சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.026   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவன்னியூர் - திருக்குறுந்தொகை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=N30N2eDaGo4   Add audio link Add Audio

காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம்
பாட, மாநடம் ஆடும் பரமனார்;
வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ்
மாட மா மதில் சூழ் வன்னியூரரே.

1
மணம் கமழ்கின்ற மாடங்களும், மாமதில்களும் சூழ்கின்ற வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர். சுடுகாட்டினை அரங்காகக்கொண்டு, நள்ளிரவில் பூதகணங்கள் பாடப் பெருநடம் ஆடும் பரமர்; மான்போன்ற இப்பெண் வாட, இவளது பொன்னிறத்தைத் தாம் கொண்டு பசலை நிறம் தந்த இயல்புடையவர்.

செங்கண் நாகம் அரையது; தீத்திரள்
அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்;
கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்;
மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே.

2
உமையம்மையாரை ஒரு பாகமாக வைத்த வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர், அரையின்கண் சிவந்த கண்ணையுடைய நாகத்தைக் கட்டியவர்; தீத்தொகுதியை அழகிய கரத்தில் ஏந்தி ஆடுபவர்; நீண்ட சடைமேலிடத்தில் கங்கையைக் கொண்டவர்.

ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்;
தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்;
தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு
வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.

3
வன்னியூர்த்தலத்து இறைவர், தம்மையடைந்த அன்பர்கட்கெல்லாம், ஞானமும், அதனை அடைதற்குரிய நல்ல நெறியும், அடைதற்குரிய இடமும் காட்டுவர்; தன் திருவடியில் அடைந்தவர்கட்குத் தானங்காட்டுவதோடமையாது வானங்காட்டி ஆளவும் வைப்பார்.

இம்மை, அம்மை, என இரண்டும்(ம்) இவை
மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்;
மெய்ம்மையால் நினைவார்கள் தம் வல்வினை-
வம்மின்!-தீர்ப்பர் கண்டீர், வன்னியூரரே.

4
உலகினுள்ளீரே! வன்னியூர்த்தலத்து இறைவர் தம்மை மெய்ம்மையாக நினைவார்களுடைய வலிய வினையைத் தீர்க்கும் இயல்பினர்; இப்பிறப்பு, அப்பிறப்பு என்ற இரண்டின் உண்மைத் தன்மை அறியாது விளம்பும் சிலரைச் சாராது வந்து வழிபடுவீராக.

பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்;
கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்;
மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே.

5
வேதங்களை வாய்மொழியாக உடைய வன்னியூர்த்தலத்து இறைவர், பிறையின் பேரழகு கொண்ட ஒளி நுதலையும் வளைபெய் கரங்களையும் உடைய பெண்களது கற்பினைக் கவர்பவர்; திருநீறணிந்த திருமேனியர்; திருநீல கண்டத்தர், ஒளிவீசும் வெள்ளிய மழுவினை உடையவர் ஆவர்.
Go to top

திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்;
துளைக்கை வேழத்தர்; தோலர்; சுடர் மதி
முளைக்கும் மூரல் கதிர் கண்டு, நாகம், நா
வளைக்கும் வார்சடையார்-வன்னியூரரே.

6
வன்னியூர்த்தலத்து இறைவர் வண்டும், தேனும் திளைத்துப் பொருந்தும் கொன்றையர்; துளையுடைய அயிராவணம் என்ற வேழத்தினை உடையவர்; புலித்தோலினர்; ஒளி வீசும் மதியில் தோன்றும் நிலாக்கதிரைக்கண்டு நாகமானது கொள்ளுவதற்கு நாவினை வளைக்கின்ற நீண்ட சடையினர் ஆவர்.

குணம் கொள், தோள்,-எட்டு,-மூர்த்தி இணை அடி
இணங்குவார் கட்கு இனியனும் ஆய் நின்றான்;
வணங்கி மா மலர் கொண்டவர், வைகலும்
வணங்குவார் மனத்தார்-வன்னியூரரே.

7
வன்னியூர்த்தலத்து இறைவர் எட்டுத் தோள்களையும் எட்டுக்குணங்களையும் உடைய மூர்த்தி; தன் இணையடிகளை இணங்கி வழிபடுவார்கட்கு இனியராகியவர்; மலர்கள் கொண்டு வணங்குவார் மனத்தின் கண்ணவர்.

இயலும் மாலொடு நான்முகன் செய் தவம்
முயலின் காண்பு அரிது ஆய் நின்ற மூர்த்திதான்-
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே.

8
அயற்பக்கமெலாம் அன்னங்கள் மேய்கின்ற, அழகிய தாமரைகளை உடைய வயல்களிலெல்லாம் கயல்மீன்கள் பாய்கின்ற, வன்னியூர்த்தலத்து இறைவர், இயலுகின்ற திருமாலோடு நான்முகன் தவம் செய்து முயன்றும் காண்டல் அரியராய் நின்ற மூர்த்தியாவர்.

நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா,
விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட,
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே.

9
வன்னியூர்த்தலத்து இறைவர், நன்மை கொண்ட பாகராகிய தம்மை முனிந்திடாது திருக்கயிலையைக் கரங்களைக் கொண்டு கோர்த்தெடுத்தபோது அவ்விலங்கை மன்னனின் இருபது தோள்களை மலங்கும் படியாகத் திருவிரலை ஊன்றியவர் ஆவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவன்னியூர்
5.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்
Tune - திருக்குறுந்தொகை   (திருவன்னியூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000