சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.008   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்காளத்தி - திருத்தாண்டகம் அருள்தரு ஞானப்பூங்கோதையாரம்மை உடனுறை அருள்மிகு காளத்திநாதர் திருவடிகள் போற்றி
திருப்பைஞ்ஞீலியில் சிலநாள் தங்கித் திருவண்ணாமைலக்குப் புறப்பட்டார். திருவண்ணாமைல, திருவோத்தூர், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருவொற்றியூர், மயிலாப்பூர், திருப்பாசூர், திருவாலங்காடு, காரிகரை முதலான தலங்களைத் தரிசித்துத் திருக்காளத்திக்கு வந்தார். கண்ணப்பர்க்கருள் செய்த காளத்திநாதனைப் பாடிப் பரவி இன்புற்றார்.
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=PHR3JLFtuIk   Add audio link Add Audio

விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண்,
  வியன்கச்சிக் கம்பன் காண், பிச்சை அல்லால்
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண்,
மயானத்து மைந்தன்காண், மாசு ஒன்று இல்லாப்
பொன் தூண் காண், மா மணி நல்குன்று ஒப்பான்
காண், பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கல்-தூண் காண்-காளத்தி காணப்பட்ட கண
  நாதன் காண்;அவன் என் கண் உளானே.

1
விற்று அப்பணத்தால் உணவு வாங்குவதற்குரிய பொருள் ஒன்றும் தன்பால் கொள்ளாத வறியவனைப் போலக் காட்சி வழங்கி, கச்சி ஏகம்பத்தில் உகந்தருளியிருந்து, பிச்சை எடுத்தலைத் தவிர உணவுக்கு வேறு வழியில்லாத பெருந்திறமையனாய், மயானத்துக் காணப்படுபவனாய், ஏழு உலகங்களையும் இடையறாது தாங்கி நிற்கும் கற்றூண் போல்வானாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணங்களின் தலைவனாகிய எம்பெருமான் எப்பொழுதும் என் மனக்கண்களுக்குக் காட்சி வழங்கியவாறே உள்ளான்.

இடிப்பான் காண், என் வினையை;ஏகம்பன்
 காண்;எலும்பு ஆபரணன் காண்;எல்லாம் முன்னே
முடிப்பான் காண்;மூஉலகும் ஆயினான் காண்;
 முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண்;
  பராய்த்துறையான்;பழனம், பைஞ்ஞீலியான் காண்;
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் -
  காளத்தியான் அவன், என் கண் உளானே.

2
என் வினைகளை அழிப்பவனாய் , ஏகம்பத்தில் உறைபவனாய் , அணிகலன்களாக எலும்புகளையே அணிபவனாய் , எல்லா உலக நிகழ்ச்சிகளையும் வகுத்து அமைப்பவனாய் , மூவுலகங்களிலும் வியாபித்திருப்பவனாய் , பஞ்சாதியாக முறையாக வழு ஏதுமின்றி வேதங்களை ஓதும் பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கிய பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாய் , பராய்த்துறை . பழனம் , பைஞ்ஞீலி இவற்றில் உகந்தருளியிருப்பவனாய்க் கொன்றைப் பூவினாலாய மார்பு - மாலை , முடிமாலை இவற்றை அணிபவனாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன்
  காண், ஞானப் பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன
பூரணன் காண், புண்ணியன் காண், புராணன் தான்
காண், புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன் தான்காண்,
சாரணன் காண், சந்திரன் காண், கதிரோன் தான்
 காண், தன்மைக் கண்-தானேகாண், தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண்-காளத்தி காணப்பட்ட கண நாதன்
காண்;அவன் என் கண் உளானே.

3
நாராயணனாய் , பிரமனாய் , நான்கு வேதங்களையும் ஓதுபவனாய் , ஞானப் பெருங்கடலின் அக்கரையை அடையச் செய்யும் படகு போன்ற நிறைவானவனாய்ப் புண்ணியனாய்ப் பழையோனாய் , முறுக்குண்ட சடை மீது கங்கையை ஏற்ற தூயோனாய் , எங்கும் இயங்குபவனாய்ச் சந்திர சூரியர்களை உடனாய் இருந்து செயற்படுப்போனாய் , நற்பண்புகளில் தனக்கு உவமை இல்லாதானாய் , மெய்யுணர்வுடையோருக்குத் தானே முதற் பொருளாகத் தோன்றுபவனாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணத் தலைவனாகிய எம்பெருமான் என்கண் உள்ளான் .

செற்றான் காண், என் வினையை;தீ ஆடீ காண்;
திரு ஒற்றியூரான் காண்;சிந்தைசெய்வார்க்கு
உற்றான் காண்;ஏகம்பம் மேவினான் காண்;
 உமையாள் நல்கொழு நன் காண்;இமையோர் ஏத்தும்
சொல்-தான் காண்;சோற்றுத்துறை உளான் காண்;
 சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான் காண்-காளத்தி காணப்பட்ட கணநாதன்
  காண்;அவன் என் கண் உளானே.

