ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்; படை உடையர்; அம் பொன்தோள் மேல் நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம் பலி கொள்வர்; மொய்த்த பூதம் கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோள் தால வேடத்தர்; கொள்கை சொல்லின், ஈறும் நடுவும் முதலும் ஆவார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.
|
1
|
இடைமருதூரினை விரும்பித் திருத்தலமாகக் கொண்ட ஈசனார் சடையில் கங்கையை அணிந்து , உள்ளங்கையில் தீயினை ஏற்றவர் . அழகர் . படைக்கலங்களை ஏந்திய அழகிய பொலிவு உடைய தோள் மீது , நீறு பூசிக் காளையை இவர்ந்து நாளும் பிச்சை ஏற்பவர் . தம்மைச் சுற்றியுள்ள பூதங்களால் தம் பண்புகள் பாராட்டப் பெறுபவர் . கோவணம் ஒன்றே உடையவர் . கையிலே உண்கலத்தை ஏந்திய வேடத்தவர் . இவ்வுலகிற்குத் தோற்றம் நிலை அழிவு ஆகியவற்றைச் செய்யும் இயல்பினர் . | |
மங்குல் மதி வைப்பர்; வான நாடர்; மடமான் இடம் உடையர்; மாதராளைப் பங்கில் மிக வைப்பர்; பால் போல் நீற்றர்; பளிக்குவடம் புனைவர்; பாவநாசர்; சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர்; சரிதை பல உடையர்; தன்மை சொல்லின், எங்கும் பலி திரிவர்; என் உள் நீங்கார்-இடைமருது மேவி இடம்கொண்டாரே.
|
2
|
இடைமருது மேவிய இடங்கொண்ட பெருமானார் வானத்தில் இயங்கும் பிறையைச் சடையில் வைத்தவர் . தேவருலகிற்கும் உரியவர் . பார்வதியை இடப்பாகமாக உடையவர் . மான்குட்டியை இடக்கரத்தில் வைத்திருப்பவர் . பால்போன்ற திருநீற்றை அணிந்து , படிக மணிமாலை பூண்டு , அடியார் பாவங்களைப் போக்குபவர் . சங்குகள் அலைகளில் உலவும் சாய்க்காடு என்ற தலத்தை ஆள்பவர் . பல அரிய செயல்களை உடையவர் . எங்கும் பிச்சைக்காகத் திரியும் இயல்பினர் . என் உள்ளத்தை விடுத்து என்றும் நீங்காதிருப்பவர் . | |
ஆல நிழல் இருப்பர்; ஆகாயத்தர்; அரு வரையின் உச்சியர்; ஆணர்; பெண்ணர்; காலம்பல கழித்தார்; கறை சேர் கண்டர்; கருத்துக்குச் சேயார், தாம், காணாதார்க்கு; கோலம்பல உடையர்; கொல்லை ஏற்றர்; கொடு மழுவர்; கோழம்பம் மேய ஈசர்; ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார்-இடைமருது மேவி இடம்கொண்டாரே.
|
3
|
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஆலமர நிழலிலும் ஆகாயத்திலும் மலை உச்சியிலும் இருப்பவர் . ஒரே உருவில் ஆணும் பெண்ணுமாக இருப்பவர் . காலங்களுக்கு அப்பாற் பட்டவர் . நீலகண்டர் . தம்மை அறியாதார் உள்ளத்துக்குத் தொலைவில் இருப்பவர் . பல வேடங்களை உடையவர் . முல்லை நிலத்துக்கு உரிய திருமாலைக் காளைவாகனமாக உடையவர் . கொடிய மழுப்படை ஏந்தியவர் . கோழம்பம் , ஏலக்காய் மணம்கமழும் ஈங்கோய் மலை இவற்றை விரும்பி நீங்காதிருப்பவர் . | |
தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர்; திரு ஆரூர் என்றும் உள்ளார்; வாசம், மலரின்கண்; மான்தோல் போர்ப்பர்; மருவும் கரி உரியர்; வஞ்சக் கள்வர்; நேசர், அடைந்தார்க்கு; அடையாதார்க்கு நிட்டுரவர்; கட்டங்கர்; நினைவார்க்கு என்றும் ஈசர்; புனல் பொன்னித்தீர்த்தர்-வாய்த்த இடைமருது மேவி இடம் கொண்டாரே.
