தோடு உலாம் மலர்கள் தூவித் தொழுது எழு மார்க்கண்டேயன்
வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன்
பாடு தான் செலலும், அஞ்சி, பாதமே சரணம் என்ன,
சாடினார், காலன் மாள; சாய்க்காடு மேவினாரே.
|
1
|
வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல்-தேவர் அஞ்சி
அடைந்து, நும் சரணம் என்ன, அருள் பெரிது உடையர் ஆகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.
|
2
|
அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன்
வரணியல் ஆகித் தன் வாய் நூலினால் பந்தர் செய்ய,
முரண் இலாச் சிலந்தி தன்னை முடி உடை மன்னன் ஆக்கித்
தரணி தான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே.
|
3
|
அரும் பெருஞ் சிலைக் கை வேடனாய், விறல் பார்த்தற்கு, அன்று(வ்)
உரம் பெரிது உடைமை காட்டி, ஒள் அமர் செய்து, மீண்டே
வரம் பெரிது உடையன் ஆக்கி, வாள் அமர் முகத்தில் மன்னும்
சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.
|
4
|
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களே
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த,
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று,
சந்திரற்கு அருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே.
|
5
|
| Go to top |
ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூ மலி கொன்றை சூட்டப் பொறாத தன் தாதை தாளைக்
கூர் மழு ஒன்றால் ஓச்ச, குளிர் சடைக் கொன்றை மாலைத்-
தாமம் நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.
|
6
|
மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட,
ஐயம் இல் அமரர் ஏத்த, ஆயிரம் முகம் அது ஆகி
வையகம் நெளியப் பாய்வான் வந்து இழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார்-சாய்க்காடு மேவினாரே.
|
7
|
குவப் பெருந் தடக்கை வேடன், கொடுஞ்சிலை இறைச்சிப்பாரம்,
துவர்ப் பெருஞ் செருப்பால் நீக்கி, தூய வாய்க் கலசம் ஆட்ட,
உவப் பெருங் குருதி சோர, ஒரு க(ண்)ண்ணை இடந்து அங்கு அப்பத்
தவப் பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே.
|
8
|
நக்கு உலாம் மலர் பல்-நூறு கொண்டு நல் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான், மென்மலர் ஒன்று காணாது,
ஒக்கும், என் மலர்க்கண் என்று அங்கு ஒரு க(ண்)ண்ணை இடந்தும் அப்ப,
சக்கரம் கொடுப்பர் போலும்-சாய்க்காடு மேவினாரே.
|
9
|
புயம் கம் ஐஞ்-ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடிச்
சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச,
வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி, மீண்டே
சயம் பெற நாமம் ஈந்தார்-சாய்க்காடு மேவினாரே.
|
10
|
| Go to top |