கரம் முனம் மலரால், புனல் மலர் தூவியே கலந்து ஏத்துமின்-
பரமன் ஊர் பலபேரினால் பொலி, பத்தர் சித்தர்கள் தாம் பயில்,
வரம் முன்ன(வ்) அருள் செய்ய வல்ல எம் ஐயன் நாள்தொறும் மேய சீர்ப்
பிரமன் ஊர், பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்(ன்) அருள் பேணியே!
|
1
|
யாவர்க்கும் மேலான பொருளான சிவபெருமானது ஊரும் பல திருப்பெயர்களை உடையது . பக்தர்களும் , சித்தர்களும் போற்றி வணங்க , அவர்கள் வேண்டும் வரங்களை நல்கி அருள் செய்ய வல்ல என் தலைவன் நாள்தோறும் விரும்பி வீற்றிருந்தருளும் சிறப்புடைய பிரமனூர் ஆகிய திருப்பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பிஞ்ஞகனின் அருளைப் போற்றிக் கைத்தாமரையால் தூய நீரை அபிடேகம் செய்து , மலர்களைத் தூவி ஒரு நெறிய மனம் வைத்து வழிபடுவீர்களாக . | |
விண்ணில் ஆர் மதி சூடினான், விரும்பும் மறையவன் தன் தலை
உண்ண நன் பலி பேணினான், உலகத்துள் ஊன் உயிரான், மலைப்-
பெண்ணின் ஆர் திருமேனியான்-பிரமாபுரத்து உறை கோயிலு
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம் உடை ஆதியே.
|
2
|
இறைவர் விண்ணிலே விளங்கும் சந்திரனைச் சடையில் சூடியவர் . விரும்பும் நான்மறைகளை ஓதுகின்ற பிரமனின் மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு பிச்சை ஏற்றவர் . உலகத்து உயிர்கட்கு உடம்பும் , உயிருமானவர் . மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும் , திருப்பிரமபுரத்துறைகின்ற கோயிலினுள் அருளைப் பொழிபவராய் அமர்ந்துள்ள தலைவரும் ஆகிய எம்முடைய சிவபெருமானே ஆதிப்பிரான் ஆவார் . | |
எல்லை இல் புகழாளனும்(ம்), இமையோர் கணத்து உடன் கூடியும்,
பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும்
தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே,
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே.
|
3
|
இறைவர் எல்லையற்ற புகழ் உடையவர் . தேவர்கள் கூட்டம் சூழ விளங்குபவர் . பற்களையுடைய பிரமனின் மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்ந்த வஞ்சகர் . அவர் பழமையான இந்நிலவுலகில் தத்துவங்களைக் கடந்து ஏறிய தெளிந்த அறிவுடைய தொண்டர்கள் தூய மலர்களைத் தூவி ஏத்தி வழிபட , வளம் மிக்க அழகிய சோலைகளில் தேன் சொட்டும் திருப்பிரமபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வலிமையுடைய சிவபெருமானே யாவார் . | |
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த, மா மடமாதொடும்,
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான்;
தொடையல் ஆர் நறுங்கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால்,
இடை இலார், சிவலோகம் எய்துதற்கு; ஈது காரணம் காண்மினே!
|
4
|
பகையசுரர்களின் மூன்று புரங்களையும் கோபித்து அழித்து , அந்தணர்கள் போற்றி வணங்க , உமாதேவியோடு , பெண் பறவைகள் தங்கள் ஆண் பறவைகளுடன் கூடும் கடற்கரைச் சோலைகளையுடைய திருப்பிரமாபுரத்தில் கோயில் கொண்டருளியவன் சிவபெருமான் . இடையீடில்லாதவர்களாய்ச் சிவலோகம் சென்று அடைவதற்கு , நறுங்கொன்றை மலர்களை மாலையாக அணிந்த சிவபெருமானின் வழிபாட்டிற்குரியவைகளைச் செய்து , அவன் அருட்செயல்களைப் போற்றி வழிபடும் நெறியே சாதனமாகும் என்பதை அறிவீர்களாக . | |
வாய் இடை(ம்) மறை ஓதி, மங்கையர் வந்து இடப் பலி கொண்டு, போய்ப்-
போய் இடம்(ம்) எரிகான் இடைப் புரி நாடகம்(ம்) இனிது ஆடினான்;
பேயொடும் குடிவாழ்வினான்-பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்;
தாய், இடைப் பொருள், தந்தை, ஆகும் என்று ஓதுவார்க்கு அருள்-தன்மையே!
|
5
|
இறைவன் தன் திருவாயால் வேதங்களை அருளிச் செய்தவன் . தாருகாவனத்து முனிபத்தினிகள் வந்து பிச்சையிடப் பிரமகபாலத்தில் பலிஏற்று , சுடுகாட்டையே அரங்கமாக் கொண்டு நடனம் ஆடுபவன் . பேய்க் கணங்களுடன் கூடி வாழ்பவன் . திருப்பிரமாபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பிஞ்ஞகனாகச் சிவபெருமானே , பெற்ற தாயும் , தந்தையும் , மற்றுமுள்ள அனைத்துப் பொருளுமாய் விளங்குபவன் என்பதை உணர்ந்து ஓதுபவர்கட்கு அவன் அருள்செய்பவன் . | |
| Go to top |
ஊடினால் இனி யாவது? என் உயர் நெஞ்சமே!-உறு வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றது என்? அழல் அன்று தன் கையில் ஏந்தினான்,
பீடு நேர்ந்தது கொள்கையான்-பிரமாபுரத்து உறை வேதியன்,
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே!
