காடு பயில் வீடு, முடை ஓடு கலன், மூடும் உடை ஆடை புலிதோல்,
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்-
நாடகம் அது ஆட ம(ஞ்)ஞை, பாட அரி, கோடல் கைம் மறிப்ப, நலம் ஆர்
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே.
|
1
|
சிவபெருமான் வசிக்கும் வீடு சுடுகாடாகும். முடைநாற்றம் பொருந்திய மண்டையோடு அவன் உண்கலமாகும். அவனது ஆடை புலித்தோலாகும். உணவு தேடியுண்ணும் பிச்சையாகும். இத்தகைய கோலமுடைய, வேதத்தை அருளிச் செய்த வேதப் பொருளாக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, சோலைகளில் மயில்கள் ஆட, வண்டுகள் பாட, காந்தள்கள் அசைந்து கைத்தாளமிட, அழகிய இளம் பெண்அன்னம் போன்ற பெண்கள் ஆடவர்களோடு ஊடி, பின் ஊடல் நீங்கி மகிழ்கின்ற மாடங்கள் நிறைந்த திருத்தேவூர் என்பதாகும். | |
கோள் அரவு, கொன்றை, நகு வெண் தலை, எருக்கு, வனி, கொக்கு இறகொடும்,
வாள் அரவு, தண்சலமகள், குலவு செஞ்சடை வரத்து இறைவன் ஊர்
வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர்
தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே.
|
2
|
கொல்லும் தன்மையுடைய பாம்பு, கொன்றை, சிரிக்கும் மண்டையோடு, எருக்கு, வன்னி, கொக்கு இறகு, ஒளி பொருந்திய பாம்பு, குளிர்ச்சி பொருந்திய கங்காதேவி, இவை குலவுகின்ற சிவந்த சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், மன்மதனும் விரும்பும் கொங்கைகளை உடைய, கணவரோடு கூடிய இள மங்கையர்கட்குக் குங்குமக் குழம்பின் மணத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையதும், கணவரைப் பிரிந்த மகளிர்கட்குத் தேள் கொட்டுவது போல் துன்பஞ் செய்கின்ற தன்மையுடையதுமான தென்றல் காற்று தெருவெங்கும் நிறைந்து பெருகும் திருத்தேவூர் ஆகும். | |
பண் தடவு சொல்லின் மலை வல்லி உமை பங்கன், எமை ஆளும் இறைவன்,
எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன், இனிது இருந்த இடம் ஆம்
விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி, மலர் சூடி, விரை ஆர்
செண் தடவும் மாளிகை செறிந்து, திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே.
|
3
|
பண்ணிசை போன்ற இனிய மொழிகளைப் பேசுகின்ற மலைமகளான உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு எம்மையாளும் இறைவன் எண்ணற்ற தேவர்கள் தன் திருவடிகளை வணங்க இனிது வீற்றிருந்தருளும் இடம், வானளாவி உயர்ந்த சோலைகள் உகுக்கும் தேன்துளிக்கும் மலர்களைச் சூடி, அதனால் நறுமணம் கமழ, ஆகாயமளாவிய உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருமகள்வாசம் செய்யும் திருத்தேவூர் ஆகும். | |
மாசு இல் மனம் நேசர் தமது ஆசை வளர் சூலதரன், மேலை இமையோர்
ஈசன், மறை ஓதி, எரி ஆடி, மிகு பாசுபதன், மேவு பதிதான்-
வாசமலர் கோது குயில் வாசகமும், மாதர் அவர் பூவை மொழியும்
தேச ஒலி, வீணையொடு கீதம் அது, வீதி நிறை தேவூர் அதுவே.
|
4
|
சிவபெருமான் களங்கமற்ற மனமுடைய அடியார்கள் தன்மேல் கொண்ட பக்தி மேன்மேலும் பெருக விளங்குபவன். சூலப்படையை ஏந்தியவன். வானுலகிலுள்ள தேவர்கட்குத் தலைவன். வேதங்களை ஓதியருளி வேதப்பொருளாயும் விளங்குபவன். நெருப்பேந்தி நடனம் ஆடுபவன். வெற்றிதரும் பாசுபத அஸ்திரம் உடையவன். அத்தகைய சிவபெருமான் இனிது வீற்றிருந்தருளும் தலமாவது, நறுமணமிக்க மலர்களை மூக்கால் கோதுகின்ற குயில்களின் கூவலும், நாகணவாய்ப் பறவை போன்று பேசுகின்ற பெண்களின் இனிய மொழியும், அடியவர்கள் இறைவனைப் புகழும் ஒலியும், வீணை மீட்டும் ஒலியும், கீதங்களின் ஒலியும் நிறைந்து விளங்கும் வீதிகளையுடைய திருத்தேவூர் ஆகும். | |
கானம் உறு மான் மறியன்; ஆனை உரி போர்வை; கனல் ஆடல் புரிவோன்;
ஏன எயிறு, ஆமை, இள நாகம், வளர் மார்பின் இமையோர் தலைவன்; ஊர்
வான் அணவு சூதம், இள வாழை, மகிழ், மாதவி, பலா, நிலவி, வார்
தேன் அமுது உண்டு, வரிவண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே.
