பந்து சேர்விர லாள்பவ ளத்துவர் வாயி னாள்பனி மாமதி போன்முகத் தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான் வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந் நிறைந் துவலஞ் செய்து மாமலர் புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.
|
1
|
காவி யங்கருங் கண்ணி னாள்கனித் தொண்டை வாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத் தூவி யம்பெடை அன்னந டைச்சுரி மென்குழலாள் தேவி யும்திரு மேனியோர் பாகமாய் ஒன்றி ரண்டொரு மூன்றொடு சேர்பதி பூவி லந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே.
|
2
|
பைய ராவரும் அல்குன் மெல்லியல் பஞ்சின் நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத் தைய லாள்ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம் செய்யெ லாங்கழு நீர்கம லம்மலர்த் தேற லூறலிற் சேறுல ராதநற் பொய்யி லாமறை யோர்பயில் பூந்தராய் போற்றுதுமே.
|
3
|
முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின் அரும்பு தேன்கொள் குரும்பைமூ வாமருந் துள்ளி யன்றபைம் பொற்கல சத்தியல் ஒத்தமுலை வெள்ளி மால்வரை அன்னதோர் மேனியின் மேவி னார்பதி வீமரு தண்பொழிற் புள்ளி னந்துயின் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.
|
4
|
பண்ணி யன்றெழு மென்மொழி யாள்பகர் கோதை யேர்திகழ் பைந்தளிர் மேனியோர் பெண்ணி யன்றமொய்ம் பிற்பெரு மாற்கிடம் பெய்வளையார் கண்ணி யன்றெழு காவிச் செழுங்கரு நீல மல்கிய காமரு வாவிநற் புண்ணி யருறை யும்பதி பூந்தராய் போற்றுதுமே.
|
5
|
Go to top |
வாணி லாமதி போல்நுத லாள்மட மாழை யொண்க ணாள்வண்ட ரளந்நகை பாணி லாவிய இன்னிசை யார்மொழிப் பாவையொடும் சேணி லாத்திகழ் செஞ்சடை யெம்மண்ணல் சேர்வ துசிக ரப்பெருங் கோயில்சூழ் போணி லாநுழை யும்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.
|
6
|
காரு லாவிய வார்குழ லாள்கயற் கண்ணி னாள்புயற் காலொளி மின்னிடை வாரு லாவிய மென்முலை யாள்மலை மாதுடனாய் நீரு லாவிய சென்னி யன்மன்னி நிகரும் நாமமுந் நான்கு நிகழ்பதி போரு லாவெயில் சூழ்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.
|
7
|
காசை சேர்குழ லாள்கயல் ஏர்தடங் கண்ணி காம்பன தோள்கதிர் மென்முலைத் தேசு சேர்மலை மாதம ருந்திரு மார்பகலத் தீசன் மேவும் இருங்கயி லையெடுத் தானை அன்றடர்த் தானிணைச் சேவடி பூசை செய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.
|
8
|
கொங்கு சேர்குழ லாள்நிழல் வெண்ணகைக் கொவ்வை வாய்க்கொடி யேரிடை யாள்உமை பங்கு சேர்திரு மார்புடை யார்படர் தீயுருவாய் மங்குல் வண்ணனு மாமல ரோனும் மயங்க நீண்டவர் வான்மிசை வந்தெழு பொங்கு நீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே.
|
9
|
கலவ மாமயி லார்இய லாள்கரும் பன்ன மென்மொழி யாள்கதிர் வாள்நுதற் குலவு பூங்குழ லாள்உமை கூறனை வேறுரையால் அலவை சொல்லுவார் தேர்அமண் ஆதர்கள் ஆக்கி னான்றனை நண்ணலும் நல்கும்நற் புலவர் தாம்புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே.
|
10
|
Go to top |
தேம்பல் நுண்ணிடை யாள்செழுஞ் சேலன கண்ணி யோடண்ணல் சேர்விடம் தேன்அமர் பூம்பொ ழில்திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதும்என் றோம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞான சம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண் டாம்படி இவை ஏத்தவல் லார்க்குஅடை யாவினையே.
|
11
|