சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.089   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கொச்சைவயம் (சீர்காழி) - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=qxnlxhDjPz4   Add audio link Add Audio

திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணிச் சந்தம் உந்தி,
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு,
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவிப்
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ், நெஞ்சமே! புகல் அது ஆமே.

1
நெஞ்சமே ! அழகான இளயானைத் தந்தங்களோடு , திரட்சியான இரத்தினங்களையும் , சந்தன மரங்களையும் அடித்துக் கொண்டு , குருந்து , மா , குரவம் , குடசம் முதலிய மரவகைகளையும் , மயிலின் தோகைகளையும் சுமந்து கொண்டு பரவி , பெரிய வயல்களில் பாய்கின்ற நெடிய கரைகளையுடைய காவிரி நதி சூழும் திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி வாழ்வாயாக ! அத்திருவடியே நமக்குச் சரண்புகும் இடமாகும் .

ஏலம் ஆர் இலவமோடு இனமலர்த் தொகுதி ஆய் எங்கும் நுந்தி,
கோல மா மிளகொடு கொழுங் கனி கொன்றையும் கொண்டு, கோட்டாறு
ஆலியா, வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும்
நீலம் ஆர் கண்டனை நினை, மட நெஞ்சமே! அஞ்சல், நீயே!

2
மடநெஞ்சமே ! மணம் கமழும் ஏலம் , இலவங்கம் இவைகளோடு நறுமணம் கமழும் மலர்களையும் தள்ளிக் கொண்டு , அழகிய மிளகுக் கொடிகளோடு , நன்கு பழுத்த கனிகள் கொன்றை மலர்கள் ஆகியவற்றை அலைகள் வாயிலாக அடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதியின் நீர் வயல்களில் புகுகின்ற அழகிய திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் நீலகண்டரான சிவபெருமானை நினைப்பாயாக ! நீ அஞ்சாதே .

பொன்னும் மா மணி கொழித்து, எறி புனல், கரைகள் வாய் நுரைகள் உந்தி,
கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ
மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின், நாளும்
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!

3
நெஞ்சமே ! பொன்னையும் , பெரிய மணிகளையும் ஒதுக்கிக் கரையில் எறிகின்ற ஆற்றுநீர் நுரைகளைத் தள்ளிக் கொண்டு , கன்னிப்பெண்களின் மார்பில் பூசியிருந்த சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களை அகற்றிக் கரைசேர்க்கின்ற காவிரி சூழ்ந்திருக்க , உமாதேவியாரோடு நிலைபெற்று இருப்பவராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கொச்சைவயம் என்னும் இத் திருத்தலத்தையே எக்காலத்தும் பொருந்தி வாழ்வாயாக ! அவ்வாறு வாழ்ந்தால் தொன்றுதொட்டு வரும் மலநோயானது இனி உன்னைத் தொடராது . நீ அஞ்சல் வேண்டா .

கந்தம் ஆர் கேதகைச் சந்தனக்காடு சூழ் கதலி மாடே
வந்து, மா வள்ளையின் பவர் அளிக் குவளையைச் சாடி ஓட,
கொந்து வார் குழலினார் குதி கொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய
எந்தையார் அடி நினைந்து, உய்யல் ஆம், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!

4
நெஞ்சமே ! மணம் பொருந்திய தாழை , சந்தனக் காடு என்பவற்றைச் சூழ்ந்து , வாழைத் தோட்டங்களின் பக்கமாக வந்து , மா மரத்தையும் , வள்ளிக் கொடியின் திரளையும் , மொய்க்கும் வண்டுகளையும் குவளையையும் மோதி ஓட , பூங்கொத்துக்கள் அணிந்த நீண்ட கூந்தலையுடைய பெண்கள் குதித்துக் கொண்டு நீராடும் காவிரிநதி சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளிய எந்தையாரான சிவபெருமானின் திருவடிகளைத் தியானித்து நாம் உய்தி பெறலாம் . நீ அஞ்சவேண்டா .