|
6
|
உயர் நெஞ்சமே ! என் சொல்வழி நில்லாது பிணங்கினால் அதனால் உனக்கு ஆகப்போவது என்ன ? வல்வினையை ஈட்டுவதற்கென்றே நீ ஓடி உழல்வது தான் என்ன ? பண்டைக்காலத்தில் தன் திருக்கரத்தில் நெருப்பேந்தியவன் சிவ பெருமான் . தன்னை வழிபடும் அடியவர்கட்குப் பேரின்பத்தை வழங்கும் தன்மையன் . திருப்பிரமாபுரத்து வீற்றிருந்தருளும் வேதங்களை அருளிச் செய்தவனும் , மலரை ஒத்த பிறைச் சந்திரனையும் , பாம்பையும் அணிந்தவனுமான சிவபெருமானை எம் தந்தை என்று போற்றி வழிபடுவீர்களாக . | |
செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும் ஏத்தி நினைந்திட,
ஐயன், ஆண்டகை, அந்தணன், அருமா மறைப்பொருள் ஆயினான்;
பெய்யும் மா மழை ஆனவன்; பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண்மழு ஏந்தியை(ந்) நினைந்து, ஏத்துமின், வினை வீடவே!
|
7
|
இறைவன் சிவந்த திருமேனியுடையவன் . வெள்ளிமலை எனப்படும் கயிலைக்கு நாயகன் . சிவஞானம் பெற்ற பெருமக்களால் எக்காலத்திலும் போற்றப்பட்டு வணங்கப்படும் தலைவன் . அளவில்லா ஆற்றலும் , எவ்வுயிரிடத்தும் பேரிரக்கமும் உடையவன் . அரிய நான்மறைகளின் உட்பொருளாய் விளங்குபவன் . பெய்யும் மழைபோன்றவன் . திருப்பிரமாபுரத்தில் வீற்றிருந்தருளும் மழுப்படையேந்திய சிவபெருமானை உங்கள் வினைகள் நீங்க வழிபடுவீர்களாக ! | |
கன்று ஒரு(க்) கையில் ஏந்தி நல்விளவின் கனி பட நூறியும்,
சென்று ஒருக்கிய மாமறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனும் ஆய்,
அன்று அரக்கனைச் செற்றவன்(ன்) அடியும் முடி அவை காண்கிலார்
பின் தருக்கிய தண்பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே!
|
8
|
ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி விளமரத்தின் கனியை அழித்த திருமாலும் , தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை நன்கு கற்ற பிரமனும் , அன்று தன்காற் பெருவிரலை ஊன்றி இராவணனைக் கயிலையின்கீழ் நெருக்கிய சிவபெருமானுடைய திருவடியையும் , திருமுடியையும் தேடியும் காணாதவராயினர் . அப்பெருமான் அருள் தன்மையும் , ஆற்றலும் கொண்டு எழுச்சிமிக்க குளிர்ந்த சோலைகளையுடைய திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளுகின்றான் . | |
உண்டு உடுக்கை விட்டார்களும்(ம்), உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும்,
பண்டு அடக்கு சொல் பேசும் அப் பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்மின்!
தண்டொடு, அக்கு, வன் சூலமும், தழல், மா மழுப்படை, தன் கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன்-எம் பிரமாபுரத்து உறை கூத்தனே.
|
9
|
உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களும் , மண்டை என்னும் பாத்திரத்தில் கஞ்சியேற்று உண்ணும் புத்தர்களும் மக்களிடம் பரிவில்லாதவர்கள் . உயர்ந்தவையும் தொன்றுதொட்டு வருவனவுமாகிய வேத ஆகம நூல்களைப் பழித்துப் பேசுபவர் . அவர்கள் சொற்களைக் கொள்ள வேண்டா . வீணை , அக்குமாலை , சூலம் , நெருப்பு , பெரிய மழுப்படை இவற்றைத் தன்கையில் கொண்டு இவ்வுலகமனைத்தையும் ஒடுக்கி அருளும் வல்லமையுடையவன் எம் திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளும் கூத்தனாகிய சிவபெருமானேயாவான் . அவனை வணங்கிப் போற்றி உய்வீர்களாக ! | |
பித்தனை, பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன், கழல் பேணியே,
மெய்த்தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து, நன்பொருள் மேவிட
வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள்,
பொய்த் தவம் பொறி நீங்க, இன் இசை போற்றி செய்யும்,
மெய்ம் மாந்தரே!
|
10
|
பித்தனும் , திருப்பிரமபுரத்து உறைகின்ற பிஞ்ஞகனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி , மெய்த் தவநெறிகளில் நிற்போர்கட்கு உரைசெய்து வீடுபேறு அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தையில் , ஞானசம்பந்தன் திருவாய்நவின்ற இத்திருமாலைகளைப் பொய்த்தவத்தில் செலுத்தும் பொறிவழிச் செல்லும் புலன்களின் குற்றம் நீங்க இன்னிசையால் போற்றுபவர்களே மெய்யுணர்ந்த மாந்தர் ஆவர் . | |
| Go to top |
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|