என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள் ஆகி எனது உள்
நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்;
நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம் ஆர்
குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர் கோகரணமே.
|
1
|
சிவபெருமான் அடியார் அல்லாதவர்க்கு எப் பொழுதும் காண்டற்கு அரியவன் . இயற்றமிழும் , இசைத்தமிழும் ஆகி எனது உள்ளத்தில் நன்கு ஒளியாகி வீற்றிருப்பவன் . பொன்போன்று ஒளிரும் சடைமுடியுடைய அக்கடவுள் வீற்றிருந்தருளும் இடமாவது , ஒன்றிய மனமுடைய அடியவர்களுடன் தேவர்களும் கூடியிருந்து பரவுகின்ற குன்றுகளும் , சோலைகளும் விளங்கும் திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும் . | |
பேதை மட மங்கை ஒரு பங்கு இடம் மிகுத்து, இடபம் ஏறி, அமரர்
வாதைபட வண்கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம்
மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி, நிறை மா மலர்கள் தூய்,
கோதை வரிவண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர்
கோகரணமே.
|
2
|
பேதைமைக் குணத்தையுடைய இளம்பெண்ணாகிய உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டு , இடப வாகனத்தின் மேலேறி , தேவர்கள் துன்பத்தில் அழுந்தியபோது கடலில் தோன்றிய விடத்தை உட்கொண்டு சிவபெருமான் காத்தருளினார் . அப்பெருமான் வீற்றிருந்தருள்கின்ற இடமாவது பெண்களோடு ஆடவர்களும் வந்து இறைவனின் திருவடிகளை வணங்கி , சிறந்த மலர்களைத் தூவிப் போற்ற , சாத்திய மாலைகளில் வரி வண்டுகள் மொய்த்து இன்னிசை எழுப்பும் கீர்த்தி மிகுந்த திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும் . | |
முறைத் திறம் உறப் பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி, ஆல நிழல்வாய்,
மறைத் திறம் அறத்தொகுதி கண்டு, சமயங்களை வகுத்தவன் இடம்
துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து, வரை உந்தி, மதகைக்
குறைத்து, அறையிடக் கரி புரிந்து, இடறு சாரல் மலி கோகரணமே.
|
3
|
கல்லால நிழலின் கீழ்ச் சனகாதி முனிவர்கட்கு அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நான்கு பொருள்களையும் சிவ பெருமான் முறையோடு உபதேசித்தார் . வேதத்தின் பொருளாகிய சரியை முதலிய நாற்பாதப் பொருட்களையும் கண்டு அறுவகைச் சமயங்களை வகுத்தவர் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துறைகள்தோறும் அருவிநீர் தூய்மையான மலர்களைச் சுமந்து கொண்டு , மூங்கில்களைத் தள்ளி , மதகுகளைச் சிதைத்து , யானை பிளிற மோதும் சாரலையுடைய திருக்கோகரணம் என்னும் தலமாகும் . | |
இலைத் தலை மிகுத்த படை எண்கரம் விளங்க, எரி வீசி, முடிமேல்
அலைத் தலை தொகுத்த புனல் செஞ்சடையில் வைத்த அழகன்
தன் இடம் ஆம்
மலைத்தலை வகுத்த முழைதோறும், உழை, வாள் அரிகள்,
கேழல், களிறு,
கொலைத்தலை மடப்பிடிகள், கூடி விளையாடி நிகழ்
கோகரணமே.
|
4
|
சிவபெருமான் இலைபோன்ற நுனியுடைய சூலப் படையை உடையவன் . எட்டுக்கரங்களை உடையவன் . நெருப்பைக் கையிலேந்தி எண்தோள் வீசி நடனம் ஆடுபவன் . தலையிலுள்ள செஞ்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கியவன் . அத்தகைய அழகான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மலைகளிலுள்ள குகைகளில் மான்களும் , சிங்கங்களும் , பன்றிகளும் , யானைகளும் , கொம்பாற் கொல்லுதலையுடைய இளம் பெண்யானைகளும் கூடி விளையாடுகின்ற திருக்கோகரணம் என்னும் தலமாகும் . | |
தொடைத்தலை மலைத்து, இதழி, துன்னிய எருக்கு, அலரி,
வன்னி, முடியின்
சடைத்தலை மிலைச்சிய தபோதனன்; எம் ஆதி; பயில்கின்ற பதி ஆம்
படைத் தலை பிடித்து மறவாளரொடு வேடர்கள் பயின்று குழுமி,
குடைத்து அலை நதிப் படிய நின்று, பழி தீர நல்கு
கோகரணமே.
|
5
|
சிவபெருமான் தலைமாலை அணிந்தவர் . சடையில் கொன்றை , எருக்கு , அலரி , வன்னிப்பத்திரங்களையும் அணிந்தவர் . எம் முதல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி அலைகளையுடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்க அப்பெருமான் அவர்களின் பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் திருக்கோகரணமாகும் . | |
| Go to top |
நீறு திரு மேனி மிசை ஆடி, நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய,
ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம்
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக்
கூறு, வனம் ஏறு இரதி வந்து, அடியர், கம்பம் வரு,
கோகரணமே.
