சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

11.029   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி

கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
Add audio link Add Audio
மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி
யேன்மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்
டுவந்திலன் உண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்புற
மேயுன்னைப் போற்றுகின்ற
இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி
யோகச்சி ஏகம்பனே.


1


ஏகம்ப னேயென்னை ஆள்பவ
னேயிமை யோர்க்கிரங்கி
போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக
பொங்கும்ஐவாய்
நாகம்பொன் னாரம் எனப்பொலி
வுற்றுநல் நீறணியும்
ஆகம்பொன் மாமலை ஒப்பவ
னேயென்பன் ஆதரித்தே.


2


தரித்தேன் மனத்துன் திகழ்திரு
நாமம் தடம்பொழில்வாய்
வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப
னேயென்றன் வல்வினையை
அரித்தேன் உனைப்பணி யாதவர்
ஏழைமை கண்டவரைச்
சிரித்தேன் உனக்கடி யாரடி
பூணத் தெளிந்தனனே.


3


தெளிதரு கின்றது சென்றென்
மனம்நின் திருவடிவம்
அளிதரு நின்னருட் கையம்
இனியில்லை அந்திச்செக்கர்
ஒளிதரு மேனியெம் ஏகம்ப
னேயென் றுகந்தவர்தாள்
தளிதரு தூளியென் றன்தலை
மேல்வைத்த தன்மைபெற்றே.


4


பெற்றுகந் தேனென்றும் அர்ச்சனை
செய்யப் பெருகுநின்சீர்
கற்றுகந் தேனென் கருத்தினி
தாக்கச்சி ஏகம்பத்தின்
பற்றுகந் தேறும் உகந்தவ
னேபட நாகக்கச்சின்
சுற்றுகந் தேர்விடை மேல்வரு
வாய்நின் துணையடியே.


5


Go to top
அடிநின்ற சூழல் அகோசரம்
மாலுக் கயற்கலரின்
முடிநின்ற சூழ்முடி காண்பரி
தாயிற்றுக் கார்முகிலின்
இடிநின்ற சூழ்குரல் ஏறுடை
ஏகம்ப யாமெங்ஙனே
வடிநின்ற சூலப் படையுடை
யாயை வணங்குவதே.


6


வணக்கம் தலைநின் திருவடிக்
கேசெய்யும் மையல்கொண்டோர்
இணக்கன்றி மற்றோர் இணக்கறி
வோமல்லம் வல்லரவின்
குணக்குன்ற வில்லி குளிர்கச்சி
ஏகம்பம் பாடினல்லால்
கணக்கன்று மற்றொரு தேவரைப்
பாடும் கவிநலமே.


7


நலந்தர நானொன்று சொல்லுவன்
கேண்மின்நல் லீர்களன்பு
கலந்தர னார்கச்சி ஏகம்பம்
கண்டு கனல்திகிரி
சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத்
தாய்தக்கன் வேள்வியெல்லாம்
நிலந்தர மாகச்செய் தாயென்று
பூசித்து நின்மின்களே.


8


மின்களென் றார்சடை கொண்டலென்
றார்கண்டம் மேனிவண்ணம்
பொன்களென் றார்வெளிப் பாடுதம்
பொன்னடி பூண்டுகொண்ட
என்களென் றாலும் பிரிந்தறி
யார்கச்சி ஏகம்பத்தான்
தன்களென் றாருல கெல்லாம்
நிலைபெற்ற தன்மைகளே.


9


தன்மையிற் குன்றாத் தவத்தோர்
இமையவர் தாம்வணங்கும்
வன்மையிற் குன்றா மதிற்கச்சி
ஏகம்பர் வண்கயிலைப்
பொன்மயிற் சாயலுஞ் சேயரிக்
கண்ணும் புரிகுழலும்
மென்மையிற் சாயும் மருங்குலும்
காதல் விளைத்தனவே.


10


Go to top
தனமிட் டுமைதழு வத்தழும்
புற்றவர் தம்மடியார்
மனம்விட் டகலா மதிற்கச்சி
ஏகம்பர் வான்கயிலைச்
சினம்விட் டகலாக் களிறு
வினாவியொர் சேயனையார்
புனம்விட் டகலார் பகலாம்
பொழுதும்நம் பூங்கொடியே.


11


பூங்கொத் திருந்தழை யார்பொழில்
கச்சியே கம்பர்பொற்பார்
கோங்கத் திருந்த குடுமிக்
கயிலையெம் பொன்னொருத்தி
பாங்கொத் திருந்தனை ஆரணங்
கேபடர் கல்லருவி
ஆங்கத் திருந்திழை ஆடிவந்
தாற்கண் டடிவருத்தே.


12


வருத்தந் தரும்மெய்யுங் கையில்
தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கும் நடக்கவின்
றைய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனம்
காக்கும் தொழிலெமக்கே.


