சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

11.037   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை


Add audio link Add Audio
திருந்திய சீர்ச்செந்தா மரைத் தடத்துச் சென் றோர்
இருந் தண் இளமேதி பாயப் பொருந்திய


1


புள் இரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்
கள் இரியச் செங்கழுநீர் கால்சிதையத் துள்ளிக்


2


குருகிரியக் கூன்இறவம் பாயக் கெளிறு
முருகுவிரி பொய்மையின்கண் மூழ்க வெருவுற்றக்


3


கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த்
தோட்டகத்த செந்நெல் துறைஅடையச் சேட்டகத்த


4


காவி முகம்மலரக் கார்நீலம் கண்படுப்ப
ஆவிக்கண் நெய்தல் அலமர மேவிய


5


Go to top
அன்னம் துயில்இழப்ப அம்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய


6


வள்ளை நகைகாட்ட வண்குமுதல் வாய்காட்ட
தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட மெள்ள


7


நிலவு மலணையினின்றிழிந்த சங்கம்
இலகுகதிர் நித்திலங்கள் ஈன உலவிய


8


மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய
ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் புல்லிய


9


பாசடைய செந்நெற் படர் ஒளியால் பல்கதிரோன்
தேசடைய ஓங்கும் செறுவுகளும் மாசில்நீர்


10


Go to top
நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும்
தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய மொய்த்த


11


பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கிற் சேர்த்தித் துவளாமைப்


12


பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் விட்டொளிசேர்


13


கண்கள் அழல் சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின் நீழல் தறிஅணைந்து கொண்ட


14


கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி
மலையும் மரவடிவும் கொண்டாங் கிலை நெருங்கு


15


Go to top
சூதத் திரளும் கொகுகனிக ளான்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் போதுற்


16


றினம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பும்
கனி நெருங்கு திண்கதலிக் காடும் நனிவிளங்கு


17


நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலம் சிறப்ப
ஊற்று மடுத்த உயர்பலவும் மாற்றமரு


18


மஞ்சள் எழில்வனமும் மாதுளையின் வார்பொழிலும்
இஞ்சி இளங்காவின் ஈட்டமும் எஞ்சாத


19


கூந்தற் கமுகும் குளிர்பாட லத் தெழிலும்
வாய்ந்தசீர்ச் சண்பகத்தின் வண்காடும் ஏந்தெழில்ஆர்


20


Go to top
மாதவியும் புன்னையும் மன்நும் மலர்க்குரவும்
கேதையும் எங்கும் கெழீஇப் போதின்


21


இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின் மாடே கிளர்ந்தெங்கும்


22


ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் ஆலும்


23


அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை ஒலிப்ப வெறிகமழும்


24


நந்தா வனத்தியல்பும் நற்றவத் தோர் சார்விடமும்
அந்தமில் சீரார் அழகினால் முந்திப்


25


Go to top
புகழ்வாரும் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே திகழ


26


முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ் போகி வளர


27


இரும்பதணம் சேர இருத்தி எழில் நாஞ்சில்
மருங்கணைய அட்டாலை யிட்டுப் பொருந்தியசீர்த்


28


தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்
காமரமும் ஏப்புழையும் கைகலந்து மீ மருவும்


29


வெங்கதிரோன் தேர்விலங்க மிக் குயர்ந்த மேருப் போன்று
அங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் பொங்கிகொளிசேர்


30


Go to top
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் வாளொளிய


31


நாடக சாலையும் நன்பொற் கபோதகம் சேர்
பீடமைத்த மாடத்தின் பெற்றியும் கேடில்


32


உருவு பெறவகுத்த அம்பலமும்ஓங்கு
தெருவும் வகுத்தசெய் குன்றும் மருவினிய


33


சித்திரக் காவும் செழும் பொழிலும் வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் எத்திசையும்


34


துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் பொன்னும்


35


Go to top
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி
இரவலருக் கெப்போதும் ஈந்து கரவாது


36


கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்
தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத செப்பத்தால்


37


பொய்மை கடிந்து புகழ்புரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் உண்மை


38


மறைபயில்வார் மன்னும் வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் முறைமையால்


39


ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் சோகமின்றி


40


Go to top
நீதி நிலையுணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறு வார் ஆதி


41


அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் ஒருங்கிருந்து


42


காமநூல் கேட்பார் கலைஞானங் காதலிப்பார்
ஒமநூல் ஒதுவார்க் குத்தரிப்பார் பூமன்னும்


43


நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாவும் தகைமைத்தாய் நாமன்னும்


