ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல்
தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள்,
பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ்
வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
1
|
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர், துளங்கு ஒளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர், வெண்பிறை மல்கு சடைமுடியார்
நாறு சாந்து இளமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வீறு சேர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
2
|
மழை வளர் இளமதி மலரொடு தலை புல்கு வார்சடை மேல்
கழை வளர் புனல் புகக் கண்ட எம் கண்ணுதல், கபாலியார் தாம்,
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விழை வளர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
3
|
கரும்பு அன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்த
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர்க்கொன்றை அம் சுடர்ச் சடையார்
அரும்பு அன வனமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரும்பு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
4
|
வளம் கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாள் அரவும்
களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல்,
கபாலியார்தாம்,
துளங்கு நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விளங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
5
|
Go to top |
பொறி உலாம் அடு புலி உரிவையர், வரி அராப் பூண்டு இலங்கும்
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர், சீர்மையை நினைப்பு
அரியார்
மறி உலாம் கையினர், மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வெறி உலாம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
6
|
புரிதரு சடையினர், புலிஉரி அரையினர், பொடி அணிந்து
திரிதரும் இயல்பினர், திரி புரம் மூன்றையும் தீ வளைத்தார்
வரி தரு வனமுலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரிதரு துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
7
|
நீண்டு இலங்கு-அவிர் ஒளி நெடு முடி அரக்கன்-இந்
நீள்வரையைக்
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன்-ஆள்வினை
கீழ்ப்படுத்தார்
பூண்ட நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வேண்டு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
8
|
கரைகடல் அரவு அணைக் கடவுளும், தாமரை நான்முகனும்,
குரை கழல் அடி தொழ, கூர் எரி என நிறம் கொண்ட பிரான்,
வரை கெழு மகளொடும் பகல் இடம் புகல் இடம், வண்பொழில் சூழ்
விரை கமழ் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
9
|
அயம் முகம் வெயில் நிலை அமணரும், குண்டரும், சாக்கியரும்,
நயம் முக உரையினர்; நகுவன சரிதைகள் செய்து உழல்வார்
கயல் அன வரி நெடுங்கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வியல் நகர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.
|
10
|
Go to top |
விண் உலாம் விரி பொழில் விரை மணல்-துருத்தி,
வேள்விக்குடியும்,
ஒண் உலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை
நண் உலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார்; பழி இலரே.
|
11
|