13


எம்மையும் எம்மைப் பணிகொள்ளும்
கம்பர் எழிற்கயிலை
உம்மையும் மானிடம் இப்புனத்
தேவிட்டு வந்தமைந்தர்
தம்மையும் மானையும் சிந்தையும்
நோக்கம் கவர்கவென்றோ
அம்மையும் அம்மலர்க் கண்ணும்
பெரியீர் அருளுமினே.


14


அருளைத் தருகம்பர் அம்பொற்
கயிலைஎம் ஐயர்அம்பு
இருளைக் கரிமறிக் கும்மிவர்
ஐயர் உறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும்
போயின வில்லிமைக்கு
மருளைத் தருசொல்லி எங்கோ
விலையுண்டிவ் வையகத்தே.


15


Go to top
வையார் மழுப்படை ஏகம்பர்
ஈங்கோய் மலைப்புனத்துள்
ஐயார் வருகலை ஏனங்
கரிதொடர் வேட்டையெல்லாம்
பொய்யான ஐயர் மனத்ததெம்
பூங்கொடி கொங்கைபொறாப்
பையார் அரவிடை ஆயிற்று
வந்து பரிணமித்தே.


16


பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த
யானை நுதல்பகுந்திட்
டுருமொத்த திண்குரற் சீயம்
திரிநெறி ஓங்குவைவாய்ப்
பொருமுத் தலைவேற் படைக்கம்பர்
பூங்கயி லைப்புனத்துள்
தருமுத் தனநகை தன்நசை
யால்வெற்பு சார்வரிதே.


17


அரிதன் திருக்கண் இடநிரம்
பாயிரம் போதணிய
அரிதன் திருவடிக் கர்ச்சித்த
கண்ணுக் கருளுகம்பர்
அரிதன் திருக்கங் குலியால்
அழிந்த கயிலையல்லிங்
கரிதென் றிப்பதெம் பால்வெற்ப
எம்மையர்க் கஞ்சுதுமே.


18


அஞ்சரத் தான்பொடி யாய்விழத்
தீவிழித் தன்புசெய்வோர்
நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி
ஏகம்பர் நீள்கயிலைக்
குஞ்சரத் தாழ்வரை வீழநுங்
கொம்புய்யக் கும்பமூழ்கும்
வெஞ்சரத் தாரன வோவல்ல
வோவிவ் வியன்முரசே.


19


சேய்தந்த அம்மை உமைகண
வன்திரு ஏகம்பத்தான்
தாய்தந்தை யாயுயிர் காப்போன்
கயிலைத் தயங்கிருள்வாய்
வேய்தந்த தோளிநம் ஊச
லொடும்விரை வேங்கைதன்னைப்
பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட
தோசைப் பகடுவந்தே.


20


Go to top
வந்தும் மணம்பெறிற் பொன்னனை
யீர்மன்னும் ஏகம்பர்தம்
முந்தும் அருவிக் கயிலை
மலையுயர் தேனிழிச்சித்
தந்தும் மலர்கொய்தும் தண்தினை
மேயுங் கிளிகடிந்தும்
சிந்தும் புகர் மலை கைச்சுமிச்
சாரல் திரிகுவனே.


21


திரியப் புரமெய்த ஏகம்ப
னார்திக ழுங்கயிலைக்
கிரியக் குறவர் பருவத் திடுதர
ளம்வினையோம்
விரியச் சுருள்முத லானும்
அடைந்தோம் விரைவிரைந்து
விரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற
தென்னங்குப் பேசுமினே.


22


பேசுக யாவர் உமைக்கணி
யாரென்று பித்தரெங்கும்
பூசுகை யார்திரு நீற்றெழில்
ஏகம்பர் பொற்கயிலைத்
தேசுகை யார்சிலை வெற்பன்
பிரியும் பரிசிலர்அக்
கூசுகை யாதுமில் லார்க்குலை
வேங்கைப் பெயர்நும்மையே.


23


பெயரா நலத்தெழில் ஏகம்ப
னார்பிறை தோய்கயிலைப்
பெயரா திருக்கப் பெறுகிளி
காள்புன மேபிரிவின்
துயரால் வருந்தி மனமுமிங்
கோடித் தொழுதுசென்ற
தயரா துரையும்வெற் பற்கடி
யேற்கும் விடைதமினே.


24


தம்மைப் பிறவிக் கடல்கடப்
பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில்
ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொடின்
பந்தருந் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி
யோவல்லி எய்தியதே.


25


Go to top
இயங்குந் திரிபுரம் எய்தவே
கம்பர் எழிற்கயிலைத்
தயங்கும் மலர்ப்பொழில் காள்தையல்
ஆடரு வித்தடங்காள்
முயங்கு மணியறை காள்மொழி
யீரொழி யாதுநெஞ்சம்
மயங்கும் பரிசுபொன் னார்சென்ற
சூழல் வகுத்தெமக்கே.


26


வகுப்பார் இவர்போல் மணத்துக்கு
நாள்மணந் தன்னொடின்பம்
மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம்
இருவரை விள்ளக்கள்வாய்
நெகுப்பால் மலர்கொண்டு நின்றார்
கிடக்க நிலாவுகம்பர்
தொகுப்பால் மணிசிந் தருவிக்
கயிலையிச் சூழ்புனத்தே.


