படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண் இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள் விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.
|
1
|
கரவலாளர் தம்மனைக் கடைகடோறுங் கானிமிர்த் திரவலாழி நெஞ்சமே யினியதெய்த வேண்டில்நீ குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர் விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.
|
2
|
உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல் அள்ளற்சேற்றிற் காலிட்டிங் கவலத்துள் ளழுந்தாதே கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள் வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.
|
3
|
கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும் இனையபலவு மூப்பினோ டெய்திவந்து நலியாமுன் பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர் வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.
|
4
|
உளங்கொள்போக முய்த்திடா ருடம்பிழந்த போதின்கண் துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.
|
5
|
Go to top |
கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும் ஆடுபோல நரைகளா யாக்கைபோக்க தன்றியும் கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள் வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.
|
6
|
உரையும்பாட்டுந் தளர்வெய்தி யுடம்புமூத்த போதின்கண் நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர் நமர்க ளாதலால் வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.
|
7
|
ஏதமிக்க மூப்பினோ டிருமலீளை யென்றிவை ஊதலாக்கை யோம்புவீ ருறுதியாவ தறிதிரேல் போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவலூர்தனுள் வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.
|
8
|
ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனுள் நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.
|
9
|
குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும் அறிவிலாத வமணர்சொல் லவத்தமாவ தறிதிரேல் பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள் வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.
|
10
|
Go to top |
கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன் பழிகள்தீரச் சொன்னசொற் பாவநாச மாதலால் அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனுள் விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.
|
11
|