சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கழிப்பாலை - கௌசிகம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=JAw1peLxdJo   Add audio link Add Audio

வெந்த குங்கிலியப்புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர்
சந்தமால், அவர் மேவிய சந்தமே.

1
நெருப்பிலிடப்பட்ட குங்கிலியத்தின் புகைப் பெருக்கால் நறுமணம் கமழும் திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் அழிவில்லாதவர் . இன்ன தன்மையர் என்று அளந்தறிய முடியாதவர் . அப்பெருமானின் சாந்தநிலையும் அளக்கொணாத தன்மையுடையதாகும் .

வான் இலங்க விளங்கும் இளம்பிறை-
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும் கழிப்பாலையார்
மான் நலம் மடநோக்கு உடையாளொடே.

2
வானம் பிரகாசிக்க விளங்கும் இளம்பிறைச் சந்திரனை மாலைபோல் விரும்பி அணிந்த தலைவரான சிவபெருமான் , கடற்கரைச் சோலை விளங்கும் திருக்கழிப்பாலையில் மான் போன்ற பார்வையுடைய உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுவார் .

கொடி கொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர்
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்;
கடி கொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே?

3
இறைவர் எருதுக் கொடியுடையவர் . காலனைக் காலால் உதைத்தவர் . திருநீறு அணிந்துள்ள மார்பில் ஆமையின் ஓட்டினை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் பூஞ் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் அப்பெருமானின் செயல்களை யார்தான் அறிந்துகொள்ளமுடியும் ? ஒருவராலும் முடியாது .

பண் நலம் பட வண்டு அறை கொன்றையின்
தண் அலங்கல் உகந்த தலைவனார்
கண் நலம் கவரும் கழிப்பாலையுள
அண்ணல்; எம் கடவுள்(ள்) அவன் அல்லனே?

4
பூக்களிலுள்ள தேனை உண்டதால் வண்டுகள் பண்ணிசைக்கக் குளிர்ச்சி பொருந்திய கொன்றைமாலையை விரும்பி அணிகின்ற தலைவரான சிவபெருமான் கண்ணைக் கவரும் பேரழகினையுடைய திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் அண்ணலாவார் . அவரே எம் கடவுள் அல்லரே ?

ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்,
காரின் ஆர் பொழில் சூழ், கழிப்பாலை எம்
சீரினார் கழலே சிந்தை செய்(ம்)மினே!

5
எழுச்சி மிகுந்த விண்ணுலகத்தவராகிய தேவர்களோடு , மண்ணுலக மக்களாலும் சேர்ந்து தொழப்படுகின்றவனும் , மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிறப்புடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளையே சிந்தை செய்யுங்கள் .
Go to top

துள்ளும் மான்மறி அம் கையில் ஏந்தி, ஊர்
கொள்வனார், இடு வெண்தலையில் பலி;
கள்வனார்; உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினை ஆயின ஓயுமே.

6
துள்ளுகின்ற இளமையான மானை , அழகிய கையில் ஏந்தி , ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற கள்வனாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை நினைந்து ஏத்த வினையாவும் நீங்கும் .

மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும்,
எண்ணி, நீர் இனிது ஏத்துமின்-பாகமும்
பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்ற முக்
கண்ணினார், உறையும் கழிப்பாலையே!

7
மண்ணுலகில் பொருந்திய மிக்க செல்வங்களையும் , வானுலகில் மறுமையில் பெறக்கூடிய செல்வத்தையும் தருபவன் இவனே என்பதை மனத்தில் எண்ணி , தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்டுள்ளவனும் , பிறைச் சந்திரனைச் சடைமுடியில் அணிந்தவனும் , முக்கண்ணனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை இனிதே போற்றி நீங்கள் வணங்குவீர்களாக !

இலங்கை மன்னனை ஈர்-ஐந்து இரட்டிதோள
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்து உலவும், கழிப்பாலையை
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

8
இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களும் நொறுங்கும்படி கயிலைமலையில் தன்காற்பெருவிரலை ஊன்றிய , தூய்மையான மழுவாகிய படைக்கலத்தை உடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற , மரக்கலங்கள் வந்து உலவும் திருக்கழிப்பாலையை வலமாக வருபவர்களுக்கு வினைகள் யாவும் அழிந்துவிடும் .

ஆட்சியால் அலரானொடு மாலும் ஆய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்;
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால்-தொழுவார் வினை மாயுமே.

9
தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் தாங்கள் செய்கின்ற படைத்தல் , காத்தல் ஆகிய தொழில்களின் ஆளுமையால் ஏற்பட்ட செருக்குக் காரணமாக இறைவனுடைய திருமுடியையும் , திருவடியையும் அறிய முற்பட்டு , தமது தாழ்ச்சியால் அவற்றை அறியமுடியாது தளர்ச்சியடைந்தனர் . நூலறிவாலும் , ஆன்ம அறிவாலும் அறியப்படாதவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை அதன் மாட்சிமை உணர்ந்து தொழுவாருடைய வினைகள் யாவும் மாயும் .

செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலாக்
கையர் கேண்மை எனோ? கழிப்பாலை எம்
ஐயன் சேவடியே அடைந்து உய்(ம்)மினே!

10
சிவந்த மெல்லிய மஞ்சட்காவி உடைகளை உடுத்தும் புத்தர்களோடும் , அழுக்கு உடம்பை உடைய பெருமையற்ற கீழ்மக்களாகிய சமணர்களோடும் நட்பு உங்கட்கு ஏனோ ? திருக்கழிப் பாலையில் வீற்றிருந்தருளும் எம் தலைவராகிய சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளையே சரணாக அடைந்து உய்தி பெறுங்கள் .
Go to top

அம் தண் காழி அருமறை ஞானசம்-
பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான் உலகு ஆடல் முறைமையே.

11
அழகிய , குளிர்ச்சி மிகுந்த சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் , பாய்கின்ற நீர் சூழ்ந்த திருக்கழிப் பாலையைப் போற்றிச் சிவ சிந்தையோடு சொன்ன செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் எல்லோரும் முன்னதாக வானுலகத்தை ஆளுதற்கு உரியவராவர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கழிப்பாலை
2.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்
Tune - இந்தளம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
3.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று
Tune - கௌசிகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்
Tune - காந்தாரம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை
Tune - திருநேரிசை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.106   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெய்தல் குருகு தன் பிள்ளை
Tune - திருவிருத்தம்   (திருக்கழிப்பாலை அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
5.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
6.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்
Tune - திருத்தாண்டகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
7.023   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
Tune - நட்டராகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் பொற்பதவேதநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000