சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.015   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=pAmABtxi5nA   Add audio link Add Audio

குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்; கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்;
பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்; பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்;
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்; உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்;
கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

1
கருகாவூரில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் குருத்துப்போன்ற மெல்லிய பொருள்களாகவும் , வயிரம் போன்ற வலிய பொருள்களாகவும் விண்மீன்கள் , ஞாயிறு முதலிய கிழமைகளுக்குரிய கிரகங்கள் என்பனவாகவும் உள்ளான் . பருகாமலேயே , மலத்தைப் போக்கும் அமுதமாவான் . பாலில் நெய்போலவும் பழத்தில் சுவை போலவும் எங்கும் நீங்காது பரவியுள்ளான் . பாட்டில் பண்ணாக உள்ளான் . ஒருநிலையில் பார்வதி பாகனாக உள்ளான் . நாவின் உள்ளே பொருந்தி மொழியைப் பேசுவிப்பவனாவான் . முதற் பொருளாய் உலகத்தோற்றத்து முன்னேயும் இருப்பவன் , முன்னே தோன்றி நின்று எல்லோரையும் நடத்தும் கண் போன்றவன் .

வித்து ஆம்; முளை ஆகும்; வேரே தான் ஆம்; வேண்டும் உருவம் ஆம்; விரும்பி நின்ற
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும்(ம்) ஆம்; பால் நிறமும் ஆம்; பரஞ்சோதி தான் ஆம்;
தொத்து ஆம் அமரர்கணம் சூழ்ந்து போற்றத் தோன்றாது, என் உள்ளத்தின் உள்ளே நின்ற
கத்து ஆம்; அடியேற்குக் காணா காட்டும் கண்   ஆம்-கருகாவூர் எந்தைதானே.

2
வித்து , முளை , வேர் எனக் கருகாவூர் எந்தை வேண்டி நின்ற உருவத்தன் . தன்னை விரும்பும் பக்தியை உடைய அடியார்க்குத் தோழன் . செந்நிறமேயன்றிப் பால் நிறமும் உடையவன் . தான் மேம்பட்ட ஒளி உருவனாயிருந்தும் தன்னைத் தேவர் குழாம் சுற்றி நின்று துதிக்கவும் அதற்குக் காட்சி வழங்காது அடியேனுடைய உள்ளத்திலே மறைந்திருந்து அடியேன் முன் அறியாதனவற்றை எல்லாம் தெரிவிக்கும் கண்ணாக உள்ளவன் .

பூத் தான் ஆம்; பூவின் நிறத்தானும்(ம்) ஆம்;   பூக்குளால் வாசம் ஆய் மன்னி நின்ற
கோத் தான் ஆம்; கோல் வளையாள் கூறன் ஆகும்; கொண்ட சமயத்தார் தேவன் ஆகி,
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம்; என் நெஞ்சத்துள்ளே நின்று
காத்தான் ஆம், காலன் அடையா வண்ணம்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

3
பூவும் , பூவின் நிறமும் அதன் மணமுமாய் நிலைபெற்றிருக்கும் தலைவனாகிய கருகாவூர் எந்தைதிரண்ட வளைகளை அணிந்த பார்வதி பாகன் . ஒவ்வொரு சமயத்தாரும் வழிபடும் தேவராக உள்ளவன் . தன்னை வழிபடாதவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் மனக்கவலைகளையும் போக்காதவனாய் அடியேன் நெஞ்சில் இருந்து காலனால் அச்சம் நிகழா வண்ணம் காத்து வழிகாட்டும் கண்ணாக உள்ளான் .

இரவன் ஆம்; எல்லி நடம் ஆடி(ய்) ஆம்; எண்
திசைக்கும் தேவன் ஆம்; என் உளான் ஆம்;
அரவன் ஆம்; அல்லல் அறுப்பானும்(ம்) ஆம்;
ஆகாசமூர்த்தி ஆம்; ஆன் ஏறு ஏறும்
குரவன் ஆம்; கூற்றை உதைத்தான் தான் ஆம்;
கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
கரவன் ஆம்; காட்சிக்கு எளியானும்(ம்) ஆம்; கண்
ஆம்-கருகாவூர் எந்தைதானே.

