சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.150   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

சீர்மன்னு செல்வக் குடிமல்கு
சிறப்பின் ஓங்கும்
கார்மன்னு சென்னிக் கதிர்மாமணி
மாட வைப்பு
நார்மன்னு சிந்தைப் பலநற்றுறை
மாந்தர் போற்றும்
பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது
பாண்டி நாடு.
1

சாயுந் தளிர்வல்லி மருங்குல்
நெடுந்த டங்கண்
வேயும் படுதோளியர் பண்படும்
இன்சொற் செய்ய
வாயும் படும்நீள்கரை மண்பொரும்
தண்பொ ருந்தம்
பாயுங் கடலும்படும் நீர்மை
பணித்த முத்தம்.
2

மொய்வைத்த வண்டின் செறிசூழல்
முரன்ற சந்தின்
மைவைத்த சோலை மலையந்தர
வந்த மந்த
மெய்வைத்த காலும் தரும்ஞாலம்
அளந்த மேன்மைத்
தெய்வத்தமி ழுந்தருஞ் செவ்வி
மணஞ்செய் ஈரம்.
3

சூழுமிதழ்ப் பங்கய மாகஅத்
தோட்டின் மேலாள்
தாழ்வின்றி யென்றுந் தனிவாழ்வதத்
தையல் ஒப்பார்
யாழின் மொழியிற் குழலின்னிசை
யுஞ்சு ரும்பும்
வாழும் நகரம் மதுராபுரி
என்ப தாகும்.
4

சால்பாய மும்மைத் தமிழ்தங்கிய
அங்கண் மூதூர்
நூல்பா யிடத்தும் உளநோன்றலை
மேதி பாயப்
பால்பாய் முலைதோய் மதுப்பங்கயம்
பாய எங்கும்
சேல்பாய் தடத்தும் உளசெய்யுள்மிக்
கேறு சங்கம்.
5
Go to top

மந்தாநிலம் வந்தசை பந்தரின்
மாட முன்றில்
பந்தாடிய மங்கையர் பங்கயச்
செங்கை தாங்கும்
சந்தார்முலை மேலன தாழ்குழை
வாள்மு கப்பொற்
செந்தாமரை மேலன நித்திலம்
சேர்ந்த கோவை.
6

மும்மைப் புவனங்களின் மிக்கதன்
றேஅம் மூதூர்
மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின்
விளங்கு வாய்மைச்
செம்மைப் பொருளுந் தருவார்திரு
வால வாயில்
எம்மைப் பவந்தீர்ப் பவர்சங்கம்
இருந்த தென்றால்.
7

அப்பொற் பதிவாழ் வணிகர்குலத்
தான்ற தொன்மைச்
செப்பத் தகுசீர்க் குடிசெய்தவம்
செய்ய வந்தார்
எப்பற் றினையும்அறுத் தேறுகைத்
தேறு வார்தாள்
மெய்ப்பற் றெனப்பற்றி விடாத
விருப்பின் மிக்கார்.
8

நாளும் பெருங்கா தல்நயப்புறும்
வேட்கை யாலே
கேளுந் துணையும் முதற்கேடில்
பதங்க ளெல்லாம்
ஆளும் பெருமான் அடித்தாமரை
அல்ல தில்லார்
மூளும் பெருகன் பெனும்மூர்த்தியார்
மூர்த்தி யார்தாம்.
9

அந்திப் பிறைசெஞ் சடைமேல்அணி
ஆல வாயில்
எந்தைக் கணிசந் தனக்காப்பிடை
என்றும் முட்டா
அந்தச் செயலி னிலைநின்றடி
யாரு வப்பச்
சிந்தைக் கினிதாய திருப்பணி
செய்யும் நாளில்.
10
Go to top

கானக் கடிசூழ் வடுகக்கரு
நாடர் காவன்
மானப் படைமன்னன் வலிந்து
நிலங்கொள் வானாய்
யானைக் குதிரைக் கருவிப்படை
வீரர் திண்தேர்
சேனைக் கடலும் கொடுதென்றிசை
நோக்கி வந்தான்.
11

வந்துற்ற பெரும்படை மண்புதை
யப்ப ரப்பிச்
சந்தப் பொதியில்தமிழ் நாடுடை
மன்னன் வீரம்
சிந்தச் செருவென்று தன்னாணை
செலுத்து மாற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுராபுரி
காவல் கொண்டான்.
12

