வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய் ஆழம் பற்றி வீழ்வார், பல ஆதர்கள்; கோழம்பத்து உறை கூத்தன் குரைகழல்- தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.
|
1
|
வேழம்பம் என்னும் விளையாட்டைப் புரிகின்ற ஐந்து புலன்களாகியவர்கள் விரும்பினவற்றையே தாமும் விரும்பிச் சென்று உலகியல் ஆழங்காற்பட்டுப் பல அறிவற்றவர்கள் வீழ்வர்; கோழம்பத்தில் உறைகின்ற கூத்தன் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கும் பக்தர்களே மிகவும் திறம் உடையவர்கள். | |
கயிலை நல்மலை ஆளும் கபாலியை, மயில் இயல் மலைமாதின் மணாளனை, குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் உயிரினை, நினைந்து உள்ளம் உருகுமே.
|
2
|
திருக்கயிலாயத் திருமலையினை ஆள்கின்ற கபாலியும், மயிலியலை உடைய மலைமங்கையின் மணவாளனும் ஆகிய, குயில் பயில்கின்ற பொழில்கள் உடைய கோழம்பத்தைப் பொருந்திய என் உயிர்போல்வானாகிய இறைவனை நினைந்து உள்ளம் உருகுகின்றது. | |
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்- தாழும் பான்மையர் ஆகித் தம் வாயினால்- தாழம் பூமணம் நாறிய தாழ் பொழில் கோழம்பா! என, கூடிய செல்வமே.
|
3
|
வணங்கும் தன்மையோடு கூடியவராகித் தம் வாயினால், தாழம்பூக்களின் மணம் வீசுகின்ற பொழிலை உடைய \"கோழம்பத்தலத்து இறைவா!\" என்று கூறியதனால் கூடும் செல்வமே, வாழும் தன்மையராகிப் பெற்ற உயர்ந்த செல்வம் ஆகும். | |
பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்; கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு; கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே!
|
4
|
வெண்கோடலும் செங்கோடலும் ஆகிய மலர்கள் பூத்து விளங்கும் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனாகிய இறைவனுக்கு இப்பெண் அன்றே அன்புபட்டாள் ஆதலின், பண்ணொடு கூடிய பாடல் ஆக்குவாள்; மணற்குன்றில் மணலினைக் கொண்டு கூடல் இழைப்பாள். | |
தளிர் கொள் மேனியள் தான் மிக அஞ்ச, ஓர் பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன் குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்; நளிர் கொள் நீர், சடைமேலும் நயந்ததே.
|
5
|
மாந்தளிரின் வண்ணம் கொண்ட மேனியளாகிய உமாதேவி மிக அஞ்சுமாறு ஒப்பற்ற பிளிறிவரும் யானையின் பச்சைத்தோலைப் போர்த்தவனாகிய, குளிர்ச்சிகொண்ட நீண்ட வயல்களையுடைய கோழம்பத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் செறிவினைக்கொண்ட கங்கையினைச் சடைமேலும் நயந்தது வியப்புக்குரியதே. | |
| Go to top |
நாதர் ஆவர், நமக்கும் பிறர்க்கும், தாம்- வேத நாவர், விடைக் கொடியார், வெற்பில் கோதைமாதொடும் கோழம்பம் கோயில்கொண்ட ஆதி, பாதம் அடைய வல்லார்களே.
|
6
|
வேதங்களை ஓதிய நாவை உடையவரும், இடபக்கொடியினரும், மலைமங்கையாகிய உமாதேவியோடும் கோழம்பத்திற் கோயில்கொண்ட ஆதியுமாகிய பெருமானின் பாதங்களை அடையவல்லவர்கள் தாம் நமக்கும் பிறர்க்கும் தலைவர் என்று மதிக்கத்தக்கவர்கள். | |
முன்னை நான் செய்த பாவம் முதல் அற, பின்னை நான் பெரிதும்(ம்) அருள் பெற்றது- அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள்(ள்) அமர் பின்னல் வார் சடையானைப் பிதற்றியே.
|
7
|
அன்னம் பொருந்திய வயலை உடைய கோழம்பத்துள் அமர்ந்திருக்கின்ற பின்னிய நீண்டசடையானைப் பிதற்றியே, முன்பு நான் செய்த பாவம் முதல் அறும்படிப் பின்பு நான் பெரிதும் அருள்பெற்றது. | |
ஏழைமாரிடம் நின்று, இருகைக்கொடு, உண் கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்- கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே.
|
8
|
ஏழையேனாகிய அடியேன் கூழைமீன்கள் பாய்கின்ற வயல்களை உடைய கோழம்பத்தான் அடியை மறந்து அவர்பால் இருந்தது, பெண்களிடம் நின்று இரண்டு கைகளாலும் அவர்கள் இடும் உணவைக்கொண்டு உண்ணும் கோழைகளோடு கூடிய குற்றமாம். | |
அரவு அணைப் பயில் மால், அயன், வந்து அடி பரவனை; பரம் ஆம் பரஞ்சோதியை; குரவனை; குரவு ஆர் பொழில் கோழம்பத்து உரவனை; ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே?
|
9
|
பாம்பாகிய படுக்கையில் பயிலும் திருமாலும், பிரமனும் வந்து அடிபரவப்பெறுவானும், பரம்பொருளாகிய உயர்ந்தசோதியும், பரமாசாரியனும் ஆகிய குரவமரங்கள் செறிந்த கோழம்பத்தின்கண் அறிவு வடிவானவனை நீங்குபவர்க்கு உணர்தல் இயலுமோ? | |
சமர சூரபன்மாவைத் தடிந்த வேல் குமரன் தாதை, நன் கோழம்பம் மேவிய, அமரர் கோவினுக்கு அன்பு உடைத் தொண்டர்கள் அமரலோகம் அது ஆள் உடையார்களே.
|
10
|
போரெதிர்ந்துவந்த சூரபன்மனைக் கொன்ற வேற்படையை உடைய முருகவேளுக்குத் தந்தையும், நல்ல கோழம்பம் மேவிய தேவர்தலைவனும் ஆகிய பெருமானுக்கு அன்புடைய தொண்டர்கள், அமரலோகத்தை ஆளும் உரிமையுடையவராவர். | |
| Go to top |
துட்டன் ஆகி, மலை எடுத்து, அஃதின் கீழ்ப் பட்டு, வீழ்ந்து, படர்ந்து, உய்யப்போயினான் கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று இட்ட கீதம் இசைத்த அரக்கனே.
|
11
|
கொட்ட நறுமணம் வீசுகின்ற கோழம்பத்து இறைவன் என்று விருப்பத்திற்குரிய கீதம் இசைத்த அரக்கன் துட்டனாகித் திருக்கயிலையை எடுக்கலுற்று, அம்மலையின் கீழ்ப்பட்டு விழுந்து படர்ந்து பின் உய்ந்தான். | |