4
கருகாவூர் எந்தை , இராப்பொழுதாகவும் , இரவில் கூத்தாடுபவனாகவும் எண்திசைக்கும் உரிய தேவனாகவும் , என் உள்ளத்தில் உறைபவனாகவும் , பாம்பினை அணிபவனாகவும் அடியார்களுடைய துன்பங்களைத் துடைப்பவனாகவும் , ஆகாயத்தையே வடிவாக உடையவனாகவும் , இடபத்தை இவரும் தலைவனாகவும் , கூற்றினை உதைத்தவனாகவும் தன் புகழ் கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர்களுக்கு என்றும் மறை பொருளாகவும் , அடியார்களின் மனக்கண்களுக்கு எளியவனாகவும் அவர்களுக்குக் கண்ணாகவும் உள்ளான் .

படைத்தான் ஆம்; பாரை இடந்தான் ஆகும்; பரிசு
ஒன்று அறியாமை நின்றான் தான் ஆம்;
உடைத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்
அழலால் மூட்டி ஒடுக்கி நின்று(வ்)
அடைத்தான் ஆம், சூலம் மழு; ஓர் நாகம்
   அசைத்தான் ஆம்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்;
கடைத்தான் ஆம், கள்ளம் அறுவார் நெஞ்சின்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

5
உலகைப்படைத்த பிரமனும் , அதனை ஊழி வெள்ளத்திலிருந்து பெயர்த்தெடுத்த திருமாலும் தன் தன்மையை அறிய இயலாதவாறு தீப் பிழம்பாய் நின்ற கருகாவூர் எந்தை , பகைவருடைய மும் மதில்களையும் ஒருசேரத் தீயினால் அழித்தவன் . சூலத்தையும் மழுவையும் ஏந்திப் பாம்பினை இடையில் இறுகக் கட்டிக் காளை மீது இவர்ந்தவன் . வஞ்சனை உடையவர் நெஞ்சத்தைக் கலக்கிக் தன்னை அறியும் அடியார் நெஞ்சில் வழிகாட்டுவோனாய் இருப்பவன் .
Go to top

மூலன் ஆம்; மூர்த்தி ஆம்; முன்னே தான் ஆம்;
மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்;
சீலன் ஆம்; சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன்
  ஆம்; செஞ்சுடர்க்கு ஓர் சோதி தான் ஆம்;
மாலன் ஆம்; மங்கை ஓர்பங்கன் ஆகும்; மன்று
ஆடி ஆம்; வானோர் தங்கட்கு எல்லாம்
காலன் ஆம்; காலனைக் காய்ந்தான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

6
முதற்பொருளாய் வடிவு கொள்வோனாய் , எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டவனாய் , என்றும் மூப்படையாத மேனியனாய் , முக்கண்ணினனாய் , நற்பண்புகளுக்கு இருப்பிடமாய்த் தன்னை அடைந்தவர்களின் துயர்தீர்க்கும் செல்வனாய் , கருகாவூர் எந்தை , சூரியனுக்கும் ஒளி வழங்குபவனாய்த்தன் திருமேனியில் ஒருபாகத்தைத் திருமாலுக்கும் மற்றொரு பாகத்தை உமாதேவிக்கும் வழங்குபவனாய் , மன்றங்களில் கூத்தாடுபவனாய் , தேவர்களுக்கு எல்லாம் இறுதிக்காலத்தை வரையறுக்கும் கூற்றுவனையும் கோபித்தவனாய் , அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன் .

அரை சேர் அரவன் ஆம்; ஆலத்தான் ஆம்;
ஆதிரை நாளான் ஆம்; அண்ட வானோர்
திரை சேர் திருமுடித் திங்களான் ஆம்; தீவினை
நாசன், என் சிந்தையான் ஆம்;
உரை சேர் உலகத்தார் உள்ளானும்(ம்) ஆம்;
  உமையாள் ஓர்பாகன் ஆம்; ஓத வேலிக்
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

7
கருகாவூர் எந்தை பாம்பை இடையில் அணிந்து விடத்தை உண்டு ( ஆல நிழலில் தங்கி ) ஆதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டு , ஆகாய கங்கை அலைவீசும் தன் அழகிய சடையில் பிறை சூடி , தீவினையைப் போக்கி என் உள்ளத்திலுள்ளான் . அவனே புகழ்சேரும் இவ்வுலகத்து மக்கள் உள்ளத்தில் இருப்பவனாய் , பார்வதிபாகனாய் , உலகுக்கு எல்லையாய்க் கரையமைந்த கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு , அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன் .

