சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.075   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -தனித் திருநேரிசை - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=C8xKUbvG84M   Add audio link Add Audio

தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர்
கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி,
இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை,
கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே!

1
தூய காவிரியின் தீர்த்தத்தைக் கொண்டு மந்திரங்களை ஓதி அபிடேகம் செய்து குங்குமக் குழம்பைச் சார்த்தி , தலையில் மாலையை அணிவித்து , நீலகண்டனாய் எம் தலைவனாய் இருக்கின்ற ஈசனை கண்குளிர நோக்கி மகிழாமல் , காலத்தை வீணாக்கின செயலிலே அடியேன் ஈடுபட்டவாறு வருந்தத்தக்கது .

பின் இலேன், முன் இலேன், நான்; பிறப்பு அறுத்து அருள் செய்வானே!
என் இலேன், நாயினேன் நான்? இளங் கதிர்ப் பயலைத் திங்கள்
சில்-நிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே!
நின் அலால் களைகண் ஆரே? நீறு சேர் அகலத்தானே!

2
முதலும் முடிவும் இல்லாத அடியேனுடைய பிறவித் துயரைப் போக்கி அருள் செய்பவனே ! இளைய கதிர்களை உடைய பிறை தலையிலே சிறிதளவு ஒளிவீசும் , தேவர்கள் தலைவனாய்ச் சிவபுரத்து இருப்பவனே ! திருநீறணிந்த மார்பினனே ! அடியேனுக்கு என்று ஒரு பொருளும் இல்லாதேன் நான் . எனக்கு உன்னைத் தவிர பற்றுக்கோடு ஆவார் எவர் ?

கள்ளனேன் கள்ளத் தொண்டு ஆய்க் காலத்தைக் கழித்துப் போக்கி,
தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்;
உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கினேன்; வெள்கி, நானும் விலா இறச் சிரித்திட்டனே!

3
வஞ்சனை உடைய யான் , போலித் தொண்டனாய் , காலத்தைப் பல ஆண்டுகள் வீணாக்கி , பின் மனத்தெளிவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன் . நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவருடனேயே உள்ளத்தில் இருந்து கொண்டு , நீ அறிகின்றாய் என்பதை அறிந்து நான் வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன் .

உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே தகளி ஆக,
மடம் படும் உணர் நெய் அட்டி, உயிர் எனும் திரி மயக்கி,
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்,
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே.

4
உடம்பு என்ற வீட்டிலே மனமே அகலாக , பசு ஞானமான உணர்வே நெய்யாக , உயிரே திரியாக , சிவஞானத் தீயினால் விளக்கை ஏற்றி , அந்த ஞான ஒளியிலே இலயித்திருந்து பார்க்கில் கடம்ப மலர் மாலையை விரும்பி அணியும் , முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் காணலாம் .

வஞ்சப் பெண் அரங்கு கோயில், வாள் எயிற்று அரவம் துஞ்சா;
வஞ்சப் பெண் இருந்த குழல் வான் தவழ் மதியம் தோயும்;
வஞ்சப் பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழல் உற்று
வஞ்சப் பெண் உறக்கம் ஆனேன்; வஞ்சனேன் என் செய்கேனே!

5
வஞ்சனை உடைய பெண்ணாகிய கங்கை தங்கு மிடம் சடைமுடி . அந்தச் சடைமுடியிலே ஒளிபொருந்திய பற்களை உடைய பாம்புகள் உறங்காவாய் உள்ளன . அந்தச் செஞ்சடைச் சூழலிலே பிறை கங்கையில் தோய்ந்தவாறு உள்ளது . அந்தக் கங்கை யினுடைய வாழ்க்கையை ஆள்பவன் சிவபெருமான் . அவனைப் போன்ற வாழ்வை வாழத் தொடங்கி , வஞ்சனை உடைய அடியேன் , வஞ்சனை உடைய பெண்ணின் உறக்கத்தைப் போலப் பொய் வாழ்க்கை வாழ்ந்து யாது செய்ய வல்லேன் ?
Go to top

உள்குவார் உள்ளத்தானை, உணர்வு எனும் பெருமையானை,
உள்கினேன், நானும் காண்பான்; உருகினேன்; ஊறி ஊறி
எள்கினேன்; எந்தை! பெம்மான்! இருதலை மின்னுகின்ற
கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே?