வல்லாண் மையின்வண் டமிழ்நாடு
வளம்ப டுத்து
நில்லா நிலையொன்றிய இன்மையின்
நீண்ட மேரு
வில்லான் அடிமைத் திறமேவிய
நீற்றின் சார்பு
செல்லா தருகந்தர் திறத்தினில்
சிந்தை தாழ்ந்தான்.
13

தாழுஞ் சமண்கையர் தவத்தைமெய்
யென்று சார்ந்து
வீழுங் கொடியோன் அதுவன்றியும்
வெய்ய முன்னைச்
சூழும் வினையால் அரவஞ்சுடர்த்
திங்க ளோடும்
வாழுஞ் சடையா னடியாரையும்
வன்மை செய்வான்.
14

செக்கர்ச் சடையார் விடையார்திரு
வால வாயுள்
முக்கட் பரனார் திருத்தொண்டரை
மூர்த்தி யாரை
மைக்கற் புரைநெஞ் சுடைவஞ்சகன்
வெஞ்ச மண்பேர்
எக்கர்க் குடனாக இகழ்ந்தன
செய்ய எண்ணி.
15
Go to top

அந்தம் இலவாம் மிறைசெய்யவும்
அன்ப னார்தாம்
முந்தைம் முறைமைப் பணிமுட்டலர்
செய்து வந்தார்
தந்தம் பெருமைக் களவாகிய
சார்பில் நிற்கும்
எந்தம் பெருமக் களையாவர்
தடுக்க வல்லார்.
16

எள்ளுஞ்செயல் வன்மைகள் எல்லையில்
லாத செய்யத்
தள்ளுஞ்செய லில்லவர் சந்தனக்
காப்புத் தேடிக்
கொள்ளுந்துறை யும்அடைத் தான்கொடுங்
கோன்மை செய்வான்
தெள்ளும்புனல் வேணியர்க் கன்பரும்
சிந்தை நொந்து.
17

புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற்
போது போக்கும்
வன்மைக் கொடும்பா தகன்மாய்ந்திட
வாய்மை வேத
நன்மைத் திருநீற் றுயர்நன்னெறி
தாங்கு மேன்மைத்
தன்மைப் புவிமன் னரைச்சார்வதென்
றென்று சார்வார்.
18

காய்வுற்ற செற்றங்கொடு கண்டகன்
காப்ப வுஞ்சென்
றாய்வுற்ற கொட்பிற் பகலெல்லை
அடங்க நாடி
ஏய்வுற்ற நற்சந் தனமெங்கும்
பெறாது சிந்தை
சாய்வுற்றிட வந்தனர் தம்பிரான்
கோயில் தன்னில்.
19

நட்டம்புரி வார்அணி நற்றிரு
மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை
முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து
முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோல்நரம் பென்பு
கரைந்து தேய.
20
Go to top

கல்லின்புறந் தேய்த்த முழங்கை
கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்கணும் என்பு
திறந்து மூளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர்
தம்பி ரானார்
அல்லின்கண் எழுந்த துவந்தருள்
செய்த வாக்கு.
21

அன்பின்துணி வால்இது செய்திடல்
ஐய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண்
எல்லாங் கொண்டு
முன்பின்னல் புகுந்தன முற்றவும்
நீத்துக் காத்துப்
பின்புன்பணி செய்துநம் பேருல
கெய்து கென்ன.

22

இவ்வண்ணம் எழுந்தது கேட்டெழுந்
தஞ்சி முன்பு
செய்வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்தபுண்
ஊறு தீர்ந்து
கைவண்ணம் நிரம்பின வாசமெல்
லாங்க லந்து
மொய்வண்ண விளங்கொளி எய்தினர்
மூர்த்தி யார்தாம்.
23

அந்நாள்இர வின்கண் அமண்புகல்
சார்ந்து வாழும்
மன்னாகிய போர்வடு கக்கரு
நாடர் மன்னன்
தன்னாளும் முடிந்தது சங்கரன்
சார்பி லோர்க்கு
மின்னாமென நீடிய மெய்ந்நிலை
யாமை வெல்ல.
24

இவ்வா றுலகத்தின் இறப்ப
உயர்ந்த நல்லோர்
மெய்வா ழுலகத்து விரைந்தணை
வார்க ளேபோல்
அவ்வா றரனார் அடியாரை
அலைத்த தீயோன்
வெவ்வாய் நிரயத் திடைவீழ
விரைந்து வீந்தான்.
25
Go to top

