சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்; தாழ் சடையான் காண்; சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண்; அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண்; அவ் உருவில் அவ் உருவம் ஆயினான் காண்; பந்தரத்து நால் மறைகள் பாடினான் காண்; பலபலவும் பாணி பயில்கின்றான் காண்; மந்திரத்து மறை பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
|
1
|
பெரிய மேலைக் கடலால் ஒருபுறம் சூழப்பட்ட கோகரணத்தில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் தாழ்ந்த சடையில் பிறையையும் கங்கையையும் அணிந்தவனாய் , அடியார்களுக்கு அமுதாய் வானத்தில் உலவிய அசுரரின் முப்புரங்களையும் அழித்தவனாய் , அழகிய உருவங்களின் மேம்பட்ட அழகுடைய உருவினனாய் , இசைவகைகளை உடைய நான்கு வேதங்களையும் பாடினவனாய்த் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய் , மந்திரத்தை உடைய வேதமாகவும் உள்ளான் . | |
தந்த வ(அ)த்தன் தன் தலையைத் தாங்கினான் காண்; சாரணன் காண்; சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண்; கெந்தத்தன் காண்; கெடில வீரட்டன் காண்; கேடு இலி காண்; கெடுப்பார் மற்று இல்லாதான் காண்; வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண்; வீரன் காண்; வியன் கயிலை மேவினான் காண்; வந்து ஒத்த நெடுமாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
|
2
|
மேற்குக் கடலை அடுத்த கோகரணப் பெருமான் உலகைப் படைத்த பிரமனது மண்டையோட்டை ஏந்தி எங்கும் சஞ்சரிப்பவனாய் , அடியவர்களுக்கு அமுதமாய் , மலரில் மணம்போல எங்கும் பரவியவனாய் , அதிகை வீரட்டனாய்த் தான் என்றும் அழிவில்லாதவனாய்த் தன்னை அழிப்பாரும் இல்லாதவனாய்த் திருநீறு பூசியவனாய்த் தவமாகிய பெருமிதம் உடையவனாய் , பரந்த கயிலாயத்தை விரும்பி உறைபவனாய்த் தன்னிடத்துத் தோன்றித் தன் கருத்துக்கு ஏற்பக் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலாலும் உள்ளபடி அறிய ஒண்ணாதவனாய் , உள்ளான் . | |
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண்; தாழ் சடை எம்பெருமான் காண்; தக்கார்க்கு உள்ள பொன் உருவச் சோதி; புனல் ஆடினான் காண்; புராணன் காண்; பூதங்கள் ஆயினான் காண்; மின் உருவ நுண் இடையாள் பாகத்தான் காண்; வேழத்தின் உரி வெருவப் போர்த்தான் தான் காண்; மன் உரு ஆய் மாமறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
|
3
|
மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் தன் உருவையார்க்கும் எதிர்ப்படச் செய்யாதவனாய்த் தாழ் சடையனாய் , அடியார்களுக்கு அநுபவப் பொருளாகிய பொற்சோதியாய் , கங்கா தரனாய் , பழையோனாய் , ஐம்பூதங்களாய் , மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகனாய் , யானையின் தோலை உமாதேவி அஞ்சுமாறு போர்த்தவனாய் , என்றும் நிலை பெற்ற உருவமுடையவனாய் , வேதங்களை ஓதிக்கொண்டு இருப்பவன் ஆவான் . | |
ஆறு ஏறு செஞ்சடை எம் ஆரூரன் காண்; அன்பன் காண்; அணி பழனம் மேயான் தான் காண்; நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண்; நிருபன் காண்; நிகர் ஒன்றும் இல்லாதான் காண்; கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண்; கொக்கரையான் காண்; குழு நல் பூதத்தான் காண்; மாறு ஆய மதில்மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
|
4
|
மாகடல் சூழ்கோகரணம் மன்னிய பெருமான் கங்கையைச் சடையில் சூடிய ஆரூரனாய்ப் பழனத்தில் உறைபவனாய் , அன்பனாய்த் திருநீறணிந்து ஒளிவீசும் மேனியனாய் , தலைவனாய் , ஒப்பற்றவனாய் , பிளவு தோன்றுதற்குக் கருவியாகிய மழுப்படையினனாய் , கொக்கரை என்ற வாச்சியத்தை உடையவனாய் , மேம்பட்ட பூதக்கூட்டத்தை உடையனாய் , பகையாகச் செயற்பட்ட மும்மதிலையும் அழித்து மறையச் செய்தவனாவான் . | |
சென்று அச் சிலை வாங்கிச் சேர்வித்தான் காண்; தியம்பகன் காண்; திரி புரங்கள் மூன்றும் பொன்றப் பொடி ஆக நோக்கினான் காண்; பூதன் காண்; பூதப்படையாளீ காண்; அன்று அப் பொழுதே அருள் செய்தான் காண்; அனல் ஆடி காண்; அடியார்க்கு அமுது ஆனான் காண்; மன்றல்-மணம் கமழும் வார்சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
|
5
|
மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் திரிபுரங்களை நோக்கிச் சென்று மேரு மலையாகிய வில்லை வளைத்துத் தீயாகிய அம்பைச் செலுத்தி வானத்தில் திரிந்த மும்மதில்களும் சாம்பலாகுமாறு செய்தவனாய் , உயிர்களை ஆளாக உடையவனாய் , பூதப் படை உடையவனாய் , அடியார்களுக்கு அன்றன்று அவ்வப்பொழுதே அருள் செய்தவனாய்த் தீயிடையே கூத்தாடு பவனாய் , அடியவர்களுக்கு அமுதானவனாய் , நறுமணம் கமழும் நீண்ட சடையை உடையவனாய் உள்ளான் . | |
| Go to top |
