வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே
|
1
|
மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக்
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
செங்கண் வெள் ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார்,
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே
|
2
|
ஈடு அல் இடபம் இசைய ஏறி, மழு ஒன்று ஏந்தி,
காடு அது இடமா உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்,
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே
|
3
|
இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால்
உடையார்,
மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின்
மிசையார்
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான்
அடிகளே
|
4
|
வெள்ளை எருத்தின் மிசையார், விரி தோடு ஒரு காது
இலங்கத்
துள்ளும் இளமான் மறியார், சுடர் பொன் சடைகள்
துளங்கக்
கள்ளம் நகு வெண்தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே
|
5
|
Go to top |
பொன்தாது உதிரும் மணம் கொள் புனை பூங்கொன்றை
புனைந்தார்,
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார், அதுவே ஊர்வார்
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பின் தாழ்சடையார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே
|
6
|
பாசம் ஆன களைவார், பரிவார்க்கு அமுதம் அனையார்,
ஆசை தீரக் கொடுப்பார், அலங்கல் விடை மேல் வருவார்;
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பேச வருவார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே
|
7
|
செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி மெல்விரலால்
கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளிமலை
போல்
பெற்றொன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே
|
8
|
வரு மா கரியின் உரியார், வளர்புன் சடையார், விடையார்,
கருமான் உரி தோல் உடையார் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
திருமாலொடு நான் முகனும் தேர்ந்தும் காண முன்
ஒண்ணாப்
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே
|
9
|
தூய விடை மேல் வருவார், துன்னார் உடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர், அமணர்,
பேய், பேய்! என்ன வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே
|
10
|
Go to top |
மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த,
அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல் ஆகப்
பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை,
இரவும் பகலும் பரவி நினைவார், வினைகள் இலரே.
|
11
|