சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன், வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன், கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என, எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.
|
1
|
சங்கு வளையல்கள் பொருந்திய முன்கையை உடைய உமாதேவியை ஒருபாகத்திலுடையவனும், சினவெம்மை பொருந்திய மதம் பொழியும் யானையினை வெகுண்டவனும், மணம் உலாவும் பொழிலை உடைய கோடிகாவில் உள்ளவனுமாகிய இறைவா! என்று கூற, எங்கும் இல்லாததோர் இன்பம் வந்து எய்தும். | |
வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால் ஓடி, வாழ்வினை உள்கி, நீர், நாள்தொறும் கோடிகாவனைக் கூறீரேல், கூறினேன்: பாடிகாவலில் பட்டுக் கழிதிரே.
|
2
|
நாள்தோறும் நீர் மாதர்பால் ஓடி, வாழ்வினையே நினைந்து வாடி வாழ்வது என் ஆவது? கோடிகா இறைவனைக் கூறீரேல், ஊர்க்காவலிற்பட்டுக் கழிவீர்; கூறினேன். | |
முல்லை நல்முறுவல்(ல்) உமை பங்கனார், தில்லை அம்பலத்தில்(ல்) உறை செல்வனார், கொல்லை ஏற்றினர், கோடிகாவா! என்று அங்கு ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.
|
3
|
முல்லையையொத்த நல்ல சிரிப்புடைய உமை ஒரு பங்கில் உடையவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் உறையும் அருட்செல்வரும், முல்லை நிலத்து ஏற்றினை வாகனமாக உடைய வரும் ஆகிய கோடிகா இறைவரே என்று விரைந்து ஏத்துவார்க்குக் குற்றம் ஒன்றும் இல்லை. | |
நா வளம் பெறும் ஆறு, மன் நன்னுதல் ஆமளம் சொலி, அன்பு செயின்(ன்) அலால், கோமளஞ்சடைக் கோடிகாவா! என, ஏவள்? என்று எனை ஏசும், அவ் ஏழையே.
|
4
|
நாவானது வளம் பெறுமாறு அழகிய நுதலை உடைய தலைவி இயன்ற அளவு அழகிய சடையையுடைய கோடிகா இறைவனே என்று அவன் திருப்புகழ் சொல்லி அன்பு செய்தால் பெறலாமேயன்றி அவனை இசைபாடும் வாயால் என்னை வசைபாடுகின்றாளே இந்நங்கை. | |
வீறுதான் பெறுவார் சிலர் ஆகிலும், நாறு பூங்கொன்றைதான் மிக நல்கானேல், கூறுவேன், கோடிகா உளாய்? என்று; மால் ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ?
|
5
|
கோடிகாவில் உள்ள இறைவனே! பெருமை பெறுவார் சிலர் ஆயினும் நறுமணம் வீசும் கொன்றையை மிக அருளா தவனானால் கூறுவேன்; என்றும் காமத்துயர் மயக்கம் ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ? | |
| Go to top |
நாடி நாரணன், நான்முகன், வானவர் தேடி ஏசறவும், தெரியாதது ஓர் கோடிகாவனைக் கூறாத நாள் எலாம் பாடிகாவலில் பட்டுக் கழியுமே.
|
6
|
திருமாலும் நான்முகனும் தேவர்களும் ஆராய முற்பட்டுத் தேடித் துயர் உறவும் தெரியாத இயல்பை உடைய ஒப்பற்ற கோடிகாவுறையும் இறைவனைக் கூறாத நாட்களெல்லாம் ஊர்க்காவலிற்பட்டுக் கழியும். | |
வரங்களால் வரையை எடுத்தான் தனை அரங்க ஊன்றி அருள் செய்த அப்பன் ஊர், குரங்கு சேர் பொழில் கோடிகாவா! என இரங்குவேன், மனத்து ஏதங்கள் தீரவே.
|
7
|
வரங்களாற்பெற்ற பலத்தால் திருக்கயிலையை எடுத்த இராவணனை அழிய ஊன்றி அருள்செய்த அப்பன் ஊராகிய குரங்குகள் சேரும் பொழிலை உடைய கோடிகா இறைவனே என்று என் மனத்துக் குற்றங்கள் தீர இரங்குவேன். | |