ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி அமணரொடே
காதுவித்தாய்; கட்டம், நோய், பிணி, தீர்த்தாய்; கலந்து அருளிப்
போதுவித்தாய்; நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால்
மோதுவிப்பாய்; உகப்பாய்; முனிவாய்-கச்சி ஏகம்பனே!
|
1
|
காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமர நிழலில் இருக்கும் பெருமானே ! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில் சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத்தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை ஓதுமாறு செய்தாய் . பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறு செய்தாய் . கொடிய நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய் . அடியேனுடைய உள்ளத்தில் கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய் . உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத் தண்டிப்பாயாக . நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை வெறுப்பதும் செய்வாய் . அடியேனை , உன் திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக . | |
எத்தைக்கொடு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து,-எனை,-
கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்தென்னக் கோகு செய்தாய்?-
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவளத்-
தொத்தினை ஏய்க்கும் படியாய்! பொழில் கச்சி ஏகம்பனே!
|
2
|
முத்தின் குவியலும் பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே ! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற இழிவினைச் செய்துவிட்டாய் ? | |
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்ப்
பொய் அம்பு எய்து, ஆவம் அருளிச்செய்தாய்; புரம் மூன்று எரியக்
கை அம்பு எய்தாய்; நுன் கழல் அடி போற்றாக் கயவர் நெஞ்சில்
குய்யம் பெய்தாய்-கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே!
|
3
|
கச்சி ஏகம்பனே ! உண்மையாக அம்புகளை வில்லில் சேர்த்துப் போரிட்ட அருச்சுனனோடு அக் காலத்தில் ஒரு வேடன் வடிவினனாய்ப் பொய்யாக அம்பை வில்லில் சேர்த்து அவனோடு போரிட்டு அவனுக்கு அம்புறத் தூணியை அருளிச் செய்தவனே ! முப்புரமும் தீக்கு இரையாகுமாறு கைகளால் அம்பு எய்தவனே ! உன்னுடைய வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளைப் போற்றாத கயவர்களுடைய உள்ளத்தில் மாயையால் உண்மையை மறைத்தல் செய்தவனே ! குய்யம் - வஞ்சனை . ( சிந்தாமணி -253) | |
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான்,
கறைக்கண்ட! நீ ஒரு பூக் குறைவித்துக் கண் சூல்விப்பதே?
பிறைத்துண்ட வார்சடையாய்! பெருங் காஞ்சி எம் பிஞ்ஞகனே!
|
4
|
மதியின் கூறாகிய பிறையை அணிந்த நீண்ட சடையனே ! பெரிய காஞ்சி மாநகரில் உள்ளாயாய்த் தலைக்கோலம் என்ற அணியை அணிந்தவனே ! நாளும் ஆயிரம் பூக்களால் இண்டை மாலை தொடுத்துச் சிவபெருமானுக்கு அணிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து நாள்தோறும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் வரிசை அமைய இண்டை மாலையைத் தொடுக்கின்ற திரு மாலுடைய மனநிறைவை அழிப்பவன் போல நீலகண்டனாகிய நீ ஒரு பூவைக் குறையச் செய்து அப்பூவின் தானத்தில் செந்தாமரை போன்ற தன் கண்ணை இடந்து அவன் பூவாகத் தொடுப்பதற்காக அவன் கண் ஒன்றனைத் தோண்டி எடுக்குமாறு செய்தாயே . | |
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான்; உள்குவார் வினையைக்
கரைக்கும் எனக் கைதொழுவது அல்லால், கதிரோர்கள் எல்லாம்,
விரைக்கொள் மலரவன், மால், எண்வசுக்கள், ஏகாதசர்கள்,
இரைக்கும் அமிர்தர்க்கு, அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே.
|
5
|
சொற்களால் தன் பெருமையைச் சொல்ல இயலாதவனாய் , மனத்தாலும் உணர்வதற்கு அரியவனாய்த் தன்னை வணங்குபவர்களுடைய வினைகளைச் செயலற்றன ஆக்குவான் என்ற கருத்தொடு கையால் தொழுவதே அல்லாமல் , எங்கள் ஏகம்பப் பெருமான் பிரமன் , திருமால் , ஆதித்தர் பன்னிருவர் , வசுக்கள் எண்மர் , உருத்திரர் பதினொருவர் முதலாகத் தன்னை உரத்த குரலில் துதிக்கும் தேவர்களுக்கும் உள்ளவாறு அறிய இயலாதவன் ஆவான் . | |
| Go to top |
கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு(வ்)
உருகிற்று, என் உள்ளமும்; நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்;
திரு ஒற்றியூரா! திரு ஆலவாயா! திரு ஆரூரா!
