ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க
சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே!
ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே.
|
1
|
பார்வதிபாகனே ! மேம்பட்ட சோதியே ! கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே ! மழுப் படையை ஏந்தியவனே ! ஆதியே ! தேவர்கட்குத்தலைவனே ! அழகிய அண்ணாமலையில் இருப்பவனே ! உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றி நினையேன் . | |
பண் தனை வென்ற இன் சொல் பாவை ஓர்பங்க! நீல-
கண்டனே! கார் கொள் கொன்றைக் கடவுளே! கமலபாதா!
அண்டனே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே.
|
2
|
பண்ணை வென்ற இனிய சொல்லையுடைய பார்வதிபாகனே ! நீலகண்டனே ! கார்காலத்தில் மலரும் கொன்றைப் பூவை அணிந்த கடவுளே ! தாமரை போன்ற திருவடிகளை உடையவனே ! தேவனே ! தேவர்கள் தலைவனே ! அழகிய அண்ணா மலையில் உள்ளவனே ! அடியவனாகிய யான் உன்னைத் தவிரப் பிறரை உயர்த்திச் சொல்லும் சொற்களைச் சொல்லுவேன் அல்லேன் . | |
உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு எல்லாம்
பெரு வினை பிறப்பு வீடு ஆய், நின்ற எம் பெருமான்! மிக்க
அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய்! அண்டர்கோவே!
மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே.
|
3
|
சடமாகிய மாயையாகவும் , சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய் , குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூல கருமமும் பிறப்பும் பிறப்பிலிருந்து விடுதலையுமாய் நின்ற எம் பெருமானே ! நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர் தலைவனே ! உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றைத் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன் . | |
பைம்பொனே! பவளக்குன்றே! பரமனே! பால் வெண் நீற்றாய்!
செம்பொனே! மலர் செய் பாதா! சீர் தரு மணியே! மிக்க
அம் பொனே! கொழித்து வீழும் அணி அணாமலை உளானே!
என் பொனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.
|
4
|
பசிய பொன்னே ! பவளமலையே ! மேம்பட்டவனே! பால் போன்ற வெண்ணிய நீற்றை அணிந்தவனே ! செம்பொன்னே ! மலர் போன்ற திருவடிகளை உடையவனே ! சிறப்பு மிக்க மாணிக்கமும் மேம்பட்ட அழகிய பொன்னும் அருவிகளால் கொழித்து ஒதுக்கப்படும் அழகிய அண்ணாமலையில் உள்ள அடியேனுடைய பொன் போன்ற அரியவனே ! உன்னைத் தவிர அடியேன் உள்ளத்தில் வேற்றுப்பொருள் யாதனையும் நினைக்கின்றேன் அல்லேன் . | |
பிறை அணி முடியினானே! பிஞ்ஞகா! பெண் ஓர்பாகா!
மறைவலா! இறைவா! வண்டு ஆர் கொன்றையாய்! வாம தேவா!
அறைகழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே!
இறைவனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.
|
5
|
பிறையைச் சூடிய சடைமுடியை உடையவனே ! தலைக்கோலம் அணிந்தவனே ! பார்வதிபாகனே ! வேதங்களில் வல்லவனே ! தலைவனே ! வண்டுகள் பொருந்திய கொன்றை மலரைச் சூடியவனே ! வாமதேவனே ! ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைத் தேவர்கள் போற்றும் அழகிய அண்ணாமலையில் உறைபவனே ! அடியேன் உளத்தில் தங்கியிருப்பவனே ! உன்னைத் தவிர அடியேன் வேறு எந்தப் பொருளையும் விருப்புற்று உறுதியாக நினைப்பேன் அல்லேன் . | |
| Go to top |
புரிசடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்துக்
கரி உரி போர்வை ஆகக் கருதிய காலகாலா!
அரிகுலம் மலிந்த அண்ணாமலை உளாய்!-அலரின் மிக்க
வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே.
|
6
|
முறுக்குண்ட சடையின் மீது அலைகள் மோதும் நீரை உடைய கங்கையை வைத்து , யானைத் தோலை மேற்போர்வையாகக் கொண்டவனாய்க் காலனுக்கும் காலனானவனே ! குரங்குக் கூட்டங்கள் மிக்க அண்ணாமலையில் உறைவோனே ! மலரினும் மேம்பட்ட , கோடுகளை உடைய வண்டுகள் பண்பாடும் உன் திருவடிகளை அடியேன் மறத்தலைச் செய்யேன் . | |
இரவியும், மதியும், விண்ணும், இரு நிலம், புனலும், காற்றும்,
உரகம் ஆர் பவனம் எட்டும், திசை, ஒளி, உருவம் ஆனாய்!
அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே!
பரவும் நின் பாதம் அல்லால், பரம! நான் பற்று இலேனே.
|
7
|
பரமனே ! சூரியன் , சந்திரன் , வானம் , பூமி , நீர் , காற்று , பாம்புகள் தங்கும் பாதலம் , எண் திசைகள் இவற்றிலே ஓளி உருவமாக இருப்பவனே ! பாம்புகள் உமிழ்கின்ற இரத்தினங்களால் ஒளிவீசும் அழகிய அண்ணாமலைப் பெருமானே ! அடியேன் முன் நின்று போற்றும் உன் திருவடிகளைத் தவிர அடியேன் வேறு பற்றுக் கோடு உடையேன் அல்லேன் . | |
பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்;
நீர்த் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய்-
ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே!
தீர்த்தனே!-நின்தன் பாதத் திறம் அலால்-திறம் இலேனே.
|
8
|
அருச்சுனனுக்கு அக்காலத்தில் விரும்பிப் பாசுபதப் படையை நல்கியவனே ! நீர் ததும்புதல் மிகுங் கங்கையை நீண்ட சடையில் தங்குமாறு வைத்தவனே ! ஆரவாரித்துக் கொண்டு ஒன்று சேரும் மேகங்கள் தங்கும் அழகிய அண்ணாமலைப் பெருமானே ! தூயோனே ! உன்பாதங்களின் தொடர்பன்றி அடியேன் வேறு தொடர்பு இல்லேன் . | |
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே!
மாலும் நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்!
ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே!
வால் உடை விடையாய்!-உன் தன் மலர் அடி மறப்பு இலேனே.
|
9
|
பசுவின் பஞ்சகவ்வியத்தில் நீராடுபவனே ! திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து முயன்றும் காண இயலாத வகையில் தீத்தம்பமாய் நின்றவனே ! நீரை ஏந்திய மேகங்கள் வரையில் அசைகின்ற உச்சியை உடைய பாக்குமரங்கள் அழகு செய்யும் அண்ணா மலையில் உள்ளவனே ! வெண்மையை உடைய காளைவாகனனே ! உன்னுடைய மலர் போன்ற பாதங்களை அடியேன் மறவேன் . | |
இரக்கம் ஒன்று யாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்!
உரத்தினால் வரையை ஊக்க, ஒரு விரல் நுதியினாலே!
அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய்! அமரர் ஏறே!
சிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பு இலேனே.
|
10
|
இரக்கம் என்பது சிறிதும் இல்லாத கூற்றுவனைத் தண்டித்த பெருமானே ! இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க , ஒரு விரல் நுனியினாலே அவனை நெரித்த அண்ணாமலைத் தேவர் தலைவனே ! உன்னை அடியேன் தலையால் வணங்கி வாயால் துதித்து மனத்தால் உன் திருவடிகளை மறவாதேனாய் உள்ளேன் . | |
| Go to top |