27


புனங்குழை யாதென்று மென்தினை
கொய்ததும் போகலுற்ற
கனங்குழை யாள்தற் பிரிய
நமக்குறும் கையறவால்
மனங்குழை யாவரும் கண்கனி
பண்பல பாடுந்தொண்டர்
இனங்குழை யாத்தொழும் ஏகம்பர்
இக்கயி லாயத்துள்ளே.


28


உள்ளம் பெரியரல் லாச்சிறு
மானுடர் உற்றசெல்வம்
கள்ளம் பெரிய சிறுமனத்
தார்க்கன்றிக் கங்கையென்னும்
வெள்ளம் பெரிய சடைத்திரு
ஏகம்பர் விண்ணரணம்
தள்ளம் பெரிகொண் டமைத்தார்
அடியவர் சார்வதன்றே.


29


அன்றும் பகையடர்க் கும்பரி
மாவும் மதவருவிக்
குன்றும் பதாதியுந் தேருங்
குலவிக் குடைநிழற்கீழ்
நின்றும் பொலியினுங் கம்பர்நன்
நீறு நுதற்கிலரேல்
என்றும் அரசும் முரசும்
பொலியா இருநிலத்தே.


30


Go to top
நிலத்திமை யோரில் தலையாய்ப்
பிறந்து மறையொடங்கம்
வலத்திமைப் போதும் பிரியார்
எரிவளர்த் தாலும்வெற்பன்
குலத்துமை யோர்பங்கர் கச்சியுள்
ஏகம்பங் கூடித்தொழும்
நலத்தமை யாதவர் வேட்டுவர்
தம்மின் நடுப்படையே.


31


படையால் உயிர்கொன்று தின்று
பசுக்களைப் போலச்செல்லும்
நடையால் அறிவின்றி நாண்சிறி
தின்றிநகும் குலத்தில்
கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள்
ஏகம்பத் தெங்களையாள்
உடையான் கழற்கன்ப ரேலவர்
யாவர்க்கும் உத்தமரே.


32


உத்துங்க யானை உரியார்
விரலால் அரக்கன்சென்னி
பத்துங்கை யான இருபதுஞ்
சோர்தர வைத்திலயம்
ஒத்துங்கை யாலவன் பாடக்
கயிலையின் ஊடுகைவாள்
எத்துங்கை யானென் றுகந்தளித்
தார்கச்சி ஏகம்பரே.


33


அம்பரம் கால்அனல் நீர்நிலம்
திங்கள் அருக்கன்அணு
வம்பரங் கொள்வதொர் வேழத்
துரியவன் தன்னுருவாம்
எம்பரன் கச்சியுள் ஏகம்பத்
தானிடை யாதடைவான்
நம்பரன் தன்னடி யாரறி
வார்கட்கு நற்றுணையே.


34


துணைத்தா மரையடி யும்பவ
ளத்திரள் நன்குறங்கும்
பணைத்தோள் அகலமுங் கண்டத்து
நீலமும் அண்டத்துமின்
பிணைத்தா லனசடை யுந்திரு
முக்கணும் பெண்ணொர்பக்கத்
தணைத்தார் எழிற்கம்பர் எங்கள்
பிரானார்க் கழகியவே.


35


Go to top
அழகறி விற்பெரி தாகிய
ஏகம்பர் அத்தர்கொற்றம்
பழகறி விற்பெரி யோரதமைப்
பற்றலர் பற்றுமன்பின்
குழகறி வேற்பினுள் ஒன்றறி
யாரறி யாமைதெய்வம்
கிழகெறி யப்பட் டுலந்தார்
உலகிற் கிடந்தனரே.


36


கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற
பாம்பொரு பால்மதியம்
தொடக்குண் டிலங்கும் மலங்குந்
திரைக்கங்கை சூடுங்கொன்றை
வடக்குண்டு கட்டத் தலைமாலை
வாளால் மலைந்தவெம்போர்
கடக்கும் விடைத்திரு ஏகம்பர்
கற்றைச் சடைமுடியே.


37


கற்றைப் பவளச் சடைவலம்
பூக்கமழ் கொன்றையந்தார்
முற்றுற் றிலாமதி யின் கொழுந்
தேகம்பர் மொய்குழலாம்
மற்றைத் திசையின் மணிப்பொற்
கொழுந்தத் தரங்கழுநீர்
தெற்றிப் பொலிகின்ற சூட்டழ
காகித் திகழ்தருமே.


38


தருமருட் டன்மை வலப்பாற்
கமலக்கண் நெற்றியின்மேல்
திருமலர்க் கண்பிள விற்றிக
ழுந்தழல் செல்வக்கம்பர்
கருமலர்க் கண்ணிடப் பாலது
நீலங் கனிமதத்து
வருநுதற் பொட்டணங் குக்குயர்ந்
தோங்கும் மலர்க்குழலே.


