சிவய.திருக்கூட்டம்
sivaya.org

Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.093   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு அழகம்மை உடனுறை அருள்மிகு சித்தநாதேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=IxgdpEeZDvI   Add audio link Add Audio

நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் அரவம் உடையான் இடம் ஆம்-
வாரும் அருவி மணி, பொன், கொழித்துச்
சேரும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

1
இடையறாது ஒழுகும் நீர்ப்பெருக்கு , மணியையும் பொன்னையுங் கொழித்துக்கொண்டு சேர்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , சடையின்மேல் நீரையும் , பல மலர்களையும் பிறையையும் ஊர்ந்து செல்லுகின்ற பாம்பையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .

அளைப் பைஅரவு ஏர் இடையாள் அஞ்ச,
துளைக்கைக்கரித் தோல் உரித்தான் இடம் ஆம்-
வளைக்கைம் மடவார் மடுவில்-தடநீர்த்
திளைக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

2
வளையையணிந்த கைகளையுடைய இளமகளிர் , மிக்க நீரினுள் மூழ்கி இன்புறும் திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , புற்றில் வாழ்கின்ற , படத்தையுடைய பாம்பு போலும் இடையினையுடையவளாகிய தன் தேவி அஞ்சும்படி , துளையையுடைய துதிக்கையையுடைய யானையினது தோலை உரித்துப் போர்த்தவனாகிய இறைவனது இடமாகும் .

இகழும் தகையோர் எயில் மூன்றும் எரித்த
பகழியொடு வில் உடையான் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலம்-
திகழும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

3
அரும்புபோலும் , மெல்லிய தனங்களையுடைய மகளிரது முகங்களே , தாமரை மலர்போல விளங்குகின்ற திருநறை யூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , தன்னை இகழுந் தன்மையைப் பெற்ற அசுரர்களது மதில்கள் மூன்றை எரித்த அம்பை யும் , வில்லையும் உடைய இறைவனது இடமாகும் .

மறக் கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக் கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம்-
நறக் கொள் கமலம் நளி பள்ளி எழத்
திறக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

4
தேனைக் கொண்டுள்ள தாமரைமலரை , நன்கு துயிலெழும்படி வண்டுகள் திறக்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச் சரம் ` என்னும் திருக்கோயிலே , வீரத்தைக் கொண்ட இராவணனது மலைபோலும் தோள்களை , தனது மலையால் முரியச்செய்த விரலையுடைய தலைவனாகிய இறைவன் இருக்கும் இடமாகும் .

முழுநீறு அணி மேனியன், மொய்குழலார்
எழு நீர்மை கொள்வான், அமரும் இடம் ஆம்-
கழுநீர் கமழக் கயல், சேல், உகளும்
செழுநீர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

5
குளங்களில் செங்கழுநீர்ப் பூவின் மணங் கமழுமாறு அவைகளின்மேல் கயல்மீன்களும் , சேல் மீன்களும் துள்ளி வீழ்கின்ற , மிக்க நீரையுடைய திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , திருமேனிமுழுவதும் நீற்றை அணிந்தவனும் , அடர்ந்த கூந்தலையுடைய மகளிரது உயர்ச்சி பொருந்திய பண்பு களைக் கொண்டவனும் ஆகிய இறைவன் விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற இடமாகும் .
Go to top

ஊன் ஆர் உடை வெண்தலை உண் பலி கொண்டு,
ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம்-
வான் ஆர் மதியம் பதி வண்பொழில்வாய்த்
தேன் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

6
விண்ணிற் பொருந்திய சந்திரன் நுழைந்து செல்லும் , வளவிய சோலைகளினிடத்தில் தேன் நிறைந்து நிற்கும் திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , ஊன் பொருந்திய , உடைந்த , வெள்ளிய தலையில் , உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்று , ஆனினத்ததாகிய , வெற்றியையுடைய ஏற்றை விரும்புபவனாகிய இறைவனது இடமாகும் .

கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய்
நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம்-
வார் ஊர் முலையார் மருவும் மறுகில்
தேர் ஊர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

7
கச்சு மேற்பொருந்தப்பெற்ற தனங்களையுடைய மகளிர் அழகுடன் நிறைந்து நிற்கும் தெருக்களில் தேர்கள் ஓடுகின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , கருமை நிறம் பொருந்திய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு , தேவர்கட்கு அருள்செய்த , நீர்ததும்பும் சடையினையுடையவனாகிய இறைவன் விளங்கியிருக்கின்ற இடமாகும் .

கரியின் உரியும், கலைமான்மறியும்,
எரியும் மழுவும், உடையான் இடம் ஆம்-
புரியும் மறையோர் நிறை சொல்பொருள்கள்
தெரியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

8
தமது கடமைகளை விரும்பிச் செய்யும் அந்தணர் கள் , நிறைந்த சொற்களின் பொருளை ஆராய்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , யானைத் தோலையும் , ஆண் மான்கன்றையும் , எரிகின்ற மழுவையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .

பேணா முனிவன் பெரு வேள்வி எலாம்
மாணாமை செய்தான் மருவும், இடம் ஆம்-
பாண் ஆர் குழலும், முழவும், விழவில்,
சேண் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

9
பண் நிறைந்த குழல்களின் ஓசையும் , மத்தளங் களின் ஓசையும் விழாக்களில் சேய்மைக்கண் சென்று பொருந்துகின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , தன்னை விரும்பாது வெறுத்தவனாகிய தக்கனது பெருவேள்வியின் சிறப்புக் களை எல்லாம் சிறவாதபடி அழித்தவனாகிய இறைவன் பொருந்தி யிருக்கும் இடமாகும் .

குறியில் வழுவாக் கொடுங்கூற்று உதைத்த
எறியும் மழுவாள் படையான் இடம் ஆம்-
நெறியில் வழுவா நியமத்தவர்கள்
செறியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

10
நன்னெறியினின்றும் வழுவாத கடப்பாட்டினை யுடைய உயர்ந்தோர்கள் மிக்குள்ள திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , கொடிய கூற்றுவனை உதைத்த , குறியினின் றும் தவறாது எறியும் மழுப்படையை உடையவனாகிய இறைவனது இடமாகும் .
Go to top

போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும்
சீர் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தை
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள்,
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே.

11
போர் செய்தலை உடையவரது முப்புரத்தை அழித்த தூயவனாகிய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற , புகழ் நிறைந்த திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாட வல்லவர்கள் , எழுச்சிபொருந்திய தேவருலகத்தை அடைவார்கள் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
1.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஊர் உலாவு பலி கொண்டு,
Tune - தக்கராகம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை)
1.071   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிறை கொள் சடையர்; புலியின்
Tune - தக்கேசி   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை)
2.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை)
7.093   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நீரும் மலரும் நிலவும் சடைமேல்
Tune - குறிஞ்சி   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசுவரர் அழகம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000