்டையே!

10
கமண்டலம் ஏந்திய கையுடைய சமணர்களும் , புத்தர்களும் சொல்லும் பொருத்தமில்லாத உரைகளைப் பற்றி நில்லாதீர் . வண்டுகள் ஒலிக்கும் சோலையின் உச்சியில் குளிர்ந்த மேகங்கள் தவழ , தெளிந்த அலைகளையுடைய குளிர்ச்சியான ஆறுபாயும் திருத்தென்குடித்திட்டையைச் சார்ந்து இறைவனை வழிபடுங்கள் .
Go to top

தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை,
கானல் ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
பால் நல் ஆர் மொழி வலார்க்கு, இல்லை ஆம்,
பாவமே.

11
தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி , கடற்கரையின்கண் அமைந்துள்ள நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த , சிவஞானம் நிறைந்த ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருத்தென்குடித்திட்டை
3.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முன்னை நால் மறை அவை
Tune - கொல்லி   (திருத்தென்குடித்திட்டை பசுபதீசுவரர் உலகநாயகியம்மை)

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org