சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர், வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர், கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும் பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.
|
1
|
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர், அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள், மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரைமலர் தூவ, பக்கம் பல் பூதம் பாடிட, வருவார் பாம்புர நன் நகராரே.
|
2
|
துன்னலின் ஆடை உடுத்து, அதன்மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி, பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி, பித்தர் ஆய்த் திரியும் எம்பெருமான், மன்னு மா மலர்கள் விட, நாளும் மாமலையாட்டியும் தாமும், பன்னும் நால்மறைகள் பாடிட, வருவார் பாம்புர நன்நகராரே.
|
3
|
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான், நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர், நள் இருள் நடம் செயும் நம்பர் மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட, மாடமாளிகை தன்மேல் ஏறி, பஞ்சு சேர் மெல் அடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்நகராரே.
|
4
|
நதி அதன் அயலே நகுதலை மாலை, நாள்மதி, சடைமிசை அணிந்து, கதி அது ஆக, காளி முன் காண, கான் இடை நடம் செய்த கருத்தர்; விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவாப் பதி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.
|
5
|
Go to top |
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்; ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்; மாதினை இடமா வைத்த எம் வள்ளல்; மான்மறி ஏந்திய மைந்தர்; ஆதி, நீ அருள்! என்று அமரர்கள் பணிய, அலைகடல் கடைய, அன்று எழுந்த பாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன்நகராரே.
|
6
|
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து, மலரவற்கு ஒரு முகம் ஒழித்து, ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி, அனல் அது ஆடும் எம் அடிகள்; காலனைக் காய்ந்து தம் கழல் அடியால், காமனைப் பொடிபட நோக்கி, பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன்நகராரே.
|
7
|
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க, மெல்லிய திருவிரல் ஊன்றி, அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள்; அனல் அது ஆடும் எம் அண்ணல் மடக்கொடி அவர்கள் வருபுனல் ஆட, வந்து இழி அரிசிலின் கரைமேல் படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன்நகராரே.
|
8
|
கடி படு கமலத்து அயனொடு மாலும், காதலோடு அடிமுடி தேட, செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீவணர்; எம்முடைச் செல்வர்; முடி உடை அமரர் முனிகணத்தவர்கள் முறை முறை அடி பணிந்து ஏத்த, படி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.
|
9
|
குண்டர், சாக்கியரும், குணம் இலாதாரும், குற்றுவிட்டு உடுக்கையர் தாமும், கண்ட ஆறு உரைத்துக் கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார்; வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்; பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்நகராரே.
|
10
|
Go to top |
பார் மலிந்து ஓங்கிப் பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரைக் கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாடக் கழுமல முது பதிக் கவுணி நார் மலிந்து ஓங்கும் நால் மறை ஞானசம்பந்தன்-செந்தமிழ் வல்லார் சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி, சிவன் அடி நண்ணுவர் தாமே.
|
11
|