சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.044   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருஅஞ்சைக்களம் - கொல்லிக்கௌவாணம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=yoM_GiP8gR8   Add audio link Add Audio

முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்;
நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்;
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன்; திருக்கைகளால்
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே?

1
எம் பெருமான் தலையிற் சூடுவது கங்கையையும் சந்திரனையும் , அழித்தது மூன்று மதில்களை , அவற்றைக் கை நொடிக்கும் அளவில் சாம்பலாய்த் தோன்றுமாறு அம்பினால் அழித்தார் . தனது வலிய திருக்கைகளால் பிடிப்பது பாம்பு . அது கடித்தவுடன் , நஞ்சு தலைக்கேறும் என்று யான் எப்பொழுதும் அஞ்சுவேன் ; இவை தவிர எம்பெருமானுக்கு வேறு பொருள்கள் இல்லையோ !

தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ? சுடலைப் பொடி-
நீறு அன்றிச் சாந்தம் மற்று இல்லையோ? இமவான் மகள்
கூறு அன்றிக் கூறு மற்று இல்லையோ? கொல்லைச் சில்லை வெள்-
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ, எம்பிரானுக்கே?

2
எம் பெருமானுக்கு , ஆடுகின்ற அரங்கு , காடன்றி வேறு இல்லையோ ! சாந்து , சுடலைப்பொடியாகிய சாம்பலன்றி வேறு இல்லையோ ! தனது திருமேனியில் ஒரு கூறாய் நிற்பது மலையரையன் மகளது கூறன்றி வேறு இல்லையோ ! ஏறுவது , முல்லை நிலத்தில் உள்ள சிறுமையுடைய வெள்ளை எருதன்றி வேறு இல்லையோ !

தட்டு எனும் தட்டு எனும், தொண்டர்காள்! தடுமாற்றத்தை,
ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை;
சிட்டனும், திரிபுரம் சுட்ட தேவர்கள் தேவனை,
வெட்டெனப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!

3
மன அலைவையும் , எல்லாப் பொருட்கும் நிலைக் களமாகிய பெரிய நிலத்தின்கண் உள்ள உயிர்களைக் கொல்லுதலையும் நன்னெறிக்குத் தடை என்று உணர்ந்த அடியவர்களே , மேலானவனும் , திரிபுரத்தை எரித்த தேவதேவனும் ஆகிய எம்பெருமானை , வெறுத்துப் பேசன்மின் .

நரி தலை கவ்வ, நின்று ஓரி கூப்பிட, நள் இருள்
எரி தலைப் பேய் புடை சூழ, ஆர் இருள் காட்டு இடைச்
சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை,
பிரிதலைப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!

4
அடியவர்களே , நரிகள் , இறந்தோரது தலைகளைக் கௌவி இழுக்க , ஓரிகள் கூக்குரலிட , செறிந்த இருட்காலத்தில் , நெருப்பு எரிகின்ற இடத்தில் , பேய்கள் புடைசூழ்ந்திருக்க அரிய இருளையுடைய காட்டில் , சிரிப்பதுபோலும் தலைமாலையைச் சடையின்கண் அணிந்த எம் செல்வனாகிய எம்பெருமானை , விட்டு நீங்குதற்குரிய சொற்களைப் பேசன்மின் !

வேய் அன தோளி மலை மகளை விரும்பிய
மாயம் இல் மாமலை நாடன் ஆகிய மாண்பனை,
ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும்,
பேயனே! பித்தனே! என்பரால், எம்பிரானையே!

5
மூங்கில்போலும் தோள்களையுடையவளாகிய மலைமகளை விரும்புகின்ற , வஞ்சனை இல்லாத , பெரிய மலையிடத் தவனாகிய மாட்சியையுடைய எம்பெருமானை , தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நின்றவரது துன்பங்களைக் களைதலைக் கண்டும் , அவனைச் சிலர் ` அவன் பேயோடாடுபவன் ; பித்துக் கொண்டவன் ` என்று இகழ்வர் ; எம்பெருமான் , அவர் அங்ஙனம் இகழுமாறு இருத்தல் என் !
Go to top

இறைவன்! என்று எம்பெருமானை வானவர் ஏத்தப் போய்,
துறை ஒன்றி, தூ மலர் இட்டு, அடி இணை போற்றுவார்;
மறை அன்றிப் பாடுவது இல்லையோ? மல்கு வான் இளம்-
பிறை அன்றிச் சூடுவது இல்லையோ, எம்பிரானுக்கே?