44


ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத் தினிதிருந்து சீரணங்கு


45


Go to top
வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப்
பாணம் பயில்வார் பயன்உறுவார் பேணியசீர்ப்


46


பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற் பயில்வார்
பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவா ராய் எங்கும்


47


மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய


48


வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார்
கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் மாதரார்


49


பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்
மேவும் ஒலியும் வியன்நகரங் காவலர்கள்


50


Go to top
பம்பைத் துடிஒலியும் பவ்வப் படைஒலியும்
கம்பக் களிற்றொலியும் கைகலந்து நம்பிய


51


கார்முழுக்கம் மற்றைக் கடல்முழுக்கம் போற்கலந்த
சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் பார்விளங்கு


52


செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய


53


ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்களூர்
வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர் ஆலித்து


54


மன்னிருகால் வேளை வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தஊர் மன்னும்


55


Go to top
பிரமன்ஊர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை
அரன்மன்னு தண்காழி அம்பொற் சிரபுரம்


56


பூந்தராய் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணிபுரம் மறையோர் ஏய்ந்த


57


புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் திகழ்கின்ற


58


மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்
ஒல்லைக் கழுவில் உலக்கவும் எல்லையிலா


59


மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் ஆதியாம்


60


Go to top
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஒங்கவும் துன்றிய


61


பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய


62


சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன
வந்தங் கவதரித்த வள்ளலை அந்தமில் சீர்


63


ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்


64


தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை முத்தமிழின்


65


Go to top
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வருயிர்
அஞ்சத் திகழ்ந்த அடலுருமை எஞ்சாமை


66


ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் தீதறுசீர்க்


67


காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத்


68


திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த
ஒரு நாமத் தால்உயர்ந்த கோவை வருபெரு நீர்ப்


69


பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை முன்னே


70


Go to top
நிலவு முருகற்கும் நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் குலவிய


71


தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
மாழைஒண்கண் மாதர் மதனனைச் சூழொளிய


72


கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக் காதலால்


73


புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு தவரை
வண்கழுவில் வைத்த மறையோனை ஒண்கெழுவு


74


ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்த லாக்கியும் காலத்து


75


Go to top
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பலவிடங்கள் தீர்த்தும் முன் நேரெழுந்த


76


யாழை முரித்தும் இருங்கதவம் தான் அடைத்தும்
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் தாழ்பொழில்சூழ்


77


கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை தொகுமிழலை அங்கதனில்


78


நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதல் கொண்டு அத்தகுசீர்


79


மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொ னதுகொண்டும் ஆய்வரிய


80


Go to top
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைக ளாக்கியும் பாண்பரிசில்


81


கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டும் தராதலத்துள் எப்பொழுதும்


82


நீக்கரிய இன்பத் திராகமிருக் குக்குறள்
நோக்கரிய பாசுரம் பல் பத்தோடு மாக்கரிய


83


யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய ஊழி


84


உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை விருப்போடு


85


Go to top
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் பண்அமரும்


86


ஒலக்கத் துள்இருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்
கோலக் கடைகுறுகிக் கும்பிட் டாங் காலும்


87


புகலி வளநகருட் பூசுரர் புக் காங்
கிகல்இல் புகழ்பரவி ஏத்திப் புகலிசேர்


88


வீதி எழுந்தருள வேண்டும் என விண்ணப்பம்
ஆதரத்தால் செய்ய அவர்க்கருளி நீதியால்


89


கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கணைத்துக் கோதில்


90


Go to top
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு
மருவோடு மல்லிகையை வைத் தாங் கருகே


91


கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து முருகியலும்


92


புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய


93


வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப மௌவல் அலர் படைப்பத்
தண் குருந்தம் மாடே தலை இறக்க ஒண்கமலத்


94


தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம் புனைவித்துக் காதில்


95


Go to top
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில்
இனமணியின் ஆரம் இலகப் புனை கனகத்


96


தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து மணிக்கண் டிகைபூண்டு முத்தடுத்த


97


கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல் வலம்திகழ ஏயும்


98


தமனியத்தின் தாழ்வடமும் தண்தரளக் கோப்பும்
சிமய வரை மார்பிற் சேர்த்தி அமைவுற்ற


99


வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்


100


Go to top
காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ
கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து சீற்றத்


