எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானென விறைஞ்சியிமையோர் வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால் அந்தியமர் சந்திபல வர்ச்சனைகள் செய்யவமர் கின்றவழகன் சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே.
|
1
|
அங்கம்விரி துத்தியர வாமைவிர வாரமமர் மார்பிலழகன் பங்கய முகத்தரிவை யோடுபிரி யாதுபயில் கின்றபதிதான் பொங்குபர வைத்திரை கொணர்ந்துபவ ளத்திரள் பொலிந்தவயலே சங்குபுரி யிப்பிதர ளத்திரள் பிறங்கொளிகொள் சண்பைநகரே.
|
2
|
போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன் யாழின்மொழி மாழைவிழி யேழையிள மாதினொ டிருந்தபதிதான் வாழைவளர் ஞாழன்மகிழ் மன்னுபுனை துன்னுபொழின் மாடுமடலார் தாழைமுகிழ் வேழமிகு தந்தமென வுந்துதகு சண்பைநகரே.
|
3
|
கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும் பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான் வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார் சட்டகலை யெட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே.
|
4
|
பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரி யாதபர மேட்டிபகவன் அணங்கெழுவு பாகமுடை யாகமுடை யன்பர்பெரு மானதிடமாம் இணங்கெழுவி யாடுகொடி மாடமதி னீடுவிரை யார் புறவெலாந் தணங்கெழுவி யேடலர்கொ டாமரையி லன்னம்வளர் சண்பைநகரே.
|
5
|
Go to top |
பாலனுயிர் மேலணவு காலனுயிர் பாறவுதை செய்தபரமன் ஆலுமயில் போலியலி யாயிழைத னோடுமமர் வெய்துமிடமாம் ஏலமலி சோலையின வண்டுமலர் கிண்டிநற வுண்டிசைசெயச் சாலிவயல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பைநகரே.
|
6
|
விண்பொயத னான்மழைவி ழாதொழியி னும்விளைவு தான்மிகவுடை மண்பொயத னால்வளமி லாதொழியி னுந்தமது வண்மைவழுவார் உண்பகர வாருலகி னூழிபல தோறுநிலை யானபதிதான் சண்பைநக ரீசனடி தாழுமடி யார்தமது தன்மையதுவே.
|
7
|
வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை அரக்கனது ரக்கரசி ரத்துற வடர்த்தருள் புரிந்தவழகன் இருக்கையத ருக்கன்முத லானவிமை யோர்குழுமி யேழ்விழவினிற் றருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே.
|
8
|
நீலவரை போலநிகழ் கேழலுரு நீள்பறவை நேருருவமாம் மாலுமல ரானுமறி யாமைவளர் தீயுருவ மானவரதன் சேலுமின வேலுமன கண்ணியொடு நண்ணுபதி சூழ்புறவெலாஞ் சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே.
|
9
|
போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை யுண்டுபலபொய் ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை நன்றதுணர் வீருரைமினோ ஆதியெமை யாளுடைய வரிவையொடு பிரிவிலி யமர்ந்தபதிதான் சாதிமணி தெண்டிரை கொணர்ந்துவயல் புகவெறிகொள் சண்பைநகரே.
|
10
|
Go to top |
வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்தமருமூர் சாரின்முர றென்கடல் விசும்புற முழங்கொலிகொள் சண்பைநகர்மேற் பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய் சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியே.
|
11
|