மறை கொளும் திறலினார் ஆகுதிப் புகைகள் வான் அண்ட மிண்டி
சிறை கொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை தன்பால்,
உறைவு இடம் என மனம் அது கொளும், பிரமனார் சிரம் அறுத்த,
இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ், நெஞ்சமே!
அஞ்சல், நீயே!

5
நெஞ்சமே ! வேதங்களை அவற்றின் பொருள் உணர்ந்து ஓதும் வன்மை படைத்த அந்தணர்கள் இயற்றுகின்ற வேள்விப் புகை ஆகாயத்தை அளாவி நெருங்குதலால் மழை பொழிய , அந்நீர் தங்கிய கரைகளையுடைய நீர்நிலைகளால் அழகுடன் விளங்கும் செழும்பதியாகிய , மதில்கள் விளங்குகின்ற திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தை , தாம் எழுந்தருளும் இடமாகக் கொண்ட மனமுடையவரும் , பிரமனின் சிரமறுத்தவருமான சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் வணங்கி வாழ்வாயாக ! நீ அஞ்சவேண்டா .
Go to top

சுற்றமும் மக்களும் தொக்க அத் தக்கனைச் சாடி, அன்றே,
உற்ற மால்வரை உமை நங்கையைப் பங்கமா உள்கினான், ஓர்
குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி
நல்-தவம் அருள் புரி நம்பனை நம்பிடாய், நாளும், நெஞ்சே!

6
நெஞ்சமே ! சிவனை நினையாது செய்த தக்கன் வேள்வியைத் தகர்த்து , அதற்குத் துணையாக நின்ற சுற்றத்தார்களையும் , மற்றவர்களையும் தண்டித்து , தன் மனைவி தாட்சாயனி தக்கன் மகளான தோடம் நீங்க இமயமலை அரையன் மகளாதற்கும் , தன் திருமேனியில் ஒரு பாகமாதற்கும் நினைத்தருளியவனும் , ஒரு குற்றமுமில்லாத அடியவர்கள் குழுமிய வீதிகள் சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து , திரிகரணங்களும் ஒன்றிச் சிவவழிபாடு செய்பவர்கட்கு அதன் பயனை அளித்து அருள்புரிகின்றவனுமாகிய சிவபெருமானை எந்நாளும் நீ விரும்பி வாழ்வாயாக !

கொண்டலார் வந்திட, கோல வார் பொழில்களில் கூடி, மந்தி
கண்ட வார்கழை பிடித்து ஏறி, மா முகில்தனைக் கதுவு கொச்சை,
அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய, ஆலம்
உண்ட மா கண்டனார் தம்மையே உள்கு, நீ! அஞ்சல், நெஞ்சே!

7
நெஞ்சமே ! மேகங்கள் வந்தவுடன் , அழகிய நீண்ட சோலைகளிலுள்ள குரங்குகள் கூடி , தங்கட்கு முன்னே காணப்படுகின்ற மூங்கில்களைப் பற்றி ஏறி , அந்தக் கரிய மேகங்களைக் கையால் பிடிக்கின்ற திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , அண்ட வானவர்களும் , தேவர்களும் , முனிவர்களும் வந்து பணிய , ஆலகால விடத்தினை உண்டு அவர்களைக் காத்த பெருமையுடைய கழுத்தினையுடைய சிவபெருமானையே எப்பொழுதும் நீ நினைத்துத் தியானிப்பாயாக ! நீ அஞ்சல் வேண்டா .

அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி, மாமலை எடுத்து,
ஆர்த்த வாய்கள்
உடல் கெட, திருவிரல் ஊன்றினார் உறைவு இடம் ஒளி கொள் வெள்ள
மடல் இடைப் பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே,
பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே
பேணு, நெஞ்சே!