101


தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்
புழைத் தடக்கை கொண்டெறிந்து பொங்கி மழை மதத்தால்


102


பூத்த கடதடத்துப் போகம் மிகபொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் கோத்த


103


கொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித்
திடுவண்டை இட்டுக் கலித்து முடுகி


104


நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகற் நீத்
திடிபெயரத் தாளத் திலுப்பி அடுசினத்தால்


105


Go to top
கன்ற முகம் பருகிக் கையெடுத் தாராய்ந்து
வென்றி மருப்புருவ வெய்துயிர்த் தொன்றிய


106


கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை நிகர் அழித் தோடிப்


107


பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பில் வீசி அணைப்பரிய


108


ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கள்தாம்
மாடணையக் கொண்டு வருதலுமே கூடி


109


நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று
வியந்தணுகி வேட்டம் தணித் தாங் குயர்ந்த


110


Go to top
உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண் டாங்
கடற்கூடற் சந்தி அணுகி அடுத்த


111


பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி
அயர்வு கெடஅணைத்த தட்டி உயர்வுதரு


112


தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத்
தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் எண்டிசையும்


113


பல்சனமும் மாவும் படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர மல்லற்


114


பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்
கருத்தோ டிசைகவிஞர் பாட விரித்த


115


Go to top
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்பக் கடைபடு


116


வீதி அணுகுதலும் மெல்வளையார் உள்மகிழ்ந்து
காதல் பெருகிக் கலந்தெங்கும் சோதிசேர்


117


ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும்
சேடரங்கு நீள்மறுகும் தெற்றியிலும் பீடுடைய


118


பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் சீர்விளங்கப்


119


பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டுச் சேண் மறுகில்


120


Go to top
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் காண்டலுமே


121


கைதொழுவார் நின்று கலைசரிவார் மால் கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள் போய் வீழ்வார் வெய்துயிர்த்துப்


122


பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார்
காம்பனைய மென்தோள் கவின்கழிவார் தாம் பயந்து


123


வென்றிவேற் சேய் என்ன வேனில் வேள் கோ என்ன
அன் றென்ன ஆம் என்ன ஐயுற்றுச் சென்றணுகிக்


124


காழிக் குலமதலை என்றுதம் கைசோர்ந்து
வாழி வளைசரிய நின்றயர்வார் பாழிமையால்


125


Go to top
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை
மெள்ள நட என்று வேண்டுவார் கள்ளலங்கல்


126


தாராமை யன்றியும் தையல்நல் லார்முகத்தைப்
பாராமை சாலப் பயன் என்பார் நேராக


127


என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது
நன்மை நமக்குண் டெனநயப்பார் கைம்மையால்


128


ஒண்கலையும் நாணும் உடைத்துகிலும் தோற்றவர்கள்
வண்கமலத் தார்வலிந்து கோடும் எனப் பண்பின்


129


வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத் ததரத் தொண்டை துடிப்பப் பொடித்தமுலைக்


130


Go to top
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து புறப்படுவார் வாசச்


131


செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்
கழுமலத்தார் கோவே கழல்கள் தொழுவார்கள்


132


அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மையோ என்று செப்புவார் நங்கையீர்


133


இன்றிவன் நலகுமே எண்பெருங் குன்றத்தின்
அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் பொன்ற


134


உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து விரைமலர்த்தார்


135


Go to top
பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் மற்றிவனே


136


பெண் இரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்
நண்ணு கடுவித்தால் நாட்சென்று விண்ணுற்ற


137


ஆரூயிரை மீட் டன்று றவளை அணிமருகல்
ஊரறிய வைத்த தென உரைப்பார் பேரிடரால்


138


ஏசுவார் தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன்
பேசுவார் நின்று தம் பீடழிவார் ஆசையால்


139


நைவார் நலன்அழிவார் நாணோடு பூண் இழப்பார்
மெய்வாடு வார் வெகுள்வார் வெய்துயிர்ப்பார் தையலார்


140


Go to top
பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்
சாந்தம் என மெய்யில் தைவருவார் வாய்ந்த


141


கிளி என்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை
ஒளிமே கலை என் றுடுப்பார் அளிமேவு


142


பூங்குழலார் மையலாய்க் கைதொழமுன் போதந்தான்
ஒங்கொலிசேர் வீதி உலா.


143



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 11.037