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய்-கச்சி ஏகம்பனே!
|
6
|
திருவொற்றியூரா ! திருவாலவாயா ! திருவாரூரா ! கச்சிஏகம்பனே ! அடியேன் தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக உன் திருவடியைக் காண்பதற்கு அடியேனுடைய உள்ளம் உருகுகிறது . அடியேனும் கிடந்து வருந்தி இளைத்துச் செயலற்று விட்டேன் . அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை என்பதனையும் கண்டு அடியேன்மாட்டு இரக்கம் கொள்வாயாக . | |
அரி, அயன், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்,
உரிய நின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார்;
புரிதரு புன் சடைப் போக முனிவர் புலம்புகின்றார்;-
எரிதரு செஞ்சடை ஏகம்ப!-என்னோ, திருக்குறிப்பே?
|
7
|
தீப் போன்ற ஒளியை உடைய சிவந்த சடைமுடியனாகிய ஏகம்பனே ! திருமால் , பிரமன் , இந்திரன் , சந்திரன் , சூரியன் முதலிய தேவர்கள் எல்லோரும் உரிய உன்னுடைய வெற்றி பொருந்திய கோயிலின் முதல்வாசலில் உன் காட்சியை விரும்பி வாடிக் கிடக்கின்றார்கள் . முறுக்கேறிய சிவந்த சடைகளை உடைய , சிவானந்த போகத்தைத் துய்க்க விரும்பும் முனிவர்களும் உன் காட்சி கிட்டாமையால் தனிமைத் துன்பம் உறுகின்றார்கள் . அவர்களுக்குக் காட்சி வழங்குவது பற்றி உன் திருவுள்ளம் யாதோ ? அருளுவாயாக . | |
பாம்பு அரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால்வண்ணனே!
கூம்பலைச் செய்த கரதலத்து அன்பர்கள் கூடிப் பல்-நாள்
சாம்பலைப் பூசி, தரையில் புரண்டு, நின் தாள் சரண் என்று
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய்-கச்சி ஏகம்பனே!
|
8
|
பாம்பினை இடுப்பில் இறுகக் கட்டிப் பரவிய சடை முடியை உடைய பால் நிறத்தனே ! கச்சி ஏகம்பனே ! அடியார்கள் இரு கைகளையும் குவித்துக் கொண்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு அடியார் குழாத்துடன் கூடிப் பலநாள்களாகத் தரையில் புரண்டு உன் திருவடிகளே தங்களுக்கு அடைக்கலம் என்று கூறிவந்து அடைந்துள்ளனர் . அவர்களுக்கு நீ இரங்கி அருளுவாயாக . | |
ஏன்று கொண்டாய், என்னை; எம்பெருமான்! இனி, அல்லம் என்னில்,
சான்று கண்டாய் இவ் உலகம் எல்லாம்; தனியேன் என்று என்னை
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய்; பின்னை ஒற்றி எல்லாம்
சோன்றுகொண்டாய்-கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே!
|
9
|
கச்சி ஏகம்பத்தில் விரும்பி உறைகின்ற ஒளி வடிவினனே ! எம் பெருமானே ! அடியேனை உன் அடியவன் என்று ஏற்றுக் கொண்ட நீ இப்பொழுது அடியேனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால் , நீ அடியேனை ஏற்றுக் கொண்டதற்கு இவ்வுலகம் முழுதும் சாட்சி என்பதனை நினைத்துப்பார் . தன் உணர்வு இல்லாதவன் என்று அடியேனைப் பற்றி நின்ற ஐம்பொறிகளுக்கும் போக்கியப் பொருளாக வழங்கிப் பின் அந்தப் போக்கியப் பொருளா யிருந்த தன்மையிலிருந்து அடியேனை மீட்டுக் கொண்டாய் என்பதனை உளம் கொள்வாயாக . | |
உந்தி நின்றார், உன் தன் ஓலக்கச் சூளைகள்; வாய்தல் பற்றித்
துன்றி நின்றார், தொல்லை வானவர் ஈட்டம்; பணி அறிவான்
வந்து நின்றார், அயனும் திருமாலும்;-மதில் கச்சியாய்!-
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ, வந்து இறைஞ்சுவதே?
|
10
|
மதில்களை உடைய காஞ்சி நகரில் உறைபவனே ! உன்னுடைய திருவோலக்க மண்டபத்தின் வாயிலைப் பொருந்தித் தேவலோக அரம்பையர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நிற்கிறார்கள் . பழைய வானவர் கூட்டத்தினர் தமக்கு இடப்படும் திருத் தொண்டு யாது என்று அறிவதற்கு ஓலக்கத்தில் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார்கள் . பிரமனும் திருமாலும் அம்மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள் . இவ்விடத்தில் நிற்கின்ற அடியோங்கள் அவ்வளவு கூட்டம் நிரம்பிய உன் திருவோலக்க மண்டபத்தில் எங்ஙனம் வந்து உன்னைக் கண்டு வழிபடல் இயலும் ? | |
| Go to top |