8
நெஞ்சமே ! வலிமை வாய்ந்த பற்களையுடைய அரக்கனான இராவணன் பெரிய திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , ஆரவாரித்த அவனது வாய்களுடன் உடலும் நெரியும்படித் தன் காற்பெருவிரலை ஊன்றினவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற , ஒளிபொருந்திய வெள்ளியைப் போன்ற இதழ்களை யுடைய பூக்களின் இடையிடையே பவளம் போன்ற செந்நிறப் பூக்களும் , முத்துக்களைப் போன்ற அரும்புகளும் , அமைந்த பூங்கொத்துக்களையுடைய செழித்த புன்னைமரங்களின் பக்கத்தில் பறவை இனங்கள் தங்கள் பெடைகளோடு வளர்தலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை நீ போற்றி வழிபடுவாயாக !

அரவினில்-துயில் தரும் அரியும், நல் பிரமனும், அன்று, அயர்ந்து
குரைகழல், திருமுடி, அளவு இட அரியவர் கோங்கு செம்பொன்
விரி பொழில் இடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரிய நல் மிடறு உடைக் கடவுளார் கொச்சையே கருது,
நெஞ்சே!

9
நெஞ்சமே ! பாம்புப் படுக்கையில் துயிலும் திருமாலும் , நல்ல பிரமதேவனும் சோர்வடையும்படி , ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும் , திருமுடியையும் அளவிடுதற்கு அரியவராய் , பூக்களிலுள்ள மகரந்தமானது செம்பொன் துகளைப்போல உதிர்கின்ற சோலைகளுக்கு இடையில் , மலை மகளான உமாதேவியார் மகிழும்படி , கரிய , அழகிய கழுத்தினை யுடையவராய்ச் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை நீ எப்பொழுதும் தியானிப்பாயாக !

கடு மலி உடல் உடை அமணரும், கஞ்சி உண் சாக்கியரும்,
இடும் அற உரைதனை இகழ்பவர் கருதும் நம் ஈசர்; வானோர்
நடு உறை நம்பனை; நால்மறையவர் பணிந்து ஏத்த, ஞாலம்
உடையவன்; கொச்சையே உள்கி வாழ், நெஞ்சமே! அஞ்சல், நீயே!

10
நெஞ்சமே ! கடுக்காய்களைத் தின்னும் சமணர்களும் , கஞ்சி உணவை உண்கின்ற புத்தர்களும் , சொல்லுகின்ற சமயபோதனைகளை இகழ்பவர்களாகிய அடியவர்கள் நினைந்து போற்றும் நம் இறைவனும் , தேவர்கள் தன்னைச் சுற்றி நின்று தொழ அவர்கள் நடுவுள் வீற்றிருந்தருளும் நண்பனும் , நான்கு வேதங்களையும் நன்கு கற்ற அந்தணர்கள் பணிந்து போற்ற இந்த உலகம் முழுவதையும் தனக்கு உடைமைப் பொருளாக உடையவனுமாகிய சிவபெருமானது திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தைத் தியானித்து நல்வாழ்வு வாழ்வாயாக ! நீ அஞ்ச வேண்டா .
Go to top

காய்ந்து தம் காலினால் காலனைச் செற்றவர், கடி கொள்
கொச்சை
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை, ஆதரித்தே
ஏய்ந்த தொல்புகழ் மிகும் எழில்மறை ஞானசம்பந்தன் சொன்ன
வாய்ந்த இம் மாலைகள் வல்லவர் நல்லர், வான் உலகின்
மேலே.

11
தம் அடியவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் கோபித்துக் காலால் உதைத்து மாய்த்தவரும் , காவலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தினைத் தாம் வீற்றிருந்தருளுதற்கு ஏற்ற இடமென ஆராய்ந்து எழுந்தருளியுள்ள நம் தலைவருமான சிவபெருமானிடம் பக்தி கொண்டு , பொருந்திய தொன்மையான புகழ்மிகுந்த , அழகிய , மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய சிறப்புடைய இத்தமிழ் மாலைகளை ஓதவல்லவர்கள் நன்மைதரும் வானுலகில் மேன்மையுடன் வீற்றிருப்பர் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கொச்சைவயம் (சீர்காழி)
2.083   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீல நல் மாமிடற்றன்; இறைவன்;
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
2.089   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
3.089   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருந்து மா களிற்று இள
Tune - சாதாரி   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org