காசனை, கனலை, கதிர் மா மணித்- தேசனை, புகழார்-சிலர் தெண்ணர்கள்; மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம் ஈசனை இனி நான் மறக்கிற்பனே?
|
1
|
காசு உடையவனும் , கனல் உடையவனும் , ஒளிச்சுடர்விடும் செம்மணி விளக்கம் உடையவனுமாகிய பெருமானைச் சில தெளிவற்ற மூடர்கள் புகழார் . குற்றத்தினைக் கழித்து ஆட்கொள்ளவல்ல எம் இறைவனை இனி நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?. | |
புந்திக்கு(வ்) விளக்குஆய புராணனை, சந்திக்கண் நடம் ஆடும் சதுரனை, அந்திவண்ணனை, ஆர் அழல் மூர்த்தியை, வந்து என் உள்ளம் கொண்டானை, மறப்பனே?
|
2
|
புத்திக்கு விளக்காக உள்ள மிகப்பழமையனும் , நடம் ஆடும் சதுரப்பாடு உடையவனும் , அந்திச்செவ்வண்ணம் உடையவனும் , நிறைந்த அழல்கொண்ட மூர்த்தியும் , வந்து என்னுள்ளம் கொண்டவனுமாகிய பெருமானை மறப்பேனோ? | |
ஈசன், ஈசன் என்று என்றும் அரற்றுவன்; ஈசன் தான் என் மனத்தில் பிரிவு இலன்; ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு(வ்), ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?
|
3
|
ஈசன் ஈசன் என்றும் வாய்விட்டு அரற்றுவேன் ; ஈசன் என் மனத்தில் பிரிவில்லாதவனாய் உள்ளான் - ஈசனையும் என் மனத்துக்கொண்டபின் , தன்னை யான் மறக்கும் வல்லமை உடையேனோ ? | |
ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்,- ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்,- ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன்; இனி ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே?
|
4
|
இறைவன் சேவடிகளை ஏத்தப் பெறும் இயல்பினன் ஆதலால் என்னை இறைவன் அறிந்ததை யான் அறிந்தேன் ; பிறகும் அவன் சேவடியை ஏத்தப்பெற்றேன் ; ஆதலின் இனி ஈசனை யான் மறக்கும் வல்லமை உடையேனோ ? | |
தேனை, பாலினை, திங்களை, ஞாயிற்றை, வான வெண்மதி சூடிய மைந்தனை, வேனிலானை மெலிவு செய் தீ-அழல்- ஞானமூர்த்தியை, நான் மறக்கிற்பனே?
|
5
|
தேனும் , பாலும் போல்வானும் , சந்திரனும் சூரியனும் போல்வானும் , வானத்தின்கண் வெண்மதியினைச் சூடிய வீரனும் , இளவேனிலுக்குரியவனாகிய மன்மதனைத் தீயழலால் மெலியச் செய்தவனுமாகிய ஞானக் கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ? | |
| Go to top |
கன்னலை, கரும்பு ஊறிய தேறலை, மின்னனை, மின் அனைய உருவனை, பொன்னனை, மணிக்குன்று பிறங்கிய என்னனை, இனி யான் மறக்கிற்பனே?
|
6
|
கன்னலும் , கரும்பின் ஊறிய சாற்றுத் தெளிவு போல்வானும் , ஒளியை உடையவனும் , மின்னலைப் போன்ற உருவம் உடையவனும் , பொன்போலும் மேனியினனும் ஆகிய மாணிக்கக் குன்றுபோல் விளங்கும் என்னை உடையானை , இனியான் மறக்கும் வல்லமை உடையேனோ ? | |
கரும்பினை, கட்டியை, கந்தமாமலர்ச் சுரும்பினை, சுடர்ச் சோதியுள் சோதியை, அரும்பினில் பெரும்போது கொண்டு, ஆய் மலர் விரும்பும் ஈசனை, நான் மறக்கிற்பனே?
|
7
|
கரும்பும் கட்டியும் போல்வானும் , வண்டுகள் சூழும் நறுமண மலர்களை அணிந்த சுடர்விடும் ஒளிக்குள் ஒளி ஆகியவனும் , அரும்புகளிற் பெரிய போதுகளைக் கொண்டு ஆய்மலரால் விரும்பும் இறைவனுமாகிய பெருமானை யான் மறக்கும் வல்லமை உடையேனோ ? | |
துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை, நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை, நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை, வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே?
|
8
|
உறங்கும் போதும் சுடர்விடும் சோதியும் , நெஞ்சத்துக்குள் நிலைத்து நின்று நினைக்கவைக்கும் நீதியும் , ஆலகாலவிடத்தைத் திருக்கழுத்துள் அடக்கிய நம்பனுமாகிய பெருமானை வஞ்சனை உடைய யான் இனி மறக்கும் வல்லமை உடையேனோ ? | |
புதிய பூவினை, புண்ணிய நாதனை, நிதியை, நீதியை, நித்திலக்குன்றினை, கதியை, கண்டம் கறுத்த கடவுளை, மதியை, மைந்தனை, நான் மறக்கிற்பனே?
|
9
|
புதிய பூவும் , புண்ணியநாதனும் , செல்வமும் , நீதியும் , முத்துக்குன்றும் , அடைந்தோர்க்குக் கதியும் , மதியும் , மைந்தனும் ஆகிய திருநீலகண்டமுடைய கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ? | |
கருகு கார்முகில் போல்வது ஓர் கண்டனை, உருவம் நோக்கியை, ஊழி முதல்வனை, பருகு பாலனை, பால்மதி சூடியை, மருவும் மைந்தனை, நான் மறக்கிற்பனே?
|
10
|
கருமை உடைய கார்முகில் போல்வதாகிய ஒப்பற்ற திருநீலகண்டனும் , அழகுடைய நோக்கு இயைந்த ஊழிக் காலத்தும் உள்ள முதல்வனும் , பருகுதற்குரிய பால் போன்ற வெண் மதியைச் சூடியவனும் , அன்பால் நினைவாரை மருவுகின்ற மைந்தனுமாகிய பெருமானை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ? | |
| Go to top |