துடி ஆம்; துடியின் முழக்கம் தான் ஆம்;
சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்;
படிதான் ஆம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால்
நீற்றன் ஆம்; பரஞ்சோதிதான் ஆம்;
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும்;
கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
கடியான் ஆம்; காட்சிக்கு அரியான் ஆகும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைத்தானே.

8
கருகாவூர் எந்தை உடுக்கையாகவும் உடுக்கையின் முழக்கமாகிய ஒலிகளாகவும் , அவ்வொலியிலிருந்து தோன்றிய மொழிகளைப் பேசுவாருடைய சொற்களின் வாய்மை பொய்ம்மைகளைச் சோதிப்பவனாகவும் , நன்னெறியாகவும் , பாவத்தைப் போக்குபவனாகவும் , வெள்ளிய நீறணிந்த பரஞ்சோதியாகவும் கொடிய கூற்றுவனை உதைத்தவனாகவும் , உண்மை கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர் கிட்டுதற்கு அரியனாய் , அவர்களை ஒறுப்பவனாகவும் , அடியார்க்கு வழிகாட்டும் கண்ணாகவும் உள்ளான் .

விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம்;
விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்;
பட்டு, உருவ மால்யானைத் தோல் கீண்டான் ஆம்; பல பலவும் பாணி பயின்றான் தான் ஆம்;
எட்டு உருவ-மூர்த்தி ஆம், எண்தோளான் ஆம்;
என் உச்சி மேலான் ஆம்; எம்பிரான் ஆம்;
கட்டு உருவம் கடியானைக் காய்ந்தான் ஆகும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

9
கருகாவூர் எந்தை செந்நிற ஒளிவீசும் சோதியனாய் , தேவர்களும் அறியாத நிலையினனாய் , தன்னால் கொல்லப் பட்ட யானைத் தோலை உரித்துப் போர்த்தவனாய் , பலபலதாளத்திற்கு ஏற்பக் கூத்தாடுபவனாய் , அட்டமூர்த்தியாய் , எண்தோளனாய் , என் தலையின் உச்சி மேலானாம் எம் தலைவனாய் , இளைய வடிவினை உடைய மன்மதனைக் கோபித்தவனாய் , அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான் .

பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான் ஆகி, உள்
இருந்து, அங்கு உள்-நோய் களைவான் தானாய்,
செறுத்திருந்த மும் மதில்கள் மூன்றும் வேவச் சிலை
குனியத் தீ மூட்டும் திண்மையான் ஆம்;
அறுத்திருந்த கையான் ஆம், அம் தார் அல்லி
இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கி;
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

10
தன்னை இடபமாய்த் தாங்கிய கருட வாகனனாகிய திருமாலுடைய உள்ளத்தே பொருந்தி அவன் உள்ளக் கவலையைப் போக்கிய கருகாவூர் எந்தை , தன்னைப் பகைத் தோருடைய மும்மதில்களும் ஒன்றும் எஞ்சாமல் வில்லை வளைத்துத் தீ மூட்டி அழித்தவன் . தாமரையில் இருந்த பிரமனுடைய ஐந்தாந் தலையை அவன் செருக்கினை நோக்கி அறுத்த கையனாவான் . நீல கண்டனாகிய அப்பெருமான் அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான் .
Go to top

ஒறுத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்
அழலை மாட்டி; உடனே வைத்து(வ்)
இறுத்தான் ஆம், எண்ணான் முடிகள் பத்தும்;
  இசைந்தான் ஆம்; இன் இசைகள் கேட்டான் ஆகும்;
அறுத்தான் ஆம், அஞ்சும் அடக்கி; அங்கே
ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்;
கறுத்தான் ஆம், காலனைக் காலால் வீழ;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

11
கருகாவூர் எந்தை பகைவருடைய மும்மதில்களையும் தீ மூட்டி அழித்தவன் . தன்னை மதியாத இராவணனுடைய தலைகள் பத்தினையும் நசுக்கி அவன் இசையைக்கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன் . பொறிவாயில் ஐந்தவித்த அப்பெருமான் , பரமாகாயத்திலுள்ள வீட்டுலகை இருப்பிடமாக உடையவன் . கூற்றுவனைக் கீழே விழுமாறு தன் காலால் கோபித்து உதைத்தவன் . அவன் அடியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கருகாவூர்
3.046   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முத்து இலங்கு முறுவல்(ல்) உமை
Tune - கௌசிகம்   (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.015   திருநாவுக்கரசர்   தேவாரம்   குருகு ஆம்; வயிரம் ஆம்;
Tune - திருத்தாண்டகம்   (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000