சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.063   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவானைக்கா - திருத்தாண்டகம் அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு சம்புகேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=4IjVEJV0c6Q   Add audio link Add Audio

முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி தன்னை; மூவாத சிந்தையே, மனமே, வாக்கே,
தன் ஆனையாய் பண்ணி ஏறினானை; சார்தற்கு அரியானை; தாதை தன்னை;
என் ஆனைக்கன்றினை; என் ஈசன் தன்னை; எறி நீர்த் திரை உகளும் காவிரீ சூழ்
தென் ஆனைக்காவானை; தேனை; பாலை;   செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

1
முன் ஒரு காலத்தில் யானையைக் கொன்று , அதன் தோலைப் போர்த்தியவனாய் , ஞானம் மிகப் பெறாத அடியேனுடைய சிந்தை மனம் வாக்கு இவற்றைத்தான் இவரும் யானைகளாகக் கொண்டு இவர்ந்தானாய் , அடியார்க்கு அல்லது மற்றவருக்குக் கிட்டுதற்கு அரியனாய் , எல்லோருக்கும் தந்தையாய் , என் ஆனைக் கன்று போன்று எனக்கு இனியவனாய் , என்னை அடக்கி ஆள்பவனாய் , அலைகள் மோதும் காவிரியை அடுத்த அழகிய ஆனைக்காவில் தேனாகவும் பாலாகவும் இனியனாய் , நீர்த்திரள் வடிவாக அமைந்த பெருமானை நான் தலைப்பட்டேன் .

மருந்தானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வளர் மதி அம் சடையானை, மகிழ்ந்து என் உள்ளத்து
இருந்தானை, இறப்பு இலியை, பிறப்பு இலானை, இமையவர் தம் பெருமானை, உமையாள் அஞ்சக்
கருந் தான-மதகளிற்றின் உரி போர்த்தானை, கன மழுவாள் படையானை, பலி கொண்டு ஊர் ஊர்
திரிந்தானை, திரு ஆனைக்கா உளானை,   செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

2
அமுதமாக உள்ளவனாய் , தியானிப்பவர் மனத்து இருப்பவனாய் , பிறையை அணிந்த சடையனாய் , மகிழ்ந்து என் உள்ளத்து இருப்பானாய் , பிறப்பு இறப்பு இல்லாதவனாய் , தேவர்கள் தலைவனாய் , பார்வதி அஞ்சுமாறு கரிய மத நீரை உடைய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனாய் , வலிய மழுப்படையை உடையவனாய் , ஊர் ஊராய்ப் பிச்சை எடுத்துத் திரிவானாய்த் திருவானைக்காவில் உள்ள நீர்த்திரள் ` வடிவாக அமைந்த பெருமானைத் தலைப்பட்டேன் .

முற்றாத வெண்திங்கள் கண்ணியானை, முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும்
உற்றானை, பல் உயிர்க்கும் துணை ஆனானை, ஓங்காரத்து உள்பொருளை, உலகம் எல்லாம்
பெற்றானை, பின் இறக்கம் செய்வான் தன்னை, பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும்
செற்றானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

3
பிறையை முடிமாலையாக அணிந்தவனாய் , கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்க்கு அமுதம் வழங்கும் உறவினனாய் , பல உயிர்களுக்கும் துணையாவானாய் , ஓங்காரத்தின் உட்பொருளாய் , உலகங்களை எல்லாம் தோற்றுவித்துப்பின் ஒடுக்குபவனாய்த் தன்னைத் தலைவன் என்று போற்றாத அசுரர்களின் முப் புரங்களையும் அழித்தவனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

கார் ஆரும் கறை மிடற்று எம் பெருமான் தன்னை, காதில் வெண் குழையானை, கமழ் பூங்கொன்றைத்-
தாரானை, புலி அதளின் ஆடையானை, தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞானப்
பேரானை, மணி ஆரம் மார்பினானை, பிஞ்ஞகனை, தெய்வ நால்மறைகள் பூண்ட
தேரானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

4
கருமை நிறைந்த நீலகண்டனாய்க் காதில் வெண்ணிறக்குழையை அணிந்தவனாய் , நறுமணம் கமழும் கொன்றைப் பூ மாலையனாய் , புலித்தோலை ஆடையாக அணிந்தவனாய் , ஞானமே வடிவாகிய பொருளாய் உள்ளவனாய் , படிகமணிமாலையை மார்பில் அணிபவனாய் , உலகங்களை அழிப்பவனாய் , தெய்வத் தன்மை பொருந்திய நான்கு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவனாய் , திருவானைக்காவில் உறைபவனாய் , உள்ள செழு நீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

பொய் ஏதும் இல்லாத மெய்யன் தன்னை, புண்ணியனை, நண்ணாதார் புரம் நீறு ஆக
எய்தானை, செய் தவத்தின் மிக்கான் தன்னை, ஏறு அமரும் பெருமானை, இடம் மான் ஏந்து
கையானை, கங்காள வேடத்தானை, கட்டங்கக் கொடியானை, கனல் போல் மேனிச்
செய்யானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

5
பொய்க்கலப்பற்ற மெய்ம்மை வடிவினனாய் , புண்ணியனாய் , பகைவர் மும்மதில்களும் சாம்பலாகுமாறு அம்பு செலுத்தியவனாய் , தவத்தில் மேம்பட்டவனாய் , காளை வாகனனாய் , மானை ஏந்தும் இடக்கையனாய் , கங்காள வேடத்தானாய் , கட்டங்கம் என்ற படையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உடையவனாய் , தீயைப்போன்று சிவந்த மேனியனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .
Go to top

கலையானை, பரசு தர பாணியானை, கன வயிரத்திரளானை, மணி மாணிக்க-
மலையானை, என் தலையின் உச்சியானை, வார்தரு புன்சடையானை, மயானம் மன்னும்
நிலையானை, வரி அரவு நாணாக் கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேருச்-
சிலையானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

