திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள்என் றெண்ணி ஒருவரை மதியா துறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன் முருகமர் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே
|
1
|
கூடிய இலயஞ் சதிபிழை யாமைக் கொடியிடை உமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்குற்றாய் என்று தேடிய வானோர் சேர்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே
|
2
|
விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம்அன் றுரித்தாய் செண்பகச் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் தேவர்தம் அரசே தண்பொழில் ஒற்றி மாநக ருடையாய் சங்கிலிக் காஎன்கண் கொண்ட பண்பநின் அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே
|
3
|
பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப் பொறிவரி வண்டிசை பாட அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன்வந் துலவிட அள்ளற் செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய் பாசுப தாபரஞ் சுடரே
|
4
|
சந்தன வேருங் காரகிற் குறடுந் தண்மயிற் பீலியுங் கரியின் தந்தமுந் தரளக் குவைகளும் பவளக் கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி வந்திழி பாலி வடகரை முல்லை வாயிலாய் மாசிலா மணியே பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே
|
5
|
Go to top |
மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசிக் குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கையான் மிகைபல செய்தேன் செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயிலாய் அடியேன் பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே
|
6
|
மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயிற் சாயல் அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார் அருநடம் ஆடல்அ றாத திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற் செல்வனே எல்லியும் பகலும் பணியது செய்வேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே
|
7
|
நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில் நாயினேன் றன்னைஆட் கொண்ட சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில் தேடியான் திரிதர்வேன் கண்ட பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே
|
8
|
மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும் மாணிதன் மேல்மதி யாதே கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற் செல்வனே செழுமறை பகர்ந்த பட்டனே அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே
|
9
|
சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் கட்டிட் டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட் டருளிய இறைவனே என்றும் நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில் நாதனே நரைவிடை ஏறீ பல்கலைப் பொருளே படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே
|
10
|
Go to top |
விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்டஎம் மானைத் திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற் செல்வனை நாவல்ஆ ரூரன் உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும் உள்குளிர்ந் தேத்தவல் லார்கள் நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க் கரசே
|
11
|