39


மலர்ந்த படத்துச்சி ஐந்தினுஞ்
செஞ்சுடர் மாமணிவிட்
டலர்ந்த மணிக்குண் டலம்வலக்
காதினில் ஆடிவரும்
நலந்திரு நீல்வயி ரம்வெயிற்
பாய நகுமணிகள்
கலந்தசெம் பொன்மக ரக்குழை
ஏகம்பர் காதிடமே.


40


Go to top
காதலைக் கும்வலத் தோள்பவ
ளக்குன்றம் அங்குயர்ந்து
போதலைக் கும்பனிப் பொன்மலை
நீற்றின் பொலியகலம்
தாதலைக் குங்குழல் சேர்பணைத்
தோள்நறுஞ் சாந்தணிந்து
சூதலைக் கும்முலை மார்பிடம்
ஏகம்பர் சுந்தரமே.


41


தரம்பொற் பழியும் உலகட்டி
எய்த்துத் தரந்தளரா
உரம்பொற் புடைய திருவயி
றாம்வலம் உம்பர்மும்மைப்
புரம்பொற் பழித்தகம் பர்க்குத்
தரத்திடு பூண்முலையும்
நிரம்பப் பொறாது தளரிள
வஞ்சியும் நேர்வுடைத்தே.


42


உடைப்புலி ஆடையின் மேலுர
கக்கச்சு வீக்கிமுஞ்சி
வடத்தொரு கோவணந் தோன்றும்
அரைவலம் மற்றையல்குல்
தொடக்குறு காஞ்சித் தொடுத்த
அரசிலை தூநுண்துகில்
அடல்பொலி ஏறுடை ஏகம்பம்
மேய அடிகளுக்கே.


43


அடிவலப் பாலது செந்தா
மரையொத் ததிர்கழல்சூழ்ந்
திடிகுரற் கூற்றின் எருத்திற
வைத்த திளந்தளிரின்
அடியிடப் பாலது பஞ்சுற
அஞ்சுஞ் சிலம்பணிந்த
வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம்
மேய வரதருக்கே.


44


தருக்கவற் றான் மிக்க முப்புரம்
எய்தயன் தன்தலையை
நெருக்கவற் றோட மழுவாள்
விசைத்தது நெற்களென்றும்
பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர்
அத்தர்தம் பாம்புகளின்
திருக்கவற் றாலிட் டருளும்
கடகத் திருக்கரமே.


45


Go to top
கரத்தத் தமருகத் தோசை
கடுத்தண்டம் மீபிளப்ப
அரத்தத்த பாதம் நெரித்திட்
டவனி தலம்நெரியத்
தரத்தத் திசைகளுக் கப்புறம்
போர்ப்பச் சடைவிரித்து
வரத்தைத் தருகம்பர்
ஆடுவர் எல்லியும் மாநடமே.


46


நடனம் பிரானுகந் துய்யக்கொண்
டானென்று நான்மறையோர்
உடன்வந்து மூவா யிரவர்
இறைஞ்சி நிறைந்தஉண்மைக்
கடனன்றி மற்றறி யாத்தில்லை
அம்பலங் காளத்தியாம்
இடமெம் பிரான்கச்சி ஏகம்பம்
மேயாற் கினியனவே.


47


இனியவர் இன்னார் அவரையொப்
பார்பிறர் என்னவொண்ணாத்
தனியவர் தையல் உடனாம்
உருவர் அறம்பணித்த
முனியவர் ஏறும் உகந்தமுக்
கண்ணவர் சண்டியன்புக்
கினியவர் காய்மழு வாட்படை
யார்கச்சி ஏகம்பரே.


48


பரவித் தனைநினை யக்கச்சி
ஏகம்பர் பண்ணும்மையல்
வரவித் தனைஉள்ள எங்கறிந்
தேன்முன் அவர்மகனார்
புரவித் தனையடிக் கக்கொடி
தாய்விடி யாவிரவில்
அரவித் தனையுங்கொண் டார்மட
வார்முன்றில் ஆட்டிடவே.


49


இடவம் கறுக்கெனப் பாயுமுஞ்
சென்னி நகுதலைகண்
டிடவஞ் சுவர்மட வாரிரி
கின்றனர் ஏகம்பத்தீர்
படமஞ்சு வாயது நாகம்
இரைக்கும் அதனுக்குமுற்
படமஞ் சுவரெங்ங னேபலி
வந்திடும் பாங்குகளே.


50


Go to top
பாங்குடை கோள்புலி யின்னதள்
கொண்டீர்நும் பாரிடங்கள்
தாங்குடை கொள்ளப் பலிகொள்ள
வந்தீர் தடக்கமலம்
பூங்குடை கொள்ளப் புனற்கச்சி
ஏகம்பம் கோயில்கொண்டீர்
ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள
வந்தீர் இடைகுமின்றே.


