வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்
தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை தன்னை வினவில்
ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர் கவணினால்,
கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்திமலையே.
|
1
|
தேவர்களும் , அசுரர்களும் வருந்தித் துன்புறுமாறு பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விடத்தை , தான் அமுது போன்று உண்டு அருள் செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை எது என வினவினால் , பன்றிகள் , இளமான்கள் , கிளிகள் இவை தினைகளைக்கவர வேட்டுவ மகளிர்கள் பொன்னாலும் , இரத்தினங்களாலும் ஆகிய ஆபரணங்களைக் கவண்கற்களாக வீசி விரட்டும் சிறப்புடைய திருக்காளத்திமலையாகும் . | |
முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரி செய்
சதுரர், மதி பொதி சடையர், சங்கரர், விரும்பும் மலைதன்னை வினவில்
எதிர் எதிர வெதிர் பிணைய, எழு பொறிகள் சிதற, எழில் ஏனம் உழுத
கதிர் மணியின் வளர் ஒளிகள், இருள் அகல நிலவு காளத்திமலையே.
|
2
|
மிகுந்த கோபத்துடன் மேருமலையை வில்லாகக் கொண்டு பகையசுரர்களின் முப்புரங்களையும் ஒருநொடிப் பொழுதில் எரியுண்ணும்படி செய்த சமர்த்தர் சிவபெருமான் . அவர் சந்திரனைத் தரித்த சடையையுடையவர் . எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்பவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் மலை , எதிரெதிராக உள்ள மூங்கில்கள் உராய்வதால் தோன்றிய நெருப்புப் பொறிகளாலும் , பன்றிகள் கொம்பினால் மண்ணைக் கிளறும்போது கிடைத்த மணிகளாலும் இருள் நீங்க விளங்குகின்ற திருக்காளத்தி மலையாகும் . | |
வல்லை வரு காளியை வகுத்து, வலி ஆகி மிகு தாருகனை நீ
கொல்! என விடுத்து, அருள் புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
பல்பல இருங் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனம் ஆய்,
கல் அதிர நின்று, கரு மந்தி விளையாடு காளத்திமலையே.
|
3
|
தாரகன் இழைத்த துன்பம் கண்டு , விரைந்து நீக்கவரும் காளியை நோக்கி , ` வலிமை மிகுந்த தாரகன் என்னும் அசுரனை நீ கொல்வாயாக ` என்று மொழிந்து அருள்செய்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் மலை , பலவகைச் சுவைமிகுந்த பெரிய கனிகளின் சாற்றை அருந்தி , ஒரே கூட்டமாய் மொய்த்து , மலை அதிரும்படி கருங்குரங்குகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும் . | |
வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி, சடைமேல்
தூய மதி சூடி, சுடுகாடில் நடம் ஆடி, மலை தன்னை வினவில்
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம்
காய் கணையினால் இடந்து, ஈசன் அடி கூடு காளத்திமலையே.
|
4
|
மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , இடப வாகனத்தில் ஏறி , சடைமுடியில் தூயசந்திரனைச் சூடி , சுடுகாட்டில் நடனம் ஆடும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , வாயே அபிடேக கலசமாக வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர் , தம் மலர்போன்ற கண்ணைக் கொடிய அம்பினால் தோண்டி இறைவனுக்கு அப்பி , இறைவனின் திருவடியைச் சார்ந்த சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும் . | |
மலையின் மிசை தனில் முகில் போல் வருவது ஒரு மதகரியை மழை போல் அலறக்
கொலை செய்து, உமை அஞ்ச, உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
அலை கொள் புனல் அருவி பலசுனைகள் வழி இழிய, அயல் நிலவு முது வேய்
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்திமலையே.
|
5
|
மலையின்மேல் தவழும் மேகம்போல் வந்த மதம்பொருந்திய யானையானது இடிபோல் பிளிற , அதனைக் கொன்று உமாதேவி அஞ்சும்படி அதன் தோலைப் போர்த்திக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , அலைகளையுடைய நீர் மலையிலிருந்து அருவிபோல் இழிந்து , பல சுனைகளின் வழியாக வயல்களில் பாய , அருகிலுள்ள முற்றிய மூங்கில்கள் கலகல என்ற ஒலியுடன் , கதிர்போல் ஒளிரும் முத்துக்களைச் சிந்தும் திருக்காளத்திமலையாகும் . | |
| Go to top |
பார் அகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு
ஆர் அருள் புரிந்து, அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில்
வார் அதர் இருங் குறவர் சேவலில் மடுத்து, அவர் எரித்த விறகில்
கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்திமலையே.
