சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவீழிமிழலை - புறநீர்மை ஹரிகாம்போஜி பூபாளம் காமாஜ் ராகத்தில் திருமுறை அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=SHdSlTNbgx0   Add audio link Add Audio

புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; பூசு சாந்தம் பொடி-நீறு;
கொள்ளித்தீ விளக்கு; கூளிகள் கூட்டம்; காளியைக் குணம்
செய் கூத்து உடையோன்-
அள்ளல் கார் ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க,
முள்-தாழைகள் ஆனை
வெள்ளைக்கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

1
சிவபெருமான் புலித்தோல் ஆடை உடுத்தவர் . பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் திருநீற்றைப் பொடியாகப் பூசியவர் . சுடுகாட்டில் கொள்ளி நெருப்பை விளக்காகக் கொண்டு பூதகணங்கள் சூழக் காளியுடன் நடனம் புரிந்தவர் . சேற்றில் விளங்கும் ஆமையின் வயிறு போன்ற சந்திரனும் , யானையின் கொம்பு போன்ற தாழையும் விளங்கும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் கெடும் .

இசைந்த ஆறு அடியார் இடு துவல், வானோர் இழுகு
சந்தனத்து இளங் கமலப்
பசும்பொன் வாசிகைமேல் பரப்புவாய்; கரப்பாய், பத்தி
செய்யாதவர் பக்கல்;
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து
அரிந்து எடுத்த வான் சும்மை
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான்! என, வினை கெடுமே.

2
அடியவர்கள் பக்திப் பெருக்குடன் மலர்தூவிப் போற்றவும் , தேவர்கள் நறுமணம் கமழும் பொற்றாமரை மாலைகளைச் சாத்தவும் அவர்கட்கு அருள்வாய் . பக்தி செயாதவர்கட்கு ஒளிந் திருப்பாய் . ஊற்று நீர் பாயும் கழனிகளில் மலர்களும் , கயல்களும் திகழ , அரிந்த கதிர்களிலிருந்து தூற்றும் நெல்லானது வானத்திலிருந்து உதிர்வன போன்று வளமுடன் விளங்குவது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திரு நாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .

நிருத்தன், ஆறு அங்கன், நீற்றன், நால்மறையன், நீலம்
ஆர் மிடற்றன், நெற்றிக்கண்
ஒருத்தன், மற்று எல்லா உயிர்கட்கும் உயிர் ஆய் உளன்,
இலன், கேடு இலி, உமைகோன்-
திருத்தம் ஆய் நாளும் ஆடு நீர்ப் பொய்கை, சிறியவர்
அறிவினின் மிக்க
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

3
சிவபெருமான் திருநடனம் செய்பவர் . வேதத்தின் அங்கமாக விளங்குபவர் . திருநீறு பூசியுள்ளவர் . நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் பொருளாய் விளங்குபவர் . நீலகண்டத்தர் . நெற்றிக் கண்ணுடையவர் . ஒப்பற்றவர் . எல்லா உயிர்கட்கும் உயிராய் விளங்குபவர் . பதிஞானத்தால் உணர்பவர்க்கு உளராவார் . பசு ஞானத்தாலும் , பாச ஞானத்தாலும் அறிய முற்படுபவர்கட்கு இலராவார் . உயிர்களின் தீமையைப் போக்குபவர் . உமா தேவியின் கணவர் . புனித தீர்த்தத்தால் நாள்தோறும் அபிடேபிக்கப் படுபவர் . வயதில் சிறியோர் அறிவு சால் சான்றோரின் திருப்பாதத்தை அட்டாங்க நமஸ்காரமாக வணங்கிப் போற்றச் சீலம் மிக்கவர்கள் வாழும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுபவர் . அவருடைய திருநாமத்தை ஓத வினை நீங்கும் .

