தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே மலைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
|
1
|
பிடித்தாட்டிஓர் நாகத்தைப் பூண்டதென்னே பிறங்குஞ்சடை மேற்பிறை சூடிற்றென்னே பொடித்தான்கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே புகர்ஏறுகந் தேறல் புரிந்ததென்னே மடித்தோட்டந்து வன்றிரை யெற்றியிட வளர்சங்கம்அங் காந்துமுத் தஞ்சொரிய அடித்தார்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
|
2
|
சிந்தித்தெழு வார்க்குநெல் லிக்கனியே சிறியார்பெரி யார்மனத் தேறலுற்றால் முந்தித்தொழு வார்இற வார்பிறவார் முனிகள்முனி யேஅம ரர்க்கமரா சந்தித்தட மால்வரை போற்றிரைகள் தணியாதிட றுங்கட லங்கரைமேல் அந்தித்தலைச் செக்கர்வா னேஒத்தியால் அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
|
3
|
இழைக்கும்மெழுத் துக்குயி ரேஒத்தியால் இலையேஒத்தி யால்உளை யேஒத்தியால் குழைக்கும்பயிர்க் கோர்புய லேஒத்தியால் அடியார்தமக் கோர்குடி யேஒத்தியால் மழைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டழைக்குங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
|
4
|
வீடின்பய னென்பிறப் பின்பயனென் விடையேறுவ தென்மத யானை நிற்கக் கூடும்மலை மங்கை யொருத்தியுடன் சடைமேற்கங்கை யாளைநீ சூடிற்றென்னே பாடும்புல வர்க்கரு ளும்பொருளென் நெதியம்பல செய்த கலச்செலவின் ஆடுங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
|
5
|
Go to top |
இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே இறந்தார்தலை யிற்பலி கோடலென்னே பரவித்தொழு வார்பெறு பண்டமென்னே பரமாபர மேட்டி பணித்தருளாய் உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தங் கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டரவக்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
|
6
|
ஆக்கும்மழி வும்மைய நீயென்பன்நான் சொல்லுவார்சொற் பொருளவை நீயென்பன்நான் நாக்கும்செவி யும்கண்ணும் நீயென்பன்நான் நலனேஇனி நான்உனை நன்குணர்ந்தேன் நோக்குந்நெதி யம்பல எத்தனையும் கலத்திற்புகப் பெய்துகொண் டேறநுந்தி ஆர்க்குங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
|
7
|
வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் விளங்குங்குழைக் காதுடை வேதியனே இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத் தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக் கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டங் கடுகப்பிர மன்தலை யைந்திலும்ஒன் றறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
|
8
|
பிடிக்குக்களி றேஒத்தி யால்எம்பிரான் பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான் நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச் சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன் வடிக்கின்றன போற்சில வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டடிக்குங்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.
|
9
|
எந்தம்மடி களிமை யோர்பெருமான் எனக்கென்றும் அளிக்கும் மணிமிடற்றன் அந்தண்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனை மந்தம்முழ வுங்குழ லும்மியம்பும் வளர்நாவலர் கோன்நம்பி ஊரன்சொன்ன சந்தம்மிகு தண்தமிழ் மாலைகள்கொண் டடிவீழவல் லார்தடு மாற்றிலரே.
|
10
|
Go to top |