51


இடைக்குமின் தோற்கும் இணைமுலை
யாய்முதியார்கள் தஞ்சொல்
கடைக்கண்நன் றாங்கச்சி
ஏகம்பர் ஐயங் கொளக்கடவும்
விடைக்குமுன் தோற்றநில் லேநின்
றினியிந்த மொய்குழலார்
கிடைக்குமுன் தோற்றநஞ் சங்கிது
வோதங் கிறித்துவமே.


52


கிறிபல பேசிச் சதிரால்
நடந்து விடங்குபடக்
குறிபல பாடிக் குளிர்கச்சி
ஏகம்பர் ஐயங்கொள்ள
நெறிபல வார்குழ லார்மெலி
வுற்ற நெடுந்தெருவில்
செறிபல வெள்வளை போயின
தாயர்கள் தேடுவரே.


53


தேடுற் றிலகள்ள நோக்கந்
தெரிந்தில சொற்கள்முடி
கூடுற் றிலகுழல் கொங்கை
பொடித்தில கூறுமிவள்
மாடுற் றிலமணி யின்மட
வல்குலும் மற்றிவள்பால்
நாடுற் றிலவெழில் ஏகம்ப
னார்க்குள்ளம் நல்கிடத்தே.


54


நல்கும் புகழ்க்கட வூர்நன்
மறையவன் உய்யநண்ணிக்
கொல்கின்ற கூற்றைக் குமைத்தவெங்
கூற்றம் குளிர்திரைகள்
மல்கும் திருமறைக் காட்டமிர்
தென்றும் மலைமகள்தான்
புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம்
மேவிய பொன்மலையே.


55


Go to top
மலையத் தகத்தியன் அர்ச்சிக்க
மன்னி வடகயிலை
நிலையத் தமரர் தொழவிருந்
தான்நெடு மேருவென்னும்
சிலையத்தன் பைம்பொன் மதில்திரு
ஏகம்பத் தான்திகழ்நீர்
அலையத் தடம்பொன்னி சூழ்திரு
வையாற் றருமணியே.


56


மணியார் அருவித் தடமிம
யங்குடக் கொல்லிகல்லின்
திணியார் அருவியின் ஆர்த்த
சிராமலை ஐவனங்கள்
அணியார் அருவி கவர்கிளி
ஒப்பும்இன் சாரல்விந்தம்
பணிவார் அருவினை தீர்க்குமே
கம்பர் பருப்பதமே.


57


பருப்பதம் சார்தவழ் மந்தரம்
இந்திர நீலம்வெள்ளை
மருப்பதங் கார்கருங் குன்றியங்
கும்பரங் குன்றம்வில்லார்
நெருப்பதங் காகுதி நாறும்
மகேந்திரம் என்றிவற்றில்
இருப்பதங் காவுகந் தான்கச்சி
ஏகம்பத் தெம்மிறையே.


58


இறைத்தார் புரமெய்த வில்லிமை
நல்லிம வான்மகட்கு
மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம்
செங்குன்ற மன்னற்குன்றம்
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக்
குன்றமென் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர்
குன்றென்று கூறுமினே.


59


கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த்
தானம் துருத்தியம்பேர்
தேறுமின் வேள்விக் குடிதிருத்
தோணி புரம்பழனம்
ஆறுமின் போல்சடை வைத்தவன்
ஆரூர் இடைமருதென்
றேறுமின் நீரெம் பிரான்கச்சி
ஏகம்பம் முன்நினைந்தே.


60


Go to top
நினைவார்க் கருளும் பிரான்திருச்
சோற்றுத் துறைநியமம்
புனைவார் சடையோன் புகலூர்
புறம்பயம் பூவணம்நீர்ப்
பனைவார் பொழில்திரு வெண்காடு
பாச்சில் அதிகையென்று
நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி
ஏகம்பம் நண்ணுமினே.


61


நண்ணிப் பரவுந் திருவா
வடுதுறை நல்லம்நல்லூர்
மண்ணில் பொலிகடம் பூர்கடம்
பந்துறை மன்னுபுன்கூர்
எண்ணற் கரிய பராய்த்துறை
ஏர்கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி
ஏகம்பம் காண்மின்சென்றே.


62


சென்றே விண்ணுறும் அண்ணா
மலைதிகழ் வல்லம்மென்பூ
வின்தேறல் பாய்திரு மாற்பேறு
பாசூர் எழிலழுந்தூர்
வன்தே ரவன்திரு விற்பெரும்
பேறு மதிலொற்றியூர்
நின்றேர் தருகச்சி ஏகம்பம்
மேயார் நிலாவியவே.


63


நிலாவு புகழ்த்திரு வோத்தூர்
திருஆமாத் தூர்நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம்
வில்வலம் கொச்சைதொண்டர்
குலாவு திருப்பனங் காடுநன்
மாகறல் கூற்றம்வந்தால்
அலாயென் றடியார்க் கருள்புரி
ஏகம்பர் ஆலயமே.


64


ஆலையங் கார்கரு காவைகச்
சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி
யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக்
கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு வாலங்கா
டேகம்பம் வாழ்த்துமினே.