4
என் தீவினைகளை அழித்துத் தீயின்கண் கூத்து நிகழ்த்தித் தன்னைத் தியானிப்பவர்களுக்கு நெருக்கமானவனாய் , உமா தேவியின் கணவனாய் , தேவர்கள் துதிக்கும் வேத வடிவினனாய் , மன் மதனுடைய அம்பு செலுத்தும் ஆற்றலைச் சாம்பலாக்கக் கற்றவனாய் , ஒற்றியூர் , ஏகம்பம் , சோற்றுத்துறை என்ற திருத்தலங்களில் உறை பவனாய்க் காளத்தியில் காணப்படும் கணநாதன் என்கண் உள்ளான் .

மனத்து அகத்தான்;தலைமேலான்;வாக்கின் உள்ளான்;
வாய் ஆரத் தன் அடியே பாடும் தொண்டர்-
இனத்து அகத்தான்;இமையவர்தம் சிரத்தின்மேலான்;
ஏழ் அண்டத்து அப்பாலான்;இப் பால் செம்பொன்
புனத்து அகத்தான்;நறுங்கொன்றைப் போதின் உள்ளான்;
 பொருப்பு இடையான்;நெருப்பு இடையான்;காற்றின் உள்ளான்;
கனத்து அகத்தான்;கயிலாயத்து உச்சி உள்ளான்
 காளத்தியான் அவன், என் கண் உளானே.

5
மனத்திலும் தலைமேலும் சொற்களிலும் உள்ளானாய் , மனம் மெய்மொழிகளைச் செயற்படுத்தித் தன் திருவடிகளை வாயாரப்பாடும் தொண்டர் இனத்தானாய் . தேவர்கள் தலை மேலானாய் , ஏழுலகங்களையும் கடந்தவனாய் , இவ்வுலகில் செவ்விதாகிய பொன் போன்ற நல்ல விளைவை நல்கும் குறிஞ்சி முதலிய நிலத்தில் உள்ளானாய் , நறிய கொன்றைப் பூவில் உறைபவனாய் , மலை நெருப்பு காற்று மேக மண்டலம் இவற்றில் உடனாய் இருந்து இவற்றைச் செயற்படுப்பவனாய்க் கயிலாயத்து உச்சி உள்ளானாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .
Go to top

எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண்;
ஏகம்பம் மேயான் காண்;இமையோர் ஏத்தப்
பொல்லாப் புலன் ஐந்தும் போக்கினான் காண்;
  புரிசடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண்;
நல்ல விடை மேற்கொண்டு, நாகம் பூண்டு, நளிர்
  சிரம் ஒன்று ஏந்தி, ஓர் நாண் ஆய் அற்ற
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் - 
  காளத்தியான் அவன், என் கண் உளானே.

6
ஏனைய பொருள் தோன்றுதற்கு முன்னும் இருப்பவனாய் , ஏகம்பத்து விரும்பி உறைபவனாய் , தேவர்கள் துதிக்கப் பொறிவாயில் ஐந்து அவித்தவனாய் , முறுக்கேறிய சடையின் மேல் பாய்ந்த கங்கையை அதன்கண் நிரப்பியவனாய் , பெரிய காளைமீது ஏறிப் பாம்புகளைப் பூண்டு குளிர்ந்த மண்டை யோட்டை ஏந்தி , நாணத்தைக் காப்பதொரு பொருளாகத்துறந்தார் அணியும் காவி யாடை உடுத்துக் காபாலம் என்னும் கூத்தாடும் காளத்திநாதன் என் கண் உள்ளான் .

கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண்; கண்டன் காண்; வண்டு உண்ட கொன்றையான் காண்;
எரி, பவள, வண்ணன் காண், ஏகம்பன் காண்; எண்திசையும் தான் ஆய குணத்தினான் காண்;
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடி காண்; தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண்;
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் -  காளத்தியான் அவன், என் கண் உளானே.

7
நீலகண்டனாய் , எமக்குக் காட்சி வழங்குபவனாய் , அருளால் ஏற்ற பெற்றியின் பல்வேறு வடிவு உடையவனாய் , வண்டுகள் நுகரும் கொன்றைப் பூவினை அணிந்தவனாய் , ஒளிவீசும் பவள வண்ணனாய் , ஏகம்பனாய் , எட்டுத் திசைகளும் தானேயாய பண்பினனாய் , முப்புரங்களையும் தீக்கொளுவியவனாய் . நெருப்பிடையே கூத்து நிகழ்த்துபவனாய் , என் உள்ளத்திலிருந்து தீவினைகளை அழிப்பவனாய் , யானைத் தோலைப் போர்த்து மகிழ்ந்து காபாலக் கூத்து ஆடுபவனாய்க் காளத்திப் பெருமான் என் கண் உள்ளான் .