தாங்க(அ)ருங் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும்
கூடினார் அங்கம்
பாங்கினால்-தரித்துப் பண்டு போல் எல்லாம் பண்ணிய
கண்நுதல் பரமர்
தேம் கொள் பூங் கமுகு, தெங்கு, இளங் கொடி, மா,
செண்பகம், வண் பலா, இலுப்பை,
வேங்கை, பூ மகிழால், வெயில் புகா வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

4
மகாசங்கார காலத்தில் திருமால் , பிரமன் ஆகிய இருவரின் எலும்புகளை அழகுற அணிந்து , பின் முன்பு போல் மீண்டும் எல்லாம் படைத்துத் தொழிலாற்றும் நெற்றிக் கண்ணுடையவர் சிவபெருமான் . அவர் கமுகு , தென்னை , மா , செண்பகம் , பலா , இலுப்பை , வேங்கை , மகிழ் , ஆல் முதலியன சேர்ந்த வெயில்புகாத சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுவார் . அப்பெருமானுடைய திருநாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .

கூசு மா மயானம் கோயில் வாயில்கண் குடவயிற்றன சிலபூதம்,
பூசு மா சாந்தம் பூதி, மெல்லோதி பாதி, நன் பொங்கு
அரவு அரையோன்-
வாசம் ஆம் புன்னை, மௌவல், செங்கழுநீர், மலர்
அணைந்து எழுந்த வான் தென்றல்
வீசு மாம்பொழில் தேன் துவலை சேர்-வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

5
எவரும் அடைவதற்குக் கூச்சப்படுகின்ற மயானத்தில் பெரிய வயிற்றையுடைய பூதங்கள் சூழ நறுமணம் கமழும் சாந்துபோலத்திருநீறு பூசிப் , பார்வதிபாகராய் , ஆடுகின்ற பாம்பை இடுப்பில் அணிந்து விளங்குபவர் , சிவபெருமான் . அவர் நறுமணம் கமழும் புன்னை , முல்லை , செங்கழுநீர் மலர் ஆகிய மணங்கமழும் மலர்களில் கலந்து தென்றல் வீசும் சோலைகளிலிருந்து தேன்துளிகள் சிதறும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுவார் . அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும் .
Go to top

பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர், பங்கயத்து அயனும் ஓர் பாலர்
ஆதிஆய் நடு ஆய் அந்தம் ஆய் நின்ற அடிகளார்,
அமரர்கட்கு அமரர்,
போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர், பூமகன் அனைய
வேதியர், வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

6
இறைவன் உமாதேவியைத் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர் . திருமாலையும் , பிரமனையும் தம்பாகமாகக் கொண்டு ஏகபாத திரிமூர்த்தியாகத் திகழ்பவர் . அவர் உலகத் தோற்றத்திற்கும் , நிலைபெறுதலுக்கும் , ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணராய் விளங்கும் தலைவர் . தேவர்கட்குக் கடவுள் . மலரணிந்த தலையையுடைய புரூரவச் சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப் பெற்றுப் பிரமனையொத்த வேதியர்கள் ஓதுகின்ற வேத ஒலி இடையறாது ஒலிக்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .

தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம்
எனக்கு அருள்! என்று
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன்,
பிறை அணி சடையன்-
நின்ற நாள் காலை, இருந்த நாள் மாலை, கிடந்த
மண்மேல் வரு கலியை
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

7
சிவபெருமான் திருவருளால் தோன்றிய சக்கரப்படை சலந்தராசுரனை அழித்ததைக் கண்ட திருமால் , அத்தகைய சக்கரப்படையைத் தனக்கு அருள வேண்டித் தேவ லோகத்திலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து சிவனைப் பூசித்தார் . சிவபெருமான் சந்திரனை அணிந்த சடையையுடையவர் . அவர் வீற்றிருந்தருளும் இடமாவது எல்லாக் காலத்திலும் மண்ணுலகத்தின் சேர்க்கையால் உண்டாகும் துன்பத்தை வென்ற அந்தணர்கள் வாழ்கின்ற , திருவிழாக்கள் நீங்காத திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனுடைய திருநாமத்தை ஓத , வினை யாவும் நீங்கும் .

கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம்
சிரம் நெரிந்து அலற,
அடர்த்தது ஓர்விரலால், அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன், தட மிகு நெடுவாள்
படித்த நால்மறை கேட்டு இருந்த பைங்கிளிகள் பதங்களை
ஓத, பாடு இருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

8
கோபமுடைய , வாளேந்தியுள்ள அரக்கனான இராவணன் முன்பு கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , அவன் கரமும் , சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவர் சிவபெருமான் . பின் இராவணன் தன் தவறுணர்ந்து அஞ்செழுத்தை யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார் . அத்தியயனம் செய்த நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்கள் ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓத , அருகிருந்து கேட்ட பசுக் கூட்டங்களும் அவற்றைக் கேட்கத் தம் செவிகளைப் பழக்கும் , விரிந்த சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந் தருளும் இறைவனின் திருநாமத்தை ஓத , வினையாவும் கெடும் . விடைக்குலம் - வேதம் பயிலும் சிறுவர் குழாமுமாம் .

அளவு இடல் உற்ற அயனொடு மாலும் அண்டம் மண்
கிண்டியும் காணா
முளை எரி ஆய மூர்த்தியை, தீர்த்தம் முக்கண் எம்
முதல்வனை, முத்தை,
தளை அவிழ் கமலத்தவிசின் மேல் அனனம் தன்
இளம்பெடையோடும் புல்கி,
விளை கதிர்க்கவரி வீச, வீற்றிருக்கும் மிழலையான் என,
வினை கெடுமே.

9
பிரமனும் , திருமாலும் முடியையும் , அடியையும் தேட முற்பட்டு , அண்டங்கட்கு மேலெல்லாம் பறந்து சென்றும் , பூமி மண்ணை இடந்து கீழே பாதாளலோகம் முழுவதும் சென்றும் காண முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் விளங்கியவர் முக்கண் உடைய முதல்வரான சிவபெருமான் . முத்துத் தரும் இதழ் விரிந்த தாமரைச் சிம்மாசனத்தில் அன்னப்பறவையானது தனது பெடையுடன் இருக்க , நெற்கதிர்கள் கவரிவீசுவதைப் போன்று விளங்கும் வயல்களை உடைய திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் பெருமானுடைய திருநாமத்தை ஓத வினை தீரும் .

கஞ்சிப் போது உடையார், கையில் கோசாரக் கலதிகள்,
கட்டுரை விட்டு
அஞ்சித் தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு
அமரர்க்கு அமுது அருளி
இஞ்சிக்கே கதலிக்கனி விழ, கமுகின் குலையொடும் பழம் விழ, தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

10
கஞ்சியைக் கையில் வாங்கி உண்பவர்களும் , ஆடையணியாத் துறவிகளுமான சமணர்கள் , உரைக்கும் மொழிகளை ஏற்க வேண்டா . தேவர்கள் அஞ்சும்படி எழுந்த நஞ்சைத் தாம் உண்டு அவர்கட்கு அமுதம் அருளியவர் சிவபெருமான் . உயர்ந்த கமுகின் பழக்குலை விழ , அதனால் வாழையின் கனிகள் மதில்மேல் உதிரும் . மிக உயர்ந்த தென்னை மரங்களின் உச்சியில் மேகம் படியும் . இத்தகைய வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமான் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும் .
Go to top

வேந்தர் வந்து இறைஞ்ச, வேதியர், வீழிமிழலையுள், விண் இழிவிமானத்து
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை, எம்பெருமானை,
தோய்ந்த நீர்த் தோணிபுரத்து உறை மறையோன்-தூ மொழி ஞானசம்பந்தன்-
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே.

11
இந்திரன் முதலான தேவர்கள் வந்து வழிபட , வேதங்களைக் கற்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விண்ணிழி விமானத்தில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இறைவனான எங்கள் சிவபெருமானை , நீர்வளம் மிகுந்த தோணிபுரத்தில் அவதரித்த மறைவல்ல தூயமொழி பேசும் ஞானசம்பந்தன் , போற்றி உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானவர்களால் வணங்கப்படுவார்கள் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவீழிமிழலை
1.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
1.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.020   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரு இயமகம் பதிகம், துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
Tune - திருநேரிசை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
Tune - திருவிருத்தம்   (திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
5.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   போர் ஆனை ஈர் உரிவைப்
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண் அவன் காண்; கண்
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   மான் ஏறு கரம் உடைய
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
7.088   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
Tune - சீகாமரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
9.005   சேந்தனார்   திருவிசைப்பா   சேந்தனார் - திருவீழிமிழலை
Tune -   (திருவீழிமிழலை )

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp