செம் கண் நெடுமாலும் | சென்று இடந்தும்,| காண்பு அரிய
பொங்கு மலர்ப் பாதம் |பூதலத்தே |போந்தருளி,
எங்கள் பிறப்பு அறுத்திட்டு,| எம் தரமும் |ஆட்கொண்டு,
தெங்கு திரள் சோலை,| தென்னன் |பெருந்துறையான்,
அம் கணன், அந்தணன் ஆய், | அறைகூவி,| வீடு அருளும்
அம் கருணை வார் கழலே| பாடுதும் காண்;| அம்மானாய்!
|
1
|
திருமாலும் காண்பதற்கரிதாகிய திருவடி இந்தப் பூமியில் படும்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளி, எம்மையும் எம்மினத்தையும் ஆட்கொண்டு எமக்கு முத்தி நெறியையும் அருள் செய்தமையால் அந்த இறைவனது கருணையையும், திருவடியின் பெருமையையும் யாம் புகழ்ந்து பாடுவோம். | |
பாரார், விசும்பு உள்ளார்,| பாதாளத்தார், | புறத்தார்,
ஆராலும் காண்டற்கு |அரியான்; |எமக்கு எளிய
பேராளன்; தென்னன்; |பெருந்துறையான்; | பிச்சு ஏற்றி,
வாரா வழி அருளி, | வந்து, என்| உளம் புகுந்த
ஆரா அமுது ஆய்,| அலை கடல்வாய் | மீன் விசிறும்
பேர் ஆசை வாரியனை | பாடுதும் காண்; |அம்மானாய்!
|
2
|
மண்ணுலகத்தார் விண்ணுலகத்தவர் முதலிய எல்லாராலும் காண்பதற்கரியனானவனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னைப் பித்தனாக்கினவனும், முத்தி வழியை அறிவித்தவனும், வலை வீசுதல் முதலிய திருவிளையாடல்களைச் செய்தவனும் கருணைக் கடலும் ஆகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடுவோம். | |
இந்திரனும், மால், அயனும்,| ஏனோரும், | வானோரும்,
அந்தரமே நிற்க, | சிவன் அவனி | வந்தருளி,
எம் தரமும் ஆட்கொண்டு,| தோள் கொண்ட | நீற்றன் ஆய்;
சிந்தனையை வந்து உருக்கும் | சீர் ஆர் |பெருந்துறையான்,
பந்தம் பறிய,| பரி மேல்கொண்டான், |தந்த
அந்தம் இலா ஆனந்தம்| பாடுதும் காண்; |அம்மானாய்!
|
3
|
இந்திரன் முதலான தேவர்களும் முனிவர் முதலானோரும் விண்ணிலே நிற்க, எங்களை ஆட்கொள்ளும் பொருட்டுப் பூவுலகில் எழுந்தருளி, எங்கள் மனத்தை உருகச் செய்த திருப்பெருந்துறையான், எமக்கு அருள் செய்த முடிவற்ற இன்பத்தைப் புகழ்ந்து பாடுவோம். | |
வான் வந்த தேவர்களும்,| மால், அயனோடு,| இந்திரனும்,
கான் நின்று வற்றியும்,| புற்று எழுந்தும்,| காண்பு அரிய
தான் வந்து, நாயேனைத் |தாய்போல் |தலையளித்திட்டு,
ஊன் வந்து உரோமங்கள், |உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து, அமுதின் |தெளிவின் |ஒளி வந்த,
வான் வந்த, வார் கழலே |பாடுதும் காண்; |அம்மானாய்!
|
4
|
சாதாரண தேவர்களும், திருமால் பிரமன் இந்திரன் முதலான பெரிய தேவர்களும், காட்டில் சென்று கடுந் தவம் செய்தும் காண்பதற்கு அரியனாகிய சிவபெருமான் தானே வலிய வந்து, அடியேனைத் தாய்போலக் கருணை செய்து, என் உடல் உயிர்கள் உருகச் செய்தமையால், அவன் திருவடியைப் புகழ்ந்து பாடுவோம். | |
கல்லா மனத்துக் | கடைப்பட்ட |நாயேனை,
வல்லாளன், தென்னன், |பெருந்துறையான், | பிச்சு ஏற்றி,
கல்லைப் பிசைந்து | கனி ஆக்கி, |தன் கருணை
வெள்ளத்து அழுத்தி, | வினை கடிந்த | வேதியனை,
தில்லை நகர் புக்கு,| சிற்றம்பலம் |மன்னும்
ஒல்லை விடையானை |பாடுதும் காண்; | அம்மானாய்!
|
5
|
கற்றறிவு இல்லாமையால் கடையாகிய என்னையும் ஒரு பொருளாய் மதித்து ஆட்கொண்டு, கல்லை நிகர்த்த என் மனத்தைக் குழைத்துத் தன் கருணைக் கடலில் அழுந்தும் படிசெய்து என் வினையை ஒழித்தருளிய நம் சிற்றம்பலவனைப் புகழ்ந்து பாடுவோம். | |
| Go to top |
கேட்டாயோ தோழி! | கிறி செய்த | ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடை சூழ்,| தென்னன் |பெருந்துறையான்,
காட்டாதன எல்லாம் | காட்டி,| சிவம் காட்டி,
தாள் தாமரை காட்டி, | தன் கருணைத் | தேன் காட்டி,
நாட்டார் நகை செய்ய,| நாம் மேலை | வீடு எய்த,
ஆள் தான் கொண்டு ஆண்டவா| பாடுதும் காண்; |அம்மானாய்!
|
6
|
தோழி! திருப்பெருந்துறையான் காட்டாதன எல்லாம் காட்டி, சிவகதியைக் காட்டி, தன் திருவடியைக் காட்டி, தன் கருணையாகிய தேனைக் காட்டி, உலகத்தார் நகைக்கவும், யாம் மேன்மையாகிய முத்தியை அடையவும் எம்மை அடிமை கொண்ட வரலாற்றைப் புகழ்ந்து பாடுவோம். | |
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை,
சேயானை, சேவகனை, தென்னன் பெருந்துறையின்
மேயானை, வேதியனை, மாது இருக்கும் பாதியனை,
நாய் ஆன நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை,
தாயானை, தத்துவனை, தானே உலகு ஏழும்
ஆயானை, ஆள்வானை பாடுதும் காண்; அம்மானாய்!
|
7
|
இடைவிடாமல் நினைப்பவர்களுடைய மனத்தில் தங்கியிருப்பவனும், நினையாதவர்க்குத் தூரமாய் இருப்பவனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனும் வேதங்களை ஓதுபவனும், பெண்பாகனும், எம்மை ஆட்கொண்ட தலைவனும், தாய் போலும் மெய்யன்பு உடையவனும், உலகு ஏழிலும் தானே நிறைந்து அவற்றை ஆள்பவனும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவோம். | |
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!
|
8
|
அன்பர் பாடும் பாடலைப் பரிசிலாகக் கொண்டருள் கின்ற பெண்பாகனும், திருப்பெருந்துறையை உடையவனும், தேவலோகத்தவரும் புகழும்படியான புகழை உடையவனும், மண்ணுலகத் தலைவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய கடவுள் கூடற் பதியில், மண் சுமந்து கொண்டு பாண்டியன் கைப்பிரம்படியால் புண் பட்ட பொன்போலும் திருமேனியைப் புகழ்ந்து பாடுவோம். | |
துண்டப் பிறையான், மறையான், பெருந்துறையான்,
கொண்ட புரிநூலான், கோல மா ஊர்தியான்,
கண்டம் கரியான், செம் மேனியான், வெள் நீற்றான்,
அண்டம் முதல் ஆயினான், அந்தம் இலா ஆனந்தம்,
பண்டைப் பரிசே, பழ அடியார்க்கு ஈந்தருளும்;
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண்; அம்மானாய்!
|
9
|
பிறைச்சந்திரனை உடையவனும், வேதப் பொருளானவனும், திருப்பெருந்துறையானும், முப்புரி நூலை உடையவனும், இடபவாகனனும், நீலகண்டனும், சிவந்த திரு மேனியையுடையவனும், திருவெண்ணீற்றை உடையவனும், பஞ்ச பூதங்களின் பலனும் ஆகிய சிவபெருமான் தன் பழவடியார்க்கு முடி வற்ற இன்பத்தைக் கொடுத்தருள்பவன். ஆதலால் அவனது பெருங் குணத்தை உலகம் எல்லாம் அதிசயிக்கும்படி புகழ்ந்து பாடுவோம். | |
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை,
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை,
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை,
பெண் ஆளும் பாகனை, பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல் காட்டி, நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானை பாடுதும் காண்; அம்மானாய்!
