மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.
|
1
|
வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன ஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பன தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய ஆதிஅந் தம்மிலா அடிகள்வே டங்களே.
|
2
|
மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வன வானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வன தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி ஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே.
|
3
|
செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.
|
4
|
விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறி மண்ணுலா வும்நெறி மயக்கந்தீர்க் கும்நெறி தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி அண்ணலா னேறுடை அடிகள்வே டங்களே.
|
5
|
Go to top |
பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படும் திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி அங்கம்ஆ றும்சொன்ன அடிகள்வே டங்களே.
|
6
|
கரைதல்ஒன் றும்மிலை கருதவல் லார்தமக் குரையில்ஊ னம்மிலை உலகினின் மன்னுவர் திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.
|
7
|
உலகமுட் குந்திறல் உடையரக் கன்வலி விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி அலர்தயங் கும்முடி அடிகள்வே டங்களே.
|
8
|
துளக்கம்இல் லாதன தூயதோற் றத்தன விளக்கம்ஆக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில் திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால் அளக்கஒண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.
|
9
|
செருமரு தண்டுவர்த் தேரம ணாதர்கள் உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல் திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி அருமருந் தாவன அடிகள்வே டங்களே.
|
10
|
Go to top |
சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை மாடம்ஓங் கும்பொழின் மல்குதண் காழியான் நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.
|
11
|