சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.085   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருமுண்டீச்சுரம் - திருத்தாண்டகம் அருள்தரு கானார்குழலியம்மை உடனுறை அருள்மிகு முண்டீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=pgF5vU7Ih60   Add audio link Add Audio

ஆர்த்தான் காண், அழல் நாகம் அரைக்கு நாணா; அடியவர்கட்கு அன்பன் காண்; ஆனைத்தோலைப்
போர்த்தான் காண்; புரிசடை மேல் புனல் ஏற்றான் காண்; புறங்காட்டில் ஆடல் புரிந்தான் தான் காண்;
காத்தான் காண், உலகு ஏழும் கலங்கா வண்ணம், கனை கடல் வாய் நஞ்சு அதனைக் கண்டத்துள்ளே!
சேர்த்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

1
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், சினமிகுந்த நாகத்தை அரைநாணாகக் கட்டியவனும், அடியவர்களுக்கு அன்பனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடைமேல் கங்கையை ஏற்றவனும், சுடுகாட்டில் ஆடுவதை விரும்பியவனும், உலகங்கள் ஏழும் கலக்க முறாதபடி ஒலிக்கும் கடலிடை உண்டான நஞ்சினைத் தன் கழுத்திடத்தே சேர்த்தவனும் ஆவான். அவன் என் சிந்தை இடத்தவன் ஆயினான்.

கருத்தன் காண்; கமலத்தோன் தலையில் ஒன்றைக் காய்ந்தான் காண்; பாய்ந்த நீர் பரந்த சென்னி
ஒருத்தன் காண்; உமையவள் ஓர்பாகத்தான் காண்; ஓர் உருவின் மூஉரு ஆய், ஒன்று ஆய், நின்ற
விருத்தன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண்; மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

2
திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் தலைவன் ஆவானும், பிரமன் தலைகளில் ஒன்றைக் கோபித்துக் கொய்தவனும், வேகமாகப் பாய்ந்த கங்கை வேகம் நீங்கிப் பரவிய தலையை உடைய ஒருத்தனும் உமையம்மை தங்கிய பங்கினனும், மூன்று வடிவங்களாய் நின்ற அரி, அயன், அரன் ஆகியோருடைய வடிவங்கள் ஒன்றாகித் தனது ஒருவடிவமாக அமைந்த பழையோனும், தேவர்களுக்கெல்லாம் மேலானவனும், மெய்யடியார் உள்ளத்தில் விரும்பி உறையும் தூயவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினான்.

நம்பன்காண், நரை விடை ஒன்று ஏறினான் காண், நாதன் காண், கீதத்தை நவிற்றினான் காண்;
இன்பன் காண், இமையா முக்கண்ணினான் காண், ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு
அன்பன் காண், ஆர் அழல் அது ஆடினான் காண், அவன், இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணாச்
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

3
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் நம்புதற்குரியவனும், வெள்ளை விடை ஒன்றை ஊர்தியாகக் கொண்டவனும், தலைவனும், கீதத்தைப் பாடினவனும், இன்பத்தைத் தருபவனும், இமையாத மூன்று கண்கள் உடையவனும், விரும்பி மனமுருகும் அடியார்களுடைய அன்பனும், அனலேந்தி ஆடினவனும், அவன் என்றும் இவன் என்றும் யாராலும் அறிய ஒண்ணாதவனும், செம்பொன் அனையானும் ஆவான். அவன் என் சிந்தை யிடத்தவன் ஆயினான்.

மூவன் காண்; மூவர்க்கும் முதல் ஆனான் காண்; முன்னும் ஆய், பின்னும் ஆய், முடிவு ஆனான் காண்;
காவன் காண்; உலகுக்கு ஓர் கண் ஆனான் காண்; கங்காளன் காண்; கயிலை மலையினான் காண்;
ஆவன் காண்; ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண்; ஆர் அழல் ஆய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணாத்
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

4
திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் மூவுருவாய் மூத்தவனும், மூவர்க்கும் முதல் ஆனவனும், உலகத்தோற்றத்திற்கு முன் ஆனவனும், உலக ஒடுக்கத்திற்குப்பின் ஆனவனும், வீடு பேறு ஆனவனும், உலகங்களைக் காப்பவன் ஆனவனும், உலகிற்குக் கண் ஆனவனும், இறந்துபட்ட பிரம விட்டுணுக்களுடைய என்புக்கூடுகளை அணிந்தவனும், கயிலை மலையினனும், ஆக்கந்தருபவனும், ஆன்ஐந்தில் விரும்பி மூழ்குபவனும், பிரமனுக்கும் திருமாலுக்கும் அறியமுடியாத அழற்பிழம்பாய்த் தோன்றிய தேவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

கானவன் காண், கானவனாய்ப் பொருதான் தான் காண், கனல் ஆட வல்லான் காண், கையில் ஏந்தும்
மானவன் காண், மறை நான்கும் ஆயினான் காண், வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான் தான் காண்,
ஊனவன் காண், உலகத்துக்கு உயிர் ஆனான் காண், உரை   அவன் காண், உணர்வு அவன் காண், உணர்ந்தார்க்கு என்றும்
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