முழுதும் பழுதே புரிமூர்க்கன்
உலந்த போதின்
எழுதுங் கொடிபோல் பவருட்பட
ஏங்கு சுற்றம்
முழுதும் புலர்வுற் றதுமற்றவன்
அன்ன மாலைப்
பொழுதும் புலர்வுற் றதுசெங்கதிர்
மீது போத.
26

அவ்வேளையில் அங்கண் அமைச்சர்கள்
கூடித் தங்கள்
கைவேறுகொள் ஈம வருங்கடன்
காலை முற்றி
வைவேலவன் தன்குல மைந்தரும்
இன்மை யாலே
செய்வேறு வினைத்திறஞ் சிந்தனை
செய்து தேர்வார்.
27

தாழுஞ் செயலின் றொருமன்னவன்
தாங்க வேண்டும்
கூழுங் குடியும் முதலாயின
கொள்கைத் தேனும்
சூழும் படைமன் னவன்தோளிணைக்
காவ லின்றி
வாழுந் தகைத்தன் றிந்தவையகம்
என்று சொன்னார்.
28

பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து
ஞாலங் காப்பான்
தன்னெடுங் குடைக்கீழ்த் தத்தம் நெறிகளில்
சரித்து வாழும்
மன்னரை யின்றி வைகும் மண்ணுல
கெண்ணுங் காலை
இன்னுயி ரின்றி வாழும் யாக்கையை
ஒக்கும் என்பார்.
29

இவ்வகை பலவும் எண்ணி
இங்கினி அரசர் இல்லை
செய்வகை யிதுவே யென்று
தெளிபவர் சிறப்பின் மிக்க
மைவரை யனைய வேழங்
கண்கட்டி விட்டால் மற்றக்
கைவரை கைக்கொண் டார்மண்
காவல்கைக் கொள்வார் என்று.
30
Go to top

செம்மாண்வினை யர்ச்சனை நூன்முறை
செய்து தோளால்
இம்மாநிலம் ஏந்தஒர் ஏந்தலை
யேந்து கென்று
பெய்ம்மாமுகில் போன்மதம் பாய்பெரு
கோடை நெற்றிக்
கைம்மாவை நறுந்துகில் கொண்டுகண்
கட்டி விட்டார்.
31

கண்கட்டி விடுங்களி யானைஅக்
காவல் மூதூர்
மண்கொட்புற வீதி மருங்கு
திரிந்து போகித்
திண்பொற்றட மாமதில் சூழ்திரு
வால வாயின்
விண்பிற்பட வோங்கிய கோபுரம்
முன்பு மேவி.
32

நீங்கும்இர வின்கண் நிகழ்ந்தது
கண்ட தொண்டர்
ஈங்கெம்பெரு மான்அரு ளாம்எனில்
இந்த வையம்
தாங்குஞ்செயல் பூண்பன்என் றுள்ளம்
தளர்வு நீங்கிப்
பூங்கொன்றை மிலைந்தவர் கோயிற்
புறத்தின் நிற்ப.
33

வேழத் தரசங்கண் விரைந்து
நடந்து சென்று
வாழ்வுற் றுலகஞ்செய் தவத்தினின்
வள்ள லாரைச்
சூழ்பொற் சுடர்மாமணி மாநிலந்
தோய முன்பு
தாழ்வுற் றெடுத்துப் பிடர்மீது
தரித்த தன்றே.
34

மாதங்கம் எருத்தினில் வைத்தவர்
தம்மைக் காணா
ஏதங்கெட எண்ணிய திண்மை
அமைச்ச ரெல்லாம்
பாதங்களின் மீது பணிந்தெழுந்
தார்கள் அப்போ
தோதங்கிளர் வேலையை ஒத்தொலி
மிக்க தவ்வூர்.
35
Go to top

சங்கங்கள் முரன்றன தாரைகள்
பேரி யோடும்
எங்கெங்கும் இயம்பின பல்லியம்
எல்லை யில்ல
அங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி
அம்பொற் கொம்பின்
பங்கன்அரு ளால்உல காள்பவர்
பாங்கர் எங்கும்.
36

வெங்கட்களிற் றின்மிசை நின்றும்
இழிச்சி வேரித்
தொங்கற்சுடர் மாலைகள் சூழ்முடி
சூடு சாலை
அங்கட்கொடு புக்கரி யாசனத்
தேற்றி ஒற்றைத்
திங்கட்குடைக் கீழ்உரி மைச்செயல்
சூழ்ந்து செய்வார்.
37