65


Go to top
வாழப் பெரிதெமக் கின்னருள்
செய்யும் மலர்க்கழலோர்
தாழச் சடைத்திரு ஏகம்பர்
தம்மைத் தொழாதவர்போய்
வாழப் பரற்சுரம் ஆற்றா
தளிரடி பூங்குழலெம்
ஏழைக் கிடையிறுக் குங்குய
பாரம் இயக்குறினே.


66


உறுகின்ற வெவ்வழல் அக்கடம்
இக்கொடிக் குன்பின்வரப்
பெறுகின்ற வண்மையி னாலைய
பேரருள் ஏகம்பனார்
துறுகின்ற மென்மலர்த் தண்பொழிற்
கச்சியைச் சூழ்ந்திளையோர்
குறுகின்ற பூங்குவ ளைக்குறுந்
தண்பணை என்றுகொளே.


67


கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி
தீச்சில வேயுலறி
விள்ளும் வெடிபடும் பாலையென்
பாவை விடலைபின்னே
தெள்ளும் புனற்கச்சி யுற்திரு
ஏகம்பர் சேவடியை
உள்ளும் அதுமறந் தாரெனப்
போவ துரைப்பரிதே.


68


பரிப்பருந் திண்மைப் படையது
கானர் எனிற்சிறகு
விரிப்பருந் துக்கிரை ஆக்கும்வெய்
யேன்அஞ்சல் செஞ்சடைமேல்
தரிப்பருந் திண்கங்கை யார்திரு
வேகம்பம் அன்னபொன்னே
வரிப்பருந் திண்சிலை யேயும
ராயின் மறைகுவனே.


69


வனவரித் திண்புலி யின்னதள்
ஏகம்ப மன்னருளே
எனவரு பொன்னணங் கென்னணங்
கிற்கென் எழிற்கழங்கும்
தனவரிப் பந்துங் கெடுத்தெனைப்
புல்லியும் இற்பிரிந்தே
இனவரிக்கல்லதர் செல்வதெங்
கேயொல்லும் ஏழைநெஞ்சே.


70


Go to top
நெஞ்சார் தரவின்பம் செய்கழல்
ஏகம்பர் கச்சியன்னாள்
பஞ்சார் அடிவைத்த பாங்கிவை
ஆங்கவள் பெற்றெடுத்த
வெஞ்சார் வொழியத்தன் பின்செல
முன்செல் வெடுவெடென்ற
அஞ்சா அடுதிறற் காளைதன்
போக்கிவை அந்தத்திலே.


71


இலவவெங் கான்உனை யல்லால்
தொழேஞ்சரண் ஏகம்பனார்
நிலவுஞ் சுடரொளி வெய்யவ
னேதண் மலர்மிதித்துச்
செலவும் பருக்கை குளிரத்
தளிரடி செல்கரத்துன்
உலவுங் கதிர்தணி வித்தருள்
செய்யுன் உறுதுணைக்கே.


72


துணையொத்த கோவையும் போலெழில்
பேதையும் தொன்றலுமுன்
இணையொத்த கொங்கையொ டேயொத்த
காதலொ டேகினரே
அணையத்தர் ஏறொத்த காளையைக்
கண்டனம் மற்றவரேல்
பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே.


73


மின்நலிக் கும்வணக் கத்திடை
யாளையும் மீளியையும்
நென்னலிப் பாக்கைவந் தெய்தின
ரேலெம் மனையிற்கண்டீர்
பின்னரிப் போக்கருங் குன்று
கடந்தவர் இன்றுகம்பர்
மன்அரி தேர்ந்து தொழுங்கச்சி
நாட்டிடை வைகுவரே.


74


உவரச்சொல் வேடுடைக் காடுகந்
தாடிய ஏகம்பனார்
அவரக்கன் போன விமானத்தை
ஆயிரம் உண்மைசுற்றும்
துவரச் சிகரச் சிவாலயம்
சூலம் துலங்குவிண்மேல்
கவரக் கொடிதிளைக் குங்கச்சி
காணினுங் கார்மயிலே.


75


Go to top
கார்மிக்க கண்டத் தெழில்திரு
ஏகம்பர் கச்சியின்வாய்
ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு
வோரொலி பொன்மலைபோல்
போர்மிக்க செந்நெல் குவிப்போர்
ஒலிகருப் பாலையொலி
நீர்மிக்க மாக்கட லின்னொலி
யேயொக்கும் நேரிழையே.


76


நேர்த்தமை யாமை விறற்கொடு
வேடர் நெடுஞ்சுரத்தைப்
பார்த்தமை யாலிமை தீந்தகண்
பொன்னே பகட்டுரிவை
போர்த்தமை யாலுமை நோக்கருங்
கம்பர்கச் சிப்பொழிலுள்
சேர்த்தமை யாலிமைப் போதணி
சீதஞ் சிறந்தனவே.


