பந்து சேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனி மா மதி போல் முகத்து
அந்தம் இல் புகழாள், மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்வு இடம் வானவர் எத்திசையும் நிறைந்து, வலம்செய்து, மாமலர்
புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே.
|
1
|
காவி அம் கருங்கண்ணினாள், கனித்தொண்டைவாய்,கதிர் முத்த நல்வெண் நகை,
தூவி அம் பெடை அன்னம் நடை, சுரி மென்குழலாள்,
தேவியும் திருமேனி ஓர்பாகம் ஆய், ஒன்று இரண்டு ஒரு மூன்றொடு சேர் பதி,
பூவில் அந்தணன் ஒப்பவர், பூந்தராய் போற்றுதுமே.
|
2
|
பை அரா வரும் அல்குல், மெல் இயல்,பஞ்சின் நேர் அடி, வஞ்சி கொள் நுண் இடை,
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
செய் எலாம் கழுநீர் கமலம்மலர்த் தேறல் ஊறலின், சேறு உலராத, நல்
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே.
|
3
|
முள்ளி நாள்முகை, மொட்டு இயல் கோங்கின் அரும்பு, தென் கொள் குரும்பை,
மூவாமருந்து உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை,
வெள்ளிமால்வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண்பொழில்
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.
|
4
|
பண் இயன்று எழு மென்மொழியாள், பகர் கோதை, ஏர் திகழ் பைந்தளிர்மேனி, ஓர்
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய்வளையார்
கண் இயன்று எழு காவி, செழுங் கருநீலம், மல்கிய காமரு வாவி, நல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே.
|
5
|
Go to top |
வாள் நிலாமதி போல் நுதலாள்,மடமாழை ஒண்கணாள், வண் தரள(ந்) நகை,
பாண் நிலாவிய இன் இசை ஆர் மொழிப் பாவையொடும்,
சேண் நிலாத் திகழ் செஞ்சடை எம் அண்ணல் சேர்வது சிகரப் பெருங்கோயில் சூழ்
போழ் நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
|
6
|
கார் உலாவிய வார்குழலாள், கயல்கண்ணினாள்,புயல் கால் ஒளிமின் இடை,
வார் உலாவிய மென்முலையாள், மலைமாது உடன் ஆய்,
நீர் உலாவிய சென்னியன் மன்னி,நிகரும் நாமம் முந்நான்கும் நிகழ் பதி
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
|
7
|
காசை சேர் குழலாள், கயல் ஏர் தடங்கண்ணி, காம்பு அன தோள், கதிர் மென்முலை,
தேசு சேர் மலைமாது அமரும் திருமார்பு அகலத்து
ஈசன் மேவும் இருங்கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணைச்சேவடி
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
|
8
|
கொங்கு சேர் குழலாள், நிழல் வெண் நகை, கொவ்வை வாய், கொடி ஏர் இடையாள் உமை
பங்கு சேர் திருமார்பு உடையார்; படர் தீ உரு ஆய்,
மங்குல் வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர்; வான்மிசை வந்து எழு
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே.
|
9
|
கலவமாமயில் ஆர் இயலாள்,கரும்பு அன்ன மென்மொழியாள், கதிர் வாள்நுதல்
குலவு பூங்குழலாள் உமை கூறனை, வேறு உரையால்
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள்
ஆக்கினான்தனை, நண்ணலும் நல்கும் நன்
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே.
|
10
|
Go to top |
தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேல் அன
கண்ணியோடு அண்ணல் சேர்வு இடம், தேன் அமர்
பூம்பொழில் திகழ், பொன் பதி பூந்தராய் போற்றுதும்! என்று
ஓம்பு தன்மையன்-முத்தமிழ் நால்மறை
ஞானசம்பந்தன்-ஒண் தமிழ்மாலை கொண்டு
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா, வினையே.
|
11
|