|
6
|
சிவபெருமான் திருநீற்றைத் திருமேனியில் பூசியவர் . திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்ய இடபத்தில் ஏறி இசைபாடிப் பலி ஏற்று வருவார் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமானது சிவாகம விதிப்படி இறைவனின் திருவடிகளை விரும்பி வழிபடுகின்ற ஆறு சமயத்தவர்களும் , மனத்தில் சிவானந்தம் மேலிட உடலில் நடுக்கம் வருகின்ற அடியவர்களாய் வாழ்கின்ற திருக்கோகரணமாகும் . | |
கல்லவடம், மொந்தை, குழல், தாளம், மலி கொக்கரையர்;
அக்கு அரைமிசை
பல்ல பட நாகம் விரி கோவணவர்; ஆளும் நகர் என்பர் அயலே
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக,
கொல்ல விட நோய் அகல்தர, புகல் கொடுத்து அருளு கோகரணமே.
|
7
|
ஓசைமிகுந்த கல்லவடம் , மொந்தை , குழல் , தாளம் , வலம்புரிச்சங்கு ஆகிய வாத்தியங்களுக்கு ஏற்ப சிவபெருமான் நடன மாடுவார் . அக்குப்பாசி அணிந்த இடுப்பில் , நச்சுப்பற்களும் , படமும் உடைய பாம்பை அணிந்து கோவணஆடை உடுத்தவர் . அத்தகைய சிவபெருமான் ஆளும் நகர் நற்குண , நற்செய்கை யுடையவர்களாகிய பெண்கள் சிவபெருமானது திருப்பெயரைச் சொல்லித் தீர்த்தத்தில் முழுக , கொல்லும் விடநோய் போன்ற வினைகளைத் தீர்த்து , காரியம் யாவினும் வெற்றி கொடுத்தருளும் திருக்கோகரணமாகும் . | |
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற,
விரல்-தலை உகிர்ச் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம்
புரைத் தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி, வினை தீர, அதன்மேல்
குரைத்து அலை கழல் பணிய, ஓமம் விலகும் புகை செய் கோகரணமே.
|
8
|
முரட்டுத்தனமும் , இருண்ட நிறமுமுடைய இராவணனின் பத்து வாய்களும் அலறும்படி , தன் காற்பெருவிரலை ஊன்றி அவனைக் கயிலைமலையின்கீழ் நெருக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , முனிவர்களும் , வேத வல்லுநர்களும் வினைதீர , ஒலிக்கின்ற கழலணிந்த சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து , அரநாமத்தினை ஓதி வேள்வி புரிய அப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும் . | |
வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும்,
வேதமுதலோன்,
இல்லை உளது என்று இகலி நேட, எரி ஆகி, உயர்கின்ற பரன் ஊர்
எல்லை இல் வரைத்த கடல்வட்டமும் இறைஞ்சி நிறை, வாசம் உருவக்
கொல்லையில் இருங் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர்,
கோகரணமே.
|
9
|
வில்லாற்றலால் வலிமையுடைய அரக்கனான இராவணனின் உயிரைப் போக்கிய திருமாலும் , வேதத்தை ஓதும் பிரமனும் , தம்முள் மாறுபட்டு இல்லையென்றும் , உள்ளது என்றும் அறியமுடியாதவாறு தேட , நெருப்புவடிவாகி ஓங்கி நின்ற சிவ பெருமான் வீற்றிருந்தருளும் ஊர் , எல்லையாக அளவுபடுத்திய கடலால் சூழப்பட்ட பூவுலகத்தோரும் , தேவலோகத்தவரும் வணங்க , தினைப்புனங்களில் இளங்குறவர்கள் நறுமணம் கமழும் கூந்தலை உலர்த்தும் எழில்மிகுந்த திருக்கோகரணம் ஆகும் . | |
நேசம் இல் மனச் சமணர், தேரர்கள், நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து
ஆசை கொள் மனத்தை அடியார் அவர் தமக்கு அருளும் அங்கணன் இடம்
பாசம் அது அறுத்து, அவனியில் பெயர்கள் பத்து உடைய
மன்னன் அவனை,
கூச வகை கண்டு, பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே.
|
10
|
உள்ளன்பில்லாத சமணர்களும் , புத்தர்களும் கூறும் சொற்களைப் பொய்யென நீக்கி , தன்னிடத்து ஆசைகொள்ளும் படியான மனத்தையுடைய அடியவர்களுக்கு அருளும் அழகிய கருணையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இவ்வரிய பூவுலகில் பத்துப்பெயர்களையுடைய அர்ச்சுனனின் பாசத்தைப் போக்கி , அவன் நாணும்படி போர்செய்து பின் அருள் புரிந்த திருக்கோகரணம் ஆகும் . | |
| Go to top |
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர்
கோகரணமே
ஈடம் இனிது ஆக உறைவான் அடிகள் பேணி, அணி காழி நகரான்-
நாடிய தமிழ்க்கிளவி இன் இசை செய்
ஞானசம்பந்தன்-மொழிகள்
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர்; பரலோகம் எளிதே.
|
11
|
காந்தட்செடிகள் பாம்புபோல் மலர்கின்ற அகன்ற மலைச்சாரலையுடைய வளம்பெருகும் திருக்கோகரணத்தை இடமாகக் கொண்டு இனிது வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி , ஆராய்ந்த தமிழ்ச்சொற்களால் சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன் அருளிய இனிய இசைப்பாடல்களைப் பாடவல்ல பக்தர்கள் அரசராகி எல்லாத் திசையும் ஆள்வர் . பின் சிவலோகமும் எளிதில் அடைவர் . | |