இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக் கடறினா ராவர் காற்றுளா ராவர் காதலித் துறைதரு கோயில் கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க் கோவணங் கொண்டுகூத் தாடும் படிறனார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.
|
1
|
கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங் காட்டுளார் நாட்டுளா ரெனவும் வழியுளா ரெனவு மலையுளா ரெனவு மண்ணுளார் விண்ணுளா ரெனவும் சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார் தொண்டர்வாய் வந்தன சொல்லும் பழியுளார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.
|
2
|
காட்டினா ரெனவு நாட்டினா ரெனவுங் கடுந்தொழிற் காலனைக் காலால் வீட்டினா ரெனவுஞ் சாந்த வெண்ணீறு பூசியோர் வெண்மதி சடைமேல் சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார் சொல்லுள சொல்லுநால் வேதப் பாட்டினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.
|
3
|
முருகினார் பொழில்சூ ழுலகினா ரேத்த மொய்த்தபல் கணங்களின் துயர்கண் டுருகினா ராகி யுறுதிபோந் துள்ள மொண்மையா லொளிதிகழ் மேனி கருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக் கடலுணஞ் சமுதமா வாங்கிப் பருகினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.
|
4
|
பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து பொறிகிளர் பூணநூல் புரள மின்னினா ருருவின் மிளிர்வதோ ரரவ மேவுவெண் ணீறுமெய் பூசித் துன்னினார் நால்வர்க் கறமமர்ந் தருளித் தொன்மையார் தோற்றமுங் கேடும் பன்னினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.
|
5
|
Go to top |
ஒண்பொனா ரனைய வண்ணல்வாழ் கெனவு முமையவள் கணவன்வாழ் கெனவும் அண்பினார் பிரியா ரல்லுநன் பகலு மடியவ ரடியிணை தொழவே நண்பினா ரெல்லா நல்லரென் றேத்த அல்லவர் தீயரென் றேத்தும் பண்பினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.
|
6
|
எற்றினா ரேது மிடைகொள்வா ரில்லை யிருநிலம் வானுல கெல்லை தெற்றினார் தங்கள் காரண மாகச் செருமலைந் தடியிணை சேர்வான் முற்றினார் வாழு மும்மதில் வேவ மூவிலைச் சூலமு மழுவும் பற்றினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.
|
7
|
ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையா லாடல றாத கலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலு மரக்கன் வலிகொள்வர் புலியி னுரிகொள்வ ரேனை வாழ்வுநன் றானுமோர் தலையில் பலிகொள்வர் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.
|
8
|
சேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ் செங்கண்மா லிவரிரு கூறாத் தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார் துணைமையும் பெருமையுந் தம்மில் சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச் சரண்கொடுத் தவர்செய்த பாவம் பாற்றினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.
|
9
|
கல்லிசை பூணக் கலையொலி யோவாக் கழுமல முதுபதி தன்னில் நல்லிசை யாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம் பந்தன் பல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி மேவிய பந்தணை நல்லூர் சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல் தொல்வினை சூழகி லாவே.
|
11
|