சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.041   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை அருள்தரு விசாலாட்சியம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி
திருநாவுக்கரசர் அங்குநின்றும் நீங்கி, ஆனைக்கா, எறும்பியூர், கற்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருப்பைஞ்ஞீலியை அடைந்தார். பைஞ்ஞீலிக்குச்செல்லும் வழியில் நடையால் வருந்தி இளைத்தும் மனந் தளராமல் சென்றுகொண்டிருந்தார். தொண்டர் வருத்தம் தரியாத பெருமான் அவர் வரும் வழியில் சோலைகுளம் உண்டாக்கி அந்தணர் வடிவோடு பொதிசோறு சுமந்து வீற்றிருந்தார். திருநாவுக்கரசர் அருகில் வந்தவுடன் வழிநடை வருத்தத்தால் மிக இளைத்தீர். என்பால் பொதிசோறு இருக்கிறது. உண்டு இளைப்பாறிச் செல்க என்று கூற, அவ்வண்ணமே பொதிசோறு உண்டு இளைப்பு நீங்கிய நாவுக்கரசரும் தாங்கள் யார்? எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்க, அந்தணரும் நாம் திருப்பைஞ்ஞீலி செல்கின்றோம் என்று கூற, இருவரும் திருப்பைஞ்ஞீலிக்குப் புறப்பட்டனர். அந்தணர் பின்னே அப்பரும் சென்றார். திருப்பைஞ்ஞீலியை அடைந்ததும் இறைவன் மறைந்தான். அப்பர் இறைவனின் எளிவந்த தன்மையை வியந்து பாடித் துதித்தார்.
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=JaXkSXJzOX8   Add audio link Add Audio

உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்-
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்;
சடையின் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே.

1
கோவண உடையினரும் , ஒன்றும் குறைவில்லாதவரும் , படைக்கலங்களைக்கொண்ட பூதகணங்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலித் திருத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சடையிற் கங்கையை வைத்த சதுரப்பாடு உடைய பெருமானை அடையும் வல்லமை உடைய அன்பர்களுக்குத் துன்பங்கள் இல்லை .

மத்தம்மாமலர் சூடிய மைந்தனார்
சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்;
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம்
அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே.

2
ஊமத்தம் மலர்களைச் சூடிய பெருவீரரும் , சித்தராகத் திரிபவரும் , அன்பர் பலர் தொழுதேத்தும் பைஞ்ஞீலியில் உறையும் அத்தரும் , தொழுவார் வினை தீர்ப்பவரும் ஆகிய அப் பெருமானைத் தொழும் வல்லமை உடையவர் நல்லவர் ஆவர் .

விழுது சூலத்தன்; வெண் மழுவாட்படை,
கழுது துஞ்சு இருள் காட்டு அகத்து ஆடலான்;
பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர்தம் வினை தூளியே.

3
நிணம் பொருந்திய சூலத்தையும் , வெண் மழு வாளையும் படைக்கலமாக உடையவனும் , பேய்களும் தூங்குகின்ற நள்ளிருளில் சுடுகாட்டில் ஆடலை உடையவனும் , பைஞ்ஞீலியில் உறையும் பரமனும் ஆகிய பெருமானைப் பழுது ஒன்றும் இன்றித் தொழுது செல்பவர் வினைகள் பொடியாகும் .

ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே
நின்ற சூழல் அறிவு அரியான் இடம்
சென்று பார்!-இடம் ஏத்து பைஞ்ஞீலியுள்
என்றும் மேவி இருந்த அடிகளே.

4
திருமாலும் பிரமனும் தம்மிலே ஒன்றித் தேட முற்பட்டும் திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனாய் விளங்கிய பெருமான் வீற்றிருக்கும் இடம் , பூதங்கள் சென்று ஏத்துகின்ற பைஞ்ஞீலியாகும் . இத்தலத்திலேயே அடிகள் என்றும் மேவியிருப்பது .