|
5
|
சிவபெருமான் காட்டில் வாழ்கின்ற மான்கன்றைக் கரத்தில் ஏந்தியவன். யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தியவன். நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன். பன்றியின் கொம்பு, ஆமை ஓடு, இளம் பாம்பு, இவற்றை மார்பில் அணிந்தவன். தேவர்களின் தலைவன். அவன் உகந்தருளிய திருத்தலம் வானளாவிய மா, வாழை, மகிழ், மாதவி, பலா முதலிய மரங்கள் தழைத்து, சொரிகின்ற தேனை உண்டு, வரிகளையுடைய வண்டுகள் தேனுண்ட மயக்கத்தில் பாடும் திருத்தேவூர் ஆகும். | |
| Go to top |
ஆறினொடு கீறுமதி ஏறு சடை, ஏறன்; அடையார் நகர்கள் தான்,
சீறுமவை, வேறுபட நீறு செய்த நீறன்; நமை ஆளும் அரன்; ஊர்
வீறு மலர் ஊறும் மது ஏறி, வளர்வு ஆய விளைகின்ற கழனிச்
சேறு படு செங்கயல் விளிப்ப, இள வாளை வரு தேவூர் அதுவே.
|
6
|
சிவபெருமான் சடையிலே கங்கையோடு, பிறைச்சந்திரனையும் அணிந்தவன். இடபவாகனம் ஏறியவன். கோபம்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தும் பகையசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகும்படி செய்தவன். திருமேனியில் திருநீற்றைப் பூசியவன். நம்மையாட்கொள்ளும் அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், செழிப்பான மலர்களிலிருந்து ஊறும் தேன் வயல்களில் பாய்ந்து சேறுபடுத்த, கயல்மீன்கள் விளையாட அழைக்க இள வாளைமீன்கள் வருகின்ற திருத்தேவூர் என்பதாகும். | |
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம், அன்று, அவிய, நின்று நகைசெய்
என் தனது சென்று நிலை; எந்தை தன தந்தை; அமர் இன்ப நகர்தான்-
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று, கறவைக் குருளைகள்
சென்று, இசைய நின்று துளி, ஒன்ற விளையாடி, வளர் தேவூர் அதுவே.
|
7
|
கோபித்து உலகையழிக்க எண்ணி வெற்றிபெற்ற பகையசுரர்களின் நெருங்கிய மூன்றுபுரங்களையும், சிவபெருமான் சிரித்துச் சாம்பலாகுமாறு செய்தவன். நான் சென்றடையக் கூடிய பற்றுக்கோடாக விளங்குபவன். என் தந்தைக்குத் தந்தையாகிய அச்சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இனிய தலமாவது, வீட்டின் முன்னால் நின்ற பலாக்கனிகளைத் தின்று கறவைப் பசுக்களின் கன்றுகள் துள்ளி விளையாடி வளர்கின்ற திருத்தேவூர் ஆகும். | |
ஓதம் மலிகின்ற தென் இலங்கை அரையன் மலி புயங்கள் நெரிய,
பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன் தனது இடம்
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம்,
சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே.
|
8
|
கடல் அலைகள் மோதுகின்ற தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமை மிகுந்த புயங்கள் நெரிபடத் தன் காற்பெருவிரலை ஊன்றி அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, மகிழ்ச்சி மிகுந்த பெண்கள் நடனமாடவும், முழவு ஒலிக்கவும், சேற்றில் பயில்கின்ற கையினால் உழவுத் தொழில் செய்து வறுமைப் பிணியையும், பசிப்பிணியையும் ஓட்டி வெற்றிகாணும் வேளாளர்கள் நிறைந்த திருத்தேவூர் ஆகும். | |
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு, சுண்ணம் மலி வண்ணம் மலர்மேல்
நண் அவனும், எண் அரிய விண்ணவர்கள் கண்ணவன் நலம் கொள் பதிதான்-
வண்ண வன நுண் இடையின், எண் அரிய, அன்ன நடை, இன்மொழியினார்
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே.
|
9
|
கருநிற மேகத்தையொத்த அழகிய திருமாலும், மகரந்தப்பொடி நிறைந்த தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், அளவற்ற தேவர்களும் `இவர் நிலைமையை அறியும்வழி என்ன` என்று யோசிக்கும்படி நெருப்புப்பிழம்பாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், அழகிய நிறமும், சிறிய இடையும், அன்ன நடையும், அளவற்ற இனிய மொழிகளுமுடைய பெண்கள், உறுதியாக அமைந்த மாளிகைகளில் யாழிசைக்க விளங்கும் திருத்தேவூர் ஆகும். | |
பொச்சம் அமர் பிச்சை பயில் அச் சமணும், எச்சம் அறு போதியரும், ஆம்
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன், மிகு நச்சு அரவன், மொச்ச நகர்தான்-
மைச் சில் முகில் வைச்ச பொழில்...
|
10
|
பொய்யான துறவு வேடம்கொண்டு பிச்சை யெடுக்கும் சமணர்களும், புகழற்ற புத்தர்களும் கூறும் விருப்பமான உபதேச மொழிகளை விலக்கி, பித்தன் எனப்படுபவனும், விடமுடைய பாம்பை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானுடைய, மொய்த்த மெய்யடியார்கள் நெருங்கிய தலமாவது, மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருத்தேவூர் ஆகும். | |
| Go to top |
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர்
செங்கயல்கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன்-அமர் தேவூர் அதன்மேல்,
பைங்கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன், உரைசெய்
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள், சங்கை இலரே.
|
11
|
நீண்டு வளர்ந்து படமெடுக்கும் பாம்பைச் சிவந்த சடையில் அணிந்தவர் நம் தலைவரான சிவபெருமான். அவர் அடர்ந்த கூந்தலையும், செவ்விய கயல்மீன் போன்ற கண்களையுமுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். அவர் வீற்றிருந்தருளும் தலம் திருத்தேவூர், அதைப் போற்றிப் பசிய தாமரை மலர்கள் அழகு செய்கின்ற வலிய திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப்பாக்கள் ` அடியார் கூட்டங்களில் ஓத வல்லவர்கள் குற்றமற்றவர் ஆவர். | |