சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.079   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) - திருக்குறுந்தொகை அருள்தரு தையல்நாயகியம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=G6TTQDrlJCU   Add audio link Add Audio

வெள் எருக்கு அரவம் விரவும் சடைப்
புள்ளிருக்கு வேளூர் அரன் பொன்கழல்
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர்,
நள் இருப்பர், நரகக்குழியிலே.

1
வெள்ளெருக்கும், பாம்பும் விரவிய சடையொடு கூடிய புள்ளிருக்கு வேளூர்ச் சிவபெருமானின் பொன்னார் திருவடிகள் உள்ளத்துள் இருக்கும் உணர்ச்சி இல்லாதவர்கள் நரகக்குழியில் செறிந்திருப்பர்.

மாற்றம் ஒன்று அறியீர்; மனைவாழ்க்கை போய்க்
கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே,
போற்ற வல்லிரேல், புள்ளிருக்குவேளூர்,
சீற்றம் ஆயின தேய்ந்து அறும்; காண்மினே!

2
விடைசொல்லும் தெளிவில்லாதவராய் மனையில் வாழும் வாழ்க்கைபோய். கூற்றுவன் வந்து உம்மைக் கொள்ளுவதற்கு முன்பே புள்ளிருக்குவேளூரைப் போற்றும் வல்லமை உடையீரேல் சீறுதற்குரிய தீக்குணங்கள் தேய்ந்து அறும்; காண்பீராக.

அருமறையனை, ஆணொடு பெண்ணனை,
கருவிடம் மிக உண்ட எம் கண்டனை,
புரிவெண்நூலனை, புள்ளிருக்குவேளூர்,
உருகி நைபவர் உள்ளம் குளிருமே.

3
அரிய வேதங்களை உடையவனும், ஆணொடு பெண்ணாகியவனும், கரிய ஆலகாலவிடம் மிக உண்ட விருப்பத்திற்குரிய திருநீலகண்டனும், வெள்ளியமுப்புரி நூலனும் ஆகிய பெருமானைப் புள்ளிருக்குவேளூரில் உருகி நையும் அடியார்களின் உள்ளம் குளிரும்.

தன் உரு(வ்)வை ஒருவருக்கு அறிவு ஒணா
மின் உரு(வ்)வனை, மேனி வெண் நீற்றனை,
பொன் உரு(வ்)வனை, புள்ளிருக்குவேளூர்,
என்ன வல்லவர்க்கு இல்லை, இடர்களே.

4
தன் உருவத்தை ஒருவர்க்கும் அறிய வொண்ணாத ஒளி உருவனும், மேனியில்பூசிய வெண்ணீற்றனும், பொன்னார் மேனியனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்கு வேளூர் என்று கூறவல்லவர்க்கு இடர்கள் இல்லை.

செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா
அங்கியின்(ன்) உரு ஆகி, அழல்வது ஓர்
பொங்கு அர(வ்)வனை, புள்ளிருக்கு வேளூர்
மங்கைபாகனை, வாழ்த்த, வரும், இன்பே.

5
சிவந்தகண்ணை உடைய திருமாலுக்கும் பிரமனுக்கும் அறியவொண்ணாத அக்கினியின் உருவாகிக் கனலுகின்ற ஒப்பற்ற, பொங்கியெழும் அரவம் அணிந்த இறைவனாகிய புள்ளிருக்குவேளூரில் உமையொருபாகனை வாழ்த்த இன்பம் வரும்.
Go to top

குற்றம் இ(ல்)லியை, கோலச் சிலையினால்
செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை,
புற்று அர(வ்)வனை, புள்ளிருக்குவேளூர்,
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.

6
குற்றங்கள் இல்லாதவனும், அழகுமிக்க மேருமலையாகிய வில்லினால் சினந்தவர் முப்புரங்களைச் செந்தழலாக்கியவனும், புற்றரவம் கொண்டவனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்குவேளூரைப் பற்றும் வல்லமை உடையவர்களது பாவங்கள் கெடும்.

கையினோடு கால் கட்டி, உமர் எலாம்,
ஐயன் வீடினன் என்பதன் முன்னம், நீர்,
பொய் இலா அரன், புள்ளிருக்குவேளூர்,
மை உலாவிய கண்டனை, வாழ்த்துமே!

7
கைகளோடு கால்களையும் கட்டி உம்மைச் சேர்ந்தவரெல்லாம் எங்கள் ஐயன் இறந்தனன் என்று கூறுவதன்முன்பே, நீர் பொய்யில்லாத சிவபிரானும், புள்ளிருக்குவேளூர்த் திருநீலகண்டனுமாகிய பெருமானை வாழ்த்துவீராக.

உள்ளம் உள்கி உகந்து, சிவன் என்று,
மெள்ள உள்க வினை கெடும்; மெய்ம்மையே;
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே!

8
உள்ளத்தால் உள்ளி. உவப்புற்று \"சிவன்\" என்று மெல்ல உள்கினால் வினைகள் கெடுதல் மெய்மையே; சம்பாதி சடாயு ஆகிய புள்ளினார்பணிகின்ற புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுவீராக.

அரக்கனார் தலைபத்தும் அழிதர
நெருக்கி, மா மலர்ப்பாதம் நிறுவிய
பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர்
விருப்பினால்-தொழுவார் வினை வீடுமே.

9
இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்)
2.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,
Tune - சீகாமரம்   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
5.079   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள் எருக்கு அரவம் விரவும்
Tune - திருக்குறுந்தொகை   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
6.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
Tune - திருத்தாண்டகம்   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group