|
4
|
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஒளியுடையவர் , தம் அருள் திறங்களைத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் சென்றடையும் செல்வர் . திருவாரூரில் என்றும் இருப்பவர் . பூவிலுள்ள மணம்போல உலகங்கள் எங்கும் பரவியிருப்பவர் . மான் தோலைப் போர்த்தியவர் . யானைத் தோலையும் உடையவர் . எவ்விடத்தும் உருக்காட்டாது மறைந்தே இருக்கும் கள்வர் . அடியார்களுக்கு அன்பர் . தம் அடிகளை அடையாதவர்களுக்குக் கொடியவர் . கட்டங்கப் படையுடையவர் . தம்மை விருப்புற்று நினைப்பவரை என்றும் தாங்குபவர் . காவிரியாகிய தீர்த்தத்தை உடையவர் . | |
கரப்பர், கரிய மனக் கள்வர்க்கு; உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் துரப்பர்; தொடு கடலின் நஞ்சம் உண்பர்; தூய மறை மொழியார்; தீயால் ஒட்டி நிரப்பர்; புரம் மூன்றும் நீறு செய்வர்; நீள் சடையர்; பாய்விடை கொண்டு எங்கும் ஐயம் இரப்பர்; எமை ஆள்வர்; என் உள் நீங்கார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.
|
5
|
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் வஞ்சனை மனத்தை உடைய கள்வர்க்குத் தம்மை மறைத்துக் கொள்பவர் . உள்ளத்தில் வஞ்சனையின்றித் தம்மை விருப்புற்று நினைப் பவருடைய பாவங்களை விரட்டுபவர் . கடல் விடத்தை உண்டவர் . தூய வேதங்களை ஓதுபவர் . அறிவில்லாத அசுரர்களின் மும்மதில் களையும் தீயிட்டுச் சாம்பலாக்கியவர் . நீண்ட சடை முடியர் . விரைந்து செல்லும் காளையை இவர்ந்து எங்கும் பிச்சை யெடுப்பவர் . எங்களை ஆள்பவர் . என் உள்ளத்தைவிட்டு நீங்காது இருப்பவர் . | |
| Go to top |
கொடி ஆர் இடபத்தர்; கூத்தும் ஆடி, குளிர் கொன்றை மேல் வைப்பர்; கோலம் ஆர்ந்த பொடி ஆரும் மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூண நூலர்; அடியார் குடி ஆவர்; அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார்; அமரர் போற்ற இடி ஆர் களிற்று உரியர்-எவரும் போற்ற இடைமருது மேவி இடம் கொண்டாரே.
|
6
|
எல்லோரும் போற்றுமாறு இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் இடபக்கொடியினராய்க் கூத்தாடுபவராய்க் கொன்றை சூடியவராய் , அழகிய நீறு பூசிய மேனியராய்த் திருநீற்றுப் பையினை உடையவராய்ப் புலித்தோலை உடுத்தவராய்ச் சீறும் பாம்பினராய்ப் பூணூலை அணிந்தவராய் அடியவர்களுக்கு மிக அணுகிய உறவினராய்க் கருணையுடையவராய் , வேள்வித் தீயில் ஆகுதியிடும் போது சொல்லப்படும் மந்திரவடிவினராய்த் தேவர் போற்றுமாறு பிளிறிக்கொண்டு வந்த களிற்றைக்கொன்று அதன் தோலைப் போர்த்தியவராவர் . | |
பச்சைநிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்; பிழைஎல்லாம் நீக்கி ஆள்வர்; கச்சைக் கதம் நாகம் பூண்ட தோளர்; கலன் ஒன்று கை ஏந்தி, இல்லம் தோறும் பிச்சைக் கொள நுகர்வர்; பெரியர், சால; பிறங்கு சடைமுடியர்; பேணும் தொண்டர் இச்சை மிக அறிவர்; என்றும் உள்ளார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.