பிறையோடு பெண் ஒருபால் வைத்தான் தான் காண்; பேரவன் காண்; பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண்; கறை ஓடு மணிமிடற்றுக் காபாலீ காண்; கட்டங்கன் காண், கையில் கபாலம் ஏந்திப் பறையோடு பல்கீதம் பாடினான் காண்; ஆடினான் காண், பாணி ஆக நின்று; மறையோடு மா கீதம் கேட்டான் தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
|
6
|
மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் சடைமுடியாகிய ஓரிடத்தில் பிறையையும் கங்கையையும் சேர்த்து வைத்த புகழோனாய் , பிறப்பில்லாதவனாய் , நஞ்சுபொருந்திய நீல கண்டனாய்க் காபாலக் கூத்து ஆடுபவனாய்க் கட்டங்கம் என்ற படை உடையவனாய்க் கையில் மண்டையோட்டை ஏந்திப் பறை ஒலிக்கப் பல பாடல்கள் பாடியவனாய் , தாளத்திற்கு ஏற்ப ஆடியவனாய் , அடியார்கள் ஓதும் வேத ஒலியையும் பாடும் பாடல் இசையையும் செவிமடுத்தவனாவன் . | |
மின் அளந்த மேல்முகட்டின் மேல் உற்றான் காண்; விண்ணவர் தம் பெருமான் காண்; மேவில் எங்கும் முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண்; மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண்; எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண்; ஏ வலன் காண்; இமையோர்கள் ஏத்த நின்று, மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
|
7
|
மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் ஒளிவீசும் அண்டச்சுவரின் மேலும் பொருந்தியவனாய்த் தேவர்கள் தலைவனாய் , எவ்விடத்தையும் தம் தொழிலுக்கு உட்படுத்திய மூவருக்கும் காரணனாய் , முத்தலைச்சூலம் ஏந்திய அழகினனாய் , என் எண்ணத்தை அளந்து என் உள்ளத்தில் விரும்பி உறைபவனாய் , அம்பு எய்தலில் வல்லவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு இருந்து , உலகை அளந்த திருமாலால் அறியப்பட முடியாத வியக்கத்தக்க நிலை உடையவனாக உள்ளான் . | |
பின்னுசடை மேல் பிறை சூடினான் காண்; பேர் அருளன் காண்; பிறப்பு ஒன்று இல்லாதான் காண்; முன்னி உலகுக்கு முன் ஆனான் காண்; மூ எயிலும் செற்று உகந்த முதல்வன் தான் காண்; இன்ன உரு என்று அறிவு ஒணாதான் தான் காண்; ஏழ் கடலும் ஏழ் உலகும் ஆயினான் காண்; மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
|
8
|
மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் இணைத்த சடைமீது பிறை சூடிப் பேரருளாளனாய்ப் பிறப்பிலியாய் , உலகுக்குக் காரணனாய் , மும்மதிலும் அழித்து மகிழ்ந்த முதல்வனாய்த் தன் உண்மை உருவை மற்றையார் அறிய இயலாத இயல்பினனாய் , ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயவனாய்ப் பார்வதி பாகனாய் உள்ளான் . | |
வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ் அழலன் காண்; வீரன் காண்; வீரட்டம் மேவினான் காண்; பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண்; பூதன் காண்; பூதப் படையினான் காண்; கட்டக் கடுவினைகள் காத்து ஆள்வான் காண்; கண்டன் காண்; வண்டு உண்ட கொன்றையான் காண்; வட்ட மதிப்பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
|
9
|
மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் வீணாக அடியவர்களை உரத்தகுரலில் இழித்துப் பேசுபவருக்குக் கொடிய நெருப்புப் போன்றவனாய்த் தவத்தின் பெருமிதம் உடையவனாய் , வீரட்டத் தலங்களில் விரும்பியிருப்பவனாய் , விரைவாக மன்மதனைச் சாம்பலாகுமாறு தீவிழித்தவனாய் , ஐம்பூத வடிவினனாய்ப் பூதப் படையினனாய் , தீங்குதரும் கொடிய வினைகள் தாக்காதவாறு காத்து அடியவர்களை ஆட்கொள்பவனாய் , கற்கண்டு போன்ற இனியவனாய் , வண்டு தேன் உண்ட கொன்றையைச் சூடியவனாய் , பிறை சூடியாய் உள்ளான் . | |
கையால் கயிலை எடுத்தான் தன்னைக் கால் விரலால்-தோள் நெரிய ஊன்றினான் காண்; மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண்; பொய்யர் மனத்துப் புறம்பு ஆவான் காண்; போர்ப் படையான் காண்; பொருவார் இல்லாதான் காண்; மை கொள் மணிமிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.
|
10
|
மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் கைகளால் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனை , கால் விரலால் தோள்கள் நெரியுமாறு அழுத்தியவனாய் , தன் உடம்பில் உள்ள நரம்புகளை வீணை நரம்புகளாகக் கொண்டு இன்னிசை எழுப்பி , தன்னைச் செவிமடுக்கச் செய்த இராவணனுக்கு அருள்களை விரும்பிக் கொடுத்தவனாய்ப் பொய்யருடைய உள்ளங்களுக்கு அப்பாற்பட்டவனாய் , போரிடுவதற்குரிய படைக்கலன் ஏந்தியவனாய் , அவற்றால் போர் செய்யப்படுவார் ஒருவரும் இல்லாதானாய் , நீலகண்டமும் , நீண்ட சடையும் உடையவனாய் , அடியார்கள் அகக் கண்ணுக்குத் தோற்றம் வழங்குகின்றான் . | |
| Go to top |