பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
|
1
|
பெருந்துறைப் பெருமானே! உன் திருப் பெயர்களைப் புகழ்ந்து பேசுவோர்க்கு ஒப்பற்ற ஆனந்தமே! என் இருவினை ஒத்தபிறகு, என் பிறவி வித்து இனிமேல் முளையாதபடி, நீ திருக்கழுக் குன்றிலே எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?. | |
பிட்டு நேர்பட, மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே!
சட்ட நேர்பட, வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்;
சிட்டனே! சிவலோகனே! சிறு நாயினும் கடை ஆய வெம்
கட்டனேனையும் ஆட்கொள்வான், வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
|
2
|
பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறைப் பெருமானே! உன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை அடைந்திலேன்; ஆயினும், நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளும் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?. | |
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி, மலம் கெடுத்த பெருந்துறை
விலங்கினேன்; வினைக்கேடனேன், இனி மேல் விளைவது அறிந்திலேன்;
இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும், வைப்பிடம் இன்றியே
கலங்கினேன்; கலங்காமலே, வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
|
3
|
என் கண்ணீர் துடைத்து என் மலத்தை அழித்து ஆட்கொண்ட திருப்பெருந்துறைப் பெருமானே! நான் உன்னை விட்டு நீங்கினேன்; மேல் விளையும் காரியத்தை அறிந்திலேன்; உன் திருவடி இரண்டையும் வைக்கத் தூய்மையான இடம் இல்லாமல் கலங்கினேன்; நான் கலங்காதபடி நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக் கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?. | |
பூண் ஒணாதது ஓர் அன்பு பூண்டு, பொருந்தி, நாள்தொறும் போற்றவும்,
நாண் ஒணாதது ஒர் நாணம் எய்தி, நடுக் கடலுள் அழுந்தி, நான்
பேண் ஒணாத பெருந்துறைப் பெரும் தோணி பற்றி உகைத்தலும்,
காண் ஒணாத் திருக்கோலம், நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
|
4
|
உன் அன்பர் உன்னிடத்தில் பேரன்பு பூண்டு வணங்கக் கண்டு, நான் மிக்க நாணம் அடைந்து, துன்பக் கடலில் அழுந்தி, திருப்பெருந்துறையாகிய பெருந்தெப்பத்தைப் பற்றிச் செலுத்தலும், நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, காணமுடியாத உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?. | |
கோல மேனி வராகமே! குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே!
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி!
ஞாலமே கரி ஆக, நான் உனை நச்சி நச்சிட வந்திடும்
காலமே! உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
|
5
|
அழகிய திருவுருவம் உடையவனே! திருப்பெருந் துறைக் கொண்டலே! சற்றும் நல்லொழுக்கத்தை அறியாத என் மனத் தில் வைக்கப் பட்டிருக்கிற சிகாமணியே! உலகமே சாட்சியாக நான் உன்னைப் புகழும்படி திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி எனக்குத் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?. | |
| Go to top |
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே!
ஏதமே பல பேச, நீ எனை ஏதிலார் முனம், என் செய்தாய்?
சாதல் சாதல், பொல்லாமை அற்ற, தனிச் சரண் சரண் ஆம் என,
காதலால் உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
|
6
|
வேறுபடுதல் இல்லாத ஒப்பற்ற கல்வியாகிய ஞானத்தை அருள்செய்த திருப்பெருந்துறை இன்பப் பெருக்கே! பல தீமைகள் பேசும்படி என்னை அயலார் முன்னே நீ என்ன காரியம் செய்து வைத்தாய்?. முடிவற்றனவும், தீங்கற்றனவுமாகின உன் திருவடிகளே எனக்குப் புகலிடம் எனக் கருதி ஆசையோடு உன்னைப் புகழும் வண்ணம் நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?. | |
இயக்கிமார் அறுபத்து நால்வரை எண் குணம் செய்த ஈசனே!
மயக்கம் ஆயது ஓர் மும் மலப் பழ வல் வினைக்குள் அழுந்தவும்,
துயக்கு அறுத்து, எனை ஆண்டுகொண்டு, நின் தூ மலர்க் கழல் தந்து, எனைக்
கயக்க வைத்து, அடியார் முனே வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
|
7
|
இயக்கிமார் அறுபத்து நால்வரைத் தன் ஞானோபதேசத்தால் எண்குணமும் அடையச் செய்த ஈசனே! மயக்கத்துக்கு ஏதுவாகிய மும்மல சம்பந்தமாகிய வல்வினைக் கடலில் அடியேன் அழுந்தி நிற்கவும் என் தளர்ச்சியை நீக்கி, என்னை ஆண்டருளி, உன் திருவடிகளைத் தந்து அடியார்களுக்கு எதிரில் திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?. | |