பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா இருத்தியெப் பொழுதும் நெஞ்சு ளிறைவனை யேத்து மின்கள் ஒருத்தியைப் பாகம் வைத்தங் கொருத்தியைச் சடையுள் வைத்த துருத்தியஞ் சுடரி னானைத் தொண்டனேன் கண்ட வாறே.
|
1
|
சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்ற இவையொரு பொருளு மல்ல விறைவனை யேத்து மின்னோ அவைபுர மூன்று மெய்து மடியவர்க் கருளிச் செய்த சுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
|
2
|
உன்னியெப் போதும் நெஞ்சு ளொருவனை யேத்து மின்னோ கன்னியை யொருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப் பொன்னியி னடுவு தன்னுட் பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
|
3
|
ஊன்றலை வலிய னாகி யுலகத்து ளுயிர்கட் கெல்லாம் தான்றலைப் பட்டு நின்று சார்கன லகத்து வீழ வான்றலைத் தேவர் கூடி வானவர்க் கிறைவா வென்னும் தோன்றலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
|
4
|
உடறனைத் கழிக்க லுற்ற வுலகத்து ளுயிர்கட் கெல்லாம் இடர்தனைக் கழிய வேண்டி லிறைவனை யேத்து மின்னோ கடறனி னஞ்ச முண்டு காண்பரி தாகி நின்ற சுடர்தனைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
|
5
|
Go to top |
அள்ளலைக் கடக்க வேண்டி லரனையே நினைமி னீர்கள் பொள்ளலிக் காயந் தன்னுட் புண்டரீ கத்தி ருந்த வள்ளலை வான வர்க்குங் காண்பரி தாகி நின்ற துள்ளலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
|
6
|
பாதியி லுமையா டன்னைப் பாகமா வைத்த பண்பன் வேதிய னென்று சொல்லி விண்ணவர் விரும்பி யேத்தச் சாதியாஞ் சதுர்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச் சோதியைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
|
7
|
சாமனை வாழ்க்கை யான சலத்துளே யழுந்த வேண்டா தூமநல் லகிலுங் காட்டித் தொழுதடி வணங்கு மின்னோ சோமனைச் சடையுள் வைத்துத் தொன்னெறி பலவுங் காட்டும் தூமனத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
|
8
|
குண்டரே சமணர் புத்தர் குறியறி யாது நின்று கண்டதே கருது வார்கள் கருத்தெண்ணா தொழிமி னீர்கள் விண்டவர் புரங்க ளெய்து விண்ணவர்க் கருள்கள் செய்த தொண்டர்க டுணையி னானைத் துருத்திநான் கண்ட வாறே.
|
9
|
பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் பிரானையே பிதற்று மின்கள் அண்டத்தைக் கழிய நீண்ட வடலரக் கன்ற னாண்மை கண்டொத்துக் கால்வி ரலா லூன்றிமீண் டருளிச் செய்த துண்டத்துத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
|
10
|
Go to top |