இல் ஆடிச் சில்பலி சென்று ஏற்கின்றான் காண்; இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்;
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண்; வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண்;
மல் ஆடு திரள் தோள்மேல் மழுவாளன் காண்; மலைமகள் தன் மணாளன் காண்; மகிழ்ந்து முன்நாள்
கல்லாலின் கீழ் இருந்த காபாலீகான் காளத்தியான் அவன், என் கண் உளானே.

8
இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் வழங்கும் சிறு அளவினவாகிய உணவுகளை ஏற்கின்றவனாய் , தேவர்கள் தொழுது வழிபடப்படுகின்றவனாய் , வில்லை ஏந்தி வேடன் உருக் கொண்டு பன்றிப்பின் ஓடியவனாய் . பூணூலும் பூண்ட மார்பினனாய் , வலிய திரண்ட தோளில் மழுப்படை ஏந்தியவனாய் , பார்வதி கணவனாய் , மகிழ்வோடு ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழ்த் தென் முகக் கடவுளாய் இருந்தவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காளத்தியில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் என்கண் உள்ளான் .

தேனப் பூ வண்டு உண்ட கொன்றையான் காண்;
 திரு ஏகம்பத்தான் காண்;தேன் ஆர்ந்து உக்க
ஞானப் பூங்கோதையாள் பாகத்தான் காண்;
  நம்பன் காண்;ஞானத்து ஒளி ஆனான் காண்;
வானப் பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து
 நின்றான் காண்;வண்டு ஆர் சோலைக்
கானப்பேரூரான் காண்;கறைக் கண்டன் காண் -
காளத்தியான் அவன், என் கண் உளானே.

9
வண்டுகள் நுகரும் தேனை உடைய கொன்றை சூடியாய்த் திரு ஏகம்பத்தனாய் , தேன் ஒழுகும் பூக்களை அணிந்த ஞானப்பூங்கோதை அம்மையை இடப்பாகமாகக் கொண்டவனாய் , நமக்கு இனியவனாய் , ஞானப் பிரகாசனாய் , ஊழியிறுதியில் வானமும் உலகும் அழியுமாறு விரைந்து ஒடுக்க வல்லவனாய் , வண்டுகள் பொருந்திய சோலைகளை உடைய திருக்கானப்பேரூரில் உறைபவனாய் நீலகண்டனாய்க் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

இறையவன் காண்;ஏழ் உலகும் ஆயினான்காண்;
  ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்;
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண்;
 குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்;
மறை உடைய வானோர் பெருமான் தான் காண்;
  மறைக்காட்டு உறையும் மணிகண்டன் காண்;
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் -
காளத்தியான் அவன், என் கண் உளானே.

10
யாவருக்கும் முதல்வனாய் , ஏழுலகும் , ஏழ் கடலும் இவற்றைச் சுற்றிய மலைகளும் ஆகிப் பலகுறைபாடுகளையும் உடைய உயிர்கள் தனக்குச் செய்யும் குற்றறேவல்களை ஏற்றுக் குடமூக்குத் தலத்திலுள்ள கீழ்க்கோட்டத்தை விரும்பி , வேதம் ஓதும் வானோருக்கும் தலைவனாய்த் திருமறைக் காட்டுத் தலத்தில் தங்கும் நீலகண்டனாய்க் கறைக் கண்டனாய்க் காபாலக்கூத்து ஆடும் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .
Go to top

உண்ணா அருநஞ்சம் உண்டான் தான் காண்;ஊழித்தீ
அன்னான் காண்;உகப்பார் காணப்
பண் ஆரப் பல் இலயம் பாடினான் காண்;பயின்ற
நால் வேதத்தின் பண்பினான் காண்;
அண்ணாமலையான் காண்;அடியார் ஈட்டம் அடி
இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண்;
கண் ஆரக் காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் -
 காளத்தியான் அவன், என் கண் உளானே.

11
பிறர் உண்ண இயலாத கொடிய நஞ்சினை உண்டவனாய் , ஊழித் தீயை ஒப்ப அழிப்பதனைச் செய்பவனாய்ப் பண்களுக்குப் பொருந்தப் பல வாச்சியங்களை இயக்கிப் பாடியவனாய் , தான் ஓதிய நான்கு வேதங்களில் கூறப்பட்ட இறைமைப் பண்புகளை உடையவனாய் , அண்ணாமலையானாய் , அடியார் கூட்டம் தன் திருவடிகளைத் தொழுது போற்றுமாறு அருளுபவனாய் , தன்னை மனக்கண்களால் காண்பவர்களுக்கு அரிய காட்சிப் பொருளாய் இருப்பவனாய் உள்ள காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்காளத்தி
3.036   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சந்தம், ஆர், அகிலொடு, சாதி,
Tune - கொல்லி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
3.069   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது
Tune - சாதாரி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
6.008   திருநாவுக்கரசர்   தேவாரம்   விற்று ஊண் ஒன்று இல்லாத
Tune - திருத்தாண்டகம்   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)
7.026   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செண்டு ஆடும் விடையாய்! சிவனே!
Tune - நட்டராகம்   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000