சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய,
தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம் கொள் பதிதான்-
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே
கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு வீழிநகரே.
|
1
|
சிறப்புப் பொருந்திய சிவஒளியோடு , தேசங்களிலெல்லாம் புகழ்பெற்ற செல்வன் கழலேத்தும் செல்வத்தை உடைய அந்தணர்கள் வணங்குகின்ற தாழ்ந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வெற்றிமிகும் பதியாவது , பூமியில் பொருந்திய தாமரை மலர்கள் மலர்ந்த வயல்களும் , மேகம் சூழ்ந்த வெண்மையான , செல்வ வளமிக்க மாளிகைகளும் அழகுபெற விளங்குகின்ற திருவீழிமிழலையாகும் . | |
பட்ட முழவு, இட்ட பணிலத்தினொடு, பல்மறைகள் ஓது பணி நல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய, அருள் செய் தழல் கொள் மேனியவன் ஊர்
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர், மன்னு பொழில்வாய்
விட்டு உலவு தென்றல் விரை நாறு, பதி வேதியர்கள் வீழிநகரே.
|
2
|
கொட்டும் முழவின் ஓசையும் , ஊதும் சங்கின் ஒலியும் , பல வேதங்களை ஓதுகின்ற பணியை மேற்கொள்ளும் , சீலமுடைய அந்தணர்கள் வெல்க என்னும் துதிப்பாடல்கள் பாட அருள்செய்பவர் அழல் போன்ற சிவந்த மேனியுடைய சிவபெருமான் . அவர் வீற்றிருந்தருளும் ஊரானது நறுமணம் கமழும் செந்தாமரை மலர்கள் வேலி போன்று சூழ்ந்து விளங்குவதும் , செந்நெல் பெருகும் வயல்வளமிக்கதும் , வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்ததும் , தென்றலின் நறுமணம் கமழ்வதும் அந்தணர்கள் வசிக்கின்றதுமான திருவீழிநகர் என்னும் பதியாகும் . | |
மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்
உயிர்களுக்கு
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த, எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம்
பண் இழிவு இலாத வகை பாட, மடமஞ்ஞை நடம் ஆட, அழகு ஆர்
விண் இழி விமானம் உடை விண்ணவர் பிரான் மருவு வீழிநகரே.
|
3
|
தேவலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்த தேவர்கட்கு வளமிக்க பதி , மற்றுமுள்ள மன்னுயிர்கட்கு எண்ணற்ற இன்பங்களைத் தரும் பதி , அழகிய சோலைகளில் வண்டுகள் பாட , இள மயில்கள் நடனமாட , அழகிய தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு வழிபடப்படும் விமானமுடைய கோயிலில் தேவர்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் சிறப்புடைய திருவீழிமிழலை என்னும் தலமாகும் . | |
செந்தமிழர், தெய்வமறை நாவர், செழு நன்கலை தெரிந்த அவரோடு
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர்
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர்-தண்புனல் வளம் பெருகவே,
வெந் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே.
|
4
|
பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும் அன்பர்களும் , தெய்வத் தன்மையுடைய வேதம் ஓதும் நாவையுடைய அந்தணர்களும் , சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த அறிஞர்களும் , நற்குண , நற்செய்கையுடைய ஞானிகளும் அர்ச்சனைகள் செய்ய , சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஊரானது , கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும் , வேலி சூழ்ந்த வயல்களும் , குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க , வேள்வி இயற்றும் வேத விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய திருவீழிமிழலையாகும் . | |
பூதபதி ஆகிய புராணமுனி புண்ணிய நல்மாதை மருவி,
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்,
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே.
|
5
|
நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என விளங்குகின்ற ஐம்பூதங்கட்கும் பதியாகிய சிவபெருமான் பழமையான தவக் கோலம் பூண்டவர் . அவர் புண்ணிய தேவியாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மாதவர்களும் , அந்தணர்களும் அழலோம்பி வளர்க்கும் வேள்வியினால் பசி , பிணி , வறுமை , மழையின்மை முதலிய தீங்கு நேராமலும் , உண்டி , நோயின்மை , செல்வம் , பருவ மழை முதலிய நன்மை நிகழவும் , மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை ஆகும் . | |
| Go to top |
மண்ணில் மறையோர் மருவு வைதிகமும், மா தவமும், மற்றும் உலகத்து
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள்
பெருமானது இடம் ஆம்
நண்ணி வரு நாவலர்கள் நாள்தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர்
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை
வீழிநகரே.
|
6
|
இப்பூவுலகில் அந்தணர்கள் ஆற்றி வருகின்ற வைதிக தருமங்களையும் , மகா முனிவர் ஒழுகிவருகின்ற தவநெறிகளையும் , மற்றும் உலகியல் நெறி பற்றிய பல்வகை அறங்களையும் படைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நாடிவருகின்ற புலவர்கள் நாள்தோறும் வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும் , வானளாவிய மாளிகைகள் நிறைந்து செல்வம் வளர்வதும் , ஓங்கிய மதிலையுடையதுமான திருவீழிமிழலை ஆகும் . | |
மந்திர நல்மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்க புகை போய்,
அந்தர-விசும்பு அணவி, அற்புதம் எனப் படரும் ஆழி இருள்வாய்,
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்,
வெந்தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே.