|
10
|
தேவதேவனும், அரசர்க்கரசனும், திருப்பாண்டி நாட்டை உடையவனும், பெண்பாகனும், அடியேனை ஆட்கொண்ட வனும் ஆகிய சிவபிரானைப் புகழ்ந்து பாடுவோம். | |
| Go to top |
செப்பு ஆர் முலை பங்கன், தென்னன், பெருந்துறையான்,
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்,
அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன், ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண்; அம்மானாய்!
|
11
|
உமாதேவிபங்கனும், திருப்பெருந்துறையானும், திருவடியை அடைந்தவரின் மனம் உருக்கும் குணத்தை உடைய வனும், பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்கினவனும், தன் திருவடி யில் மனம் வைத்த அன்பர் மனத்தில் இருப்பவனும் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம். | |
மைப்பொலியும் கண்ணி! கேள்; மால், அயனோடு, இந்திரனும்,
எப் பிறவியும் தேட, என்னையும் தன் இன் அருளால்
இப் பிறவி ஆட்கொண்டு, இனிப் பிறவாமே காத்து
மெய்ப்பொருள்கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எப்பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அப்பொருள் ஆம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்!
|
12
|
திருமால் முதலியோர் தேடி நிற்க, என்னையும் தனது இனிய அருளால் இந்தப் பிறப்பில் ஆட்கொண்டு இனிமேலும் பிறவாமல் காத்தவனாய் உண்மையாகிய இடத்தில் தோற்றுபவனாய், எல்லா உயிர்களுக்கும் தானே ஒருமுதற் பொருளாய், எல்லா உயிர் களுக்கும் வீடுபேற்றுக்கு ஏதுவாய் இருக்கிறவன் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம். | |
கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட
மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச்
செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!
|
13
|
செந்நிறம் உடையவனும், திருவெண்ணீறு அணிந்தவனும், ஒருவராலும் அறிய முடியாதவனும், அன்பர்க்கு மெய்யனும், அன்பர் அல்லாதார்க்குப் பொய்யனும், அந்தணனும், திருவையாற்றில் வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவோம். | |
ஆனை ஆய்க் கீடம் ஆய் மானுடர் ஆய்த் தேவர் ஆய்
ஏனைப் பிற ஆய், பிறந்து, இறந்து எய்த்தேனை
ஊனையும் நின்று உருக்கி, என் வினையை ஓட்டு உகந்து,
தேனையும், பாலையும், கன்னலையும் ஒத்து, இனிய
கோன் அவன் போல் வந்து, என்னை, தன் தொழும்பில் கொண்டருளும்
வானவன் பூம் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!
|
14
|
யானை முதலாகிய எல்லாப் பிறவிகளிலும் பிறந்தும் இறந்தும் இளைத்த என்னை உடலுருகச் செய்து, என்வினைகளை ஒழித்து, தேன் போல எனக்கு இனிமையைத் தந்து என்னைத் தன் திருத்தொண்டுக்கு உரியனாக்கின அச்சிவபெருமானது திருவடியைப் புகழ்ந்து பாடுவோம். | |
சந்திரனைத் தேய்த்தருளி, தக்கன் தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள் நெரித்திட்டு, எச்சன் தலை அரிந்து,
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து,
சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டு உகந்த,
செம் தார்ப் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண்; அம்மானாய்!
|
15
|
சந்திரன் உடலைத் தேய்த்தும் இந்திரனின் தோளை நெரித்தும் எச்சன் என்னும் போலித் தெய்வத்தின் தலையை அரிந்தும் சூரியனின் பல்லைத் தகர்த்தும் தேவர்களை விரட்டியும் தக்கன் யாகத்தில் அவமானப்படுத்தித் தண்டித்த சிவபெருமானது மந்தார மலர் மாலையைப் புகழ்ந்து பாடுவோம். | |
| Go to top |
ஊன் ஆய், உயிர் ஆய், உணர்வு ஆய், என்னுள் கலந்து,
தேன் ஆய், அமுதமும் ஆய், தீம் கரும்பின் கட்டியும் ஆய்,
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்,
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!
|
16
|
உடல், உயிர், உணர்வு, உருவங்களாகி, எம் முள்ளே கலந்திருந்து, தேன் போல இனிமை தந்து முத்தி நெறியை எமக்கு உணர்த்தியருளிய சிவபெருமான், அளவற்ற பல உயிர் களுக்கும் தலைவனாய் நின்ற விதத்தைப் புகழ்ந்து பேசுவோம். | |
சூடுவேன் பூம் கொன்றை; சூடிச் சிவன் திரள் தோள்
கூடுவேன்; கூடி, முயங்கி, மயங்கி நின்று,
ஊடுவேன்; செவ் வாய்க்கு உருகுவேன்; உள் உருகித்
தேடுவேன்; தேடி, சிவன் கழலே சிந்திப்பேன்;
வாடுவேன்; பேர்த்தும் மலர்வேன்; அனல் ஏந்தி
ஆடுவான் சேவடியே பாடுதும் காண்; அம்மானாய்!
|
17
|
கொன்றைமலர் மாலையைச் சூடிச் சிவபெருமான் திருத்தோள்களைக் கூடித் தழுவி மயங்கி நின்று பிணங்குவேன்; அவனது செவ்வாயின் பொருட்டு உருகுவேன்; மனமுருகி அவன் திருவடியைத் தேடிச் சிந்திப்பேன்; வாடுவேன்; மகிழ்வேன். இங்ஙன மெல்லாம் செய்து நாம் புகழ்ந்து பாடுவோம். | |
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை,
வெளி வந்த மால், அயனும், காண்பு அரிய வித்தகனை,
தெளி வந்த தேறலை, சீர் ஆர் பெருந்துறையில்
எளிவந்து, இருந்து, இரங்கி, எண் அரிய இன் அருளால்
ஒளி வந்து, என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ,
அளி வந்த அந்தணனை பாடுதும் காண்; அம்மானாய்!
|
18
|
கிளிமொழியாளாகிய உமாதேவி பாகனும், மால், அயன் என்போர் காண்பதற்கு அரிதாகிய அறிவுருவனும், அன்பர்க்குத் தெளிந்த தேன்போல்பவனும், திருப்பெருந்துறையில் எளிதில் வந்து எனக்கு அருள் செய்த அந்தணனும் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம். | |
முன்னானை, மூவர்க்கும்; முற்றும் ஆய், முற்றுக்கும்
பின்னானை; பிஞ்ஞகனை; பேணு பெருந்துறையின்
மன்னானை; வானவனை; மாது இயலும் பாதியனை;
தென் ஆனைக்காவானை; தென் பாண்டி நாட்டானை;
என்னானை, என் அப்பன்' என்பார்கட்கு இன் அமுதை
அன்னானை; அம்மானை பாடுதும் காண்: அம்மானாய்!
|
19
|
மூவர்க்கும் முதல்வனும், எல்லாம் தானேயான வனும், அவை அழிந்த பின்னே இருப்பவனும், திருப்பெருந்துறையில் நிலைபெற்றவனும், பெண்பாகனும், திருவானைக்காவில் எழுந்தருளி இருப்பவனும், பாண்டி நாட்டை உடையவனும், என் காளை போல் பவனும், என்னப்பன் என்று புகழ்வோர்க்கு இனிய அமிர்தம் போல் பவனும், எம் தந்தையும் ஆகிய சிவபெருமானைப் புகழ்ந்து பாடு வோம். | |
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான், பெருந்துறையான்,
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளி, தன் அடியார்
குற்றங்கள் நீக்கி, குணம் கொண்டு, கோதாட்டி,
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல் புகழே
பற்றி, இப் பாசத்தைப் பற்று அற நாம் பற்றுவான்,
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!
|
20
|
தன் அடியார்க்கு அன்றித் தன் குணங்களை அள விடற்குப் பிறர்க்கரியனாகிய திருப்பெருந்துறையானும், குதிரைச் சேவகனாய் எழுந்தருளித் தன் அடியார் குற்றங்களை ஒழித்துக் குணத்தை ஏற்றுக் கொண்டு எம்மைச் சீராட்டி, சுற்றத்தவர் தொடர்பை விடுவித்தவனுமாகிய சிவபெருமானது புகழையே பற்றி, இப்பாசப் பற்றறும்படி நாம் பற்றின பேரின்பத்தைப் புகழ்ந்து பாடி இன்பம் அடைவோம். | |
| Go to top |