6
கலையையும் , மழுப்படையையும் ஏந்திய கைகளை உடையவனாய் , பெரிய வயிரத்திரளாய் , மாணிக்கமலையாய் , என் தலையின்மேல் உள்ளானாய் , நீண்டசெஞ்சடையனாய் , சுடுகாட்டில் நிலையாக இருப்பவனாய் , வாசுகி என்ற பாம்பை நாணாகக் கோத்து , தன்னை விருப்புற்று நினையாத அசுரர்களின் மும்மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு , வளைக்கப்பட்ட மேருமலையாகிய வில்லினை உடையவனாய் , திருவானைக்காவில் , உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

ஆதியனை, எறி மணியின் ஓசையானை, அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க
சோதியனை, தூ மறையின் பொருளான் தன்னை,
சுரும்பு அமரும் மலர்க்கொன்றை தொல்-நூல் பூண்ட
வேதியனை, அறம் உரைத்த பட்டன் தன்னை, விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றைச்
சேதியனை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

7
எல்லோருக்கும் முற்பட்டவனாய் , மணியின் ஓசை போல எங்கும் பரந்தவனாய் , உலகில் உள்ளவரால் அறிய முடியாதபடி உலகுக்கு அப்பாலும் பரவிய சோதி வடிவினனாய் , வேதத்தின் விழுமிய பொருளாய் , வண்டுகள் தங்கும் கொன்றை மலர் , எல்லோருக்கும் முற்படத் தான் பூண்ட பூணூல் இவற்றால் விளங்கும் வேதியனாய் , அறத்தை உபதேசித்த ஆசிரியனாய் , தாமரையில் விளங்கும் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றை நீக்கியவனாய் , திருவானைக்காவில் உறைபவனாய் , உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

மகிழ்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பானை, பூத கணப்படையானை, புறங்காட்டு ஆடல்
உகந்தானை, பிச்சையே இச்சிப்பானை, ஒண் பவளத்திரளை, என் உள்ளத்துள்ளே
திகழ்ந்தானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

8
கச்சி ஏகம்பத்தை விரும்பி உறைபவனாய் , தன் திருவடிகளை மறவாது விருப்புற்று நினைத்து வாழ்த்தி உயர்த்திப் புகழ்ந்த அடியவர்களைப் பொன்னுலகு எனப்படும் தேவர் உலகை ஆளச் செய்பவனாய் , பூதகணமாகிய படையை உடையவனாய் , சுடு காட்டில் கூத்தாடுதலை விரும்புபவனாய் , பிச்சை ஏற்றலை ஆசைப் படுபவனாய் , பவளத்திரள்போல என் உள்ளத்தில் விளங்குபவனாய் , திருவானைக்காவுள் உறைபவனாய் , உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

நசையானை; நால்வேதத்து அப்பாலானை; நல்குரவும், தீப்பிணி நோய், காப்பான் தன்னை;
இசையானை; எண் இறந்த குணத்தான் தன்னை; இடை மருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின்
மிசையானை; விரிகடலும், மண்ணும், விண்ணும், மிகு தீயும், புனல், எறி காற்று, ஆகி எட்டுத்-
திசையானை; திரு ஆனைக்கா உளானை; செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

9
எல்லோருடைய விருப்பத்திற்கும் உரியவனாய் , நான்கு வேதங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் , வறுமை மனநோய்கள் உடல்நோய்கள் ஆகியவற்றை நீக்குபவனாய்ப் புகழுக்கு உரியவனாய் , எல்லையற்ற நற்குணங்களுக்கு இருப்பிடமாயவனாய் , இடை மருதும் ஈங்கோயும் உறைவிடமாக உடையவனாய் , காளைவாகனனாய் , விரிந்த கடலும் ஐம்பூதங்களும் எட்டுத் திசைகளும் ஆகியவனாய் , திருவானைக்காவுள் உறைவானாய் , உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

பார்த்தானை, காமன் உடல் பொடிஆய் வீழ; பண்டு அயன், மால், இருவர்க்கும் அறியா வண்ணம்
சீர்த்தானை; செந்தழல் போல் உருவினானை; தேவர்கள்   தம் பெருமானை; திறம் உன்னாதே
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து, அவன் தன் இடர் அப்போதே
தீர்த்தானை; திரு ஆனைக்கா உளானை; செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

10
மன்மதன் உடல் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவனாய் , ஒருகாலத்தில் பிரமன் திருமால் இருவரும் தன்னை முடி அடி அறிய முடியாதவாறு தீப்பிழம்பாய் நின்றவனாய் , தேவர்கள் தலைவனாய் , தன்னுடைய வலிமையை நினைத்துப்பாராமல் ஆரவாரித்து ஓடிவந்து , கயிலை மலையை எடுத்த இராவணனுடைய ஆற்றலைப் போக்கிப்பின் அவன் துயரை அப்பொழுதே தீர்த்தானாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவானைக்கா
2.023   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மழை ஆர் மிடறா! மழுவாள்
Tune - இந்தளம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
3.053   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வானைக் காவல் வெண்மதி மல்கு
Tune - கௌசிகம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
3.109   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மண் அது உண்ட(அ)ரி மலரோன்
Tune - பழம்பஞ்சுரம்   (திருவானைக்கா )
5.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
Tune - திருக்குறுந்தொகை   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
6.062   திருநாவுக்கரசர்   தேவாரம்   எத் தாயர், எத் தந்தை,
Tune - திருத்தாண்டகம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
6.063   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி
Tune - திருத்தாண்டகம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
7.075   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மறைகள் ஆயின நான்கும், மற்று
Tune - காந்தாரம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org