|
6
|
பாரதபூமியில் சிறந்து விளங்கிய பகீரதன் என்னும் மன்னன் , பிதிரர்கட்கு நற்கதி உண்டாகுமாறு அரியதவம் செய்து வானிலுள்ள கங்கையைப் பூவுலகிற்குக் கொண்டுவர , அவனுக்கு அருள்செய்து , பெருக்கெடுத்த கங்கையைத் தன் சடையில் தாங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நெடிய வழிகளையுடைய கானகக் குறவர்கள் தங்கள் குடிசையில் அடுப்பெரித்த , கரிய அகில் கட்டையிலிருந்து கிளம்பிய பெரியபுகை ஆகாயத்தில் மணக்கின்ற திருக்காளத்திமலையாகும் . | |
ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால்
ஈரும் வகை செய்து, அருள்புரிந்தவன் இருந்த மலைதன்னை வினவில்
ஊரும் அரவம்(ம்) ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்,
கார் இருள் கடிந்து, கனகம்(ம்) என விளங்கு காளத்திமலையே.
|
7
|
தன்னை எதிர்த்துப் போர்செய்ய யாரும் வாராத , வலிமை மிகுந்த சலந்தராசுரனின் தலையைச் சக்கராயுதத்தால் பிளந்து தேவர்கட்கு அருள்புரிந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள் உமிழ்ந்த இரத்தினங்களின் ஒளியால் கரிய இருள் நீங்கப் பெற்று , பொன்மலைபோல் பிரகாசிக்கின்ற திருக்காளத்தி மலையாகும் . | |
எரி அனைய சுரிமயிர் இராவணனை ஈடு அழிய, எழில் கொள் விரலால்,
பெரிய வரை ஊன்றி அருள் செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில்
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்,
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்திமலையே.
|
8
|
நெருப்புப்போல் சிவந்த சுருண்ட முடிகளையுடைய இராவணனின் வலிமை அழியுமாறு , தன் அழகிய காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அவனை அழுத்தி , பின் அருள்செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நீண்ட வில்லேந்திய வேடர்கள் நெடிய மலையினூடே வருவதால் , யானைகளும் , வரிகளையுடைய புலிகளும் , சிங்கக் கூட்டங்களும் அஞ்சுகின்ற திருக்காளத்திமலையாகும் . | |
இனது அளவில், இவனது அடி இணையும், முடி, அறிதும் என இகலும் இருவர்
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலைதன்னை வினவில்
புனவர் புனமயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்திமலையே.
|
9
|
குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள் இவன் திருவடியும் , திருமுடியும் அறியவேண்டும் என்று தமக்குள் மாறுபட்ட திருமாலும் , பிரமனும் முனைந்து தேடியும் அறிவதற்கு அரியவனாய் விளங்கியவன் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருக்கும் மலை , தினைப்புனத்திலுள்ள வேடுவர்கள் மயிலொத்த சாயலுடைய பெண்களை மைந்தர்களுக்கு மணம் செய்விக்கும் நாளில் பொன் போன்ற மலர்களைப் பூத்து அழகிய வேங்கைகள் விளங்கும் திருக்காளத்திமலையாகும் . | |
நின்று கவளம் பல கொள் கையரொடு, மெய்யில் இடு போர்வையவரும்,
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில்
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி,
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்திமலையே.
|
10
|
நின்று கொண்டே கவளமாக உணவு உண்ணும் சமணர்களும் , உடம்பில் போர்த்த போர்வையுடைய புத்தர்களும் தனது பேரருளை அறியாவண்ணம் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நெருங்கிய சோலைகளில் உள்ள குளிர்ந்த சந்தனத் தழைகளைத் தம் கன்றுகளுடன் சென்று தின்று பெண் யானைகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும் . | |
| Go to top |
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்திமலையை,
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன்-
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன்-உரை நல்ல தமிழின்
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர்; பரலோகம் எளிதே.
|
11
|
சுடுகாட்டை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற காளத்திமலையைப் போற்றி , மாடமாளிகைகள் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள கொச்சைவயம் என்னும் சீகாழியின் நிலைபெற்ற தலைவனும் , பலநாடுகளிலும் பரவிய புகழையுடையவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல தமிழில் அருளிய இப்பாடல்களை இசையுடன் ஓத வல்லவர்கள் சிறந்தவர்களாவர் . அவர்கள் சிவலோகம் அடைதல் எளிதாகும் . | |