77


சிறைவண்டு பாடுங் கமலம்
கிடங்கிவை செம்பழுக்காய்
நிறைகொண்ட பாளைக் கமுகின்
பொழிலிவை தீங்கனியின்
பொறைகொண்ட வாழைப் பொதும்புவை
புன்சடை ஏகம்பனார்
நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும்
இவ்வண்ணம் நன்னுதலே.


78


நன்னுத லார்கருங் கண்ணுஞ்செவ்
வாயுமிவ் வாறெனப்போய்
மன்னித ழார்திரு நீலமும்
ஆம்பலும் பூப்பவள்ளை
என்னவெ லாமொப்புக் காதென்று
வீறிடும் ஏகம்பனார்
பொன்னுத லார்விழி யார்கச்சி
நாட்டுள்இப் பொய்கையுளே.


79


உள்வார் குளிர நெருங்கிக்
கருங்கிடங் கிட்டநன்னீர்
வள்வா ளைகளொடு செங்கயல்
மேய்கின்ற எங்களையாட்
கொள்வார் பிறவி கொடாதவே
கம்பர் குளிர்குவளை
கள்வார் தருகச்சி நாட்டெழில்
ஏரிக் களப்பரப்பே.


80


Go to top
பரப்பார் விசும்பிற் படிந்த
கருமுகில் அன்னநன்னீர்
தரப்பா சிகள்மிகு பண்பொடு
சேம்படர் தண்பணைவாய்ச்
சுரப்பார் எருமை மலர்தின்னத்
துன்னு கராவொருத்தல்
பொரப்பார் பொலிநுத லாய்செல்வக்
கம்பர்தம் பூங்கச்சியே.


81


கச்சார் முலைமலை மங்கைகண்
ணாரஎண் ணான்கறமும்
வைச்சார் மகிழ்திரு ஏகம்பர்
தேவி மகிழவிண்ணோர்
விச்சா தரர்தொழு கின்ற
விமானமுந் தன்மமறா
அச்சா லையும்பரப் பாங்கணி
மாடங்கள் ஓங்கினவே.


82


ஓங்கின ஊரகம் உள்ளகம்
உம்பர் உருகிடமாம்
பாங்கினில் நின்ற தரியுறை
பாடகம் தெவ்இரிய
வாங்கின வாட்கண்ணி மற்றவர்
மைத்துனி வான்கவிகள்
தாங்கின நாட்டிருந் தாளது
தன்மனை ஆயிழையே.


83


இழையார் அரவணி ஏகம்பர்
நெற்றி விழியின்வந்த
பிழையா அருள்நம் பிராட்டிய
தின்ன பிறங்கலுன்னும்
நுழையா வருதிரி சூலத்தள்
நோக்கரும் பொன்கடுக்கைத்
தழையார் பொழில்உது பொன்னே
நமக்குத் தளர்வில்லையே.


84


தளரா மிகுவெள்ளம் கண்டுமை
ஓடித் தமைத்ததழுவக்
கிளையார் வளைக்கை வடுப்படும்
ஈங்கோர் கிறிபடுத்தார்
வளமாப் பொழில்திரு ஏகம்பம்
மற்றிது வந்திறைஞ்சி
உளரா வதுபடைத் தோம்மட
வாயிவ் வுலகத்துளே.


85


Go to top
உலவிய மின்வடம் வீசி
உருமதிர் வுள்முழங்கி
வலவிய மாமதம் பாய்முகில்
யானைகள் வானில்வந்தால்
சுலவிய வார்குழல் பின்னரென்
பாரிர் எனநினைந்து
நிலவிய ஏகம்பர் கோயிற்
கொடியன்ன நீர்மையனே.


86


நீரென்னி லும்அழுங் கண்முகில்
காள்நெஞ்சம் அஞ்சலையென்
றாரென்னி லுந்தம ராயுரைப்
பார்அம ராவதிக்கு
நேரென்னி லுந்தகும் கச்சியுள்
ஏகம்பர் நீள்மதில்வாய்ச்
சேரென்னி லுந்தங்கும் வாட்கண்ணி
தானன்பர் தேர்வரவே.


87


வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும்
ஏகம்பர் கச்சியன்னாய்
பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம்
அன்பர்தம் தேரின்முன்னே
தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன்
னாகத்தண் காந்தட்கொத்தின்
கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும்
போந்தன கார்முகிலே.


88


கார்முகம் ஆரவண் கைக்கொண்ட
கம்பர் கழல்தொழுது
போர்முக மாப்பகை வெல்லச்சென்
றார்நினை யார்புணரி
நீர்முக மாக இருண்டு
சுரந்தது நேரிழைநாம்
ஆர்முக மாக வினைக்கடல்
நீந்தும் அயர்வுயிர்ப்பே.


89


உயிரா யினவன்பர் தேர்வரக்
கேட்டுமுன் வாட்டமுற்ற
பயிரார் புயல்பெற்ற தென்னநம்
பல்வளை பான்மைகளாம்
தயிரார்பால் நெய்யொடும் ஆடிய
ஏகம்பர் தம்மருள்போல்
கையிரா வளையழுந் தக்கச்
சிறுத்தன கார்மயிலே.