வேழத்தின்(ன்) உரி போர்த்த விகிர்தனார்,
தாழச் செஞ்சடைமேல் பிறை வைத்தவர்
தாழைத்தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்;
யாழின் பாட்டை உகந்த அடிகளே.

5
வேழத்தின் தோலை உரித்துப் போர்த்த விகிர்தரும் , செஞ்சடைமேல் தாழுமாறு பிறை வைத்தவரும் , தாழைகள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த பைஞ்ஞீலித் தலத்து உறைபவரும் ஆகிய பெருமான் யாழ்க்குப் பொருந்திய பாடலை உகந்த அடிகள் ஆவர் .
Go to top

குண்டுபட்டு, குறி அறியாச் சமண்-
மிண்டரோடு படுத்து, உய்யப் போந்து, நான்,
கண்டம் கார், வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி, எம்
அண்டவாணன், அடி அடைந்து உய்ந்தெனே.

6
உடல் பெருக்கிக் குறிக்கோளையறியாச் சமண் மிண்டரோடு பொருந்தி உய்யப்போந்து நான் , கரும்புகள் நிறைந்த வயல் சூழ்ந்த பைஞ்ஞீலித்தலத்து எழுந்தருளியுள்ள தேவதேவன் திருவடிகளை அடைந்து உய்ந்தேன் .

வரிப் பை ஆடு அரவு ஆட்டி மதகரி-
உரிப்பை மூடிய உத்தமனார் உறை
திருப் பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய்
இருப்பர், வானவரோடு இனிது ஆகவே.

7
வரிகளை உடைய படத்தினைப் பொருந்தி ஆடும் அரவத்தை ஆட்டி மதச் செருக்குடைய யானையின் உரியை மெய்ப்பையாக மூடிய உத்தமனார் உறைகின்ற திருப்பைஞ்ஞீலித் தலத்தைத் திக்குநோக்கித் தொழுபவர்கள் வானவர்களோடு இனிதாக இருப்பர் .

கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல்
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார்,
பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர்-
ஆடும் நாகம் அசைத்த-அடிகளே.

8
செங்கோடலும் , வெண்கோடலும் , கோங்கமும் ஆகிய பூக்கள் புறவுநிலமாகிய முல்லைநிலத்தை அணிசெய்தலால் , வண்டிசைக்கும் பாடல் கேட்கின்ற பைஞ்ஞீலித் தலத்து இறைவர் பேடும் ஆணும் ஆகிய பிறர் அறியாத இயல்பினர் , ஆடும் பாம்பைக் கட்டிய ஒப்பற்ற அடிகள் ஆவர் .

கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரினான்,
வார் உலாம் முலைமங்கை ஓர் பங்கினன்,
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
ஆர்கிலா அமுதை, அடைந்து உய்ம்மினே!

9
கார்காலத்துப் பொருந்திய கொன்றை மலர்களாலாகிய தாரினை அணிந்தவனும் , கச்சுப் பொருந்திய தனங்களை உடைய உமைமங்கையை ஒரு பங்கில் உடையவனும் , பொழில் நுகரவருவோர் இவர்ந்துவந்த தேருலாவுகின்ற பூம்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய ஆரா அமுதை அடைந்து உய்வீர்களாக .

தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி ஊன்ற நினைந்து, சிவனையே
அரக்கன் பாட, அருளும் எம்மான் இடம்,
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே.

10
அரக்கனாகிய இராவணன் செருக்கினை உற்றுத் தடவரையாகிய திருக்கயிலாயத்தைப் பற்றுதலும் , நெருக்கித் திருவிரலால் ஊன்ற , சிவனையே நினைந்து அவன்பாட அவனுக்கு அருள்புரியும் எம்மான் இடம் பைஞ்ஞீலி என்றுரைப்பார்க்கு இடர்கள் இல்லை .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பைஞ்ஞீலி
3.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆரிடம் பாடலர், அடிகள், காடு
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
5.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   உடையர் கோவணம், ஒன்றும் குறைவு
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
7.036   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கார் உலாவிய நஞ்சை உண்டு
Tune - கொல்லி   (திருப்பைஞ்ஞீலி மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000