மன்னுந் திசைவேதியில் மங்கல
ஆகு திக்கண்
துன்னுஞ் சுடர்வன்னி வளர்த்துத்
துதைந்த நூல்சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள்
பூரித்த தூநீர்
உன்னும் செயல்மந் திரயோகர்
நிறுத்தி னார்கள்.
38

வந்துற்றெழு மங்கல மாந்தர்கள்
தம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு
மூர்த்தி யார்தாம்
முந்தைச்செய லாம்அமண் போய்முதற்
சைவ மோங்கில்
இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர
சாள்வ னென்றார்.
39

அவ்வாறு மொழிந்தது கேட்ட
அமைச்ச ரோடு
மெய்வாழ்தரு நூலறி வின்மிகு
மாந்தர் தாமும்
எவ்வாறருள் செய்தனை மற்றவை
யன்றி யாவர்
செய்வார் பெரியோய் எனச்சேவடி
தாழ்ந்து செப்ப.
40
Go to top

வையம் முறைசெய் குவனாகில்
வயங்கு நீறே
செய்யும் அபிடே கமுமாக
செழுங்க லன்கள்
ஐயன் அடையா ளமுமாக
அணிந்து தாங்கும்
மொய்புன் சடைமா முடியேமுடி
யாவ தென்றார்.
41

என்றிவ்வுரை கேட்டலும் எல்லையில்
கல்வி யோரும்
வன்திண்மதி நூல்வளர் வாய்மை
அமைச்சர் தாமும்
நன்றிங்கருள் தானென நற்றவ
வேந்தர் சிந்தை
ஒன்றும்அர சாள்உரி மைச்செய
லான உய்த்தார்.
42

மாடெங்கும் நெருங்கிய மங்கல
ஓசை மல்கச்
சூடுஞ்சடை மௌலி யணிந்தவர்
தொல்லை ஏனம்
தேடுங்கழ லார்திரு வாலவாய்
சென்று தாழ்ந்து
நீடுங்களிற் றின்மிசை நீள்மறு
கூடு போந்தார்.
43

மின்னும்மணி மாளிகை வாயிலின்
வேழ மீது
தன்னின்றும் இழிந்து தயங்கொளி
மண்ட பத்திற்
பொன்னின்அரி மெல்லணைச் சாமரைக்
காமர் பூங்கால்
மன்னுங்குடை நீழல் இருந்தனர்
வையந் தாங்கி.
44

குலவுந்துறை நீதி யமைச்சர்
குறிப்பின் வைகக்
கலகஞ்செய் அமண்செய லாயின
கட்டு நீங்கி
நிலவுந்திரு நீற்று நெறித்துறை
நீடு வாழ
உலகெங்கும் நிரம்பிய சைவம்
உயர்ந்து மன்ன.
45
Go to top

நுதலின்கண் விழித்தவர் வாய்மை
நுணங்கு நூலின்
பதமெங்கும் நிறைந்து விளங்கப்
பவங்கள் மாற
உதவுந்திரு நீறுயர் கண்டிகை
கொண்ட வேணி
முதன்மும்மையி னால்உல காண்டனர்
மூர்த்தி யார்தாம்.
46

ஏலங்கமழ் கோதையர் தந்திறம்
என்றும் நீங்குஞ்
சீலங்கொடு வெம்புலன் தெவ்வுடன்
வென்று நீக்கி
ஞாலந்தனி நேமி நடாத்தி
நலங்கொள் ஊழிக்
காலம்உயிர் கட்கிட ரான
கடிந்து காத்து.
47

பாதம்பர மன்னவர் சூழ்ந்து
பணிந்து போற்ற
ஏதம்பிணி யாவகை இவ்வுல
காண்டு தொண்டின்
பேதம்புரி யாஅருட் பேரர
சாளப் பெற்று
நாதன்கழற் சேவடி நண்ணினர்
அண்ண லாரே.
48

அகல்பாறையின் வைத்து முழங்கையை
அன்று தேய்த்த
இகலார்களிற் றன்பரை யேத்தி
முருக னாராம்
முகில்சூழ்நறுஞ் சோலையின் மொய்யொளி
மாட வீதிப்
புகலூர்வரும் அந்தணர் தந்திறம்
போற்ற லுற்றாம்.
49

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp

This page was last modified on Fri, 26 Dec 2025 05:25:45 +0000