90


Go to top
கார்விடை வண்ணத்தன் அன்றேழ்
தழுவினும் இன்றுதனிப்
போர்விடை பெற்றெதிர் மாண்டார்
எனவண்டர் போதவிட்டார்
தார்விடை ஏகம்பர் கச்சிப்
புறவிடைத் தம்பொன்நன்பூண்
மார்விடை வைகல் பெறுவார்
தழுவ மழவிடையே.


91


விடைபாய் கொடுமையெண் ணாதுமே
லாங்கன்னி வேல்கருங்கண்
கடைபாய் மனத்திளங் காளையர்
புல்கொலி கம்பர்கச்சி
மடைபாய் வயலிள முல்லையின்
மான்கன்றொ டான்கன்றினம்
கடைபாய் தொறும்பதி மன்றில்
கடல்போற் கலந்தெழுமே.


92


எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர்
கச்சி இருங்கடல்வாய்க்
கொழுமணப் புன்னைத் துணர்மணற்
குன்றில் பரதர்கொம்பே
செழுமலர்ச் சேலல்ல வாளல்ல
வேலல்ல நீலமல்ல
முழுமலர்க் கூரம்பின் ஓரிரண்
டாலும் முகத்தனவே.


93


முகம்பாகம் பண்டமும் பாகமென்
றோதிய மூதுரையை
உகம்பார்த் திரேலென் நலமுயர்
ஏகம்பர் கச்சிமுன்நீர்
அகம்பாக ஆர்வின் அளவில்லை
என்னின் பவளச்செவ்வாய்
நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற
வர்கொள்க நன்மயலே.


94


மயக்கத்த நல்லிருள் கொல்லும்
சுறவோ டெறிமகரம்
இயக்கத் திடுசுழி ஓதம்
கழிகிளர் அக்கழித்தார்
துயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர்
கச்சிக் கடலபொன்னூல்
முயக்கத் தகல்வு பொறாள்கொண்க
நீர்வரும் ஊர்க்கஞ்சுமே.


95


Go to top
மேயிரை வைகஅக் குருகுண
ராமது உண்டுபுன்னை
மீயிரை வண்டோ தமர்புக்
கடிய விரிகடல்வாய்ப்
பாயிரை நாகம்கொண் டோன்தொழும்
கம்பர்கச் சிப்பவ்வநீர்
தூயிரை கானல்மற் றாரறி வார்நந்
துறைவர்பொய்யே.


96


பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை
யாரையும் போகவிடா
மெய்வரும் பேரருள் ஏகம்பர்
கச்சி விரையினவாய்க்
கைவரும் புள்ளொடு சங்கினம்
ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்
அவ்வரு தாமங் களினம்வந்
தார்ப்ப அணைகின்றதே.


97


இன்றுசெய் வோமித னில்திரு
ஏகம்பர்க் கெத்தனையும்
நன்றுசெய் வோம்பணி நாளையென்
றுள்ளிநெஞ் சேயுடலில்
சென்றுசெ யாரை விடும்துணை
நாளும் விடாதடிமை
நின்றுசெய் வாரவர் தங்களின்
நீள்நெறி காட்டுவரே.


98


காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப்
பூப்பெய்யக் காதல்வெள்ளம்
ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர்
ஏதும் இலாதவெம்மைப்
பூட்டிவைத் தார்தமக் கன்பது
பெற்றுப் பதிற்றுப்பத்துப்
பாட்டிவைத் தார்பர வித்தொழு
வாமவர் பாதங்களே.


99


பாதம் பரவியொர் பித்துப்
பிதற்றினும் பல்பணியும்
ஏதம் புகுதா வகையருள்
ஏகம்பர் ஏத்தெனவே
போதம் பொருளால் பொலியாத
புன்சொல் பனுவல்களும்
வேதம் பொலியும் பொருளாம்
எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.


100


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
1.133   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்
Tune - மேகராகக்குறிஞ்சி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
2.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மறையானை, மாசு இலாப் புன்சடை
Tune - இந்தளம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
3.041   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரு ஆர் கச்சித் திரு
Tune - கொல்லி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
3.114   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;
Tune - பழம்பஞ்சுரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;
Tune - காந்தாரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனை, நகரம் மூன்றும் எரியுண
Tune - திருநேரிசை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதுவித்தாய், முன் அற உரை;
Tune - திருவிருத்தம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
5.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண்டு செய்த பழவினையின் பயன்
Tune - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
5.048   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே
Tune - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
6.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த
Tune - திருத்தாண்டகம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
6.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   உரித்தவன் காண், உரக் களிற்றை
Tune - திருத்தாண்டகம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
7.061   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஆலம் தான் உகந்து அமுது
Tune - தக்கேசி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
11.029   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி   திருஏகம்பமுடையார் திருவந்தாதி
Tune -   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 11.029