|
7
|
வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும் வேள்வியின் புகையானது மேலே சென்று ஆகாயத்தில் கலந்து அற்புதம் போன்று பகற்காலத்தே இருள் சூழக் கடலைக் கடைந்த மந்திர மலையைப் போன்ற அழகிய மாளிகைகளில் பதிக்கப்பட்ட இரத்தினங்களின் ஒளியானது நெடுந்தூரம் பாய்ந்து புகையால் விளைந்த இருளைப் போக்கி ஒளிரும் . அவ்வொளி வெவ்விய தழலில் ஏற்றிய விளக்கொளிபோல் விளங்கும் இயல்பினதாய் விருப்பமுடையவர்களாய் , மனநிறைவோடு மக்கள் வாழ்கின்ற தலம் திருவீழிமிழலை யாகும் . | |
ஆன வலியின் தசமுகன் தலை அரங்க, அணி ஆழிவிரலால்,
ஊன் அமர் உயர்ந்த குருதிப்புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர்
தேன் அமர் திருந்து பொழில், செங்கனக மாளிகை, திகழ்ந்த மதிலோடு
ஆன திரு உற்று வளர், அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே.
|
8
|
தசமுகன் எனப்படும் இராவணன் தன் வலிமையைப் பெரிதாகக் கருதிக் கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , அவனது தலைகள் அரைபடும்படி அழகிய திருக்காற்பெருவிரலை ஊன்றி , அவனுடைய உடலிலிருந்து குருதி பெருகுமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது தேன்மணம் கமழும் சோலைகளும் , செம்பொன் மாளிகைகளும் , உயர்ந்த மதில்களும் உடையதாய்ச் செல்வம் பெருகி வளரும் அந்தணர்கள் நிறைந்த அழகிய திருவீழிநகராகும் . | |
ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும், எழில் அன்ன உருவம்
ஆனவனும், ஆதியினொடு அந்தம் அறியாத அழல்மேனியவன் ஊர்
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்வாய்
வேனல் அமர்வு எய்திட, விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே.
|
9
|
பன்றி வடிவம் கொண்டு பூமியைத் தோண்டிய திருமாலும் , அழகிய அன்னப்பறவை உருவெடுத்த பிரமனும் தேடத் தன் முடியையும் , அடியையும் அறியப்படாத வண்ணம் நெருப்பு வடிவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது , வானளாவிய பெரிய மதில்களினருகில் மலர்கள் அடர்ந்த , வளமிக்க சோலையில் மாந்தர் வெயிற்காலத்தில் தங்க , விளங்குகின்ற தெய்வத்தன்மை மிக்க புகழுடைய திருவீழிமிழலையாகும் . | |
குண்டு அமணர் ஆகி, ஒரு கோலம் மிகு பீலியொடு
குண்டிகை பிடித்து
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர்; அது
என்ன பொருள் ஆம்?
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீா
வெண்தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே.
|
10
|
சமணர்கள் முரட்டுத்தன்மை உடையவராய் , அழகிய மயிற்பீலியும் , குண்டிகையும் ஏந்தி , எட்டுத் திக்கிலும் மிகுந்த ஆற்றலுடைய தெய்வம் ஒன்று உள்ளது என்பதால் என்ன பயன் உள்ளது ? வேதத்தை ஓதும் பிரமனைப் போன்ற அறிஞர்கள் விரும்பிப் போற்றும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர் , வெண்ணிற முத்துப்போன்ற ஒளிபொருந்திய பற்களையுடைய கற்புடைப் பெண்கள் விளங்கும் அழகிய திருவீழிமிழலையாகும் . | |
| Go to top |
மத்தம் மலி கொன்றை வளர் வார்சடையில் வைத்த பரன், வீழிநகர் சேர்
வித்தகனை, வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி,
அத்தகு குணத்தவர்கள் ஆகி, அனுபோகமொடு யோகு அவரதே.
|
11
|
பொன்னூமத்தை மலரும் , கொன்றைமலரும் , நீண்ட சடையிலே அணிந்த பெருமானும் , திருவீழிமிழலைநகரில் வீற்றிருந்தருளும் சதுரனுமாகிய சிவபெருமானைப் போற்றி , வெங்குரு என்னும் பெயரையுடைய சீகாழியில் அவதரித்த வேத வல்லுநனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலைகளை ஓத வல்லவர்கள் , அழகிய கோயிலையுடைய செல்வம் மலிகின்ற சிவலோகத்தை அடைந்து , சத்துவ குணம் உடையவர்களாகி இறைவனோடு பேரின்பம் துய்ப்பதற்குரிய சிவயோகத்தைப் பெறுவர் . | |