6
தேவர் எம்பெருமானை இறைவன் என்று அறிந்து துதிக்கச்சென்று , நன்னெறியிற் பொருந்தி , தூய மலர்களைச் சொரிந்து அவன் அடியிணையைப் போற்றுவர் ; அங்ஙனமாக , அவனுக்கு , பாடும்பாட்டு , மறைகளன்றி வேறு ஒன்றும் இல்லையோ ! சூடும் கண்ணி , வானத்திற்செல்லும் இளம்பிறையன்றி , வேறு ஒன்றும் இல்லையோ !

தாரும், தண் கொன்றையும் கூவிளம் தனி மத்தமும்;
ஆரும் அளவு, அறியாத ஆதியும் அந்தமும்;
ஊரும், ஒன்று இல்லை, உலகு எலாம், உகப்பார் தொழப்
பேரும் ஓர் ஆயிரம் என்பரால், எம்பிரானுக்கே.

7
எம் பெருமானுக்கு , மாலையும் , ` தண்ணிய கொன்றைப் பூ , கூவிளையிலை , மிகத் தாழ்ந்த ஊமத்தம்பூ ` என்பன . அளவும் , யாராலும் அறியப்படாத முதலும் , முடிவும் ; அன்பு செய்பவர் சென்று தொழுதற்கு ஊரும் ஒன்றாய் இல்லை ; உலகம் முழுதுமாம் . சொல்வதற்குப் பேரும் ஒன்றல்ல ; ஓர் ஆயிரம் என்று சொல்லி யாவரும் நகைப்பர் ; அவன் இவ்வாறிருத்தல் என்னோ !

அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்;
வரி தரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரி தரு புன்சடை வைத்த எம் புனிதற்கு, இனி
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ, எம்பிரானுக்கே?

8
கீற்றுக்களையுடைய பாம்போடு , ` வன்னி , ஊமத்தை , பிறை ` என்பவைகளை , புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள எம் புனிதனாகிய எம்பெருமானை , திருமாலும் , பூமேல் இருப்பவனாகிய பிரமனும் அடியும் முடியும் அறியமாட்டார் ; பிறர் ஆர் அறிவார் ! அங்கையில் ஏந்துவதற்கு நெருப்பன்றி அவனுக்கு வேறு இல்லையோ !

கரிய மனச் சமண் காடி ஆடு கழுக்களால்
எரிய வசவுணும் தன்மையோ? இமவான் மகள்
பெரிய மனம் தடுமாற வேண்டி, பெம்மான்-மதக்-
கரியின் உரி அல்லது இல்லையோ, எம்பிரானுக்கே?

9
எம் பெருமானுக்கு கரிய மனத்தையுடைய , கஞ்சியைக் குடிக்கின்ற , கழுமரங்கள் போலத் தோன்றுகின்ற சமணர்களால் , மனம் எரிந்து இகழப்படுதல்தான் இயல்போ ! மலையரையன் மகளாகிய தன் தேவியின் பெருமை பொருந்திய மனம் கலங்க வேண்டி , அவன் மதத்தையுடைய யானையினின்றும் உரித்த தோலல்லது போர்வை வேறு இல்லையோ !

காய்சின மால்விடை மாணிக்கத்து, எம் கறைக் கண்டத்து,
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய
ஆயின சீர்ப் பகை ஞானி அப்பன், அடித்தொண்டன் தான்,
ஏசின பேசுமின், தொண்டர் காள், எம்பிரானையே!

10
அடியவர்களே , காய்கின்ற சினத்தையுடைய , பெரிய விடையை ஏறுகின்ற எங்கள் மாணிக்கம் போல்பவனும் , கறுப்புநிறத்தையுடைய கண்டத்தையுடைய இறைவனும் ஆகிய பெருமானை , அவன் அடித்தொண்டனும் , மிக்க புகழையுடைய வனப்பகைக்கு ஞானத்தந்தையும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடியனவும் , ஏசிப் பாடியனவும் ஆகிய இப்பத்துப் பாடல்களால் , எம் பெருமானைப் பாடுமின் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஅஞ்சைக்களம்
7.004   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தலைக்குத் தலை மாலை அணிந்தது
Tune - இந்தளம்   (திருஅஞ்சைக்களம் அஞ்சைக்களத்தீசுவரர் உமையம்மை)
7.044   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருஅஞ்சைக்களம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000