5
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் காட்டில் உறைபவனும், வேடனாகிப் பார்த்தனொடு பொருதவனும், கனல் ஆட வல்லவனும், மானைக் கையில் ஏந்தியவனும், நான்கு மறைகளாகவும் ஆனவனும், வலிய இடபமொன்றை ஏற வல்லவனும், பலவகை உடம்புகளாயும் நிற்பவனும், சீவான்மாக்களின் உயிர்க்குயிரானவனும், சொல் ஆனவனும் சொற்பொருள் உணர்வு ஆனவனும், தன்னை உணர்ந்தார்க்கு எக்காலத்தும் தேனாய் இனிப்பவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.
Go to top

உற்றவன் காண், உறவு எல்லாம் ஆவான் தான் காண்,
ஒழிவு அற நின்று எங்கும் உலப்பு இலான் காண்,
புற்று அரவே ஆடையும் ஆய்ப் பூணும் ஆகிப்
  புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான் தான் காண்,
நல்-தவன் காண், அடி அடைந்த மாணிக்கு ஆக
நணுகியது ஓர் பெருங் கூற்றைச் சேவடியினால்
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன்


6
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் உயிரோடு உடங்கியைந்து நின்றவனும், எல்லா உறவினருமாய் ஆனவனும், ஓரிடமும் எஞ்சுதலில்லா வகை எவ்விடத்தும் நிறைந்து நின்றவனும், அழிவில்லாதவனும், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவனும், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவனும், நல்ல தவ வேடங்கொண்டவனும், சரணடைந்த பிரமசாரிக்காக அவனைக் கிட்டிய பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆவான்.

உதைத்தவன் காண், உணராத தக்கன் வேள்வி உருண்டு    ஓட; தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம்
தகர்த்தவன் காண்; தக்கன் தன் தலையைச் செற்ற தலையவன் காண்; மலைமகள் ஆம் உமையைச் சால
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம்
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

7
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், மெய்யுணராத தக்கனுடைய வேள்விக்கண் திரட்டி வைக்கப்பட்ட திரவியங்களை உருண்டோட உதைத்தவனும், அருக்கனைத் தொடர்ந்து சென்று அவன் பற்களை எல்லாம் தகர்த்தவனும், தக்கனுடைய தலையைக் கொய்த தலைவனும், மலைமகளாகிய உமை யம்மையை மிக இகழ்ந்தவராய், மாட்சிமைப்பட்டவராய்த் தம்மை மதித்து வேள்விக்கண் வந்து அவியுண்டாருமாகிய வலிமைமிக்க தேவர்களொடு அவர்தம் அறியாமை முழுவதையும் அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அவ் ஊமர் அவர் உணரா வண்ணம்
பரிந்தவன் காண் பனிவரை மீப் பண்டம் எல்லாம் பறித்து, உடனே நிரந்து வரு பாய் நீர்ப்பெண்ணை,
நிரந்து வரும் இருகரையும் தடவா ஓடி, நின்மலனை வலம் கொண்டு, நீள நோக்கி,
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

8
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், உடை இல்லாதவரும், துவர் தோய்ந்த ஆடையால் உடம்பை மூடுபவராய்த் திரியும் சமண புத்தர்கள் உணராவண்ணம் தன் அடியார்க்கு அருள் புரிந்தவன் ஆவான். குளிர்ந்த மலைமேல் உள்ள பண்டங்களையெல்லாம வாரிக்கொண்டு அவற்றோடு கூட முறைப்பட்டு வரும் பெண்ணையாற்றில் பாய்ந்துவரும் நீர், இணை ஒத்துவரும் இருகரைகளையும் தடவிக்கொண்டு ஓடிக்குற்றமற்ற இறைவனை வலங்கொண்டு இடமும் காலமும் நெடியவாக நோக்கி, மெல்ல அசைந்துலவும் அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

அறுத்தவன் காண், அடியவர்கள் அல்லல் எல்லாம்; அரும்பொருள் ஆய் நின்றவன் காண்; அநங்கன் ஆகம்
மறுத்தவன் காண்; மலை தன்னை மதியாது ஓடி, மலைமகள் தன் மனம் நடுங்க, வானோர் அஞ்ச,
கறுத்தவனாய், கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓடச்
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே.

9
அடியார்களுடைய அல்லல்களை யெல்லாம் நீக்கியவனும், அடைவதற்கு அரிய பொருளாய் நின்றவனும், மன்மதனது உடலை அழித்தவனும், மலைமகளாம் உமையம்மையின் மனம் நடுங்கவும் தேவர்கள் அஞ்சவும் கயிலை மலையை மதியாது வெகுண்டு ஓடி அதனைப் பறித்தெடுக்க முற்பட்டவனுடைய கைகளும் ஒளிவீசும் முடிகளை உடைய தலைகளும் கண்களும் பிதுங்கிச் செருக்குக்கெடுமாறு ஒறுத்தவனும், திருமுண்டீச்சரத்துக் கோயில் கொண்ட சிவலோகன் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமுண்டீச்சுரம்
6.085   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆர்த்தான் காண், அழல் நாகம்
Tune - திருத்தாண்டகம்   (திருமுண்டீச்சுரம் முண்டீசுவரர் கானார்குழலியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000