6
நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவனாய்ச் சிவஞானமாகிய பெருமையை உடையவனாய் உள்ள பெருமானை நானும் காண்பதற்கு நினைத்து , உருகி அன்பு ஊறி , உள்ளம் உருகினேன் . எந்தையாகிய பெருமானே ! உன்னை இரண்டு பக்கமும் பற்றி எரிகின்ற கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பு போன்ற என் உள்ளம் எங்ஙனம் அடைய இயலும் ?

மோத்தையைக் கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து, உன்
வார்த்தையைப் பேச ஒட்டா மயக்க, நான் மயங்குகின்றேன்;
சீத்தையை, சிதம்பு தன்னை, செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா
ஊத்தையை, கழிக்கும் வண்ணம் உணர்வு தா, உலக மூர்த்தீ!

7
பிணத்தைக் கண்ட காக்கைகளைப் போல , அடியேனுடைய தீய வினைகள் அடியேனைச் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க , அடியேன் மயங்குகின்றேன் . உலகத்துக்குத் தலைவனே ! வெறுக்கத்தக்கதாய் , பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய் , நோய்க்கு இருப்பிடமாய் அழகிய வடிவில்லாத இந்த உடலை அடியோடு போக்கும்வண்ணம் அடியேனுக்குச் சிவ ஞானத்தை அருளுவாயாக .

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றி, பாவித்தேன், பரமா, நின்னை!
சங்கு ஒத்த மேனிச் செல்வா! சாதல் நாள், நாயேன் உன்னை,
எங்கு உற்றாய்? என்ற போதா, இங்கு உற்றேன் என் கண்டாயே!

8
மேம்பட்டவனே ! சங்கை ஒத்த வெண்மையான மேனியை உடைய செல்வனே ! இந்த உடம்பு மண்ணிற்பொருந்துமாறு நெடிது வீழ்ந்து விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்துப் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி , உன்னையே ஞான பாவனையால் மனத்திற் கொண்டுள்ளேன் . என் உயிர் போகின்ற அன்று நாயைப் போன்று இழிந்த அடியேன் உன்னை , எங்கிருக்கின்றாய் என்று வினவினால் , இங்கிருக்கிறேன் என்று அருள் செய்வாயாக .

வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்து, என்
உள்ளமே புகுந்து நின்றார்க்கு, உறங்கும் நான் புடைகள் பேர்ந்து
கள்ளரோ, புகுந்தீர்? என்ன, கலந்து தான் நோக்கி, நக்கு,
வெள்ளரோம்! என்று, நின்றார்-விளங்கு இளம்பிறையனாரே.

9
விளங்குகின்ற இளம்பிறையைச் சூடிக் கங்கையைச் சடையில் ஏற்ற பெருமான் , ஏதோ என்னை வினவுபவர் போல வந்து என் உள்ளத்துக்குள்ளே புகுந்து நின்றாராக , உறங்கின நான் விழித்தெழுந்து இங்கு புகுந்த நீர் கள்ளரோ என்று வினவ , என் உள்ளத்தில் கலந்திருந்து , தாம் என்னைப் பார்த்துச் சிரித்து கங்கை ஆகிய வெள்ளத்தை உடையோம் என்று நின்றார் .

பெருவிரல் இறைதான் ஊன்ற, பிறை எயிறு இலங்க அங்காந்து
அரு வரை அனைய தோளான் அரக்கன், அன்று, அலறி வீழ்ந்தான்;
இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்க, நான் திரியும் ஆறே!

10
பார்வதி பாகனாய் உள்ள உருவத்தை யுடைய வள்ளலாகிய சிவபெருமான் , தம் காற் பெருவிரலைச் சிறிது ஊன்றிய அளவில் மலையைப் போன்ற தோள்களை உடைய இராவணன் பிறையைப் போன்ற பற்கள் வெளித்தோன்ற வாயைப் பிளந்து கொண்டு அலறிக் கீழே சாய்ந்தான் . சிறிதும் வலிமையில்லாத அடியேன் அம்மையப்பனாகிய அப்பெருமானுடைய திருவடிகளைத் தலையில் சுமந்து கொண்டு எங்கும் திரிகின்றவாற்றைக் காண்க .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -தனித் திருநேரிசை
4.075   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டனேன் பட்டது என்னே! தூய
Tune - கொல்லி   (பொது -தனித் திருநேரிசை )
4.076   திருநாவுக்கரசர்   தேவாரம்   மருள் அவா மனத்தன் ஆகி
Tune - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )
4.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   கடும்பகல் நட்டம் ஆடி, கையில்
Tune - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org