|
7
|
என்றும் உள்ளாராய் இடைமருதுமேவி இடங் கொண்ட எம்பெருமானார் பார்வதிக்குரிய தம் இடப்பாகத்தே பச்சை நிறம் உடையவராய் . மிக இளையராகவும் மிகப் பழையராகவும் காட்சி வழங்கி , அடியார்களை அவர்களுடைய பிழைகளைப் போக்கி ஆட்கொள்பவர் . கோபம் கொள்ளும் பாம்பினைக் கச்சையாகப் பூண்ட தோள்களை உடையவர் . கையில் மண்டையோடாகிய பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுத்து உண்பவர் . ஆயினும் உண்மை நிலையினில் மிகவும் பெரியவர் . விளங்குகின்ற சடைமுடியை உடையவர் . தம்மை விரும்பும் அடியார் களுடைய விருப்பத்தை மிகவும் அறிந்தவர் . | |
கா ஆர் சடைமுடியர்; காரோணத்தர்; கயிலாயம் மன்னினார்; பன்னும் இன்சொல் பா ஆர் பொருளாளர்; வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார்; பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர்; புரம் மூன்றும் ஒள் அழலாக் காயத் தொட்ட ஏ ஆர் சிலை மலையர்; எங்கும், தாமே;-இடைமருது மேவி இடம் கொண்டாரே.
|
8
|
இடைமருது மேவி இடங்கொண்டு எங்கும் தாமேயாகப் பரவியிருக்கின்ற பெருமானார் , சோலை போலப் பரவிய சடையினராய் நாகை குடந்தைக் காரோணங்களிலும் , கயிலாயத்திலும் , தங்குபவராய்ப் பூக்கள் நிரம்பிய புனலால் சூழப்பட்ட புன்கூரில் வாழ்பவராய் , இனிய சொற்களாலாகிய பாடல்களின் பொருளை ஆளுதல் உடையவராய் , வாள் போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய் , முப்புரங்களையும் தீக்கொளுவுமாறு கொண்ட அம்பொடு பொருந்திய மலையாகிய வில்லை உடையவராய் விளங்குகின்றார் . | |
புரிந்தார், நடத்தின்கண்; பூதநாதர்; பொழில் ஆரூர் புக்கு உறைவர்; போந்து தம்மில் பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார், ஒரு நாளும்; பேணு காட்டில் எரிந்தார் அனல்,-உகப்பர்,-ஏழில் ஓசை; எவ் இடத்தும் தாமே என்று ஏத்துவார் பால் இருந்தார்-இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம் கொண்டாரே.
|
9
|
இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் கூத்தில் விருப்பம் உடையவர் . பூதங்களின் தலைவர் . தம் இருப்பிடமாகிய வீட்டுலகை விடுத்துப் போந்து சோலைகள் சூழ்ந்த ஆரூரில் புகுந்து தங்குபவர் . அகன்ற வாயை உடைய பேய்களை என்றும் பிரியாதவராய்த் தாம் விரும்பும் சுடுகாட்டில் எரிக்கப்படுபவருடைய தீயினை விரும்புபவர் . எழுவகையில் அமைந்த இசையால் தம்மையே பரம்பொருளாகத் துதிப்பவர்கள் உள்ள இடங்களிலெல்லாம் தேவர்களும் போற்றுமாறு என்றும் நிலையாக இருப்பவராவர் . | |
விட்டு இலங்கு மா மழுவர்; வேலை நஞ்சர்; விடங்கர்; விரிபுனல் சூழ் வெண்காட்டு உள்ளார்; மட்டு இலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர்; மழபாடியுள் உறைவர்; மாகாளத்தர்; சிட்டு இலங்கு வல் அரக்கர் கோனை அன்று செழு முடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால் இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார், வென்றி;- இடைமருது மேவி இடம் கொண்டாரே.
|
10
|
இடைமருது மேவி இடம் கொண்ட பெருமானார் ஒளிவீசும் பெரிய மழுப்படையை உடையவர் . கடல் நஞ்சுண்டவர் . அழகர் . நீர்வளம் மிக்க வெண்காட்டில் உள்ளவர் . தேன் பொருந்திய மாலையை அணிந்த மார்பில் திருநீறு பூசியவர் . மழபாடியிலும் இரும்பை , அம்பர் , உஞ்சைனி என்ற மாகாளங்களிலும் உறைபவர் . பெருமை விளங்கும் வலிய அரக்கர்கோனாகிய இராவணனை அவன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற போது சிறந்த தலைகளும் இருபது தோள்களும் வருந்துமாறு திருவடியால் நசுக்கிப் பின் அவன் பக்கல் இரக்கம் கொண்டு அவனுக்குப்பல வெற்றிகளையும் வழங்கியவர் . | |
| Go to top |